எங்கள் பயணத்தின் வழிவிவாதங்களில் தமிழக சட்டசபையைப்பற்றி பேச்சு வந்தது. ஜெயலலிதா அந்த சட்டசபையைப் புறக்கணிப்பது சரியா என்று. நான் சரியல்ல என்றே நினைகிறேன் என்றேன். அது மக்கள் பணம். ஆனால் அது தமிழகத்தின் மிக அசிங்கமான கட்டிடங்களில் ஒன்று, தமிழகத்தின் ஆக அசிங்கமான சிலை திருவள்ளுவருக்குக் குமரியில் வைக்கப்பட்டிருப்பது. கருணாநிதி என்ற அரசிகரின் ரசனைக்கு எடுத்துக்காட்டு.
விவாதம் ஏன் கட்டிடங்களை ஒரு குறிப்பிட்ட பாணியில் அமைக்கவேண்டும், விதவிதமான சோதனை முயற்சிகள் செய்தால் என்ன என்பதை நோக்கிச் சென்றது. நான் என் எண்ணங்களைச் சொன்னேன்.
ஒரு கட்டிடம் அமைக்கப்படும்போது கருத்தில்கொள்ளவேண்டிய சில அடிப்படைகள் உள்ளன. ஒன்று அக்கட்டிடம் எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பது. மேலைநாடுகளில் ஒரு சட்டசபைக் கட்டிடம் அந்நாட்டின் மாண்பையும் மரபையும் காட்டுவதாகவே அமையும். நவீனக்கலைக்குரிய காட்சியகம்,பின் நவீனத்துவக் கட்டிடமாக அமையலாம். இரண்டு அந்த நகரத்தின் ஒட்டுமொத்தச் சூழலுக்குப் பொருந்துவதாக, அந்தக் கட்டிடம் அமைந்திருக்கும் சூழலுடன் இணைந்ததாக இருக்க வேண்டும். மூன்றாவதாக அக்கட்டிடம் அந்த நாட்டின், அல்லது மாநிலத்தின் ஒட்டுமொத்தக் காட்சியழகை அதாவது காட்சி ஒழுங்கைச் சீரழிக்காததாக இருக்கும். அந்நாட்டின் மரபை ஒட்டியதாக, அல்லது பிற கலையம்சங்களை உள்வாங்கிக்கொண்டு அம்மரபை முன்னெடுத்துச்செலவதாக அமையும்.
நம் சட்டச்சபைக் கட்டிடம் ஏதோ எண்ணைசேமிப்புக் குடுவை போல இருக்கிறது. அதில் தமிழகப் பண்பாட்டுக்கூறுகளே இல்லை. இந்திய சிற்பக்கலையம்சமே இல்லை. அது சென்னையின் காட்சியொழுங்கு[ அப்படி ஒன்று இருந்தால்] முறையை முழுமையாக சிதைப்பதாக, கண்களை உறுத்துவதாக உள்ளது.
பூட்டானில் வந்திறங்கியதுமே செந்தில் சொன்னார், ‘சார் நீங்கள் சொன்னது என்ன என்று இப்போது புரிகிறது’ என்று. பூட்டான் மிக அருமையாக உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் சுற்றுலா நாடு. அரசராட்சி இருப்பதனால் திட்டவட்டமான அரசாணைமூலம் எல்லாக் கட்டிடங்களும் பூட்டானிய பாரம்பரிய கட்டிடக்கலையம்சமும் நவீன வசதிகளும் கலந்து கட்டப்படுகின்றன. விதவிதமான கட்டிடங்கள். ஆனால் அனைத்துக்குமே அழகான பூட்டானிய அம்சம் ஒன்று மேல்தோற்றமாக இருக்கும்.
அது என்ன என்று முழுமையாகச் சொல்லமுடியாது. ஆழ்ந்த செவ்வண்ணமும் நீலமும் அதன் நிறங்கள். கூரை விளிம்பு சீன பாணியில் [அல்லது கேரள பாணியில்] சரிந்து இறங்கியிருக்கும். கூரைக்கு அடியில் கட்டம்கட்டமாக உத்தரங்களின் நுனிகள் தெரியும். மரத்தாலான கட்டிடங்களில் உண்மையான உத்தர நுனிகள். கான்கிரீட் கட்டிடங்களில் அலங்காரத்துக்காக உருவாக்கியிருந்தார்கள். கதவுகளில் டிராகன் வடிவங்கள். பலவகையான கோலங்கள். செக்கச்சிவந்த துணி ஓவியங்கள் கொண்ட திரைச்சீலைகள்.
வந்திறங்கிய சில நிமிடங்களிலேயே முற்றிலும் புதிய ஒரு மண்ணுக்கு வந்த பிரமிப்பையும் பரவசத்தையும் அளித்தது அது. நகரமே ஒட்டுமொத்தமாக ஒரு காட்சியொருமை கொண்டதாகத் தெரிந்தது.ஒரே சிற்பமாக ஒரு நகரம் தெரிய வருவதன் அழகை நான் சில வெளிநாட்டு நகரங்களிலேயே கண்டிருக்கிறேன். குறிப்பாக கன்பரா [ஆஸ்திரேலியா] . ஆட்சியாளர்கள் கொஞ்சம் கவனம் கொண்டால் சில சட்டங்களைக் கறாகாக நிறைவேற்றினாலேயே போதும். பொருளியல் ரீதியாகவே அது லாபகரமானது. பூட்டானின் முக்கியமான வருமானமே இந்தக் கட்டிடங்களைப்பார்க்கவரக்கூடிய சுற்றுலாப்பயணிகளால்தான்.
ஒருவேளை மதுரை இப்படி ஒரு பாரம்பரிய அழகைக் காட்டும் சுத்தமான நகரமாக இருந்தால் எப்படி இருக்கும் என யோசித்துப்பாருங்கள். பூட்டானின் பாரம்பரியம் வெறும் எழுநூறு வருடங்கள். நமக்கு ஈராயிரம் வருடம். நம்மை நோக்கி உலகமே வர அது ஒன்றே போதும். இன்றைய மதுரையில் ஒருமுறை கால்வைத்த அன்னியன் திரும்ப அதை நினைத்துப்பார்க்கவே கூசுவான். நானே மதுரைக்குள் நுழைவதை முடிந்தவரை தவிர்க்கக்கூடியவன்.
காலை ஐந்து மணிக்கு எழுந்து பூட்டானின் நகரவீதிகள் வழியாக காலைநடை சென்றோம். அங்கே அரசுவேலைகள், கல்விநிலையங்களுக்குப் பாரம்பரிய உடை கட்டாயமென்பதனால் ஊரே விசித்திரமாக இருந்தது. படங்களில் பார்த்த திபெத்துக்கு வந்துசேர்ந்தது போல. பெரும்பாலும் அழகிய புதிய பெரிய கட்டிடங்கள். வறுமை இருப்பதாகத் தெரியவில்லை. சுத்தமாகக் கூட்டப்பட்ட தெருக்கள். நல்ல குளிர் இருந்தது.
ஒரு டீக்கடைக்குள் நுழைந்து டீ குடித்தோம். சிக்கிம் பூட்டான் போன்ற நாடுகளின் சிறப்பம்சம் என்னவென்றால் எல்லா டீக்கடைகளும் மதுக்கடைகளும்கூட என்பதே. எல்லாவகையான மதுக்கோப்பைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பெரிய நன்னீர்மீன்கருவாடு பொரித்து வைக்கப்பட்டிருந்தது. கறுப்பு டீ இங்கெல்லாம் மிக அருமையாக இருக்கும். பால் என்றால் யாக்கின் பால் . அது நல்ல மிருகம்தான். ஆனாலும் கறுப்பு டீ நல்லது.
சுற்றிச்சென்றவழி முழுக்கப் பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்றுகொண்டிருந்தார்கள். பாரம்பரிய உடையில் பெண்கள் விசுக் விசுக் என்று சென்றார்கள். ஒரு பெண்ணிடம் இந்த அதிகாலையிலேயே பள்ளியா என்று விசாரித்தோம். அதீத வெட்கத்துடன் ஆமாம் என்று சொல்லிச்சென்றாள். பள்ளிக்கூடமும் பௌத்தமடாலயம்போலவே இருந்தது.
பள்ளிக்கு அப்பால் ஒரு பெரிய கோயில். அது சோர்ட்டன் நினைவகம் என்று அழைக்கப்படுகிறது. பூட்டானின் மூன்றாம் மன்னர் டிக்மே டோர்ஜி வான்சக் [ 1928 –1972]அவர்களின் நினைவாகக் கட்டப்பட்டது அது. அவர் வாழ்ந்த போதே தன் நினைவுச்சின்னத்தை புத்தரின் மனமாக உருவகித்து ஓர் ஆலயம் எழுப்பவேண்டுமெனக் கோரியிருந்தாராம். இது திபெத்திய மரபுப்படி கட்டபட்டு டங்சே ரிம்போச்சே அவர்களால் பிரதிஷ்டைசெய்யப்பட்டதாம். 1974ல் கட்டப்பட்ட இது பல முறை விரிவாக்கம் செய்யப்பட்டது. நடுவில் பூட்டான் பாணியிலான உயரமான கோபுரம். சுற்றும் வட்டப்பாதை. அதை நோக்கிச்செல்லும் வழிக்கு இருபக்கமும் பிரார்த்தனைக்கான பெரிய அலங்கார உருளைகள் கொண்ட கட்டிடங்கள் .
காலைநேரத்திலேயே அங்கே ஏராளமான பக்தர்கள் வந்து கூப்பிய கைகளுடன் வலம் வந்துகொன்டிருந்தனர். சிறிய உடுக்கை போல ஒன்றைச் சுழற்றியபடி பௌத பிட்சுக்கள் சுற்றிவந்தார்கள். பல வகையான உடைகள் கொண்டவர்கள். ரத்தச்சிவப்பு ஆடையணிந்தவர்கள் திபெத்திய லாமாக்கள் என்று தோன்றியது. சுட்ட வாழையிலை போலச் சுருக்கம் பரவிய மஞ்சள்முகங்கள்.
பிரார்த்தனை உருளைகள் அருகே மிக வயதான ஒரு லாமா அமர்ந்திருந்தார். அவற்றை மும்முறை சுற்றும்படி கண்கள் இடுங்க சிரித்துக்கொண்டே சொன்னார். புத்தரின் தர்மசக்கரத்தின் ஒரு வடிவம் அது. புத்தர் அதை முதலில் சுழலச்செய்தாராம். அதைப் பல்லாயிரம் கரங்கள் விடாது சுற்றவைக்கவேண்டும் என்பது மரபு. அவற்றில் பொன்னிற எழுத்துக்களில் மந்திரங்கள் எழுதப்பட்டிருக்கும். பெரும்பாலும் செந்நிறமான உருளைகள். அவற்றுக்குரிய போதிசத்வர் அல்லது லாமாவின் பெயரோ உருவமோ பின்பக்கம் இருக்கும். அந்த உருளையைச் சுற்றினால் அந்த குருநாதரின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திரும்ப அறைக்கு வரும் வழியில் கலைமணி என்பவரை சந்தித்தோம். விசித்திரமான மனிதர். கார்கிலுக்குப் போய் அங்கிருந்து பூட்டான் வந்திருக்கிறார். ஓய்வுபெற்ற பள்ளி ஆய்வாளார். முழுநேர வேலையே இந்தியாவைச் சுற்றி வருவது. கறுப்பான குள்ளமான மணிக்குரல்கொண்ட மனிதர்.அவர் கையில் இருந்த மஞ்சள்பையில் தமிழ் இருப்பதைப்பார்த்துத்தான் அவரிடம் பேசப்போனோம். அதை அந்த நோக்கத்துக்காகவே வைத்திருப்பதாகச் சொன்னார். தனியாக வேறு விடுதியில் அறை போட்டிருந்தார். எங்களுடன் எங்கள் விடுதிக்கும் வந்தார்.
குளித்து உடைமாற்றிவிட்டுத் திம்புவைச் சுற்றிப்பார்க்கக் கிளம்பினோம். திம்புவின் முக்கியமான அடையாளமாக உருவாகி வருவது அருகே ஒரு குன்றுமேல் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான புத்தர் சிலை. கையில் அமுதகலசத்துடன் இருக்கும் அச்சிலை அமிர்த புத்தர் என்று இந்தியாவில் அழைக்கப்படுகிறது. வளமும் வாழ்வும் கொடுப்பது. பொன்னிறமான கான்கிரீட் சிலை. ஆனால் மரபான முறையில் மிக அழகாக அமைக்கப்பட்டிருந்தது. அதன் கீழே இன்னும் கட்டிட வேலைகள் முடியவில்லை. ஒரு நான்கு மாடிக் கட்டிடம் அளவுக்கு இருந்தது
அங்கிருந்து திம்புவின் முக்கியமான அடையாளமாகக் கருதப்படும் டாஷிங்சோ சோங் மாளிகையை மலைமேல் இருந்து பார்த்தோம். திம்பு மலைகளுக்கு நடுவே உள்ள சிறிய பள்ளத்தாக்கில் வாங் சூ ஆற்றின் கரையில் அமைந்த நகரம், இரு கைக்குவியலில் அள்ளிய முத்துக்கள் போல மொத்த நகரமும் தெரிந்தது. நடுவே ஆற்றோரமாக மாளிகை. அது இப்போது அரச அலுவலகம். உள்ளே நுழைய அனுமதி இல்லை. முன்பு பூட்டானின் மதகுரு-மன்னரின் மாளிகையாக இருந்தது. அழகான சிவந்த கட்டிடம்.
அடுத்ததாக சிம்டொகா ஜோங் மடாலயத்துக்குச் சென்றோம். 1629ல் நிறுவப்பட்ட இந்த பௌத்த மடாலயம் பூட்டானின் முக்கியமான மத வழிபாட்டிடங்களில் ஒன்று. பூட்டான் என்ற நாட்டை உருவாக்கியவராகக் கருதபப்டும் ஷாப்டிரங் ங்காவாங் நம்கியால் அவர்களால் கட்டப்பட்டது. ஒரு குன்றுமேல் இருக்கிறது இந்த பூட்டானியபாணி கட்டிடம். பூட்டானிய கட்டிடங்களின் சிறப்பே அவற்றில் உள்ள விதவிதமான வண்ண ஓவியங்களும் அற்புதமான ஓவியங்கள் கொண்ட திரைச்சீலைகளும்தான். மழை மெல்லத்தூறிக்கொண்டிருந்த பகலில் குளிர்ந்த காற்றில் உடலை இடுக்கிக்கொண்டு மடாலயத்தின் மௌனத்தை உள்வாங்கிச் சுற்றிவந்தோம்
மடாலயத்தைக் கண்டதையும் உணர்ந்ததையும் இத்தனை வேகமான குறிப்பில் சொல்லிவிடமுடியுமா என்று தெரியவில்லை. ஒருவேளை ஒரு புனைகதையில் துல்லியமான காட்சிவிவரணைகளுடன் அது வெளிப்படக்கூடும். இது ஒரு நினைவுக்குறிப்பு மட்டுமே. இந்த மடாலயங்களின் முக்கியமான அம்சம் இவை லௌகீக வாழ்க்கையில் இருந்து மிக ஒதுங்கி மிக எழுந்து நிற்கின்றன என்பதே. இவை தியானத்தில் கண்மூடி நிற்பவை என்ற எண்ணம் எழுகின்றது. பெரும்பாலும் பெரிய மரத்தடிகளைக்கொண்டு கட்டி எழுப்பப்பட்டவை இவை. ஈரம் படிந்த மரத்தின் மெல்லிய வாசனை எங்கும் இருக்கிறது. பௌத்த வழிபாட்டிடங்களுக்கு உரிய தூபவாசனை. பிரார்த்தனை சக்கரங்கள் சுற்றப்படும் மணியோசை, அவற்றுக்கு விடப்பட்டுள்ள உயவு எண்ணையின் வாசனை. கண்மூடி அமர்ந்த புத்தர் சிலைகள். கொடூரமாக விழித்து நிற்கும் துவாரபாலகர்களும் பூதங்களும். மனதைக் கனவுக்கு நனவுக்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் உலவச்செய்யும் தன்மைகொண்டவை இவை.
[மேலும்]
வட கிழக்கு நோக்கி,4 – யும் தாங் சமவெளி
வடகிழக்கு நோக்கி 2-நெடும்பயணம்
வடகிழக்கு நோக்கி 1- தேர்தலும் துவக்கமும்