குருகு-கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

குருகு அருமையான கட்டுரை. கபிலரின் அற்புதமாக இந்தக்  கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஏ.கே.ராமானுசன், இதில் கடைசி வரியை அர்த்தப்படுத்திக்கொள்ளுதலைப் பாருங்கள் :

Only the thief was there,no one else
and if he should lie, what can I do?
There was only
a thin legged heron standing
on legs as millet stems
and looking
for lampreys
in the running water
when he took me.

(A.K.Ramanujan,The Interior Landscape)


Regards / அன்புடன்

K.R.Athiyaman  / K.R.அதியமான்
Chennai – 96

 

========================================

அன்புள்ள ஜெயமோகன்

குருகு பற்றிய பதிவு கண்டேன்.அஜிதனுக்கு நுண்ணிய அவதானிப்பு இருக்கிறது .இன்னும் கூட எத்தனையோ மரங்கள்,உயிரினங்களின் பெயர்தெரியாமல் நாம் இருக்கிறோம்.சாதாரண தூங்குமூஞ்சி,புங்கை ,மருதமரம் போன்றவற்றின் பெயர்கூடப் பலருக்கும் தெரியாது

பண்டைத் தமிழரின் இயற்கை அறிவு வியக்க வைக்கிறது.மா.கிருஷ்ணன்,தியோடார் பாஸ்கரன் போல் இயற்கை ஆர்வலர்கள் இலக்கிய ஆர்வலராய் இருப்பது அபூர்வம்.அஜிதனுக்கு வாழ்த்துக்கள்.

“நாம் சங்கப்பாடல்களின் வார்த்தைகளை மட்டும் வைத்துக்கொண்டு மயிர்பிளந்து ஆராய்ச்சி செய்துகொண்டிருப்போம் போலும். வேதங்களைப்போல சங்கப்பாடல்களும்அப்போது மர்மமான அர்த்தங்கள் கொண்ட நூல்களாக ஆகிவிட்டிருக்கும். விதவிதமாக உரைகள் எழுதலாம். சடங்குகளுக்கு  மந்திரங்களாக பயன்படுத்தலாம்”.

என்ற வரிகள் தரும் செய்திகள் ஏராளம்.

அன்புடன்

ராமானுஜம்

====================================

அன்புள்ள ஜெயமோகன்,

குருகு பற்றிய கட்டுரை வாசித்தேன்.

சங்கப்பாடல்களைப் பொருள்கொள்வதற்கான முயற்சி கடந்த ஒருநூற்றாண்டாக நடந்துகொண்டிருக்கிறது.  சொல்லப்போனால் தமிழில் சென்ற ஒரு நூற்றாண்டில் நிகழ்ந்த மிகப்பெரிய இலக்கிய இயக்கம் என்பதே இதுதான் என நான் நினைக்கிறேன். உ.வே.சாமிநாதய்யர்,  வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார், கெ.என் சிவராஜபிள்ளை, அவ்வை துரைசாமிப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் முதலாக மூன்றுதலைமுறையினராக இந்த ஆய்வு முன்னகர்ந்துகொண்டிருக்கிறது.  உண்மையில் இந்தத் தலைமுறையில்தான் இந்த ஆய்வு ஒழுக்கு தடைபட்டுள்ளது.

இந்தப் பொருட்கோடலுக்கு ஒரு சமூக அர்த்தமும் உண்டு. அதாவது இன்றைய வாழ்க்கைக்கு ஒரு மரபுத்தொடர்ச்சியைத் தேடுவது. அன்றைய வாழ்க்கையை இன்றைய வாழ்க்கையை வைத்து அறிய முயல்வது. இந்த ஒழுக்குதான் நமக்கு இன்றைய இலக்கியத்தை உருவாக்கியளித்திருக்கிறது என்றே சொல்லலாம்

சங்க இலக்கியத்தில் உள்ள பறவைகளைப்பற்றிப் புகழ்பெற்ற ஆய்வாளரான பி எல் சாமி அவர்கள் எழுதிய சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம் என்ற நூல் மிக முக்கியமானது. உங்கள் மைந்தனாருக்குப் பரிந்துரை செய்கிறேன். சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம் என்ற நூலையும் எழுதியிருக்கிறார்.

கு சீனிவாசன் அவர்கள் எழுதிய ‘சங்க இலக்கிய தாவரங்கள்’ என்ற நூலைப்பற்றி நாஞ்சில்நாடன் எழுதிய நல்ல கட்டுரையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். சங்க இலக்கிய விளையாட்டுக்களைப்பற்றி சு.சிவகாமசுந்தரி எழுதியிருக்கிறார்கள்.

செம்மணி அருணாச்சலம்

===================================

 

 

வானில் பறக்கும் புள்ளெலாம் நான்
அதே பாடலில் “வெட்டவெளியின் விரிவெலாம் நான்” என்றொரு வரி வரும். என்னை
மிகவும் கவர்ந்த வரி.
வெட்டவெளி என்பதை எல்லையே காணமுடியாதபடி விரிந்து கிடக்கும் விண்வெளி
என்றே நான் பொருள்படுத்திக்கொண்டேன்.

குருகைப்பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். கபிலரின் அந்த பாடலைப்
பற்றி முன்னரே எங்கோ படித்திருக்கிறேன். ஆனால் அதிலும் கொக்கு என்றே
கூறியிருந்ததாக நினைவு.

இப்பாடலின் சில ஆங்கில மொழிபெயர்ப்புகளை இந்த இணையப் பக்கத்தில் கண்டேன் :

http://karkanirka.org/2008/10/08/kurunthokai25/

ஒருவர் கூட Bittern என்று கூறவில்லை.

ஹார்ட்டின் அந்த நீண்ட விளக்கம் பொருத்தமானதுதானா, இல்லை வரிகளுக்கிடையே
கொஞ்சம் நிறையவே படித்துவிட்டாரா?

நன்றி

டி.கார்த்திகேயன்

அன்புள்ள கார்த்திகேயன்

வழக்கமான பண்டிதர்களைப்போலத்தான், புகையிலையை விரித்து பார்க்கிறார்

 

ஜெ

முந்தைய கட்டுரைஅயன் ராண்ட் ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைவடகிழக்கு நோக்கி, 7. மடாலயங்களில்