கடிதங்கள்

அன்பான ஜெயமோகன்

வணக்கம்

நீண்ட நாட்களின் பின் தொடர்பு கொள்கிறேன்.தொடர்பில் இல்லாவிடினும்உங்கள் வலைத்தளம்     மூலம் உங்கள் செயற்பாடுகளை அறிந்து கொள்கிறேன்.
ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா நாவல் பற்றியஉங்கள் விமர்சனக்குறிப்பு என்னை வெகுவாகக்   கவர்ந்தது .உங்கள்  கட்டுரைகளின் எளிமை எனக்குப் பிடிக்கும்.
தெளிவான சிந்தனை எளிமையைத் தரும் என்பது என் அபிப்பிராயம்.

அந்த எளிமை உங்களிடம் மாத்திரமன்றி உங்கள் குடும்பத்திலும் இருந்தது. இரண்டு நாட்கள் உங்கள் வீட்டில் தங்கியபோது அதனை நான்நேரிலேயே கண்டேன். அனுபவித்தேன்
மறக்கமுடியாத நாட்கள் அவை

தங்களின் வணங்கான் மிக மிக அருமையான கதை அடக்கப்பட்டோரின் துயரங்களையும். போராடும் ஓர்மத்தையும் எவ்வளவு அழகாகக் கூறியிருக்கிறீர்கள் . பாலாவுக்குத் திரைப் படத்திற்கான அருமையான கதைப்பின்னல்(plot)

அண்மையில் இங்கு காலியில் நடைபெற்ற ஐந்தாவது உலக இலக்கிய விழாவில் வடமோடிப் பாணியிலமைந்த இராவணேசன் நாடகத்தின் சில பகுதிகளை மேடையிடும்படியும் நானே அதில் இராவணனுக்கு நடிக்கவேண்டும் என்றும் விழா அமைப்பாளர்கள் வேண்டியிருந்தனர்.அப்பாத்திரத்தை நான்பேராதனைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது – 1964 இல்- எனது 22ஆவது வயதில் நடித்துள்ளேன். இப்போது எனக்கு வயது 69.

ஏறத்தாழ 45 வருடங்களின் பின் மீண்டும் இராவணனாக என்னிலும் 40 வருடம் இளமையான மாணவர்களுடன் சோந்து நடிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்தது. நடித்தபோது படைப்பு இன்பத்தை அனுபவித்தேன்.

நாடகத்திற்கு நல்ல வரவேற்பு. பார்வையாளர்களுள் 80 வீதமானோர் அயல் நாட்டவர்.   15 வீதமானோர் சிங்களமொழி பேசுவோர்.    5 வீதமானோர் தமிழ்மொழி பேசுவோர்
நாடகத்தின் பின் ஒரு மணிநேரம் நாடகம் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது.சியாம் செல்வதுரை நாடகம் பற்றி அறிமுகம் செய்தார் .தனது புகழ் பெற்ற ஆங்கில நாவல்களான Sinaman Garden,.Funny Boy மூலம் உலகுக்கு அறிமுகமான எழுத்தாளர் அவர். அறிந்திருப்பீர்கள். இராவணன் பாத்திரத்தை இம்முறை சிறப்பாக ஆடி நடிக்கக்  கதகளியில் ஆடப்படும் இராவணன் பற்றி நீங்கள்  முன்னொருபோது கூறிய குறிப்புகள் வெகுவாக எனக்கு உதவின

நன்றிகள்

அன்புடன்

சி.மெளனகுரு

அன்புக்கும் மதிப்புக்கும் உரிய மௌனகுரு அவர்களுக்கு,

நன்றி. உங்கள் கடிதத்துக்குப் பதில் எழுத எடுத்துவைத்து மறந்துவிட்டேன். கதைகள். பயணங்கள்.

புகழ்பெற்ற கதகளி ஆட்டக்காரர்கள் பலர் எண்பது வயதில்கூட ஆடியிருக்கிறார்கள். கலை கலைஞனுக்கு எளிதாக இருக்கவேண்டும். அவனுடைய ஆரோக்கியத்தை அது நிலைநிறுத்தும். நீங்கள் ஆடுவதை நான் பார்க்க முடியவில்லை. ஒரு சந்தர்ப்பம் வரட்டும்

இராவணன் ஒரு கதகளி ரசிகனாக எனக்கு மிகமிகப் பிடித்தமான கதாபாத்திரம். ஆணவத்திற்கு ஓர் அழகு உண்டு. அது அவனில்தான்.

அன்புடன்

ஜெ

 

ஜெயமோகன்,

வணக்கம் ”எழுதப்போகிறவர்கள்” என்ற கட்டுரையில்: சமூகத்தை முன்னேற்ற எழுத வேண்டாம் சமூகத்தை சீர்திருத்தவும் எழுத வேண்டாம் . அப்படியானல் என்ன எழுதுவது?
சமூகத்தைப் பற்றி எழுதுங்கள், சமூகத்தை வெளியே நோக்கி எழுத வேண்டாம். சமூகத்தை உங்களுக்குள் நோக்கி எழுதுங்கள். உங்களைப் பற்றி எழுதுங்கள். உங்கள் மூலம் நீங்கள் அறியும் வாழ்க்கையைப்  பற்றி எழுதுங்கள் என்று கூறினீர்கள்.

ஆனால் சமூகத்தை எனக்குள் நோக்கினாலும் அது வெளிநோக்கிய சிந்தனையாகவே வெளிவருகிறதே! சிந்தனையின் தேடுதலின் முடிவும் முன்னேற்றம்/சீர்திருத்தம் என்ற வட்டத்திற்குள்ளேயே சிக்கிக்கொள்கிறதே! ஒரே இடத்திற்குச் சுற்றிச் சுற்றி வந்து நிற்பதுபோல் தோன்றுகிறதே!

நன்றி

பா.பூபதி

அன்புள்ள பூபதி

உள்ளும் வெளியும் ஒன்றை ஒன்று பிரதிபலிப்பவை.

நீங்கள் உங்க சொந்த வாழ்க்கையை மட்டும் எழுதினாலும் சமூகத்தையே எழுதுகிறீர்கள். சமூகத்தை எழுதினாலும் சொந்த அகத்தையே எழுதுகிறீர்கள்.

ஆனால் சமூகத்தை அறிய உங்களிடம் வழி இல்லை. பிறர் சொன்ன கோட்பாடுகள் கொள்கைகளைக் கொண்டு நீங்கள் சமூகத்தைப்பற்றி எழுதுவீர்கள். உங்கள் அந்தரங்கத்தைப்பற்றி எழுதினால் அது உங்களுக்கு மிக நன்றாகத் தெரிந்ததாக இருக்கும். அது உங்களால் மட்டுமே எழுதக்கூடியதாகவும் இருக்கும்

ஜெ

 

சார்,

பெரிய சிவாலயங்களில் எல்லாம் கர்ணன் அர்ச்சுனன் சிலை இருப்பதன் காரணம் என்னவென்று சொன்னார், ஜெயமோகன்? என்று அகிலன் கேட்டுள்ளார்? நேரம் இருக்கும்போது தயவு செய்து பதில் தாருங்கள்..நன்றி

சு.யுவராஜன்

அன்புள்ள யுவராஜன்

எல்லா சிவாலயங்களிலும் இருக்காது. அது நாயக்கர்காலகட்டத்துச் சிறப்பம்சம். அவர்கள் கட்டிய கோயில்களில் கர்ணன் அர்ஜுனன் சிலைகள் எதிரெதிராகவோ பக்கவாட்டிலோ இருக்கும். ரதிமன்மதன் சிலைகள் இருக்கும்..

இவற்றுக்கு முக்கியமான காரணம் ஒன்றுதான்.நாயக்கர்கள் மகாபாரதத்தைப் பெரிதும் பரப்பியவர்கள். ஊர் தோறும் சாவடிகளில் மகாபாரதக் கதைகள் சொல்லும் வழக்கம் அவர்கள் காலகட்டத்தில்தான் ஆரம்பமாகியது. தோல்பாவைக்கூத்து போன்ற கலைகள் வழியாக மகாபாரதம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது.

சைவ வைணவ பேதம் நாயக்கர்களால் இல்லாமலாக்கப்பட்டது. சைவக் கோயில்களுக்குள் விஷ்ணுசன்னிதிகளும் விஷ்ணுகோயிலுக்குள் சிவ சன்னிதிகளும் அவர்களால் கட்டப்பட்டன.

ரதிமன்மதன் சிலைகள் நிறுவப்பட்டமைக்கு வேறு காரணம் உண்டு என்று சொல்கிறார்கள். அவர்களை விதை இறக்கும்போது விளைச்சலுக்காக வணங்கும் வழக்கம் இருந்ததாம்

ஜெ

அன்புள்ள ஜெமோ,
உச்சிகுடும்பன்தானே.  எழுத்துப் பிழையா என்ன.
நான் பாவைக்கூத்து – பாக்கூத்து- பார்த்தது 25 வருடங்களுக்கு முன்பு.
சூத்திரதாரி போன்ற பங்கினை உச்சிக்குடும்பனும் உழுவத்தலயனும் செய்வார்கள்.
தனியான track இல்லாமல் கதை பற்றிப் பேசவும் , பிரேக் கொடுக்கவும்.
உச்சிக்குடும்பன் தலை உச்சியில் குடுமியுடனும், உழுவத்தலயன் குண்டாகவும்
வருவார்கள்.
குண்டாக இருப்பதும், நிறைய சாப்பிடுவதும், அபான வாயு பிரிப்பதும்
மக்களுக்கு சிரிக்கப் போதுமான காரணங்களாக இருந்திருக்கின்றன. நீங்கள்
பார்த்த உச்சிக்குடும்பனும் உழுவத்தலயனும் எப்படி இருந்தார்கள்?
அன்புடன்
ஜெயராஜன் ராமானுஜம்

அன்புள்ள ஜெயராஜன்

உச்சிக்குடும்பன் உளுவத்தலையன் இணை என்றுதான் சொல்லியிருந்தேன். கவுண்டமணி செந்தில் போல.

ஒருவர் உயரம் ,குண்டு, குடுமி. இன்னொருவர் நண்டு. ஆனால் அடிவாங்குபவர் பெரியவர், உச்சிக்குடும்பன் தான்

ஜெ

முந்தைய கட்டுரைவடகிழக்கு நோக்கி-5, பூட்டான்
அடுத்த கட்டுரைஅயன் ராண்ட் ஒரு கடிதம்