தமிழ் விக்கி
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 3
அமெரிக்காவில் சொன்ன சுவிசேஷத்தின் அடுத்த பகுதி இது.
அமெரிக்காவில் என்னிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி, ஒரு சமூகமாக அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் என்ன செய்யவேண்டும் என்பது.
அமெரிக்கத் தமிழ்ச் சமூகம் இன்னமும் பெரும்பாலும் நடுத்தரவர்க்கத்தால் ஆனது. இந்திய அளவுகோலின்படி அவர்கள் உயர்நடுத்தர வர்க்கத்தினர். அமெரிக்காவில் மெல்ல வேரூன்றிக்கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தினர்.
நடுத்தரவர்க்கத்தினரின் உளவியல்தான் அவர்களை ஆள்கிறது. அது அனைத்துத் துளி உழைப்பையும் சேர்த்து செல்வமாக ஆக்கிக் கொள்வது. சேமிப்பு ஒன்றே நடுத்தர வர்க்கத்தின் வேதம். மூன்றாமுலக நாடுகளின் நடுத்தர வர்க்கம் கேளிக்கைகளுக்கோ அறிவுச்செயல்பாடுகளுக்கோ தன் உழைப்பையும் பணத்தையும் செலவழிப்பதல்ல. எவ்வகையிலும் அறக்கொடைகளுக்கோ பிற செயல்பாடுகளுக்கோ முன்வருவதும் அல்ல.
இன்றைய அமெரிக்க இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களின் வாழ்க்கை இது. ஆண்டு முழுக்க கடும் உழைப்பு, குழந்தைகளுக்காக அவ்வப்போது சிறு இடைவெளிகளில் விடுமுறைகள், சமூகப்பார்வை முன் ஒரு கௌரவத்தைக்காட்டிக் கொள்வதற்காக செய்யப்படும் உடைகள் வாகனம் போன்ற சில வசதிகள், அவ்வளவுதான். ஆண்டுக்கு ஒருமுறையோ, இரண்டாண்டுகளுக்கு ஒருமுறையோ இந்தியாவுக்கு வந்து செல்வதே அவர்களுக்கு பெரும் செலவு. இதற்கு அப்பால் குழந்தைகளின் கல்வி எனும் பெருஞ்செலவு.
அமெரிக்கப் பெற்றோர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் தங்கள் குழந்தைகளை ஹார்வர்ட் பல்கலைக்கு அனுப்புவது போன்ற கனவுகளுடன் வாழ்கிறார்கள். அமெரிக்காவில் எனது நண்பர்கள் கேட்ட கேள்விகளில் பெரும்பாலானவற்றின் சாராம்சம் ‘என் பையனை எப்படி ஹார்வர்டுக்கு அனுப்புவது?’ என்பது தான். அதற்கு நான் சொன்ன பதில் ’அது தெரிந்திருந்தால் நான் என்பையனை அனுப்பியிருப்பேனே?’ என்பது தான்.
இத்தகைய சூழலில் ஒரு சமூகமாக தமிழ்மக்கள் திரண்டு அங்கே ஆற்றும் பணிகள் மிக மிகக்குறைவு. பெரும்பாலும் அமெரிக்க நண்பர் ஒருவர் சொன்னது போல தமிழ்ச்சங்கங்கள் அங்கே ’தோசை மடங்கள்’ தான். இந்திய உணவை சாப்பிடுவதற்காக ஓரிடத்தில் கூடுவது, அங்கே தமிழக அரசியல், தமிழக சினிமா , அமெரிக்க குடியேற்றம் சார்ந்த கவலைகள் மற்றும் உள்ளூர் வம்புகளை பகிர்ந்துகொள்வது — அவ்வளவுதான் தமிழ் மக்களின் கூட்டுச்செயல்பாடாக இருக்கிறது.
எந்த வகையிலும் ஒரு பொருட்படுத்தப்படக்கூடிய கூட்டுச்செயல்பாடு அமெரிக்காவில் தமிழ் மக்களிடையே நிகழவில்லை. அங்கே கோயில்கள் இருக்கின்றன, புதிதாகக் கட்டப்படுகின்றன. ஆனால் பழகிப்போன சம்பிரதாயங்களை பேணுவதே அங்கு நிகழ்கிறது. தமிழ்ச்சங்கங்கள் உள்ளன. ஆனால் அங்கே இந்தியாவிலுள்ள ஒரு தமிழ்ச்சங்கத்தின் அதே தரம்தான் உள்ளது. ஒரு படி கீழ் என்றும் சொல்லலாம். அவர்களால் அங்கும் பெரிதாக ஏதும் நிகழவில்லை, அவர்களால் தமிழகத்துப் பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கும் நன்மை என ஏதுமில்லை.
அங்கே சமூகக் கூட்டுச்செயல்பாடுகளை வழிநடத்துபவர்களுக்கு அமெரிக்கச் சூழலுக்கு உகந்த ஒரு பண்பாட்டு அமைப்பை முன்னெடுப்பதற்கான உளவிரிவோ, அறிவுத்திறனோ, இலட்சியமோ இல்லை. அவர்கள் மிக எளிய அரசியல் நோக்கு கொண்டவர்கள். இந்தியாவிலுள்ள அரசியலுக்கு ஏற்ப அங்கே ஆடும் எளிய கூத்துப்பாவைகள்.
அதற்கப்பால், வழக்கம் போல தமிழர்கள் தங்களை சாதிகளாக பகுத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் வேவு பார்த்தும், மட்டம் தட்டியும் வாழ்கிறார்கள். ஒரு சிறு செயலைக்கூட கூடிச்செய்ய முடியாதபடி ஒருவரோடொருவர் ஆணவத்தால் மோதிக்கொள்கிறார்கள். இந்நிலையில் அங்கு நிகழும் செயல்பாடுகள் என்பவற்றை எவ்வண்ணம் நிகழ்த்துவது என்னும் பேச்சே எழவில்லை. செயல்பாடுகளை தொடங்க வேண்டும் என்பதுதான் முதலில் சொல்லவேண்டியது.
(அதை தொடர்ந்து சொல்லிவந்தேன். விஷ்ணுபுரம் அமெரிக்கக் கிளை அதன் விளைவாக தொடங்கப்பட்ட சிறு முயற்சி. ஆனால் அது உருவாக்கும் விளைவுகளே பிரமிப்பூட்டும் அளவு இருக்கின்றன. [email protected].தொலைபேசி எண் – 1-512-484-9369 )
அவ்வாறு செயல்பாடுகளை தொடங்குவதென்றால் நாம் ஒருபோதும் முன்னுதாரணமாக கொள்ளக்கூடாதவர்கள் வடஇந்தியர்கள், குறிப்பாக குஜராத்தியர்கள். முன்னுதாரணமாக கொள்ளத்தக்கவர்கள் பஞ்சாபிகள், குறிப்பாக சீக்கியர்கள்.
அமெரிக்க சமுதாயத்தின் ஓர் அங்கமாக இன்று தமிழ் மக்கள் ஆகியிருக்கிறார்கள். தமிழ் மக்களின் அடுத்த தலைமுறை அங்கே வேரூன்றப்போகிறது. அவர்கள் தங்கள் சேமிப்பில் ஒரு பகுதியை தமிழுக்கு , தமிழ்ப் பண்பாட்டுக்கு செலவழிப்பது இன்றியமையாததுதான். தமிழகம் அவர்களை நம்பியிருக்கிறது என்பது உண்மை. ஆனால் அதே அளவுக்கு அவர்கள் அமெரிக்கப் பண்பாட்டுக்கும் செலவழிக்க வேண்டும். அமெரிக்க மக்களின் நலனுக்கும் அவர்கள் பங்களிப்பாற்ற வேண்டும்.
இதை நான் சொன்னபோது அமெரிக்காவில் பல நண்பர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அவர்களுடைய பார்வையில் அமெரிக்கா செல்வவளம் மிக்க நாடு. எஜமானனின் நாடு. நாம் எஜமானனுக்கு கொடுப்பதா என்பதே அவர்களது துணுக்குறலுக்குக் காரணம். ஆனால் அமெரிக்கா ஒரு பெரும் சமூகம் . அதன் அடித்தளத்திலும் பல்லாயிரம் பேர் ஏழைகளாக, உதவிதேவைப்படுபவர்களாக இன்று உள்ளனர். அவர்களுக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது மிக முக்கியமானது.
தமிழ்ச் சமுதாயம் அமெரிக்காவின் செல்வ வளம் மிகுந்த மேல்தட்டில் ஒட்டிக்கொண்டு வாழ்வது. அவர்கள் பெறுவதெல்லாம் அங்கிருந்துதான். அதை முழுக்கவே தாங்கள் எடுத்துக்கொள்ளாமல் அதில் ஒரு பகுதியையேனும் அந்நாட்டின் கீழ்மட்டத்திற்கு அவர்கள் அளித்தார்கள் என்றால் மட்டுமே அது அறமாகும். இல்லையேல் காலப்போக்கில் Suckers (சுரண்டுபவர்கள்) என்னும் அடையாளம் அவர்கள் மேல் விழும்.
அந்த அடையாளம் இன்று குஜராத்திகள் மேல் மிக வலுவாக இருப்பதை பார்க்கிறேன். குஜராத்திகள் அமெரிக்காவில் மிகப்பிரம்மாண்டமான சுவாமி நாராயண ஆலயங்களை நிறுவியிருக்கிறார்கள். பலகோடி ரூபாய் தங்கள் அடையாளத்திற்காகவும் ஆடம்பரத்திற்காகவும் பகட்டுக்காகவும் செலவழிக்கிறார்கள். ஆனால் அவர்களுடையதென அமெரிக்கப் பண்பாட்டு செயல்பாடுகளுக்கோ அமெரிக்க மானுடசேவைக்கோ எந்த பங்களிப்பும் இல்லை.
அவர்கள் குஜராத்தி பண்பாட்டுக்கோ இலக்கியத்திற்கோ பத்து பைசா அளிக்க மாட்டார்கள். குஜராத்திலிருந்து அவர்கள் ஜிலேபிவாலாக்களான சாமியார்களை மட்டுமே அழைத்துவந்து கொண்டாடுவார்கள். கணேஷ் டெவி ஒருமுறை என்னிடம் சொன்னார், குஜராத்தி இலக்கியம் செத்துக்கொண்டிருக்கிறது. குஜராத்திகளிடம் பணம் வருந்தோறும் அது மேலும் அழியும்.
மாறாக ஒவ்வொரு சிக்கல்களின் போதும் சீக்கிய சமுதாயம் அமெரிக்காவின் எளிய தரப்பினருடன் நின்றிருக்கிறது, சேவை செய்கிறது. கலாச்சார நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறது. அது கண்கூடாகத் தெரிகிறது. தமிழர்கள் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டியது பஞ்சாபியர்களைத்தான்.
அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கோ துன்புறும் வீடில்லாதவர்களுக்கோ தமிழ் மக்களின் அமைப்புகள் ஏன் கொடையளிக்ககூடாது? அமெரிக்காவின் முகமென திகழும் கலாச்சார விஷயங்களை ஏன் ஒருங்கிணைக்கக்கூடாது? அளிக்கவேண்டும் என்பது மட்டுமல்ல, அளிப்பது வெளிப்படையாகத் தெரியவும் வேண்டும். இல்லையேல் நீண்ட கால அளவில் ஒட்டுண்ணிகள் என்னும் சித்திரத்தை அமெரிக்க தமிழர்கள் அடைவதை தவிர்க்க முடியாது. இப்போதே அச்சித்திரம் ஆங்காங்கே உருவாகத்தொடங்கியிருப்பதை டாக்சி ஓட்டுநர்கள், அங்கு பல இடங்களில் சந்திக்கும் எளிய கருப்பின மக்கள் பேசும் ஓரிரு சொற்களில் இருந்து என்னால் ஊகிக்க முடிகிறது.
அமெரிக்க மக்களுக்கு, தமிழர்களுக்கு நான் கூறவிரும்பும் இன்னொன்று உண்டு. அவர்கள் இன்று அமெரிக்க குடிமகன்கள். இந்திய அரசியலை அவர்கள் பேசுவதும், இந்திய அரசியலில் ஈடுபடுவதும் ஒருவகையில் அமெரிக்கத் தேசத்திற்கு இழைக்கும் துரோகம்தான். நான் அமெரிக்க குடியுரிமை பெற்றால் ஓர் அமெரிக்கக் குடிமகனுக்கு எந்த அளவுக்கு ஆர்வமிருக்குமோ அந்த அளவுக்கு ஆர்வத்தை மட்டுமே இந்தியாமேல் காட்டுவேனே ஒழிய, அமெரிக்கச் சட்டை போட்டுக்கொண்ட இந்தியனாக என்னை உணர்ந்து இந்திய அரசியல் பற்றிச் சலம்பிக்கொண்டு இருக்க மாட்டேன்.
தமிழ் மக்கள் அமெரிக்க அரசியலில் ஈடுபடவேண்டும். அமெரிக்க அரசியலின் அனைத்து தரப்புகளிலும் இந்தியருடைய பங்கு காலப்போக்கில் உருவாகி வரவேண்டும். இந்திய அரசியலில் அங்கிருக்கும் தமிழர்கள் எதிர்மறையாகவே பங்களிப்பாற்றமுடியும். அது அவர்களுக்கும் கேடு, தமிழகத்துக்கும் நல்லதல்ல.
இரண்டு காரணங்கள். இந்திய அரசியலை அமெரிக்காவில் இருப்பவர்கள் அங்கிருந்துகொண்டு முழுமையாக அறியவே முடியாது. அமெரிக்காவிலிருக்கும் எல்லா தரப்பினரும் தமிழக இந்திய அரசியலைப்பற்றி, இங்குள்ள வாழ்க்கைச்சூழலைப்பற்றி, மிக கற்பனையான பிம்பங்களையே வைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறேன். அவை சமூக ஊடகங்கள் வழியாகவும் செய்தி ஊடகங்கள் வழியாகவும் கிடைக்கும் உதிரிச் செய்திகளில் இருந்து அவர்களே உருவாக்கிக்கொண்டவை. தங்களுடைய நோக்கங்கள் ,உணர்வு நிலைகள் ,சார்புகள் ஆகியவை சார்ந்து புனைந்து கொண்டவை.
(தமிழக அரசியலை சென்னையில் இருந்துகொண்டே உணரமுடியாது. அதற்கு நாகர்கோயில்போன்ற சிற்றூர்களுக்கு வரவேண்டும். அதைவிட உள்ளூர்களில் வாழ்ந்த அறிதல் வேண்டும்)
அந்தப் பொய்யான உளப்பிம்பங்களை ஒட்டி மிகை உணர்ச்சி அரசியலை உருவாக்கிக்கொள்கிறார்கள் அமெரிக்கத் தமிழர்கள். அமெரிக்காவில் இருக்கையில் அவர்களுக்கு ஒரு கலாச்சாரத் தனிமை இருக்கிறது. அதன் விளைவான உளச்சோர்வும் உள்ளது. ஏனென்றால் அவர்கள் இங்கே வளர்ந்தவர்கள், அங்கே உளம் பொருந்தாதவர்கள். அவர்கள் அங்குள்ள வாழ்க்கைச்சூழலில் தொடர்புகொண்டுள்ள இடம் மிகக்குறைவானது.
அந்தத் தனிமையையும் சோர்வையும் வெல்லும் பொருட்டே அவர்கள் தமிழக அரசியல் பேசுகிறார்கள். அதைப்பகிர்ந்து கொள்ளும் கும்பல்களை கண்டடைகிறார்கள். அவர்களிடம் பேசிப் பேசி மேலும் தங்களைத் தாங்களே வெறியேற்றிக்கொண்டு,ஓர் உச்ச நிலையில் வெளிப்படுகிறார்கள். இந்துத்துவர், தமிழ்த்தேசியர், திராவிட இயக்கத்தவர், சாதிப்பற்றாளர் என அமெரிக்காவில் இருந்து அரசியல் பேசும் எல்லா தரப்பினரும் ஏதேனும் ஒருவகை வெறியைத்தான் முன்வைக்கிறார்கள். அங்கிருக்கும் தனிமை அளிக்கும் உளச்சோர்வின் விளைவு. பிரிந்திருக்கும் நெருக்கமானவர்கள் மேல் நாம் தர்க்கமற்ற உணர்ச்சிகரம் கொண்டிருப்பது போல. நிதானமான அரசியல் என்பதை ஒரு குடிபெயர்ந்த இந்தியனால் பேசமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.
அமெரிக்க இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்துகொண்டு இந்தியப் பண்பாட்டுச் செயல்பாடுகளுடன் ஒத்துழைக்கலாம். இந்திய ஆன்மிகப்பணிகளுக்கு உதவலாம். இந்தியப்பண்பாடு, இந்து ஆன்மிகம் இந்தியர்களையும் அமெரிக்கர்களையும் இணைக்கிறது. தமிழ்ப்பண்பாடு தமிழகத்தையும் அமெரிக்கத்தமிழர்களையும் இணைக்கிறது.அந்தப்பண்பாட்டுச் செயல்பாடுகளில் அரசியல் முற்றிலும் தவிர்க்கப்பட்டு வெறும் பண்பாட்டுச் செயலாக மட்டுமே நிகழும் தளத்தில் அவர்கள் பங்களிக்கையிலேயே உண்மையான நிறைவை அடைவார்கள். சரியான பங்களிப்பையும் செய்வார்கள். அதாவது அவர்கள் அமெரிக்கர்களாக மட்டுமே நீடித்தபடி செய்யும் பண்பாட்டு, ஆன்மிகச் செயல்பாடுகளையே அவர்கள் செய்யவேண்டும்.
மோடி அமெரிக்கா வரும்போது பல்லாயிரம் அமெரிக்க இந்தியர்கள் இந்தியத் தேசியக்கொடியுடன் அவரை வரவேற்கும்பொருட்டு கூடியதைக்கண்டு நான் அருவருத்தேன். அது ஒரு அமெரிக்கனாக தன்னை உணரும் வெள்ளையருக்கு என்ன உணர்வை உருவாக்கும்? அத்தகைய ஒரு செயல்பாடு இந்தியாவில் நிகழ்ந்தால் இந்தியர்களாகிய நாம் அவர்களைப்பற்றி என்ன நினைப்போம்? இந்தியாவில் டெல்லியில் பர்மியக் குடியேற்ற மக்கள் பல ஆயிரம் பேர் உள்ளனர். இந்தியா அளிக்கும் அனைத்தையும் பெற்று இங்கே வேரூன்றியவர்கள். பர்மியத் தலைவர் ஒருவர் வரும்போது அவர்கள் திரண்டு பர்மியக் கொடியுடன் வரவேற்று ஆர்ப்பாட்டம் செய்து வெறிக்கூச்சல் எழுப்பினால் இந்தியா அதை எப்படி பார்க்கும்? அது ஒரு துரோகம் என்றே எனக்குத்தோன்றுகிறது. அது ஒரு கீழ்மையான உணர்வு வெளிப்பாடு. அந்த நாட்டுக்கு, அதன் மரபுக்கு விசுவாசமாக இருப்பதாகச் சொல்லி பிரமாணம் எடுத்து குடிமகன்களாக ஆனவர்கள் நீங்கள் என்று அந்த அமெரிக்க இந்தியர்களிடம் சொல்ல விரும்புகிறேன்.
இந்தியாவில் லத்தூர் பூகம்பத்தின்போது அமெரிக்க குடிபெயர்ந்த இந்தியர்கள் பெருங்கொடையால் ஓராண்டில் அப்பகுதி மறுபடி உயிர்த்தெழுந்தது. அது உயர்வான ஒரு மனநிலை. எங்கிருந்தாலும் இந்தியச் சகோதரனுக்கு கைநீட்டுவது, இந்திய பண்பாட்டுக்கு கொடையளிப்பது ஒரு பெருமையான பணி. ஆனால் இந்திய அரசியலில் ஈடுபட்டு தாங்களும் சிறுமையடைந்து, தங்கள் சென்று வளர்ந்து பெருகி வாழும் அந்தத் தேசத்தை சிறுமையடைச் செய்வது கீழ்மை. இந்திய அரசியல் பேசும் அமெரிக்கக் குடிமகன்கள் எவரையும் எந்நிலையிலும் பொருட்படுத்துவதில்லை என்பது என்னுடைய அழுத்தமான கொள்கைகளில் ஒன்று.
அமெரிக்க தமிழர்களுக்கு உரைத்த சுவிசேஷத்தை இங்கே முடிக்கலாமென நினைக்கிறேன். அமெரிக்கர்களாக இருங்கள். அமெரிக்கப் பண்பாட்டுக்கும் அமெரிக்க வாழ்க்கைக்கும் முடிந்தவற்றைச் செய்யுங்கள். உங்கள் வேர்த்தொடர்பினால் தமிழகத்துக்கு ஏதேனும் அளிக்கமுடியுமென்றால் அதை மட்டும் அளியுங்கள். சென்றுவிட்டீர்கள், சென்ற இடத்தில் முழுமையாகப் பொருந்துங்கள் அமெரிக்காவை உங்கள் வருந்தலைமுறைகள் வெல்லட்டும். மகத்தான அந்த தேசம் உங்களாலும் உங்கள் மரபினராலும் மேலும் மகத்துவம் பெறட்டும்.
ஆம், அவ்வாறே ஆகுக!