அன்புள்ள ஜெயமோகன்,
கலை, ஆன்மீகம் ,தத்துவம்,வரலாறு இவை எல்லாம் நமது மனதை விசாலம் அடையச் செய்கிறது என்று எண்ணிக் கொண்டிருப்பவன் நான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிப்பதை மேற்கொண்டு வருபவன் நான் .இவையெல்லாம் ஒரு அழகான வாழ்க்கையை வாழவும், அமைதியைத் தரும் என்றும் எண்ணிக் கொண்டிருந்தேன். என்னுடைய சுய மரியாதை , நம்பிக்கை ,அறம் இவற்றை வளர்த்தெடுத்தது இந்தப் புத்தகங்களில் இருந்து தான். நவீன, பின் நவீன சிந்தனைகள் எனக்குள் உருவாகியதும் இங்கிருந்து தான்.ஆனால்..
நமது சமூகம் இன்னும் நிலப்பிரபுத்துவத்தில் இருந்து விடுபடவில்லை என்று நீங்களே ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள். இன்னும் நிலப்பிரபுத்துவ நிலையில் இருக்கும் உயர் அதிகாரிகளிடம் /மேலாளர்களிடம்/முதலாளிகளிடம் இலக்கியமும் ஆன்மீகமும் தத்துவமும் படித்த ஒருவன் உண்மையிலேயே பணியாற்ற முடியுமா? சென்ற நூற்றாண்டு வரை இருந்த தீண்டாமைக்கொடுமை இன்றும் அப்படித்தானே உயர் அதிகாரிகள் என்ற வடிவில் உள்ளது . தனக்குக் கீழ் பணியாற்றுபவன் தனக்கு முன் சரிசமமாக உட்கார்ந்து பேசக் கூடாது, நின்று கொண்டு தான் பேச வேண்டும் என்று விரும்பும் அதிகாரிகள் பெரும்பான்மையாக உள்ளனர் . எனக்கு முன் நீ பேசக்கூடாது நான் சொல்வதை நீ கேட்க வேண்டும் என்று தான் இவர்கள் விரும்புகின்றனர் .
இறைவனும் நானும் ஒன்று என்று எண்ணும் அத்வைதியின் நிலை இன்று என்ன? பாரதியையும் ஜெயகாந்தனையும் படித்த ஒருவன் இந்தச் சூழலில் எப்படி வாழ முடியும் ? சுந்தர ராமசாமியின் ‘பல்லக்குத் தூக்கிகள்’ படைப்பை ஈடுபாட்டோடு ரசித்தவன் நான் .ஆனால் எனது உயரதிகாரிகள் ,மேலுயரதிகாரிகள் தங்களைப் பெரியவராகவும் கீழிருப்பவர்களைப் பல்லக்குத் தூக்கிகளாகவும் எண்ணும் நிலையில் என்னால் எப்படி இருக்க முடியும் ? இலக்கியம் என்னைப் பெரிதாக விரிவடையச் செய்கிறது.ஆனால் எதார்த்தம் என்னைப் புள்ளியாகச் சுருங்கச் செய்கிறது .
இவை எதையுமே படிக்காத சக ஊழியர்கள் நிம்மதியாக எந்த சுய மரியாதையைச் சிந்தனைச் சிக்கலும் இல்லாமல் நிம்மதியாக உள்ளனர். ஒரு வேளை நாம் வாசிப்பது தான் தவறோ? அப்படி இருந்திருந்தால் நானும் நிம்மதியாக இருந்திருப்பேனோ? நான் தனி ஒருவனாக எனக்காகக் கேட்கவில்லை ,என்னைப் போன்ற பலரில் ஒருவனாகக் கேட்கிறேன். நான் வாசிப்பைத் துறந்து விட்டு பல்லக்கைத் தூக்குவதா இல்லை பல்லக்கைத் தூக்கி எறிந்து விட்டு பதவியைத் துறப்பதா?
அன்புடன்
மோகன் தாஸ்
அன்புள்ள மோகன்தாஸ்,
ஏற்கனவே நான் இன்னொரு வினாவுக்கான பதிலாக விதிசமைப்பவர்கள் என்று விரிவாகக் கட்டுரை எழுதியிருந்தேன். கோடிக்கணக்கான சாதாதரண மனிதர்கள் வாழும் சாதாரண தளத்தில் இருந்து தன் நுண்ணுணர்வால், அறிவால் ஒரு படி மேலே எழுந்துவிட்ட மனிதனுக்கு இருக்கும் பொறுப்பு பற்றியது அக்கட்டுரை. சலுகைகளைப்பற்றியது அல்ல. உங்கள் வினாக்களுக்கான பதில்கள் அதில் ஏற்கனவே விரிவாகப் பேசப்பட்டுவிட்டன.
முதல் விஷயம், நீங்கள் இனிமேல் ஒரு எளிய வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது. செல்வத்தை உதறலாம்,அறிவை எப்படி உதற முடியும்? ஆகவே பிறரைப்போல இருப்பது என்ற கனவுக்கே இடமில்லை. நீங்கள் இப்போதிருக்கும் இடத்தில் இருக்க மேலே செல்ல என்னவழி என்பதே கேள்வி.
இலக்கியமும் நுண்ணுணர்வும் உங்களுக்கு அளிப்பது லௌகீக கௌரவம், இன்பம், நிறைவு என்று பொருள் கொள்ள வேண்டியதில்லை. அந்த எண்ணத்தையே நான் அக்கட்டுரைகளில் கண்டித்திருந்தேன். நீங்கள் உங்கள் அறைக்குள் இருந்து வாசிப்பதும் சிந்திப்பதும் வெளியே விரிந்து கிடக்கும் மனிதகுலத்துக்காக என்பதை உணருங்கள். அந்த மக்கள் ஒருவேளை ஒன்றும் வாசிக்காதவர்களாக இருக்கலாம், ஒன்றைப்பற்றியும் கவலைப்படாதவர்களாக இருக்கலாம், வாசிப்பையும் நுண்ணுணர்வுகளையும் மதிக்காதவர்களாக இருக்கலாம் , நிந்திப்பவர்களாக இருக்கலாம். ஆனால் நீங்கள் அவர்களுக்காகவே வாசிக்கிறீர்கள், சிந்திக்கிறீர்கள். நீங்கள் சிந்தனைத்திறனுடனும் நுண்ணுணர்வுடனும் படைக்கப்பட்டிருப்பதே அவர்களுக்காகத்தான்.
இந்த மண்ணில் பிறந்திறந்து மடியும் அனைவரும் நுண்ணுணர்வுடன் சிந்தனைத்திறனுடன் இல்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களுக்குரிய அன்றாட வாழ்க்கையை மட்டுமே அறிவார்கள். இந்தபூமியில் அவர்கள் மானுட வாழ்க்கையை, அதற்கான அமைப்புகளை, அதற்கான நெறிமுறைகளை நிலைநிறுத்திக்கொண்டு செல்கிறார்கள். ஆனால் மானுடம் மேலும் மேலும் தேடுகிறது. பழையவற்றை மறுபரிசீலனை செய்கிறது. புதியன படைக்கிறது. அந்தப் படைப்பியக்கம் பலலட்சம் அறிஞர்களால் கலைஞர்களால் செயல்வீரர்களால் ஒரு பெரும் பிரவாகமாக மானுடம் தோன்றியநாள்முதல் இன்றுவரை சென்றுகொண்டிருக்கிறது
முதன்முதலில் தீயைக் கண்டறிந்த மூதாதை முதல்,நம் முன் ஒரு சிந்தனையை முன்வைக்கும் அறிஞன் வரை அந்த தொடர்ச்சி உள்ளது. ஓர் வாசகனாக நீங்கள் அந்தப் பேரமைப்பை நிலைநாட்டும் பணியில் இருக்கிறீர்கள். வாசிப்பதன் வழியாக,சிந்திப்பதன் வழியாக அந்த நதியில் ஒரு துளியாக இருக்கிறீர்கள். அது ஒரு வாய்ப்பு, ஒரு பொறுப்பு.
விதிசமைப்பவர்களுக்குச் சலுகைகள் இல்லை, பொறுப்பு மட்டுமே உண்டு என சொல்லியிருந்தேன். அவர்கள் தங்கள் காலகட்டத்தின் எல்லா எதிர்மறை அழுத்தங்களையும் தாங்கித்தானாக வேண்டும். புறக்கணிப்புகளையும் ஏளனங்களையும் எதிர்கொண்டாகவேண்டும். அது அவர்களின் கடமை. அதை நிறைவேற்றுவதில் புனிதமான ஒர் உவகை உள்ளது. அதுவே அவர்களுக்குக் கிடைக்கும் பலன்.
நான் நெடுங்காலம் ஒரு புத்தகத்திற்கும் வார இதழுக்கும் வேறுபாடு தெரியாதவர்களின் கீழேதான் பணியாற்றியிருக்கிறேன். அங்கே என்னை ஒருபோதும் காட்டிக்கொண்டதில்லை. பல சமயம் அலுவலகங்களில் எனக்கு தமிழ் எழுதப்படிக்க தெரியும் என்றே தெரிந்திருப்பதில்லை. நான் அங்கே என்னுடைய இலக்கிய ஈடுபாடுகளைக் காட்டியதோ அதற்காக சலுகை கோரியதோ இல்லை.எத்தனையோ கலைஞர்கள் பட்டினி கிடந்திருக்கிறார்கள். மேதைகள் தெருவில் அலைந்திருக்கிறார்கள். குறைந்தது இந்த அலுவலக வேலை எனக்கு நிலையான வருமானத்தை, ஒரு வீட்டை உணவை உடைகளை, அளிக்கிறதே என்று மட்டும்தான் நினைத்துக்கொள்வேன்.
நீங்கள் ஒரு நாடகத்தில் நடிக்கிறீர்கள். அந்தக் கதாபாத்திரத்தை இன்னொரு கதாபாத்திரம் தாக்குகிறது, அவமதிக்கிறது என்றால் அதை உங்களுக்கு நிகழ்வதாக எண்ணுவீர்களா என்ன? அது நீங்கள் அல்ல என உங்களுக்குத் தெரியுமல்லவா? அதைப்போலத்தான் இதுவும். ஜெயமோகன் என்ற எழுத்தாளன்தான் நான். ஜெயமோகன் என்ற பேரில் பிறர் நினைக்கும் அந்த ஆளுமை அல்ல நான். அவனுக்குச் சில சமூக பொறுப்புகள் உண்டு. ஒரு சமூக இடம் உண்டு. அதற்காக அவன் சில வேலைகளைச் செய்கிறான். அவன் அல்ல நான். அவன் என்னுடைய வேடம்.
நான் அலுவலகத்தில் அவமதிப்புகளை எதிர்கொண்டதில்லை. அது என் அலுவலகச்சூழல். நீங்கள் தமிழக அரசூழியர் என நினைக்கிறேன். மேலும் நான் தொழிற்சங்கவாதியாக இருந்தேன். ஆனால் அந்த வேடங்களை என் மேல் தோற்றமாகவே கொண்டிருந்தேன். அந்தப் பகுப்பு என்னைத் தெளிவாகவே வைத்திருந்தது.
உங்கள் வாசிப்பும் ஆர்வமும் முக்கியம் என நீங்கள் எண்ணினால், அதுவே உங்கள் உண்மையான ஆளுமை என நினைத்தால், அதை மட்டுமே பொருட்படுத்துங்கள். அதைக்கொண்டு இந்த மானுடகுலத்துக்கு எதை அளிக்கிறீர்கள் என்பதை மட்டுமே கவனத்தில் கொள்ளுங்கள். அப்படி நோக்கினால் உங்களை விட மிகமிக அதிகமாக அளித்த மேதைகள் அடைந்த அவமதிப்பையும் தாக்குதல்களையும் நீங்கள் அடையவில்லை என உணர்வீர்கள்.
மேலும் ஒன்று, பல்லக்குமேலிருக்கும் ஆசாமிகளும் வெறும் வேடத்தைத்தான் உண்மை என மயங்குகிறார்கள். அந்த வேடம் கலையும்போது அவர்கள் அடையும் அவமதிப்பும் வெறுமையும் தனிமையும் சாதாரணமானதல்ல. அப்படி உயரதிகாரியாக வலம் வருபவர்கள் அறுபது வயதில் ஓய்வுபெற்றபின் இருபதாண்டுகள் வரை அர்த்தமில்லாத அசட்டு வாழ்க்கை வாழ்வதை எங்கும் காணலாம். இறந்தகாலத்தில் மூழ்கிக் கிடப்பார்கள் அவர்கள். ஓய்வுபெற்ற மறுநாளே மிக உயரதிகாரியாக இருந்த ஒருவரை ‘அந்தால போவும் வே’ என அதே அலுவலகத்தில் கடைநிலை ஊழியர் சொல்வதை, அவர் கூசி நிற்பதை நானே கண்டிருக்கிறேன். கொஞம் சுரணை உள்ளவர்கள் அலுவலகப்பக்கமே வரமாட்டார்கள்.
ஆனால் உங்கள் நுண்ணுணர்வையும் அறிதிறனையும் பேணிக்கொண்டீர்கள் என்றால் உங்களுக்கு அந்த வெறுமை உருவாகாது. சொல்லப்போனால் அந்த வயதில் நான் இதை சாதித்தவன்,இதை இந்த சமூகத்திற்கு அளித்தவன் என்ற நிறைவும் பெருமையும் உங்களை நிறைத்திருக்கும். உங்களின் சொந்தத் தகுதி ஒருபோதும் உங்களைவிட்டு விலகாது என உணர்வீர்கள்
இதை நான் நேற்றும் கண்டேன். அ.கா.பெருமாள் பேராசிரியராக இருந்த காலகட்டத்தில் கல்லூரி அரசியல்களில் ஈடுபடாமல் ஒதுங்கி சாமானியராக இருந்தவர். ஆகவே பெரிய பதவிகளில் இருக்கவுமில்லை. அவரைத்தாண்டிப் பெரியபதவிகளில் இருந்தவர்கள் மிதப்பும் தோரணையுமாக அவரைக் குனிந்து பார்த்தார்கள். அவர்கள் இன்று ஓய்வுபெற்றபின் சட்டென்று சல்லிகளாக ஆகிவிட்ட உணர்வுடன் பவ்யமும் கூச்சமுமாக ஆகிவிட்டிருக்கிறார்கள். அ.கா. பெருமாள் அவர்களின் கண்ணெதிரே ஒரு பெரிய ஆளுமையாக, ஒரு வரலாற்று மனிதராக ஆகிவிட்டிருக்கிறார். அவர்களால் என்ன நிகழ்ந்தது என்று புரிந்துகொள்ளவே முடியவில்லை
விதிசமைப்பவனுக்கு ஒரு சிம்மாசனம் உண்டு. காலத்தில். அதை அவன் தியாகம் மூலமே ஈட்டமுடியும்.
ஜெ
[மறுபிரசுரம். முதல்பிரசுரம் 2011]