வடகிழக்கு நோக்கி-5, பூட்டான்

யும்தாங் சமவெளியில் இருந்து திரும்பும்போது மழை பெய்தது. மலையில் இருந்து கொட்டிய அருவிகள் பெரிதாகிவிட்டிருந்தன. திரும்பி வரும்போது சிக்கிம் காவலர்கள் வண்டியைப் பிடித்து அதிக சுமை ஏற்றியமைக்காக ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்கள். நேராக விடுதிக்கே வந்தோம். பேமாவின் கைச்சமையலை உண்டோம்.

அங்கே ஒரு சின்னப்பூசல். நாங்கள் கிளம்பும்போது அறையைத் திறந்து வைத்துவிட்டுச் சென்றிருந்தோம். ஆனால் ‘அறைகள் மூடப்பட்டிருந்தன, சாவி இல்லை’ என்றார் விடுதி நிர்வாகியான பேமாவின் கணவன்.’இல்லை சாவி அங்கேயே இருந்தது’ என்றோம். செந்தில்தான் சாவிகளை வைத்திருந்தவன். பூட்டாமல்தான் சென்றோம் என்று அவனும் உறுதியாகச் சொன்னான். யுவனும் நானும் கொந்தளித்து வேண்டுமென்றால் பைகளைச் சோதனைபோடு என்றோம். அவன் தயங்கினான்.சாவிகளை எடுத்து வைத்துவிட்டுப் பணத்துக்காக ஏதோ நாடகம் போட்டுப் பெரிதாக்குகிறான் என்று எங்கள் எண்ணம்

நள்ளிரவில்தான் காங்டாக் திரும்பிவந்தோம். வரும் வழியில் வண்டிகள் சேற்றில் சிக்கி நின்று ஓட்டுநர்கள் இறங்கிப்போய் ஏற்றி விட்டார்கள். மொத்த சாலையே சேற்றுக்குழியாக இருந்தது. ஒரு இடத்தில் வண்டி மேலே ஏற முடியாமல் நின்றும் விட்டது. நாங்கள் இறங்கி மூச்சிரைக்க நடந்து மேடேறினோம். காங்டாக் திரும்பிவந்தால் செந்திலின் பெட்டியில் சாவிகள் இருந்தன. அவன்தான் அறைகளைப் பூட்டியவன். மறந்துவிட்டானாம். கிருஷ்ணன் ஒரு மன்னிப்புக் கடிதத்துடன் சாவிகளை ஓட்டுநரிடம் கொடுத்துத் திரும்பிக்கொடுக்கச் சொன்னார். பொதுவாக இம்மாதிரிப் பயணங்களில் நாம் நம்மை யாரும் ஏமாற்றிவிடக்கூடாதென்ற மனநிலையிலேயே இருக்கிறோம். அது ஒரு பதற்றத்தை உருவாக்கி விடுகிறது
காங்க்டாக்கில் இருந்து அதிகாலை ஆறுமணிக்கு சிலிகுரிக்குத் திரும்பப் பயணம் ஆனோம். செந்தில் மறதியாக விடுதி உரிமையாளரின் பையையும் தூக்கிக்கொண்டு கிளம்பினார். அவர் பதறியடித்துப் பின்னாலேயே வந்தார்.

மலையிறங்கியதும் வெயில். இருபக்கமும் வளமான மண். மழைபெய்திருந்தமையால் பச்சை போர்த்தியிருந்த்து.தீஸ்தாவின் கரையோரமாகவே சென்றோம். பூட்டானில் நுழையும் வாசல் புயூச்சோலிங் என்ற ஊர். இது வங்காளத்தில் இருக்கிறது. குப்பை மலிந்த ஊர். ஆனால் நல்ல சாலையை எல்லைக்காவல்படை போட்டிருக்கிறது. பூட்டான் நாட்டு வாசல் பூட்டான் நாட்டு கட்டிடப்பாணியில் அமைந்த ஒரு அழகிய தோரணமுகப்பு. நாங்கள் செல்லும்போது தாமதமாகிவிட்ட்து. மதிய உணவு இடைவேளை. ஆகவே நாங்களும் சென்று சாப்பிட்டுவிட்டு ஒன்றரை மணிக்கு உள்ளே சென்றோம்

பூட்டானில் நுழைய விசா வேண்டாம். ஆனால் அனுமதிச்சீட்டு வேண்டும். அதற்கு இந்திய பாஸ்போர்ட் அல்லது இந்திய வாக்காளர் அடையாளச்சீட்டு வேண்டும்.   ரேஷன் கார்டுதான் கொண்டு சென்றிருந்தேன். அதைக்கொண்டு அனுமதி வாங்க பல சிக்கல். முதலில் இந்தியன் எம்பசி சென்று அந்தக் கார்டு அடையாள அட்டைதான் என ஒரு கடிதம் வாங்கி அதைக் கொண்டுசென்று கொடுத்து அனுமதி வாங்கினோம். இரண்டு மணி நேரம் ஆகியது.
மூன்றரை மணிக்கு இரு வண்டிகளில் பூட்டானுக்குள் நுழைந்தோம். ஒரு சிறு எல்லை. அதற்கு அப்பால் பூட்டான் மிகமிகச் சுத்தமான நாடாக இருந்தது. அற்புதமான சாலைகள். பூட்டான் முழுக்க அரசூழியர்களுக்கு அவர்களின் தேசிய உடையைக் கட்டாயமாக ஆக்கியிருந்தார்கள். சீனாவின் கிமோனா போன்ற ஓர் உடை.

பூட்டானில் மலை ஏற ஏற மீண்டும் குளிர் நெஞ்சை அடைக்க ஆரம்பித்தது. வழியில் ஒரு ராணுவச் சிற்றுண்டிச்சாலையில் சாம்பார்வடையும் பருப்புவடையும் கிடைத்த்து. அங்கே பொறுப்பில் இருந்தவர் காயங்குளத்தைச் சேர்ந்த ஒரு மலையாளி. ஏஷியாநெட் பார்த்துக்கொண்டிருந்தார்.

இரவு ஒன்பது மணிக்கு பூட்டானுக்குள் நுழைந்தோம். பூட்டானின் தெருக்களும் கட்டிடங்களும் அவர்களுக்கே உரிய தனித்தன்மையான கட்டிடக்கலை கொண்டவை. சட்டென்று ஓர் அன்னிய நாட்டுக்குள் நுழைந்த நிறைவு கிடைத்த்து. ராவன் ஓட்டலில் எங்களுக்காக அறை. மூன்று நட்சத்திர விடுதி. மொத்த விடுதியுமே பெண்களால்தான் நிர்வாகம் செய்யப்படுகிறது. வெயிட்டர்கள் சமையல்காரர்கள் எல்லாருமே பெண்கள். அதுதான் இங்கே வழக்கம். உற்சாகமான அழகிய பெண்கள் பணிவுடன் வரவேற்று அறையைச் சரிசெய்துகொடுத்தார்கள்.
[மேலும்]

வட கிழக்கு நோக்கி,4 – யும் தாங் சமவெளி

வடகிழக்கு நோக்கி 3- காங்டாக்

வடகிழக்கு நோக்கி 2-நெடும்பயணம்

வடகிழக்கு நோக்கி 1- தேர்தலும் துவக்கமும்

 

முந்தைய கட்டுரைவடகிழக்கு நோக்கி 4, யும் டாங் சமவெளி
அடுத்த கட்டுரைகடிதங்கள்