நமது குழந்தைகளின் முன்…

தமிழ் விக்கி 

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 3

நமது அமெரிக்கக் குழந்தைகள் என்னும் மூன்று பகுதிக் கட்டுரையை எழுதியிருந்தேன். அதில் நாம் செய்யவேண்டியதென்ன என்னும் வினாவுக்குப் பதிலாக ஒன்றைச் சொல்லியிருந்தேன்.

நம்முடைய அமெரிக்கக் குழந்தைகள் இலக்கியம், கலைகள், சிந்தனைகள் எனும் தளங்களில் உலகின் மிகச்சிறந்த கல்விமுறை ஒன்றில் பயில்பவர்கள். நாம் மிகமிகப் பின்தங்கிய கல்விமுறை ஒன்றில் பயின்று ஒன்றுமே தெரியாமல் வாழ்பவர்கள். இந்த வேறுபாட்டை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களை பயிற்றுவிப்பது அல்ல நம் சவால், அவர்கள் அளவுக்கு நாம் உயர்வதே.

நம் குழந்தைகள் அங்கே பிறந்து, அங்குள்ள பண்பாட்டில் கலந்து வெல்லவேண்டிய அறைகூவல் உள்ளது. ஆகவே அவர்கள் தமிழை முறையாகவும் சரியாகவும் கற்று பேசவும் படிக்கவும் தேர்ச்சி பெறாமல் போகலாம். ஆங்கிலமே அவர்களின் முதன்மைமொழியாக இருக்கலாம். அது இயல்பு. அதுவே சரியானது.

ஆனால் அவர்களில் நுண்ணுணர்வுகொண்ட சிலர் ஒரு கட்டத்தில் தங்கள் பண்பாட்டு அடையாளம் சார்ந்த தேடலை அடையலாம். அவர்களுக்கு உகந்த வகையில் நாம் தமிழ்ப்பண்பாட்டை அறிமுகம் செய்திருக்கிறோமா? அவர்கள் மதிக்கும் வகையில் நம் இலக்கியங்களையும் சிந்தனையையும் முன்வைக்கிறோமா?

இல்லை என்பதே என் பதில். நேர்மாறாக தங்களுக்குப் பிடித்தவையும் தங்களுக்குப் பிடிபடுபவையுமான எளிமையான மலினமான விஷயங்களை அவர்கள் முன் தமிழ்ப் பண்பாடு என்று கொண்டுசென்று வைப்பதையே அமெரிக்காவில் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆகவே ஆழமான மதிப்பின்மையை தங்கள் குழந்தைகளிடம் இருந்து ஈட்டிக்கொள்கிறார்கள்.

நம் பண்பாட்டின் வெற்றிகள் என்ன, சாராம்சம் என்ன என்றெல்லாம் அக்கட்டுரையில் விரிவாகவே பேசியிருந்தேன். செவியுள்ளோர் கேட்கட்டும்.

நான் சென்ற அமெரிக்கப் பயணத்தின்போது  நிர்மல் குமார் என்னும் நண்பரின் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே 18 வயதான ஸ்ரேயா சந்திரன் என்னும் நண்பர் சந்திரன் முத்துசாமியின்  மகள் தன் பள்ளி செயல்முறைக்காக எழுதியிருந்த ஒரு குறுங்கட்டுரையை எனக்குக் காட்டினர். தன் சுருளான தலைமுடி பற்றி ஸ்ரேயா எழுதியிருந்தார். நவீன இலக்கியத்திற்குரிய இலக்கிய கருவிகளைக்கொண்டு எழுதப்பட்ட கட்டுரை. தன் தலைமுடியை தன் அடையாளமாக முன்வைக்கும் அக்கட்டுரை அதன் ‘வணங்காமுடி’த்தன்மையை கொண்டாடியது.

வியந்துபோய் ஸ்ரேயாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவருடைய இலக்கிய ரசனை, வாசிப்பு பற்றி. பின்னர் ஸ்ரேயா சந்திரன் அவரே ஓட்டும் ஜீப்பில் எங்களை இன்னொரு நண்பரின் இல்லத்துக்குக் கொண்டுசென்றார். குலதெய்வ வழிபாடு, பெருந்தெய்வ வழிபாடு, ஆப்ரிக்க நாடுகளிலுள்ள வழிபாடுகளுக்கும் அவற்றுக்கும் உள்ள உறவு ஆகியவற்றை பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.

ஸ்ரேயாவின் தோழி மேகனா நண்பர் நிர்மலின் மகள். அன்று மேகனாவும் அந்த உரையாடலில் கலந்துகொண்டார். இருவரின் கூர்மையும் தீவிரமும் எனக்கு பெருவியப்பை உருவாக்கின. மேகனா சுசித்ரா மொழியாக்கம் செய்து அசிம்டோட் சர்வதேச இலக்கியப்போட்டியில் பரிசு பெற்ற பெரியம்மாவின் சொற்கள் கதை பற்றி ஒரு குறிப்பு அனுப்பியிருந்தார். அதை சுசித்ராவுக்கு அனுப்பியிருந்தேன்.

சுசித்ரா அதைப்பற்றி எழுதிய கடிதமும், சுசித்ரா அக்கடிதத்தை மொழிபெயர்த்ததும் கீழே உள்ளன

நான் என் கட்டுரையில் சொல்வது சுருக்கமாக இதுதான் நண்பர்களே. மேகனா போன்ற குழந்தைகளுக்கு நாம் தமிழ்ப்பண்பாடு என்று கொண்டுசென்று கொடுப்பது என்ன? தமிழின் உச்சங்களை மட்டும் கொண்டுசெல்வோம். தமிழகத்தின் சில்லறை அரசியல் காழ்ப்புகளை, அசட்டு வேடிக்கைகளை அல்ல. நம் முன் ஒரு வரலாற்றுக் கடமை வந்து நின்றுள்ளது.

தமிழ் விக்கி அந்தப் பெரும்பணியை தொடங்கியுள்ளது. தமிழ்ப் பண்பாடு, சிந்தனை, இலக்கியம் ஆகியவற்றை முன்வைக்கும் காத்திரமான லட்சம் கட்டுரைகள் என்பதே பெருங்கனவாக உள்ளது. மேகனாவின் தலைமுறைக்காக.

Analysis of “Periyamma’s Words”

Megana

Periyamma travels from meanings to words, while the narrator goes from words to meanings. To Periyamma, the very sounds of words have inherent truths. “Banana” asks a question, “mango” says hello, “potato” sighs and grumbles. While madhulai pazham covers her face bashfully, pomegranate climbs trees and shouts from rooftops. This itself adds a dimension of significance to the way the words are perceived. Periyamma also uses stories to define words. She uses the story of the dog following Yudistira up in the mountains to determine the meaning of nanni. Nanni is reciprocated between Yudistira and the dog, leading the narrator and Periyamma to use the word “kind” as a translation. She uses the word “kind” to describe people in her everyday life, people she could feel for and people who felt for her back. She even describes the clouds as kind as they nurtured the ground with their tears. The clouds, as Periyamma and the narrator come to learn, are beautiful.

A recurring theme in this piece is how singular words are not enough to produce meanings. When the narrator uses the word “love” to define Murugan’s arul, Periyamma objects, stating that the word “love” describes shallow plots in romantic cinema. “Love” isn’t enough to illustrate the strength and depth of Murugan’s arul for her. It is only when the narrator tells Periyamma about how Shabari meticulously tasted every fruit before giving it to Rama, and how Krishna sufficed himself with a piece of lettuce at Draupadi’s house that they come to the conclusion that the word “bond” is close to what arul means, not love. A connection between a person and a deity. Love, for Periyamma, is replaced with dear, which is replaced with near. The word near, used to indicate the location (“I’m near you” or “The parking lot is nearby”) becomes something deeper and more fluid through Periyamma’s understanding of it. In the planes of existence, the word “near” is used to describe expansion, moving from just physical distance to the distance of a person to your heart.

The innate nature of a person, in Tamil, is karpu. Here, I have defined it in just one sentence, but that sentence doesn’t do the word justice. What creates a person, what shapes them, what drives them, is this not karpu? Does karpu not change with the rides of time? Experiences, actions, can these add to our karpu? We cannot define karpu in a single word. Self is adequate, but it leaves out the story of the word, and what is a word without a story?

The words we speak are tied to our sense of self. They have different meanings for different people. If Gomathi and her family cannot understand Periyamma, does that show that Periyamma cannot speak English? No, it shows that she sees the world through a different wavelength. The way that she uncovers each word is not the same as you and I might. To Periyamma, beauty lies in the rain bearing clouds, bonds extend between her and Murugan, kindness lies in the eyes of the coconut man Arunjunai Nadar. Periyamma doesn’t “define” words, she finds their stories. “Periyamma’s Words” shows us how a word’s meaning has to be discovered, has to be felt, has to be drunk in through all of our senses. Words serve as the bridge between us and the world. Perhaps it is not us who define the words – but the words that define our sense of self.

*

அன்புள்ள ஜெ,

இந்த கடிதத்தை கண்டதில் இந்த நாளே இனிமையானது. பத்தாம் வகுப்பு மாணவியா! இத்தனை அழகாக கதையின் சாராம்சத்தை உள்வாங்கி துல்லியமாக எழுதியிருக்கிறாரே. அற்புதம். தத்துவம் படிக்கிறாரா?

அவர் கடிதத்தை மொழியாக்கம் செய்திருக்கிறேன். உங்கள் தளத்தில் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இதை எழுதிய மாணவியை அவர் சொற்கள் வழியாக மிக நெருக்கமாக உணர்கிறேன். அவருக்கு என் அன்பு.

சுசித்ரா

சுசித்ரா தமிழ் விக்கி

பெரியம்மாவின் சொற்கள், ஆய்வு

மேகனா

‘பெரியம்மாவின் சொற்கள்’ கதையில் கதைசொல்லி சொற்களிலிருந்து பொருளுக்கு பயணிக்கிறார். ஆனால் பெரியம்மா பொருளிலிருந்து சொல்லுக்கு செல்கிறார். சொல்லின் ஓசையிலேயே சாராம்சமான உண்மையொன்றை கண்டுகொள்கிறார் பெரியம்மா. ‘banana’ கேள்வி கேட்கிறது. ‘mango’ வரவேற்கிறது. ‘potato’ பெருமூச்சுவிட்டு அலுத்துக்கொள்கிறது. ‘மாதுளைப்பழம்’ நாணத்தில் முகத்தை பொத்திக்கொள்கிறாள். ஆனால் ‘pomegranate’ மரங்களில் தொத்தி ஏறி கூரைகளில் நின்று கூச்சலிடுகிறான்.  சொற்கள் இவ்வாறு அணுகப்படும்போது மேலும் ஆழம் கொள்கின்றன. பெரியம்மா கதைகள் வழியாக சொற்களின் அர்த்தங்களை அடைகிறார். தருமனை நாய் பின் தொடரும் கதை வழியாக ‘நன்னி’ என்ற சொல்லின் அர்த்தத்தை அடைகிறார். தருமனும் நாயும் ஒருவருக்கொருவர் கொள்ளும் ‘நன்னி’ வழியாக பெரியம்மாவும் கதைசொல்லியும் ‘kind’ என்ற் ஆங்கில வார்த்தையை புரிந்துகொள்கிறார்கள். நன்னிக்கு ஆங்கிலத்தில் kind என்கிறார்கள். பெரியம்மா தன் சுற்றத்தில் உள்ள, தன் மேல் அக்கறை உள்ள, தான் அக்கறை கொண்டுள்ள மனிதர்களை ‘kind’ என்று சொல்கிறார். மேகங்கள் தம் கண்ணீரால் நிலத்தை பேணுவதால் அவற்றையும் kind என்கிறார். தொடர்ந்து மேகங்கள் beautiful என்று பெரியம்மாவும் கதைசொல்லியும் அறிகிறார்கள்.

ஒரு தனிச்சொல் மட்டும் பொருளை உணர்த்த போதுமானதாக இருப்பதில்லை என்ற அனுபவம் இந்தக்கதையில் மீண்டும் மீண்டும் கிடைக்கிறது. ‘love’ என்ற சொல்லை கதைசொல்லி முருகனின் அருளை பற்றிச்சொல்ல உபயோகிக்கிறார். ஆனால் பெரியம்மாவுக்கு உடன்பாடில்லை. ‘love’ என்பதை சினிமாக்காதலோடு அவர் தொடர்பு படுத்துகிறார். முருகன் அருளின் ஆற்றலையும் ஆழத்தையும் உணர்த்த ‘love’ அவளுக்கு போதுமானதாக இல்லை. அதன் பிறகு சபரி கதையையும் கிருஷ்ணன் திரௌபதியின் அட்சயப்பாத்திரத்திலிருந்து ஒரு பருக்கை கீரை உண்டு நிறைந்த கதையையும் விவாதித்து தான் அவர்கள் அருள் என்பது “bond” என்ற புரிதலை அடைகிறார்கள். மனிதனுக்கும் தெய்வத்துக்குமான பந்தம். பெரியம்மாவுக்கு love என்பது dear என்று ஆகி பிறகு near என்று ஆகிறது. Near என்பது ஆங்கிலத்தில் இடத்தை, அருகாமையை, குறிக்கும் சொல். ஆனால் பெரியம்மாவின் புரிதலில் அது மேலும் ஆழமான, மேலும் அர்த்தங்கள் கூடி ஒழுகும் சொல்லாக மாறுகிறது. தூய இருப்பின் தளத்தில் ‘Near’ என்பது மேலும் விரிவுகொண்டு, நடைமுறை தூரத்துக்கு அப்பால் இரு மனங்களுக்கிடையே உள்ள நெருக்கத்தை சுட்டக்கூடிய சொல்லாக ஆகிறது.

ஒரு மனிதனின் சாராம்சமான இயல்பையே தமிழில் கற்பு என்கிரார்கள்.  கற்பு என்ற சொல்லை ஒரு வரியில் வரையறை செய்ய இங்கே நான் முற்பட்டிருக்கிறேன், ஆனால் இதுவும் அந்தச்சொல்லின் முழுமையான அர்த்தத்தை கொண்டுவரவில்லை. ஒரு மனிதனை உருவாக்கும் விசை எதுவோ, எது ஒரு மனிதனை வடிவமைக்கிறதோ, செயலாற்ற உந்துகிறதோ, அது கற்பு இல்லையா? கற்பு காலத்தோடு மாறும் கருத்து அல்லவா? நம்முடைய அனுபவங்கள், செயல்கள், இவை நம் கற்புக்கு ஆழம் சேற்க்கும் விஷயங்கள் அல்லவா? ஆம், கற்பு என்னும் சொல்லையும் ஒரு வார்த்தையில் வரையறுத்துவிட முடியாது. Self என்பது ஓரளவு அதை கொண்டுவரும் சொல் தான், ஆனால் அந்த வார்த்தைக்குப் பின்னால் உள்ள கதை அந்தச்சொல்லில் இல்லை. கதை இல்லாத சொல்லுக்கு என்ன பொருள்?

நாம் பேசும் சொற்கள் நம்முடைய சுயத்துடன், அடையாளத்துடன் இணக்கமான தொடர்புடையவை. அவை வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு விதங்களாக அர்த்தப்படும். கோமதியும் அவள் குடும்பத்தாரும் பெரியம்மாவை புரிந்துகொள்ளவில்லை என்றால் பெரியம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாது என்று அர்த்தமா என்ன? இல்லை, பெரியம்மா உலகத்தை வேறொரு அலைவரிசையில் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் ஒவ்வொரு சொல்லிலிருந்தும் அர்த்தம் எடுக்கும் விதத்தில் நீங்களோ நானோ எடுக்க மாட்டோம். பெரியம்மாவுக்கு அழகு என்பது மழை கனக்கும் முகில்களில் உள்ளது. முருகனுக்கும் அவளுக்கும் அருள் பாலிக்கும் பந்தம் இருக்கிறது. தேங்காய் கொண்டுவரும் அருஞ்சுணை நாடார் அவளுக்கு kind-ஆனவன். பெரியம்மா வார்த்தைகளை வரையரை செய்வதில்லை, அவற்றுக்கு பின்னால் உள்ள கதைகளை விரித்தெடுக்கிறார். “பெரியம்மாவின் சொற்கள்’ கதை நமக்கு காட்டுவதும் அதைத்தான். ஒரு சொல்லின் பொருள் என்பது கண்டடையப்படவேண்டும். உணரப்படவேண்டும். நம் அனைத்து புலங்களால் உட்கொள்ளப்படவேண்டும். நமக்கும் உலகுக்கும் பாலமாக அமைகின்றன சொற்கள். ஆம், ஒருவேளை நம்மால் சொற்களை வரையருக்கவே முடியாது. சொற்கள் தான் நம் சுயத்தை வடிவமைக்கின்றன.

மேகனா

முந்தைய கட்டுரைஜமீன்தாரிணி உரை
அடுத்த கட்டுரைபடிகம் ரோஸ் ஆன்றோவின் இல்ல விழா