விபுலானந்தரும் க.நா.சுவும்- கடிதங்கள்

சுவாமி விபுலானந்தர்
யாழ்நூல்
க.நா.சுப்ரமணியம்

மதிப்பிற்குரிய ஜெயமோகனிற்கு,

யாழ் நூல் பற்றிய பதிவொன்றில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். நீண்ட நாட்களாகியும் நினைவில் வைத்திருந்து குறிப்பிட்டமைக்கு நன்றி.

உங்களதும், உங்கள் குடும்பத்தினரதும் சுக போகங்கள் செழுமையாக இருக்க வேண்டி,

நன்றியுடன்,

சிவதாசன்

கனடா

***

அன்புள்ள சிவதாசன்,

அறிவுச்செயல்பாடுகளுக்கு ஒரு தனி இயல்புண்டு. அவை மிகச்சிறிய வட்டத்திலேயே கவனிக்கப்படும். ஆனால் தலைமுறை தலைமுறையாக நினைக்கவும்படும். நூறாண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டவற்றை எல்லாம் நினைவுகூர்கிறோம். அன்றிருந்த மொத்த வாழ்க்கையுமே தடமில்லாமல் போன பிறகு.

நீங்கள் யாழ்நூலை மறுபதிப்பாகக் கொண்டுவந்தது ஒரு பெரும்பணி. அது என்றும் நினைக்கப்படும். நான் தனிப்பட்ட முறையில் நினைப்பது அல்ல அது. அது ஒரு பண்பாட்டு நினைவு

நலமாக இருக்கிறோம்.

கனடா வரும்போது சந்திப்போம்

ஜெ

***

அன்புள்ள ஜெ

விபுலானந்தர் பற்றிய தமிழ் விக்கி கட்டுரை அருமையானது. மிக விரிவானது. படங்களுடன் ஒரு வரலாற்றையே முன்னால் கொண்டு வருகிறது.

மு.இளங்கோவன் என்பவர் விபுலானந்தர் பற்றி ஆவணப்படம் எடுத்திருக்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.

தமிழகத்தில் விபுலானந்தருக்குச் சமானமான பல அறிஞர்கள் மறக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ் விக்கி வழியாக நீங்கள் மேலே கொண்டுவந்திருக்கும் பெரியசாமித் தூரன், எஸ். வையாபுரிப் பிள்ளை போன்றவர்கள் உதாரணமாகச் சொல்லலாம். அவர்களுக்கு தமிழிலே ஒரு நினைவகம்கூட இல்லை.

அதற்குக் காரணம் அரசியல். தமிழகத்திலே தமிழாய்வு அரசியலாக்கப்பட்டுவிட்டது. தங்கள் அரசியலை ஏற்பவர்களை மட்டுமே ஆட்சியாளர்கள் முன்னிறுத்துகிறார்கள். கல்வித்துறை ஒத்தோடுகிறது.

இன்றைக்கு தமிழியலாளர்கள் திராவிட அரசியலை எதிர்ப்பதனால் அவர்களும் மெல்லமெல்ல புறக்கணிப்புக்கு உள்ளாகிவருகிறார்கள்.

பொழிலன்

***

அன்புள்ள பொழிலன்

அறிவியக்கம் உண்மையான தீவிரத்துடன் இருந்தால் அரசோ அரசியல்வாதிகளோ முன்னோடிகளை மறைக்கவோ புறக்கணிக்கவோ முடியாது. புதுமைப்பித்தனும், க.நா.சுப்ரமணியமும் அரசாலா நிலைநிறுத்தப்படுகிறார்கள்? அவர்கள் பேசப்படாத நாளே தமிழ்நாட்டில் இல்லை அல்லவா? ஏனென்றால் சிற்றிதழ் சார்ந்த அறிவுலகம் தீவிரமாக இருந்துகொண்டிருக்கிறது.

ஜெ

பெரியசாமித் தூரன்

எஸ். வையாபுரிப் பிள்ளை

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி -தூரன் விருது- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகழு, கடிதங்கள்