«

»


Print this Post

வடகிழக்கு நோக்கி 4, யும் டாங் சமவெளி


கிருஷ்ணனின் பயணத்திட்டத்தில் சிக்கிமில் பார்க்கும்படியாக இருந்தது யும் தாங் சமவெளி மட்டுமே. அது மலர்களின் சமவெளி என்று இணையம் சொன்னதாம். அதிகாலையில் ஐந்தரை மணிக்குக்  கிளம்பவேண்டும் என்று திட்டம். நான் என் செல்பேசியில் ஐந்துமணிக்கு எழுப்பியை அமைத்துவிட்டுத் தூங்கினேன். காலையில் கண்விழித்தால் வெளியே நல்ல வெளிச்சம். எழுப்பி வேலைசெய்யவில்லை. ஆனால் நேரத்தைப் பார்த்தால் அதிர்ச்சி. நான்கு மணி. ஆம் அதற்குள் நல்ல வெளிச்சம் வந்துவிட்டிருந்த்து. இங்கே குளிர்காலத்தில் எட்டு மணிக்குத்தான் கைவெளிச்சம் வரும். கோடையில் மூன்றரை மணிக்கு!

From Sikkim jeyamohan

ஒருவழியாகக் கிளம்பும்போது ஏழு மணி. இம்முறை வண்டி கொஞ்சம் அசௌகரியமானது. புதிய வண்டிதான், ஆனால் ஒன்பதுபேர் ஒடுங்கிக்கொண்டு அமரவேண்டியிருந்த்து. இருள் பிரியா நேரத்தில் காங்டாக் நகரை விட்டுக் கிளம்பிச்சென்றோம். உற்சாகமாகக் கிண்டல் செய்துகொண்டு அவ்வப்போது கொஞ்சம் இலக்கியமும் பேசிக்கொண்டு. சிக்கிமை இந்திய வரைபடத்தில் பார்க்கையில் இந்தியா தூக்கிய வெற்றிக்குறிக் கட்டைவிரல் போல் இருந்த்து. அதன் ஒற்றுமையும் வளர்ச்சியும் அதைத்தான் சுட்டுகிறது என நினைத்துக்கொண்டேன்.

From Sikkim jeyamohan

உண்மையில் எங்கள் பயணம் ஒரு அன்னியனுக்கே உரிய அசட்டுத்தனம் கொண்டது. என் இலங்கை நண்பர்கள் இந்தியா வரும்போது அப்படித் திட்டமிடுவார்கள். ஒருநாள் சென்னை,மறுநாள் நாகர்கோயில்,அடுத்தநாள் கோழிக்கோடு என. தூரங்களைப்பற்றிய எண்ணம் இல்லை. காங்டாக்கில் இறங்கி யும் டாங் செல்வதென்பது சென்னையில் இறங்கி மறுநாள் நாகர்கோயில் செல்வதைப்போல. சிக்கிமின் நான்கு மாவட்டங்களில் கீழ் எல்லையில் இருக்கிறது காங்டாக்.மேல் எல்லையில் யும்டாங் மலைச்சாலை. வளைந்து வளைந்து செல்லும் நீரோடை போல. அதில் அலைகளில் மிதந்து செல்வதுபோலக் கார். கீழே அதல பாதாளங்கள்.ஆங்காங்கே இடிந்து சரிந்த சாலையில் இடியாத சேற்று விளிம்பு வழியாக வண்டியைத் திறமையாகஒடுக்கிக் கொண்டுசென்ற ஓட்டுநர்.பால்வடியும் முகத்துடன் இருந்த இருபத்துநான்கு வயதுப் பையன்.

From Sikkim jeyamohan

சிக்கிமின் ஜீவநதி என்று தீஸ்தா சொல்லப்படுகிறது. ஒரு மாபெரும் வெண்சேற்று நதி அது. அதன் பலநூறு துணைநதிகளால் குறுக்கும் நெடுக்குமாக வெட்டப்பட்டது இந்த மலைப்பிரதேசம். ஆங்காங்கே இரும்பாலான பாலங்களுக்கு அடியில் வெண்நுரைப்பிரவாகமாக ஆறுகள் ஓடின. சாலையோரமாகப் பாறை உச்சியில் இருந்து அருவிகள் கொட்டின.

From Sikkim jeyamohan

செல்லும் வழியிலேயே மாங்கன் என்ற நகருக்கு அருகே இந்தியாவின் மிக உயரமான மலைச்சிகரமான கஞ்சன் ஜங்காவைத் தொலைவில் பார்க்கமுடியும். நாங்கள் செல்லும்போது மேகம்சூழ்ந்திருந்தமையால் பார்க்க முடியவில்லை. திரும்பும்போது பார்த்தோம். பனியால் அமைந்த வெண்கூடாரம் போல வானில் நின்றது அது. மாங்கன் ஒரு சிறிய நகரம். இங்குள்ள நகரங்கள் சுத்தமானவை.பொருளாதார வளம் தெரிபவை. மாங்கன் அருகே ஏழு சகோதரிகள் என்ற அருவி. ஒரே அருவிதான் ஒன்றுகீழ் ஒன்றாக செல்கிறது.அதன் மேல் பாலத்தில் நின்று இருபுறமும் பச்சை பொலிந்த செங்குத்தான மலைகள் நடுவே வெண்கொந்தளிப்பாக வழியும் ஆற்றைப் பார்த்தோம். ‘ஒரு வாழ்நாளுக்கான நினைவு’ என்றான் யுவன்.

From Sikkim jeyamohan

வழி நெடுக அருவிகளின் கரைகளிலும் மலை விளிம்புகளிலும் நின்று பார்த்து மலைநகரமான லாச்சிங் சென்று சேர மாலை நாலரை ஆகிவிட்டது. அங்கே ஒரு விடுதியில் அறைக்குச் சொல்லியிருந்தோம். வழக்கம்போல மூன்று அறை, தீஸ்தாவின் கரையில் இருந்தது லாச்சிங். முக்கியமாக அது ஒரு ராணுவமையம். பிரம்மாண்டமான ராணுவக்குடியிருப்பு.தீஸ்தாவின் கரையில் இரு மலைகளின் மடியில் இருந்தது. குளிர்காலத்தில் நாலைந்து மாதம் மொத்தமாகவே பனியால் மூடிவிடுமாம்.

From Sikkim jeyamohan

ஒரு மாலைநடை கிளம்பினோம்.மேலே ஏறி சாலை விளிம்பில் நின்று கீழே வெண்பரப்பாகக் கிடந்த தீஸ்தாவின் சதுப்புவெளியையும் அதன் நடுவே உருளைக்கற்களினூடாகச் சென்ற நீரையும் கண்டோம். அங்கே இரு நதிகள் இணைகின்றன. பெருமளவுக்கு ருத்ரப்பிரயாகையை அது நினைவூட்டியது. இருட்டியபின் திரும்பிவந்தோம். நீரின் பேரோலம் கேட்டுக்கொண்டே இருந்த்து.
விடுதியில் பேமா என்ற அழகி நிர்வாகி. கறாரான பெண். கெஞ்சிக்கேட்டும் எங்களுக்கு ‘டீலக்ஸ்’ அறை தர மறுத்துவிட்டாள். காரணம் நாங்கள் சாதாரண அறைதான் பதிவுசெய்திருந்தோம். அதுவே நல்ல அறைதான். இரவுணவு சூடாகவும் நன்றாகவும் இருந்தது. சமையலும் பேமாதான். பிரேமா என்ற பேரின் மரூஉ. காஞ்சன சிருங்கம் கஞ்சன் ஜங்கா ஆனது போல.

From Sikkim jeyamohan

விடுதிக்கு முன்னால் ஒரு கடை.அதன் உரிமையாளர் ஒரு பூட்டியா. அவருக்கு சொந்தமானதுதான் விடுதிக்கட்டிடம். அவர் அதைக்  குத்தகைக்குக் கொடுத்திருந்தார். அவரிடம் அரங்கசாமி ‘நீங்கள் எங்கள் ஊருக்கு வந்தால் இந்தியாவுக்கு வந்திருப்பதாகச் சொல்வீர்களா?’ என்றார். ‘சிக்கிம் இந்தியாவின் ஒரு பகுதி’ என்றார். அரங்கசாமி அடுத்த படிக்குத் தாவி ‘இங்கே தீவிரவாதம் உண்டா?’ என்றார். ‘இங்கே வன்முறையே இல்லை’ என்றார். பொதுவாக வடக்குகிழக்குப் பகுதி இந்தியாவுடன் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டிருப்பதாக அம்மக்கள் நினைப்பதாக ஒரு எண்ணம், அப்படிச் சேர்க்கப்பட்டிருப்பது அத்துமீறல் என்ற எண்ணம், அரசியல் உள் நோக்குடன் இங்கே உருவாக்கப்பட்டிருக்கிறது. மிகச்சிலர் தவிரப் பொதுமக்களிடம் அவ்வெண்ணம் இல்லை என்பதை இப்பகுதிகளில் பயணம் செய்யும் எவரும் காணமுடியும். தமிழகத்தில் அப்படிச் சொல்பவர்களும் கேட்பவர்களும் ஒரு வரைபடத்தில் கூட இப்பகுதிகளைக் கண்டிருக்க மாட்டார்கள்

From Sikkim jeyamohan

விடுதிக்காரர் பௌத்தர். அவரது தெய்வம் தலாய் லாமா. ஆனால் அது அவர் மது மாமிசம் அருந்தத் தடையாக இல்லை. திபெத்திய பௌத்தம் அதையெல்லாம் அனுமதிக்கிறது. அவர் நன்றாகப் படித்தவர். பொதுவாக சிக்கிமில் படிப்பு வெறி கண்ணுக்குப் பட்டது. சிக்கிம் மணிப்பால் மருத்துவக்கல்லூரி முக்கியமான ஒரு கல்விநிறுவனம்- உடுப்பி மணிப்பால் மருத்துவக்கல்லூரியின் துணை நிறுவனம் அது. சிறப்பான பள்ளி கல்லூரிகளைக் கண்டோம். எங்கும் சீருடை அணிந்த பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் காட்சி. லாச்சுனில்கூட எங்கள் விடுதிக்கு அருகே இருந்த அளவுக்கு பெரிய பள்ளியை சென்னையில்கூட அரிதாகவே காண முடியும்.

From Sikkim jeyamohan

காலை நாலரை மணிக்குக் கிருஷ்ணன் வந்து ’சார் எழுந்திருங்க’ என்று கூப்பாடு போட்டு அழைத்தார். அப்போது விடிய ஆரம்பித்திருந்த்து, கண்ணாடிச்சன்னலுக்கு வெளியே வானில் வெண்மேகம் உறைந்த்து போல பனிமலைகள் தெரிந்தன. மொட்டைமாடிக்கு ஓடினோம். ஓர் அரிய நினைவுபோல ஒரு வானுலக நகரம் போலப் பனிமுடிகள். ஒளி ஏற ஏற அவை வெள்ளி போல ஒளிவிட்டன. மலைச்சிகரங்களைத் தீட்டிக்கூர்மையாக்கியதுபோல. ’ஜெர்மன்’ செந்தில் பனிமலைகளை நிறையவே கண்டவர். ’ஆனால் அங்கே இப்படி நீலவானம் இல்லை, இது அற்புதமாக இருக்கிறது’ என்றார்.

From Sikkim jeyamohan

ஆறுமணிக்கு யும்டாங் பள்ளத்தாக்குக்குக் கிளம்பிச்சென்றோம். செல்லும் வழியில் ராணுவ அனுமதி பெற்றுக்கொண்டோம். ஒரு மண் சாலை. ஆங்காங்கே சிமிண்ட் சாலை. முன்னர் போடப்பட்ட சாலைகள் பெயர்ந்து ஆங்காங்கே கிடந்தன. பாலங்களே அள்ளிக்  குவிக்கப்பட்டிருந்தன. அங்கே மழைக்காலத்தில் மொத்த நிலமே சேறாகக் கொந்தளிக்குமாம். அதுவரை மலைகள் முழுக்க அடர்காடுகளுடன் இருந்தன. பச்சை எழுந்து திசைமறைக்கும் வெளியாகத் தெரிந்தன, இப்போது மெல்லமெல்ல கூம்புமரக்காடுகள் வர ஆரம்பித்தன. நடுவே மலையிடுக்குகள் வெண்மையாக இடிந்து வழிந்திருந்தன. உச்சிமலை மண் வெண்ணிறமானது. கூழாங்கற்களால் ஆனது. பனிபோலவே அவை தோற்றம் அளித்தன , நான்கு பக்கமும் ஒளிவிடும் வெண்பனி மலைச்சிகரங்கள். காலை ஒளியில் அவை சுடர்ந்தன.

From Sikkim jeyamohan

யும்டாங் சமவெளி மலர்கள் நிறைந்த்து. நம்மூர் மழைக்காடுகளின் மலர்வெளி அல்ல. குட்டையான மரங்களில் மலர்ந்த மலர்கள். செம்மையும் இளமஞ்சளும் கொண்டவை. கொத்துக்கொத்தாக அவை காற்றிலாடின. தரையில் சிறிய புதர்ச்செடியில் குருதிச்சிவப்பான சின்னப்பூக்கள். சாலையோரமாக ஒரு யாக்,ஸ்வெட்டர் போட்ட எருது போல அலட்சியமாக நின்றுகொண்டிருந்தது. சின்னக் கண்களால் கூர்ந்து பார்த்துச் சிலை போலப்புகைப்படத்துக்குப்‘போஸ்’ கொடுத்த்து.

From Sikkim jeyamohan

யும்டாங் சமவெளியின் கடைசிப் புள்ளியில் கார் சென்று நின்றது. ஒரு சிறிய கிராமச்சந்தைபோல் இருந்தது.. இருபது முப்பது மூங்கில் வீடுகள். அவை தற்காலிகமாக அமைக்கப்பட்டவை. அவற்றில் டீ கிடைக்கும். வாடகைக்குப் பனிச்சப்பாத்துக்கள், பனி உடைகளும் கிடைக்கும். வழக்கம்போலக் கடையை நடத்தியது ஓர் அழகி. மிகமிகச்  சுறுசுறுப்பான பெண், அங்கே அருகே ஒரு பெரிய ஓடை சென்றது. அதன் பரப்பில் யாக்குகள் மேய்ந்து கொண்டிருந்தன. நாங்கள் ஓடைவரை சென்று அந்தப் பனிக்குளிர் நீரைச் சுட்டுவிரலால் தீண்டி உடல் சிலிர்த்தோம்

From Sikkim jeyamohan

அங்கு வரைதான் சுற்றுலாப்பயணிகள் சட்டபூர்வமாக அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் மேலே செல்லலாம். அதற்கு ஜீரோ பாயிண்ட் என்று பெயர். அங்கே செல்ல ஓட்டுநருக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தோம். அப்படி ஒரு இருபது வண்டிகள் அங்கே சென்றிருந்தன. அது கண்டுகொள்ளாமல் விடப்படுகிறது. சீரோபாயிண்டுக்கு அப்பால் இந்திய சீன பொதுநிலம் வருகிரது. அப்பால் சீன எல்லை.

From Sikkim jeyamohan

மெல்ல நிலம் மாறுபட்டுக்கொண்டே வந்தது. ஊசிமரக்காடுகள். அவை தேய்ந்து சிறு சிறு கூட்டங்களாக ஆயின. பின்னர் மரங்கள் இல்லாமலாயின. கரிய பெரும்பாறைகளால் ஆன மலைமுடிகள் வந்தன. அள்ளிக்கொட்டிய மண் போன்ற மலைகள் மேல் அவை அமர்ந்திருந்தன. அவற்றில் இருந்து வெண்நிறமான மேலாடை போல அருவிகள் கொட்டின. அந்த அருவிகள் தூய நீரோடைகளாக வழியை மறிக்க அவற்றின் மேல் கார் ஏறிச்சென்றது. இருபக்கமும் வெண்பனிவெளி வர ஆரம்பித்தது. குழந்தைகள் விளையாடிச்சென்ற வெண்படுக்கை போலச் சுருங்கி நெளிந்து விரிந்த பரப்பு. அதன்மேல் காற்று மெல்லிய தூசியைப் படியவைத்திருந்தது.

From Sikkim jeyamohan

பனி வெளி கண்களைக் கண்ணீரால் நிரப்பியது. கறுப்புக்கண்ணாடி கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் பனியைப் பார்க்கப்பார்க்கக் கண் சரியாகியது. சீரோ பாயிண்ட் சென்றபோது அங்கேயும் ஒரு சிறு சந்தை. கட்டிடங்கள் இல்லை. ஆனால் கொதிக்கக் கொதிக்க டீ கிடைக்கும். பனிவெளியில் கவனமாகக் காலடி வைத்து நடந்தோம். எங்களில் பெரும்பாலானவர்கள் பனியைப்பார்ப்பது அதுவே முதல்முறை. அங்கே காற்றில் ஆக்ஸிஜன் குறைவு. பனியில் நடக்கும் சிரம்மும் சேர நெஞ்சை அடைத்த்து

From Sikkim jeyamohan

பொருக்குப்பனி.முழங்கால் வரை புதைந்தது. கைகளைக் கோர்த்து ஒரு ஓடையைத் தாண்டினால் பெரிய மலைச்சரிவு முழுக்க பனி. பனியில் துழாவினோம். பிடித்துத் தள்ளி விளையாடினோம். ஒரு பாறையில் பற்றிக்கொண்டு ஐம்பது அடிவரை மேலே ஏறினோம் என்றாலும் மார்பு அடைத்து மேலே செல்ல முடியவில்லை. தவிர்க்கமுடியாமல் ‘வெள்ளிப்பனிமலை மீதுலவுவோம்’ என்ற வரி நெஞ்சில் ஓடியது. நான் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் இது என் நாடு, இதுவும் என் மண் என்ற உணர்வு அளிக்கும் மகத்தான மன எழுச்சியை நான் என் சொற்களால் சொல்ல முடியாது.

From Sikkim jeyamohan

என்னை இந்தியதேசியவாதி என இகழ்பவர்கள் உண்டு. நான் இந்தியா என நினைப்பது இங்குள்ள அரசை அல்ல, இதன் மைய அதிகாரத்தையும் அல்ல, பலநூறு பண்பாடுகளுடன் ,இனங்களுடன் பரந்திருக்கும் இந்த மாபெரும் நிலத்தை என அந்த முட்டாள்களுக்குச் சொல்லிப்புரியவைக்க என்னால் முடிந்ததே இல்லை. இந்த நிலமென்பது இங்கே வாழ்ந்த மக்களால், நம் முன்னோர்களால், எண்ணி எழுதிக் கனவுகண்டு ஒரு குறியீடாக ஆக்கப்பட்டுவிட்ட ஒன்று. கம்பனையும் காளிதாசனையும் பாரதியையும் தாகூரையும் ஆன்மீகமான உச்சங்களுக்குக் கொண்டு சென்றவை கங்கையும் இமயமும் . அவற்றை இழந்து ஒரு தேசியத்தை என்னால் கற்பனையே செய்யமுடியவில்லை.

From Sikkim jeyamohan

ஆம், ’மன்னும் இமய மலையெங்கள் மலையே’ என்பது ஒரு நிலம் சார்ந்த பிரக்ஞை மட்டும் அல்ல. பல்லாயிரம் வருடம் தொன்மை கொண்ட ஒரு பெரும் படிமம்தான் இமயம். அது நம்மை நாம் வாழும் அனைத்தில் இருந்தும் மேலே தூக்குகிறது.வியாசனும் கபிலனும் கம்பனும் காளிதாசனும் உலவிய ஒரு மனவெளியின் பருவடிவம் அது. அந்த மாபெரும் மனவிரிவுகளை அடைந்தவர்களால் வழிநடத்தப்பட்ட இந்திய இலக்கியம் அன்னியசக்திகள் விட்டெறியும் பிச்சைக்காசுகளுக்காகப் பிரிவினை பேசும் அயோக்கியர்களின் புகலிடமாக ஆனது சமகால வரலாற்று அவலம் என்று நினைத்துக்கொண்டேன்

From Sikkim jeyamohan

வெயில் ஏற ஏறப் பனிப்பரப்பின் மேல் பகுதி மெல்ல உருக ஆரம்பித்தது. ஓடையின் நீர் அதிகரித்த்து. ஆரம்பத்தில் இருந்தது ஒரு குதூகலம். களியாட்டம். மெல்ல அது அடங்கி ஓர் ஆழமான மன எழுச்சி. பின்னர் அமைதி. எத்தனையோ நூற்றாண்டுகளாக இமயம் அதைத்தான் அளித்துக்கொண்டிருக்கிறது. வாழும் அனைத்துக்கும் அப்பால் வாழ்க்கையின் சாரமான ஒன்று உள்ளது என்ற உணர்வு அது

[மேலும்]

வடகிழக்கு நோக்கி 3- காங்டாக்

வடகிழக்கு நோக்கி 2-நெடும்பயணம்

வடகிழக்கு நோக்கி 1- தேர்தலும் துவக்கமும்

 

photos https://picasaweb.google.com/vishnupuram.vattam/SikkimJeyamohan?feat=embedwebsite#

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/16775/

5 pings

  1. வடகிழக்கு நோக்கி 9, ஒரு மாவீரரின் நினைவில் | jeyamohan.in

    […] வட கிழக்கு நோக்கி,4 – யும் தாங் சமவெளி […]

  2. பயண நண்பர்கள் | jeyamohan.in

    […] வட கிழக்கு நோக்கி,4 – யும் தாங் சமவெளி […]

Comments have been disabled.