கரசூர் பத்மபாரதி – கடிதம்

அன்புள்ள ஜெ

கரசூர் பத்மபாரதிக்கு வழங்கப்பட்டுள்ள தமிழ் விக்கி – தூரன் விருது பாராட்டுக்குரியது. தமிழ்ச்சூழலில் இன்று எந்தத் தரப்பினராலும் பாராட்டப்படாதவர்கள் என்றால் ஆய்வாளர்கள்தான். ஆய்வுகள் பெருகிவிட்ட சூழலில் எவரும் ஆய்வேடுகளைப் படிப்பதில்லை. நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது ஆய்வேடுகளும் படிக்கப்படும் தகைமை கொண்டவை அல்ல. ஆய்வேடுகளை எழுதியவர்களே அவற்றை எவரும் படிப்பதை விரும்புவதுமில்லை.

இன்னொரு பக்கம் சரியான ஆய்வேடுகள் சரமாரியாகத் திருடவும் படுகின்றன. கரசூர் பத்மபாரதியின் இரண்டு ஆய்வேடுகளின் தரவுகளை வெவ்வேறு ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளில் அவர் பெயர் சொல்லப்படாமல் சொந்தமான கள ஆய்வுகளாக எடுத்தாண்டிருப்பதை நானே கண்டிருக்கிறேன். அந்த ஆய்வுலகம் வேறு. அது ஆங்கில ஆய்வுலகம். அதற்கு சர்வதேச நிதி உண்டு. அந்த நிதி அளிப்பவர்கள் விரும்பும்படி ஆய்வைச் செய்து அளிக்கவேண்டும். அதற்குரிய தரவுகளை இந்த கள ஆய்வுகளில் இருந்து எடுத்துக் கொள்வார்கள். நாங்கள் இதை ஒட்டுத்தாவர ஆய்வு என்று சொல்வோம். கரசூர் பத்மாவதி போன்றவர்கள் வேர் போன்றவர்கள். அவர்களுக்கு ஒன்றுமே கிடைப்பதில்லை. அரசுவேலை, பணம் மட்டுமல்ல அறிவுலக இடம்கூட இல்லை.

அந்த குறையை இத்தகைய விருதுகள்தான் போக்கமுடியும். ஆனால் விருதுகளை மட்டும் அறிவிப்பதில் பொருளில்லை. மற்ற விருதுகளில் இருந்து மாறுபட்டு தமிழ்விக்கி விருது தொடர்ச்சியாக கரசூர் பத்மபாரதியை முன்னிறுத்துகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் தமிழில் எழுதிக்கொண்டிருப்பவர்கள் கரசூர் பத்மபாரதியின் ஆய்வுகள் பற்றி எழுதவேண்டும். அவ்வாறு எழுதப்பட்ட எதையும் நான் காணவில்லை.

உதாரணமாக, கரசூர் பத்மபாரதி இரண்டு நூல்களிலுமே அந்த மூடுண்ட குழுக்கள் தங்களுக்கான தனிமொழியை உருவாக்கிக்கொண்டிருப்பதையும், தங்களுக்கான தனி ஆசாரங்களும் நம்பிக்கைகளும் கொண்டிருப்பதையும் விவரிக்கிறார். மிக ஆழமான பகுதிகள் அவை.

மொழி எப்படி உருவாகிறது, மதம் எப்படி கூடவே உருவாகிறது என்று சிந்திப்பவர்களுக்கு மிகமிக அடிப்படையான ஒரு புரிதலை உருவாக்கும் பகுதிகள் அவை. அதைப்பற்றி இந்த பத்தாண்டுகளில் தமிழ் அறிவுலகம் எதையுமே எழுதியதில்லை. தமிழ் அறிவுலகத்தை சமகால அரசியல்பிரச்சினையிலேயே கட்டிப்போட விரும்பும் சிலரின் வெற்றியாகவே நான் இதை கருதுகிறேன். விளைவாக அடிப்படை ஆய்வுகளுக்கே இடமில்லாமல் ஆகிவிட்டது இங்கே.

இனிமேலாவது கரசூர் பத்மபாரதி போன்றவர்கள் அளிக்கும் மூலத்தரவுகளில் இருந்து சிந்திப்பதற்கு தமிழ் அறிவுஜீவிகள் தயாராகவேண்டும். அதற்கு இந்த பரிசு உதவுமென்றால் நல்லது.

ஸ்ரீனிவாஸ்

முந்தைய கட்டுரைமுதற்கனலும் தத்துவமும் – விவேக்
அடுத்த கட்டுரைநாகை புத்தகக் கண்காட்சி