காங்டாக் நகரம் சிக்கிம் மாநிலத்தின் தலைநகரம். மலைநகரமும். மலைநகர்களுக்குரிய சிறப்பம்சம் என்பது அவை நடப்பதற்குரியவை என்பதே. இளங்குளிரும் ஏற்ற இறக்கங்கள் கொண்ட பாதையும் நடப்பதை ஆனந்தமான அனுபவமாக ஆக்கும். ’மலைநகரங்களின் அரசி’[?]யான ஊட்டி அவ்வகையில் மிக வசதியற்ற நகரம், நகருக்குள் எங்குமே நடந்து அலைய முடியாது. நெரிசல், புகை, சந்தடி. திட்டமிட்டு மக்களாலும் அரசாலும் சீரழிக்கப்பட்ட சுற்றுலாத்தலம் அது.காங்டாக்கில் களைத்து வந்திறங்கியபோதிலும் மலைநகரங்களுக்குரிய உற்சாகம் ஊட்டி நடக்கச்சொன்னது
From Sikkim jeyamohan |
எங்கள் விடுதி மாண்டரின் பாரடைஸ் வசதியானது. சாலையில் இருந்து அறுபது படிகள் இறங்கி மலைவிளிம்பில் தொற்றியிருந்த அதன் கூட்த்தை அடையவேண்டும். மேலே மூன்று அறைகள் சொல்லியிருந்தோம். வசதியான பெரிய அறைகள். தூய வெண்ணிற விரிப்புகளுடன் மெத்தைகள். [அப்படி வசதியான அறைகள் குறைந்த செலவில் ஏன் கிடைக்கிறதென பின்னர் புரிந்தது. இப்பகுதியில் இது சீசன் அல்ல, ஆகஸ்ட் செப்டெம்பர் அக்டோபர்தான் சீசன். அப்போது விடுதிகள் விலை அதிகமாகும். இது கோடையானாலும் மழை அடிக்கடி பெய்து சாலைகளில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்படுமாம்] காங்டாக்கில் சென்ற வருடம் பெரும் நிலச்சரிவில் பலர் இறந்திருக்கிறார்கள். ஓட்டல் அறைச்சுவர்களில் சீனப்பண்பாட்டு சாயல். செவ்வண்ணமும் பொன்னிறமும் கலந்த ஓவியங்கள் , நீலநிற டிராகன்கள்.
From Sikkim jeyamohan |
குளித்துவிட்டு நடை கிளம்பினோம். காங்டாக் நகரம் இந்தியாவின் பிற நகரங்களுடன் ஒப்பிடுகையில் சுத்தமானது. மசூரியிலோ நைனிடாலிலோ நாம் காணும் அழுக்கான குடிசைக்கடைகள், நடைபாதை வணிகர்கள், பிச்சைக்கார்ர்கள் கண்களில் படவில்லை. சீரான தெருக்கள். பெரும்பாலும் வசதியான உள்ளூர் மக்கள்தான் கண்ணுக்குப் பட்டார்கள்.
காங்க்டாக் ஷிவாலிக் மலைத்தொடரில் அமைந்துள்ள நகரம். இங்கே மனிதனுக்கு மூதாதையான மனிதக்குரங்கின் எலும்புவடிவம் கிடைத்துள்ளது, அது ஷிவாலிக் மனிதன் என்று சொல்லப்படுகிறது. [மேல்விவரங்களுக்கு பனிமனிதன் படிக்கவும்.] மிகத்தொன்மையான பழங்குடிகளின் மண் இது. இந்தியாவை ஒட்டிய இமயநிலங்களுக்கு இஸ்லாமிய ஆக்ரமிப்புக்கு ஆளாகாமல் தப்ப அந்த உயரமே உதவிசெய்தது, சிக்கிமும் அப்படித் தப்பிய நிலம். காங்டாக் என்றாலே மலையுச்சி என்றுதான் பொருள். திபெத்துக்கும் இந்தியப்பெருநிலத்துக்குமான நிலப்பாதையாக இது இருந்தது. பிரிட்டிஷார் அதற்காக இங்கே முக்கியமான சாலைகளை அமைத்திருக்கிறார்கள்.
From Sikkim jeyamohan |
திபெத்திய புத்தமதம்[ அதாவது வஜ்ராயன பௌத்தம்] ஓங்கிய நிலம் இது. கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் திபெத்திய மதகுரு ரிம்போச்சே இவ்வழியாக சென்றாராம். அதுமுதல் இங்கே திபெத்திய பௌத்த நிலமாக ஆகியது. ரிம்போச்சேயின் உத்தரவின்படி அனுப்ப்பட்ட மூன்று லாமாக்கள் இங்கே பௌத்த்தை பரப்பினார்கள். ஆகவே இது மூன்று குருநாதர்களின் பூமி என்று அழைக்கப்படுகிறது.. 1642ல் குரு டாஷியின் வழித்தோன்றலான புண்ட்சோங் நட்ஷியால் முதல் சிக்கிம் மன்னராகப் பதவியேற்றார். திபெத்திய முறையில் மன்னரும் மதகுருவும் ஒருவரேயாக விளங்கும் ஆட்சிமுறை இங்கே நிலவியது. பெரும்பாலும் திபெத்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட நிலமாகவே சிக்கிம் இருந்துள்ளது. இந்து நூல்களில் சிக்கிம் இந்திரனின் நிலம் என்று அழைக்கப்பட்டிருந்தது.
From Sikkim jeyamohan |
பழங்குடிகளின் நிலமாக பிரிட்டிஷ் ஆட்சிக்கு கீழே இருந்தது. 1947ல் சுதந்திரம் பெற்றபோது தனிநாடாக நீடிக்கவேண்டும் என்ற மன்னரின் கோரிக்கையை ஜவகர்லால் நேரு ஏற்றுக்கொண்டார். ஆகவே அது இந்திய ராணுவப்பாதுகாப்புக்கு கீழே தனிநாடாக நீடித்தது. 1962ல் இந்திய சீன போரில் சீனாவிற்குச் செல்லும் வணிகப்பாதைகளை இந்தியா மூடியபோது சிக்கிம் துண்டிக்கப்பட்ட்து. இந்திய நிதியுதவி இல்லாமல் வாழமுடியாத நிலை ஏற்பட்டது. திபெத்தை சீனா கைப்பற்றியபோது அங்கிருந்து குடியேறிய திபெத்திய மதகுருக்களும் பல்லாயிரம் திபெத்தியர்களும் இங்கே வாழ்ந்தார்கள்.
From Sikkim jeyamohan |
இந்நிலையில் சீனா சிக்கிமை திபெத்தின் ஒரு பகுதி என்று சொல்லி கைப்பற்ற முனைந்த்து. சிக்கிம் தன் பௌத்த தனித்தன்மையை காப்பாற்றிக்கொள்ள விழைந்த்து. திபெத்தின் நிலைமை தனக்கும் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. குடிப்பழக்கம் கொண்டிருந்ந்த மன்னருக்கு எதிராக தெருக்களில் கிளர்ச்சிகள் எழுந்தன, அன்றைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி சிக்கிம் பிரச்சினையை தீர்க்க ஒரு குழுவை அமைத்தார். ஐக்கியநாடுகள்சபையின் நோக்கர்களின் முன்னிலையில் நிகழ்ந்த வாக்கெடுப்புக்குப்பின் சிக்கிம் இந்தியாவுடன் இணைய முடிவெடுத்த்து. 1975ல் சிக்கிம் இந்தியாவின் மாநிலமாக இணைக்கப்பட்டது. மன்னராட்சி ஒழிக்கப்பட்ட்து 1979ல் நடந்த முதல் தேர்தலில் சிக்கிம் தேசிய காங்கிரஸ் பதவிக்கு வந்தது. நார் பகதூர் பண்டாரி சிக்கிமின் முதல் முதல்வராக ஆனார்.
From Sikkim jeyamohan |
இன்றைய சிக்கிம் பிற வடகிழக்கு மாநிலங்களைப் போல அல்லாமல் தன்னிறைவும் வளர்ச்ச்சியும் கொண்ட மாநிலமாக இருப்பதற்கு முக்கியமான காரணம் பௌத்தம். அது இங்குள்ள பழங்குடிகளை ஒன்றாக இணைத்திருக்கிறது. சீனாவோ அமெரிக்காவின் கிறித்தவ மதமாற்றக் குழுக்களோ பிரிவினை நோக்கை இங்கே விதைக்க முடியவில்லை. ஆகவே சட்டம் ஒழுங்கு இன்றுவரை மிகச்சீராக உள்ளது. பழங்குடிப்போர்கள் இல்லை. சுற்றுலாவுக்குரிய நாடான இது வேகமாக வளர்ந்து விட்டது. அமெரிக்கா, அனுமதித்தால் சீனா தடுக்கப்பட்டால் ஒருவேளை மணிப்பூரும் மிசோரமும் நாகாலாந்தும் கூட இதே போல இன்னும் சில வருடங்களில் மாறக்கூடும்
From Sikkim jeyamohan |
மொத்த சிக்கிமும் சுற்றுலாவை நம்பியே வாழ்கிறது என்றால் மிகையல்ல. சிக்கிம் தேசிய காங்கிரஸ் மட்டுமே இங்கே ஒரே கட்சி. எதிர்கட்சியே இல்லை என்றார்கள். சிக்கிம் எப்படி அதன் பல பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டது என்பது ஆச்சரியமானது. வெறும் ஐந்துலட்சம் மக்கள் தொகை கொண்ட இந்நிலம் பதினொரு அதிகாரபூர்வ மொழிகள் கொண்டது. ஆனால் இது மெல்லமெல்ல வணிக மொழியான நேப்பாள மொழியை தங்கள் பொதுமொழியாக ஏற்றுக்கொண்டது. இங்கே எல்லாருமே ஏழெட்டு மொழி பேசுகிறார்கள்.
மொழிச்சிக்கலை தீர்த்துக்கொண்டதுமே பழங்குடிச்சமூகங்கள் இணைந்து ஒரு நவீனச்சமூகமாக ஆகும் செயல்பாடு ஆரம்பித்தது.
உண்மையில் நேப்பாள மொழி இவ்வளவு பிரபலமானது என்று நான் அறிந்திருக்கவேயில்லை. நேபாள மொழியில் இத்தனை திரைப்படங்கள் வருமென்றும் எனக்கு தெரிந்ந்திருக்கவில்லை. மலையாள சினிமா போல எளிமையான படங்கள் என்று தொலைக்காட்சி பாடல்களை பார்த்து புரிந்துகொண்டேன். பாடல்கள் மென்மையான உச்சரிப்பு கொண்ட இன்னிசையுடன் இருந்தன. நேப்பாள மொழி சிக்கிமை இணைத்திருக்கிறது- அது அந்த மண்ணின் மொழி அல்ல. ஆச்சரியம்தான். சிலிகுரி முதல் நேபாள மொழியின் ஆதிக்கம் ஆரம்பிக்கிறது. பூட்டான் வரை,
பூட்டியாக்கள் லெப்சேக்கள் நேப்பாளிகள் இங்குள்ள முக்கியமான மக்களினங்கள். இவர்கள் தவிர இருபதுக்கும் மேற்பட்ட பழங்குடிகள் உள்ளனர். பூட்டியாக்களும் நேப்பாளிகளும் பௌத்தர்கள். லெப்சேக்கள் கிறித்தவர்கள். பிறர் இந்துமதத்தை சேர்ந்தவர்கள். மக்கள் குள்ளமான, சீன தோற்றம் கொண்டவர்கள். ஆனால் ஒருநாளிலேயே அவர்களுக்குள் பல்வேறு தோற்றவேறுபாடு கொண்ட பல இனங்கள் இருப்பதை கண்டுகொண்டேன். பொதுவாக நட்பான இனிய மனிதர்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது.
காங்க்டாக் 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.நகரின் மையம் நோக்கிச் சென்றோம். சிக்கிமின் சட்டச்சபைக்கட்டிட்த்தை ஒட்டி சுற்றிவந்தோம். நகரமே ஒரு குன்றுதான். அதன் நுனியில் சட்டச்சபை. அங்கே இருந்து கீழே செல்ல கயிறுவண்டிகள் உள்ளன. ஆனால் ஐந்து மணிக்கே அவற்றை மூடிவிடுவார்களாம். காங்டாக் ஒரே சமயம் ஓர் இந்திய நகரம் என்றும் அன்னிய நகரம் என்றும் தோற்றமளிக்கும் அனுபவத்தை கொடுத்த்து. இளங்குளிர் சிலசமயம் நடுங்கச்செய்த்து. இடுங்கிய கண்கள் கொண்ட குழந்தைகள், பொன்னிற முகம் கொண்ட பெண்கள் என ஒரு இனம் புரியா குதூகலத்தை அளித்தபடியே இருந்த்து அச்சூழல்.
இருட்டியபின் பொடிநடையாக திரும்பி வந்தோம். வரும் வழியில் ஒரு சீக்கிய குருதுவாரா இருந்தது. அதற்குள் சென்றோம். தலையில் செவ்வண்ண துண்டு ஒன்று கட்டிக்கொள்ள வேண்டும். உள்ளே சென்று அமர்ந்தோம். பொதுவாக குருத்வாராக்களின் உள்ளமைப்பும் அங்குள்ள வழிபாட்டு முறையும் தர்காக்களை பெரிதும் ஒத்திருக்கும். கிரந்த சாகிப் [குருநானக்கின் பாடல்கள் அடங்கிய மதநூல்] சரிகை போர்வை மேடையில் இருக்கும். பக்கவாட்டில் ஒரு குழு அமர்ந்து பாடிக்கொண்டிருப்பார்கள். இரு சீக்கிய இளைஞர்கள் அருமையாக பாடினார்கள். எங்களுக்கு அவலும் வெல்லமும் குழைத்த பிரசாதம் கொடுத்தார்கள். சாப்பிட்டு வணங்கிவிட்டு கிளம்பினோம்
இந்தமுறை இந்த பயணத்தின் எந்த ஏற்பாடுகளையும் நான் செய்யவில்லை. என் எழுத்துவேலைகள் இழுத்துக்கொண்டன. தகவல்சேகரிப்பும் திட்டமிடலும் எல்லாமே அரங்கசாமியும் கிருஷ்ணனும்தான். அவர்கள் சிக்கிமில் இருநாட்களை மட்டுமே ஒதுக்கியிருந்தார்கள். ஆகவே காங்டாக் நகரை பகலில் பார்க்க முடியவில்லை. மறுநாள் காலையில் யுங்தாங் சமவெளிக்குச் செல்ல திட்டம். அது ஒரு முழுநாளை கோரும் பயணம்.
காங்டாங்கில் பார்க்காமல் விட்டவை இங்குள்ள புகழ்பெற்ற ரும்டெக் மடாலயமும் திபெத்திய அருங்காட்சியகமும். இன்னொரு முறை நாலைந்து நாள் தங்கும் நோக்குடன் இங்கே வரவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.
[மேலும்]
வடகிழக்கு நோக்கி 2-நெடும்பயணம்
வடகிழக்கு நோக்கி 1- தேர்தலும் துவக்கமும்