நலம்தானே. தங்கள் சிறுகதை வரிசை ஒரே சமயத்தில் மிகுந்த திருப்தியையும் அமைதியின்மையையும் தருகிறது. சிறந்த படைப்புகள் மீண்டும் மீண்டும் அடிப்படைக் கேள்விகளை எழுப்பிக்கொண்டேதான் இருக்கிறது இல்லையா? மனிதன் நல்லவனா கெட்டவனா? கடவுள் உண்டா இல்லையா?
இவ்வரிசையின் தி ஜாவைக் குறித்த இரு கதைகள் ,என்னைத் தங்களின் முன்னோடிகள் வரிசையில் தி ஜாவைப்பற்றி எழுதியதை மீண்டும் ஒரு முறை வாசிக்க வைத்தது.அதில் அவரைப்பற்றி சுராவின் யதார்த்தின் மீது கனவின் மெல்லிய போர்வையை போர்த்திய கலைஞன் என்ற வரியிலிருந்து தொடங்கி பல தளங்களுக்கு விரித்து பேசுகிறீர்கள். ஆனால் சுரா வேறொரு இடத்தில் தி ஜாவைப்பற்றி நெறிமுறைகளையும் சட்டதிட்டங்களையும் விட உணர்வு நிலைகளே மனித வாழ்வை தீர்மானிக்கின்றன என்று நம்பிய கலைஞன் என்றும் கூறியிருக்கிறார். அது ஒரு சரியான அவதானிப்புதானே. மயில்கழுத்தும்கூட ஒருவிதத்தில் அதைத்தானே சொல்கிறது.
அந்தக்கட்டுரையில் இன்னொரு சுவாரசியமான் அவதானிப்பு ஸ்மார்த்த பிராமணர்களின் பழந்தமிழ் இலக்கியம் குறித்த அலட்சியமும் இயற்கைக் காட்சிகளைக் குறித்த அக்கறையின்மையும். ஒருவேளை அந்த கால கட்டத்தில் மேலோங்கியிருந்த திராவிட இயக்கக்கருத்தியல் பழந்தமிழ் இலக்கியத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்திற்கான அனிச்சையான ஒரு நெகடிவ் எதிர்வினையாக இருக்குமோ? இயற்கை குறித்த அவதானிப்புகளைப் பொறுத்தவரை நவீன தமிழ் இலக்கியத்தில் வெகு சில படைப்புகளிலேயே கூர்ந்த அவதானிப்புகளைக் காண முடிகிறது. உங்களின் காடு ,பல சிறுகதைகள் மற்றும் நாஞ்சில்நாடனின் படைப்புகள்.
தமிழகத்தின் மிகப்பெரும் கவிஞர் கூட “ஆடியிலே காற்றடித்தால் சரம் சரமா இலையுதிரும்’’என்று எழுதியதுண்டு. ஆடிக்காற்றில் இலைகள் உதிர்வதைக் காணவே முடியாது. தமிழகத்தின் இலையுதிர்காலம் ஜனவரி பெப்ரவரி தான். ’யானை டாக்ட’ரில் கூட டாப் ஸ்லிப் பகுதிகளில் ஏப்ரல் மே மாதங்கள் தவிர பிற மாதங்களில் மழை இருந்து கொண்டே இருக்கும் என்று எழுதி இருந்தீர்கள். ஆனால் அங்கும் அந்த மாதங்களில் கோடை மழையும் முன் பருவமழையும் மழையும் உண்டே? என் அனுபவத்தில் ஜனவரி பெப்ரவரி மாதங்கள் தான் மழையற்று இருக்கும். அதில்கூட இந்த ஆண்டு பெப்ரவரி இல் மழை இருந்தது.
கடைசியாக ஒரு கேள்வி.நவீனத்தமிழ் இலக்கியத்தில் ஸ்மார்த்த பிராமணர்களின் வரிசை முடிவுக்கு வந்துவிட்டதோ? தங்கள் தளம் அமைத்துக் கொடுக்கும் prejudice அற்ற சுதந்திரத்தில் இருந்து பிறக்கும கேள்வி இது. இதில் எந்தக் கசப்போ மகிழ்ச்சியோ இல்லை. மேலும் பல சிறந்த படைப்புகளை எதிர்நோக்கும் ,
அன்புடன்,
வே.சுரேஷ்
அன்புள்ள சுரேஷ்
நலம்தானே? சென்னைக்குச் சென்றுவிட்டீர்களா?
நாம் இலக்கியக்கலைஞர்களை வகைப்படுத்தும்போது வைரத்தின் ஒரு பட்டையை மட்டுமே தீட்டிக்காட்டுகிறோம். அது ஒரு நோக்கு. பல நோக்குகள் வழியாகவே கலைஞன் துலங்கி வரமுடியும்.
ஆடியில் காற்றடித்தால் இலை உதிரும் சுரேஷ். தமிழகத்தில் இலையுதிர்காலம் என்று ஒன்று கிடையாது. சிலமரங்கள் மட்டும் ஜனவரியில் இலையுதிர்க்கும். ஆடியில் பல மரங்கள் அந்தக்காற்றில் இலை உதிர்க்கும் -கவனியுங்கள் சருகு அல்ல. கவிஞர் சரியாகத்தான் எழுதியிருக்கிறார்.
டாப்ஸ்லிப் பகுதி ஏப்ரல் மேமாதங்களில் மூடப்படுவதற்கே மழை இல்லாமல் காடு உலர்ந்து காட்டுத்தீ பற்றுவதுதான் காரணம். கோடைமழை இருக்கலாம். ஆனால் ‘மழை இருந்துகொண்டே இருப்பதற்கும்’ அவ்வப்போது மழை பெய்வதற்கும் வேறுபாடு உண்டல்லவா?
கலைஞனை நம்புங்கள் சுரேஷ். அவனுக்கு ஒரு தனிக் கண் இருப்பதனால்தான் அவன் கலைஞன்
ஸ்மார்த்த பிராமணர்களைப் பொறுத்தவரை, காலம் முடிந்துவிட்டது என்று எப்படிச் சொல்லமுடியும். ஒரு கட்டத்தில் அவர்கள் தொழில்முறைக்கல்விகளை நோக்கி முற்றாகத் திரும்பிக்கொண்டதும் கிராமங்களை முழுமையாகக் கைவிட்டதும் காரணமாக இருக்கலாம். அடுத்த தலைமுறையில் புதிய முளைகள் தோன்றலாம்
ஜெ
மனமா எது பேசுகிறது என்று சில இடங்களில் குழப்பமாக இருந்தாலும்,உள்ளத்தை
உலுக்கி விட்டது. ஒரு மகான் போல் வலியை அவர் ஏற்றுக்கொள்வதும், தன்
வெறுமை தீர்க்கக் கைலாசம் போவதும், பின்னர் இந்த உலகத்திற்கு மீண்டும்
வருவதில்லை என்று சொல்லும் மனிதர். தன் வாழ்வில் சில கணங்களில் கொடுமை
கண்டு பொங்காதது அவர் உள்ளத்தில் ஒரு பெருங்குறையாகவே இருந்து, பின்
மனிதக் கூட்டத்தின் தவறுகளுக்கு மன்னிப்பு பெறும்வரை நீடிக்கிறது. என்ன
ஒரு உன்னதமான ஆன்மா. பல நேரம் பார்த்துப் பார்த்து இனிமேல் தெரியப்போவதிலை
என்ற மனநிலையில் மேகம் சட்டென விலகி மலரச்செய்யும் சூரிய கிரஹணக் காட்சி
போல் அமைந்தது கோமல் ஞானஒளி பெரும் காட்சி. உங்கள் எழுத்தில் அவர் பெற்ற
மன எழுச்சியை நாங்களும் பெறுகிறோம்.
Regards
Ramesh
நன்றி
பெருவலி எனக் கதை குறிப்பிடுவது அந்த உடல்வலியை அல்ல. தன் எளிமையை சிறுமையை எண்ணி ஆன்மா கொள்ளும் அந்த மகத்தான வலியை அல்லவா?
ஜெ
என் பார்வையில், வணங்கான் மற்றும் நூறுநாற்காலிகள் பல வருடங்களுக்குமுன் நடந்ததாக நீங்கள் சித்தரித்திருந்தாலும் தற்போது சாதிய உணர்வுகள் முன்னைவிட சற்று பலமாகவே இந்தியாவில் உள்ளதாகவே நினைக்கிறேன். சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இன்றும் டீக்கடைகளில் இரட்டைக் குவளை பயன்படுத்தப்படுவதாக செய்திகளில் வருவது துணுக்குறவைக்கிறது. சமீபத்தில் ‘மாத்தியோசி’ என்று ஒரு படம் பார்த்தேன். வணிக அம்சங்களைத் தவிர்த்து ‘காலனி’ மக்கள் சட்டையின்றி இருப்பதும், இன்றும் ‘அடக்கியே’ வைக்கப்பட்டிருப்பதும் முகத்திலறைந்தாற் போல் காட்டப்பட்டிருந்தது. நீங்கள் பலமுறை குறிப்பிட்டதுபோல் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் பசியின்றி இருந்தாலும், மனிதர்களாகவேனும் மதிக்கப்படுவது எப்போது என்று தெரியவில்லை. மேலும் நூறுநாற்காலிகளில் வரும் அந்த பொது மருத்துவமனை மருத்துவர் மிகவும் நிஜம். என் உறவினர் சென்னை ஸ்டான்லியில் படிக்கும்போது அதைக் கண்கூடாகவே கண்டிருக்கிறேன். ஒரு தாழ்ந்த வகுப்பை சேர்ந்த சக மாணவனை முகத்துக்கு நேராகவே இழிவுபடுத்திப்பேசியதைக் கண்டிருக்கிறேன்.மிகக்கொடுமை என்னவெனில் தாழ்ந்த வகுப்பைச்சேர்ந்த அரசியல்வாதிகளே அவர்களைக் கைவிடுவதுதான்.
90-களின் ஆரம்பத்தில் க.மோகனரங்கனால் உங்கள் எழுத்து அறிமுகமானதிலிருந்து தங்கள் சமீபத்திய படைப்புகளே உச்சம் என எனக்குப்படுகிறது. வாழ்த்துக்கள். உங்களைப்பற்றிய என் மற்றுமொரு அவதானிப்பு! உங்கள் படைப்பின் எதிர்வினைகளுக்குப் பதிலிறுப்பது சரி. ஆனால் தனி மனிதத் தாக்குதல்களை ஏன் பொருட்படுத்துகிறீர்கள் என எனக்குப்புரியவில்லை. நான் அறிந்தவரை அசோகமித்திரனோ, திஜாராவோ பதில் சொல்லிக்கொண்டேயிருக்கவில்லை என நம்புகிறேன். கலகக்காரர்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நிலைநின்றதில்லை. நீங்கள் ஆபிதீன் பக்கங்கள் போன்றவற்றுக்குப் பதிலளித்துப் பலரைப் பெரிய ஆளாக்குகிறீர்கள் என நினைக்கிறேன்.
95-க்குப்பிறகு எந்தவித இலக்கியமும் படிக்கமுடியாமற்போனது. கடந்த இருவருடங்களாய் உங்கள் வலைத்தளத்தின் வாயிலாக தங்கள் எழுத்துக்களை மீண்டும் அடையமுடிந்ததற்கு நன்றி. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துக்கள்.
கோவர்தனன்
ஓக்டேல்
கனேக்டிகட், USA.
அன்புள்ள கோவர்தனன்
தாமதமான கடிதத்துக்கு மன்னிக்கவும்
இந்தியமனதை மட்டுமல்ல உலகமெங்கும் மக்கள் மனதைப் பிறப்பு சார்ந்த அடையாளங்கள் பெருமளவுக்கு ஆட்டிப்படைக்கின்றன என்றுதான் நான் நினைக்கிறேன். அமெரிக்கா முதலிய நாடுகளில் பல நாட்டுப் பல இன மக்கள் வந்துவிட்டமையால் அவை பேதங்களாக நீடிக்கின்றன. வெள்ளையர்களுக்குள் உள்ள பேதங்கள் உபசாதிப் பிரச்சினைகள் போல உள்ளடங்கி உள்ளன
பிறப்புசார்ந்து அவ்வாறு மனிதர்களை அடையாளப்படுத்திக்கொள்வதென்பது பழங்குடிக்காலம் முதலே உள்ள மனப்பழக்கம். அவ்வளவு எளிதாக அதை மீறமுடியாதென்றே நினைக்கிறேன்.
மனிதன் தன்னுடைய சுயத்தைத் தன் கல்வி மூலம் தன் செயல்கள் மூலம் முழுமையாக புதியதாக உருவாக்கிக்கொண்டால் மட்டுமே அது சாத்தியம். சிலருக்கே அது வாய்க்கிறது
எதிர்காலத்தில் அச்சிலர் பெரும்பான்மை ஆகலாம்
ஜெ
தாயார் பாதம்
வணங்கான்
மத்துறு தயிர்