அந்தக்குயில்

co

 

தமிழ் இலக்கியத்தின் இரண்டாயிரம் வருட வரலாற்று வாசிப்பு நமக்கு முக்கியமான ஒரு வாய்ப்பை அளிக்கிறது. தமிழ் இலக்கிய வாசிப்பு எவ்வாறெல்லாம் பரிணாமம் கொண்டு வந்திருக்கிறது என்று  காட்டுகிறது அது. வேறெந்த மொழியை விடவும் தமிழ் வாசகனுக்கு இந்த வாய்ப்பு அதிகம்.

நமது வாசிப்பில் என்ன நிகழ்ந்திருக்கிறது என்ற கேள்வி பல சமயம் ஒரு துணுக்குறலாகவே நம்மை வந்தடைகிறது. தமிழின் கவியரங்குகளில் வாசிக்கப்படும் பிரபலமான ‘கவிதைகளை’ப் பாருங்கள்.   சர்வசாதாரணமான அரட்டைவெடிகள், மேடைக்கர்ஜனைகள் சாதாரணமான வரிகளால் எழுதப்பட்டு உரக்க வாசிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வரியும் இரண்டுமுறை வாசிக்கப்படுகிறது. அதையும் நம்  அரங்கக் கவிதை ’சுவைஞர்’கள் பாதிதான் புரிந்துகொள்கிறார்கள்.

சாதாரணமான ஒரு புதுக்கவிதையைப் புரிந்துகொள்ள நம் பேராசிரியர்கள் படும்பாட்டைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். சொல்லப்படாத ஒரு சிறிய விஷயத்தைக்கூட அவர்களால் ஊகித்துக்கொள்ள முடிவதில்லை. . கவிதை புரியவில்லை என்று இடைவிடாத பாட்டு , கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதைக்கேட்டுக்கொண்டு சங்கப்பாடல்களைப் பார்க்கும்போதுதான் அந்த துணுக்குறல் நிகழ்கிறது. நம் வாசிப்பு எப்படி இப்படி பரிணாமம் கொண்டது?

சங்க இலக்கியப்பாடல்களை வாசிக்கையில் நவீன வாசகனுக்குக்கூட ஆச்சரியம் நிறைகிறது. வெறும் ஆறு வரிகள். இருபது சொற்கள். மிகப்பூடகமான ஒரு வெளிப்பாடு. வெளியே தெரியும் காட்சியில் அகம் ஏற்றப்படுகிறது. அகத்தின் உணர்வுகளுக்கேற்ப வெளிக்காட்சிகள் தங்களைக் காட்டிக்கொள்கின்றன

’இரவில் பெய்த மழையை ஊருக்குள் ஓடி வந்து சொல்லும் அருவிகள் கொண்ட நாட்டைச்சேர்ந்தவனுடன் நாம் கொண்ட காதல் அவன் இரவில் வராது போனதனால் இல்லை என்று ஆகிவிடுமா’— கபிலர் பாடிய குறுந்தொகைப்பாடல் இது. இவ்வளவேதான். ‘[காமம் ஒழிவதாயினும் யாமத்து கருவி மாமழை வீழ்ந்தென அருவி விடரகத்து இயம்பும் நாட எம் தொடர்பும் தேயுமோ நின் வயினானே]

இந்த ஒரு வரியை ஒரு முழு இலக்கிய ஆக்கமாகக் கருதும் ஒரு வாசிப்பு இங்கே இருந்திருக்கிறது. மழை பெய்த தகவலைச் சொல்லத் துள்ளிக்குதித்து ஓடிவரும் அருவியை மனக்கண்ணில் காணமுடிந்த வாசிப்பு அது. மொத்தக் காட்டின் மலர்களையும் சருகுகளையும் மண்மணத்தையும் அருவி ஊருக்குள் பரப்பிவிடுவதுபோல ஒரு ரகசிய உறவை ஒரு புன்னகையே சொல்லிவிடும் என்று ஊகிக்கத்தெரிந்த வாசிப்பு. அருவியைக் காட்டின் சிரிப்பாகக் காணமுடிந்தவனின் வாசிப்பு.

அந்த வாசிப்புதான் அந்த ஆக்கங்களை உருவாக்கியது. அந்தக்கவிஞன் அத்தகைய நுட்பமான வாசகனை நம்பி அதை எழுதியிருக்கிறான். அந்த நம்பிக்கை வீண்போகாமல் ஈராயிரம் வருடங்களாக அந்தக்கவிதை ஒரு மகத்தான கவிதையாகக் கொண்டாடப்படுகிறது!

கூடவே இன்னொரு வாசிப்பும் இருந்துள்ளது. அந்த வாசிப்பை நிகழ்த்திய சான்றோர் அவைகள் இருந்தன. பின்பு அந்த சபைகள் ’சங்கங்கள்’ எனபட்டன. இந்த பாடல் குறிஞ்சித்திணை என அது வகுத்தது.  மலையும் மலைசார்ந்த சூழலும் அதற்குத் தேவை. கூடலும் கூடல் நிமித்தமும் அதில் இருக்க வேண்டும். அது அருவியைப்பற்றி யானையைப்பற்றிப் பேசவேண்டும்.  உள்ளத்தின் குளிர்ச்சியையும் எழுச்சியையும் அது மலைச்சாரலாக மாற்றிக்காட்டவேண்டும். உள்ளம் இயற்கையாக உருமாற வேண்டும். இயற்கை உள்ளமாக வேடம் கொள்ளவேண்டும்.

முதல் வாசிப்பு வாசகன் என்ற எளிய உணர்ச்சிகரமான நிலையில் நின்று வாசிக்கப்பட்டது. அது படைப்புக்குத் தன்னை ஒப்புக்கொடுப்பதன் மூலம் நிகழ்வது. ஆசிரியனுடன் முழுமையாக ஒன்றுதல் வழியாக, அவன் கண்கள் வழியாக பார்ப்பதனூடாக அடையும் வாசிப்பு அது. மழைபெய்ததைத் துள்ளி ஒடிவந்து சொல்லும் அருவி என்றதுமே மனம் மலராத ஒருவனுக்கு இந்தக் கவிதையில் ஒன்றும் இல்லை. வாசிப்புக்கு முன் நம் வாழ்வனுபவத்தையும் கற்பனையையும் மட்டும் திறந்து வைக்கும் வாசகனை அது தேடுகிறது.

இரண்டாம் வாசிப்பு இலக்கியத்தின் மரபையும் தொடர்ச்சியையும் உணர்ந்தவனின் வாசிப்பு. அவன் அந்த படைப்பைத் தன் முந்தைய வாசிப்பனுபவத்தால் பகுக்கிறான், அடையாளப்படுத்துகிறான். அதை ஒரு மாபெரும் பின்னணியில் கொண்டு சென்று பொருத்துகிறான். ஆம் அவன் செய்வது ஒருவகை தகர்ப்பமைப்பைத்தான். அவனை இலக்கண ஆசிரியர்கள் என்றார்கள் நம் முன்னோர்

முதல் வாசிப்பு நுண் வாசிப்பு[Micro reading]  . இரண்டாம் வாசிப்பு பெருவாசிப்பு  [Macro reading] . முதல் வாசிப்பில் கவிதையாகத் தன்னை நிறுத்திக்கொண்ட ஆக்கங்களே இரண்டாம் வாசிப்பை அடைந்தன. தொகுக்கப்பட்டன. முதல் வாசிப்பு மலர்களைக் கொய்தது. இரண்டாம் வாசிப்பு அதை மாலையாகக் கட்டியது. முதல் வாசிப்பு கண்டடைதலின் பரவசம். இரண்டாம் வாசிப்பு அடையாளம் காண்பதன் அக எழுச்சி.

தெளிவாகவே ஒன்றைச் சொல்லி முடித்தார்கள். இலக்கியம் கண்டதற்கே இலக்கணம். இலக்கணம் இலக்கிய அனுபவத்தைப் பின் தொடர்ந்துதான் சென்றாக வேண்டும். சிப்பி பொறுக்கப்போகும் குழந்தை போல  வாசகன் படைப்புகளை நோக்கிச் செல்கிறான். அவனைக் கவர்வதெல்லாம் இலக்கியம்தான். அவற்றின் பொருத்தமும் பயனும் எல்லாம் பின்னால் வருபவர்கள் பார்க்கவேண்டியவை.

சங்ககாலத்தில் நுண்வாசிப்பு நிகழ்ந்தமைக்கான காரணம் என்ன? அப்படைப்புகள் ஒரு சிறிய உட்குழுக்களுக்குள் புழங்கின என்பதனாலா? குழூக்குறிகள் போல கலைகளின் நுண்ணிய குறியீடுகளும் சிறிய சமூகங்களில் அனைவருக்கும் தெரிந்திருந்தனவா? பெருந்திரளான மக்கள் கலைகளுக்குள் வரும்போது உருவாகும் சராசரிக்கான தேவை இல்லாமலிருந்ததா என்ன? யோசிக்கவேண்டிய விஷயம்.

அதன் பின் நீதியிலக்கிய காலகட்டத்தில்வாசிப்பு மிகப்பெரிய மாறுதலை அடைந்திருப்பதைக் காண்கிறோம். ‘அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரற்றே செல்வத்தைத் தேய்க்கும் படை’ என்ற வரியைத் துயர் தாங்காது மனமுடைந்து அழுத கண்ணீர்தான் அக்கண்ணீர்மீது கட்டப்பட்ட பெரும் செல்வத்தை அழிக்கும் மிகபெரிய ஆயுதம் என்ற நேரடிக்கூற்றை, இதில் உள்ள அறச்சீற்றத்தாலேயே, இலக்கியமாகக் கொண்டாடும் ஒரு வாசிப்பை நாம் பின்னால் காண்கிறோம்.

அந்த வாசிப்பு இலக்கியத்தின் மீது மக்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பை சுமத்துகிறது. இலக்கிய ஆசிரியனைத் தத்துவவாதியாக, அறநெறியாளனாகக் கொள்ள முயல்கிறது.அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளாத சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் மெல்ல மெல்லப் பின்னகர்ந்தன. அன்றைய வாசிப்பு அவற்றை சுவடி அறைகளின் இருண்ட மூலைகளுக்கு தள்ளியது. அவ்வாறாக நீதியே இலக்கியத்தின் மைய விசை என்று எண்ணிய ஒரு சமூகம் உருவாகி வந்தது.

நீதியிலக்கியக் காலகட்டத்தின் சமூகப்பின்னணியை நாம் ஒருவகையில் உருவகித்துக்கொள்ளலாம். சங்க காலம் பழங்குடி அறங்களும் மரபுகளும் நீடித்த காலகட்டம். நிலப்பிரபுத்துவத்தின் தொடக்க காலம். நீதியிலக்கிய காலகட்டத்தில் தமிழகத்தில் மிக விரிவான வணிகப்பாதைகள் உருவாயின. வணிகர் குலங்கள் பெருகின. பல்வேறு பழங்குடிச்சமூகங்கள் ஒன்றுடன் ஒன்று உரையாட வைக்கப்பட்டன. ஆகவே பொது நீதிக்கான தேவை எழுந்தது. நீதியிலக்கிய காலகட்டத்தின் முக்கியமான மதங்கள் சமணமும் பௌத்தமும். அவை வணிகர்களின் மதங்கள்

அந்த வணிக எழுச்சியின் விளைவாக சமூகங்கள் தொகுக்கப்பட்டன. உபரி நிதி ஒரு மையத்தில் குவிவதற்கான வாய்ப்பு உருவாகியது. அவ்வாறு வணிகம் மூலம் நிதி குவிந்த மையங்களான காஞ்சியும் மதுரையும் தஞ்சையும் பேரரசுகளாக ஆயின. பேரரசுகள் தங்கள் நிலப்பரப்பு முழுக்க சீரான ஒற்றைப்பண்பாட்டைக் கொண்டு சென்றன. அதன் பொருட்டு அவை மதங்களைப் புரந்தன. சைவம் வைணவம் சாக்தம் போன்ற மதங்கள் பிற வழிபாடுகளையும் நம்பிக்கைகளையும் உள்ளிழுத்துக்கொண்டு பெருமதங்களாக மாறின.

இவ்வாறு இங்கே பெருமதங்கள் உருவாகி வேரூன்றின. அவற்றால் நீதி புனிதப்படுத்தப்பட்டது. அது கடவுளின் கையில் ஆயுதமாக ஆகியது. அப்போது மாபெரும் மத இலக்கியங்கள் உருவாகி வந்தன. கடவுள் இல்லாத நீதி மெல்ல பின்னகர்ந்தது. குறள் , காலத்தில் உள்ளே அழுந்தி சங்க இலக்கியங்கள் இருந்த அதே பெட்டகத்திற்குள் சென்று அமர்ந்தது. பொன்னார்மேனியனையோ ஆழிவண்ணனையோ பாடாத இலக்கியங்களின் மதிப்பு பொதுவாசிப்பில் மிகமிகக் குறைந்தது.

பதினெட்டாம் நூற்றாண்டில் சங்க இலக்கியங்களும் குறளும் பொதுவாசிப்பில் இருந்து மறைந்து போய்விட்டிருந்தன. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சீவகசிந்தாமணியும் பொதுச்சூழலில் இல்லாமல் இருந்தன. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் பல்லாண்டுக்காலம் முறையாகத் தமிழ்கற்ற உ.வே.சாமிநாத அய்யர் அவற்றைக் கேள்விப்பட்டிருக்கவில்லை என்பதை அவரது சுயசரிதையில் காண்கிறோம்.

ஆனால் அந்த இலக்கியங்களின் சாரம் மொழியில் கலந்து ஒரு பண்பாடாக மாறியிருக்கும்.  அங்கே அவை உயிருடன்தான் இருந்தன. சங்க காலப் பாடல்களின் அகத்துறை அழகியல் கொஞ்சம் பெருமாளைச் சேர்த்துக்கொண்டு நாலாயிர திவ்ய பிரபந்தமாக மறுபிறப்பெடுத்தது.  குறள் கொஞ்சம் சைவத்தையும் வைணவத்தையும் சேர்த்துக்கொண்டு கொன்றைவேந்தன் போன்ற நீதி நூல்களாக மறுபிறப்பு கொண்டு வந்தது.

ஆம், அவை அழியவில்லை. அவை விதையுறக்கத்தில் இருந்தன.  மதமும் கடவுளும் பின்னால் நகர்ந்த இருபதாம் நூற்றாண்டில் அவை மீண்டும் முன்னால் வந்தன.  சுவடிகளை சிலவருடங்கள் திருப்பி எழுதாவிட்டாலே அவை அழிந்துவிடும். ஆனால் சங்க இலக்கியமும் நீதிநூல்களும் பல நூற்றாண்டுக்காலம் அழியாமல் இருந்தன.  அதாவது அவை கண்மறைவாக இருந்த காலகட்டம் முழுக்க -பொது வாசிப்பு அந்நூல்களை புறக்கணித்துக்கொண்டே வந்தபோது -எங்கோ தனி வாசிப்பு அவற்றைப் பேணியிருக்கிறது. இந்தத் தனி வாசிப்பைத்தான் நான் முக்கியமான வாசிப்பு, அவசியமான வாசிப்பு என்று சொல்கிறேன்

நம்முடைய காலகட்டம் இன்று ஒரு இலக்கியப்படைப்பை வாசிப்பது முழுமுற்றானது, கடைசியானது என்று ஒருபோதும் நாம் நம்பக்கூடாது. எத்தனை விரிவாகப் பார்த்தாலும் ஒரு காலகட்டத்தின் தேவைகள் ,அச்சங்கள், கனவுகள் சார்ந்துதான் இலக்கிய ஆக்கங்கள் வாசிக்கப்படுகின்றன. அந்தக்காலகட்டத்துடன் அந்த வாசிப்பை உதறி சட்டை உரித்த பாம்புபோல இலக்கியம் அடுத்த கட்டம் நோக்கிச் செல்கிறது.

ஒரு தனி மனிதருக்கு எப்படி ஒருகருத்தியல் இருக்கிறதோ அதேபோல ஒரு சமூகத்திற்கும் ஒரு காலகட்டத்திற்கும் ஒட்டுமொத்தமாக ஒரு கருத்தியல் இருக்கிறது. ஒருவர் ஒரு படைப்பை ஏற்றுக்கொள்வதற்கு அல்லது மறுப்பதற்கு அவருக்கான அக அமைப்பு எப்படி காரணமாக இருக்கிறதோ அதைப்போல ஒரு சமூகம் , ஒரு காலகட்டம் ஒரு படைப்பை ஏற்றுக்கொள்ளவும் மறுக்கவும் அதன் கூட்டு அகம் காரணமாக அமைகிறது.

கீழை நாடுகளின் வாசிப்புக்கும் மேலைநாடுகளின் வாசிப்புக்கும் இன்றுகூட பெரும் வேறுபாடு உள்ளது. நாம் பேரிலக்கியவாதிகளாக எண்ணும் தாராசங்கர் பானர்ஜியும் விபூதிபூஷன் பந்த்யோபாத்யாயவும் சிவராமகாரந்தும் பஷீரும் மேலைநாட்டு வாசகர்களைக் கவரவில்லை. அவர்கள் நம்மிடம் முக்கியமானவர்களாகச் சொல்லும் இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் நமக்கு சின்னப்பையன்களாகத் தெரிகிறார்கள்

அதேபோல் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம். உலகப்போருக்குப் பின்பு ஐரோப்பா இலக்கியங்களை வாசித்த முறையில் அல்ல இன்று வாசிப்பது. உலகப்போர்களுக்கு முன்பு கீழைநாட்டு பண்டைய இலக்கியங்களுக்கு ஐரோப்பாவில் இருந்த முக்கியத்துவம் இன்று மெதுவாகக் குறைந்துவிட்டதை நாம் காணமுடியும்.

வாசிப்பு,காலகட்டத்தின் எல்லைக்குட்பட்டது. படைப்புகள் காலத்தை எளிதில் தாண்டிச்செல்லக்கூடியவை. அந்த பிரக்ஞை நமக்கிருந்தால் நாம் நம் வாசிப்பை, ஒரு காலகட்டத்தின் ஒட்டுமொத்த வாசிப்பை முழுமையானதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். அத்தகைய கூற்றுக்களைத் தவிர்த்துவிட்டு மீண்டும் மீண்டும் இலக்கிய ஆக்கங்களை நோக்கி அந்தரங்கமாகச் சென்று அமர்ந்துகொள்வோம்

சமகால வாசிப்பு என்பது இலக்கியத்தில் இருந்து அதன் ஒரு பக்கத்தை மட்டும் எடுத்துக்கொள்வதே. வைரத்தின் ஒரு பட்டையை மட்டும் எடுத்துக்கொள்வதைப்போல. பத்தாம் நூற்றாண்டில் சிலப்பதிகாரம் கற்பின் கதையாக வாசிக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் அது சாமானியனின் அறச்சீற்றத்தின் கதை.

ஏனென்றால் இலக்கியம் ஒற்றைக்குரல் கொண்ட ஒன்று அல்ல. அது பேய்பிடித்தவனின் உளறல் போல. அதில் பலகுரல்கள் ஒலிக்கலாம். பல மொழிகள் பேசப்படலாம். பலநூறு தெரிந்தும் தெரியாததுமான ஆழ்மன எழுச்சிகள் வெளிப்படலாம். அதைத்தான் மிகயீல் பக்தியின் களியாட்டம் – கார்னிவல்- என்றார்.

அந்த நோக்கின் விரிவாக்கமே பார்த்தின் எழுத்தாளனின் மரணம் பற்றிய கோட்பாடு. பேய்பிடித்தவன் ஒரு தனிமனிதனல்ல. அவன் ஒரு ஊடகம். அவன் வழியாக வெளிவரும் ஒரு ஆழ்மொழிப்பரப்பின் ஒரு வாசல் மட்டும்தான் அவன். அவன் சொல்வதை அந்த ஆழ்மொழிப்பரப்பை ஒரு அகராதியாக வைத்துக்கொண்டுதான் புரிந்துகொள்ளமுடியும். அதுவே பார்த் சொன்ன பகுப்பாய்வு – டிகோடிங்

ஆனால் அந்தப் பேய்பிடித்த கூற்றைக் கேட்பவனும் பல பேய்களால் பீடிக்கப்பட்டவன் என்றால்? அவன் ஒரு நிலையான மாறாத தரப்பு இல்லை என்றால்? அவனுள்ளும் அதே ஆழ்மொழிப்பரப்புதானே விரிந்திருக்கிறது. அந்த ஆழ்மொழிப்பரப்பைக்கொண்டு அவன் அந்தகூற்றுக்களைப் பொருள்கொள்கிறான் என்றால்?

அப்போது நிலையான அர்த்தம் இல்லை. பொருள்கொள்ளல் என்ற முடிவற்ற செயல்பாடு மட்டுமே உள்ளது. சொல்பவனின் தளத்திலும் கேட்பவனின் தளத்திலும் அர்த்தம் சொல்லைத் தழுவித்தழுவி நடனமிடுகிறது. அதைத்தான் தெரிதா சொன்னார்.

ஒருவகையில் நமக்குப் புதிய கருத்தும் அல்ல அது. மகாபாரதத்தில் சௌனகநீதியில் அர்த்தம் தாமரையிலைத் தண்ணீர் போல சொல் மீது வழுக்கிச்செல்கிறது என்ற கூற்று உள்ளது. சொல்லும் பொருளும் கொள்ளும் உறவை ஒருவரோடொருவர் கலந்தும் போட்டியிட்டும் ஆடும் சிவபார்வதி நடனமாகவே காளிதாசன் சொல்கிறான்

இன்று , ஏற்புக்கோட்பாடுகள் [ Reception theory   ] இன்னும் பெரிய ஒரு கோணத்தை நமக்குத் திறந்து அளித்துள்ளன. ஓர் இலக்கிய ஆக்கத்தை நாம் உள்வாங்கிக்கொள்ளும் முனையில் நம்முடைய காலகட்டமும் சமூகச்சூழலும் நம் அனுபவங்களும் நம்முடைய மொழியின் குறியீட்டமைப்பும் எல்லாம் அளிக்கும் பங்களிப்புகளைப்பற்றி விரிவாகவே பேசப்பட்டுள்ளது.

படைப்பும் வாசிப்பும் சந்திக்கும் புள்ளி என்பது காமம் போல. மனிதகுலம் உருவானபோதே உருவாகிப் பலநூற்றாண்டுகளாகப்  பலவாறாகப் பேசப்பட்டும் தீராத வசீகரமர்மத்துடன் அது இருந்துகொண்டுள்ளது. இன்னும் அது பேசப்படும். இன்னும் விரிவாக விவாதிக்கப்படும்

ஆனால் காமத்தின் கணத்தில் நாம் இந்தப் பேச்சுகளை நினைத்துக்கொண்டிருப்பதில்லை. அது அன்றும் இன்றும் அதே தன்னிச்சையான பரவசமாகவே உள்ளது. அந்த பரவசத்தைப் புரிந்துகொள்வதற்காகப் பின்பு கொட்டப்படும் சொற்களே பிற அனைத்தும்.

நித்ய சைதன்ய யதி சொன்னார். பல்லாயிரமாண்டுகளுக்கு முன் ஒரு வனத்தில் வேதங்கள் ஓதப்பட்டன. அருகே ஒரு குயில் கூவியது. அந்த குயிலின் நூறாயிரமாவது வாரிசு இன்றும் அதே குரலை எழுப்பிக்கொண்டிருக்கிறது. அதற்கு ஒரே பொருள்தான். ஆனால் வேதங்கள் மீது பல நூறு பல்லாயிரம் அர்த்தங்கள் ஏற்றப்பட்டுவிட்டன’

அந்த மாறாத குயில் குரலை வேதங்களில் இருந்து மீட்டுக்  கேட்கக்கூடிய காது ஒன்று உண்டு. அதுவே இலட்சிய வாசிப்பு என நான் நினைக்கிறேன். அந்த மையத்தைச் சுற்றிச் சுழலும் அச்சுகளே அத்தனை உரைகளும் விளக்கங்களும்.

நன்றி

[ மார்ச் 30,2011 அன்று திருவனந்தபுரம் பிரஸ்கிளப்பில் ஆற்றிய உரை]

 

மறுபிரசுரம்/முதற்பிரசுரம் May 19, 2011 

தொடர்புடைய சுட்டிகள்


தாய்மொழி,செம்மொழி

வாசிப்பின் நாட்டிய சாஸ்திரம்

அறம் என்பது

ஒப்பிலக்கியம்

மரபை அறிதல் இரு பிழையான முன்மாதிரிகள்

இலக்கியத்தின் பயன்சார்ந்து

நவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை?

இலக்கியமும் நவீன இலக்கியமும்

இலக்கியவாசிப்பின் பயன் என்ன?

முந்தைய கட்டுரைதாந்த்ரீக பௌத்தம் – கடலூர் சீனு
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–70