சங்கொலி – ஒரு கடிதம்

கு.ப.ராஜகோபாலன் தமிழ் விக்கி

அன்புள்ள ஜெ

நேற்று கு.ப.ரா வின் சிறுகதை தொகுப்பை வாசிக்க தொடங்கினேன். ஒவ்வொரு கதை குறித்த என் மதிப்பீடுகளை தனித்தனியாக எழுதவும் ஆரம்பித்துள்ளேன். விசாலாக்ஷி என்ற கதைக்கு பின் நூர் உன்னிஸா என்ற கதைக்கு இரண்டாவதாக குறிப்பு எழுத உட்கார்ந்த போது ஒரு எண்ணம் தோன்றியது. அந்த கதையின் நாயகன் சுதந்திர போராட்ட வீரானாக நமக்கு அறிமுகமாகிறான். கதையும் சுதந்திரச் சங்கு என்ற இதழில் வெளிவந்துள்ளது. வருடம் 1934. ஆகவே அவ்விதழ் தேசிய கருத்துகளை பரப்புவதற்காக தொடங்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கணித்தேன். முன்பென்றால் இது போன்ற கணிப்புகளை உறுதி செய்வது பெரும் நேரத்தை கொள்ளும் வேலை.சிரமமும் கூட. இந்த இடத்தில் தமிழ் விக்கியின் பங்களிப்பை மறுக்கவே முடியாது. ஒரு நொடியில் சுதந்திரச் சங்கின் சுயசரிதையை கையில் கொடுக்கிறது. ஆய்வுகள் மேற்கொள்ளவும் அறிதலுக்கும் பெரும் வரம் தமிழ் விக்கி.

எதிர்பார்த்த படி சுதந்திரச் சங்கு குறித்த முழுமையான தகவல்கள் கிடைக்கப் பெற்றேன். ஆனால் அப்பதிவில் ஓரிடத்தில் கு.ப.ரா வின் மிகச் சிறந்த கதையான நூர் உன்னிஸா இவ்விதழில் வெளியானது என்று இருக்கிறது. சான்றாதரங்களாக ஸ்கிரீன் ஸாட்டை பின்னிணைப்பில் கொடுக்கிறேன்.

தமிழ் விக்கி குழுவில் மிகச் சிறிய காலம் இடம் பெற்றும் ஒன்றிரண்டு பதிவுகள் எழுதியதில் இருந்து உங்கள் அறிவுரைகளை பெற்றுள்ளேன். தொடர்ச்சியாக குழுவிலும் சரி பொதுவெளியிலும் சரி, தமிழ் விக்கி அறிஞர் குழுவால் உருவாக்கப்படும் கலைக்களஞ்சியம். ஆகவே அது தன்னகத்தே ஒரு மதிப்பீட்டை கொண்டுள்ளது. இலக்கியத்தை பொறுத்தவரை அது நவீன சிற்றிதழ் சூழலின் நீட்சியாக தன்னை நியமித்து கொள்கிறது என்று கூறி வருகிறீர்கள்.

இப்போது நூர் உன்னிஸா கதைக்கு வருவோம். யாதார்த்த போதம் கொண்ட இளைஞன் தனக்கென்று உருவாக்கி கொள்ளும் கற்பனாவாத பகல் கனவு என்பதே அக்கதை குறித்த என் மதிப்பீடு. சமூகவியல் ஆய்வு கோணத்தில் சுதந்திர போராட்ட வீரர்களில் படித்த இளைஞர்களின்  மனம் வசதி வாய்ப்பான வாழ்க்கைக்கு ஏங்கியது என கொள்ளலாம். ஆனால் அதுவும் மிக எல்லைக்குட்பட்டே. மற்றபடி அக்கதை எவ்வகையிலும் மிக சிறப்பானதாகவோ அல்லது முக்கியமானதாகவோ படவில்லை. உங்களுடைய தமிழ் சிறுகதை திறனாய்வாளன் பட்டியலிலும் இக்கதைக்கு இடமில்லை. எஸ்ராவின் நூறு சிறுகதைகள் பட்டியலிலும் இதற்கு இடமில்லை. நான் உங்களின் நீட்சிகளில் ஒருவனே. எனவே என் ரசனை என்பது உங்களில் இருந்து அதிகம் விலகியிருக்க வாய்ப்பில்லை.

மேலும் இக்கதையை தமிழ் சிற்றிதழ் சூழலும் கு.ப.ரா வின் மிக சிறந்த கதை என்று கூறியிருக்காது என்பதே என் எண்ணம். அப்படி எங்காவது சொன்னால் நாமே நம் ரசனை மதிப்பீட்டை மிக தாழ்த்தி கொள்கிறோம். இவை என் கருத்துக்கள். பிழைகள் இருக்கலாம். அப்படியிருந்தால் ஆசிரியராக‌ இம்மாணவனை திருத்தவும்.

வெறுமே எழுத்து பிழையோ தகவல் பிழையோ இருந்தால் தமிழ் விக்கி தொடர்பு மின்னஞ்சலுக்கு அனுப்பி விடலாம். இது மதிப்பீடு குறித்த கருத்து என்பதால் உங்களுக்கு அனுப்புகிறேன் ஜெ.

அன்புடன்
சக்திவேல்

***

அன்புள்ள சக்திவேல்,

திருத்திவிட்டேன். என்ன சிக்கலென்றால் தமிழகத்தில் நமக்கு மிகைச்சொற்கள் மேல் தயக்கமே இல்லை. மிகை தவிர்க்கும்படி நம் எழுத்தாளர்களிடம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. ஆனாலும் சாதாரணமாகச் சொற்களாக அவை வந்து அமைகின்றன. நம் கண்களுக்கும் சாதாரண வாசிப்பில் அவை தெரிவதில்லை. மிகச்சிறந்த, அபாரமான, மகத்தான, மிகச்சிறப்பாக, அற்புதமாக, சாதனை, பெருங்கொடை போன்று நாம் சொற்களை சாதாரணமாகப் பயன்படுத்துகிறோம்.

தமிழ் விக்கியில் ஒரு சாதாரண சரித்திர ஆசிரியர் பற்றிய கட்டுரை. ஒரு நண்பர் எழுதியது. அதை ஆங்கிலத்தில் எடிட் செய்த என் மகள் ‘அப்பா, இது மட்டும் சுவீடிஷ் அக்காதமி கண்ல பட்டுச்சு, நோபல்தான் இந்தாளுக்கு’ என்றாள். ஆங்கில மொழியாக்கத்தில் அத்தனை மிகைச்சொற்களும் பயங்கரமாக ஒலித்தன.

நமக்கு ஒருவரைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை என்றால் ’இவர் மிகச்சிறந்த…’ என்று சொல்லிவிடுகிறோம். பள்ளி, கல்லூரியில் இருந்தே இது ஆரம்பம் ஆகிவிடுகிறது. அதை பலர் சேர்ந்து எழுதும் கலைக்களஞ்சியத்தில், பல இடங்களில் இருந்து சேர்க்கப்படும் எழுத்துக்களில் வடிகட்டுவது மிகப்பெரும் பாடுதான். செய்துகொண்டிருக்கிறோம்

ஜெ

சுதந்திரச் சங்கு

சுதந்திரச் சங்கு
சுதந்திரச் சங்கு – தமிழ் விக்கி

கு.ப.ராஜகோபாலன்

கு.ப. ராஜகோபாலன்
கு.ப. ராஜகோபாலன்- தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஆரோக்கிய நிகேதனம், வாசிப்பு
அடுத்த கட்டுரைவாசகர் கடிதங்கள்