வடகிழக்கு நோக்கி 1 – தேர்தலும், துவக்கமும்.

மே பதிமூன்றாம் தேதி மதியம் அரங்கசாமி, கிருஷ்ணன், விஜயராகவன் ஆகியோர் நான் தங்கியிருந்த பிரதாப் பிளாசா ஓட்டலுக்கு வந்து சேர்ந்தனர். அறையில் அறிவழகன் இருந்தார். நாகர்கோயிலைச் சேர்ந்தவர். வெள்ளிமலை சுவாமிகளால் ஊக்குவிக்கப் பட்டு வேதாந்தத்தில் உயர் ஆய்வுசெய்து [பஞ்ச கோஸங்களும், வேதாந்தமும்] விவேகானந்தா கல்லூரியில் இந்திய தத்துவத் துறையில் விரிவுரையாளராக இருக்கும் அறிவழகன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இரு விஷயங்கள் அவரைச் சந்தித்ததில் எனக்கு ஊக்கமூட்டுவனவாக இருந்தன.

  1. இன்றும் வேதாந்தக் கல்விக்கு, ஆய்வுக்கு ஓரளவு இடம் தமிழகத்தில் இருக்கிறது.
  2. அதை எல்லா சாதியினரும் கற்கவும், கற்றால் மதிப்பும், இடமும் பெற முடிகிறது.

வெள்ளிமலை சுவாமிகள் எனக்கு தொண்ணூறுகளில் நன்கு அறிமுகமானவர். குரு ஸ்தானம் உள்ளவர். அவரை ஆசிரியராகக் கொண்ட ஒருவர் ஒரு வகையில் எனக்கு சகோதரர் முறை எனச் சொல்ல வேண்டும். எதிர்காலத்தில் அவருடன் இணைந்து சில பணிகள் செய்ய வேண்டும். சமகால வேதாந்த மரபுகள், துணை வேதாந்த மரபுகள் குறித்து ஓர் ஆய்வு செய்தாலென்ன என்ற எண்ணம் உருவாகியது. அதை அவருடன் விவாதித்தேன்.

கொஞ்ச நேரத்தில் செந்தில்குமார் தேவன் வந்து சேர்ந்தார். வசந்த குமாரும், கெ. பி. வினோதும் வந்தனர். யுவன் சந்திரசேகரும், தங்கவேலும் நேரடியாக விமான நிலையம் வந்து சேர்வதாகச் சொல்லியிருந்தார்கள். மாலை ஏழு மணிக்கு விமானம். இண்டிகோ விமானத்தில் வடகிழக்கைச் சேர்ந்த சின்னப் பொம்மைகள் போன்ற பணிப் பெண்கள் ஒரே போன்ற முகபாவனையை [அதற்காக மட்டுமேயான மென்பொருட்கள் அவர்களுக்குள் பொருத்தப் படும் போலும்] வெளிப் படுத்தி வரவேற்க உள்ளே சென்று அமர்ந்தோம்.

From Sikkim jeyamohan

கருணாநிதியின் தோல்விப் பற்றிய தகவல்கள் வந்து கொண்டிருந்தன. காலை பத்து மணிக்கே விஷயம் தெரிந்து விட்டிருந்தாலும் இரவு வரை அந்த உற்சாகமும், ஆவலும் நீடித்தது. தமிழகத்தில் இதற்கு முன்னரும் இதே போல ‘ஸ்வீப்’ நிகழ்ந்துள்ளது. ஆனால் அதெல்லாமே அனுதாப ஓட்டு. முதல்முறை ஜெயலலிதா தோல்வி அடைந்தது மட்டுமே உண்மையில் மக்களின் வெறுப்பால் விளைந்த மாறுதல். இம்முறை அதை விடவும் பெரிய வெறுப்பு. எங்கும் கொண்டாட்டத்தையேக் கண்டேன். எல்லாருமே கருணாநிதியின் தோல்வியை உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். கருணாநிதியும் தோற்றிருக்கலாம் என்று ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். ஸ்டாலின் தோற்கக் கூடும் என்ற இனிய எதிர்பார்ப்பு காற்றில் அலைந்து கொண்டிருந்தது. வெளியேறும் வாக்காளர்கள் மீதான கருத்துக் கணிப்புகளில் கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் ஏறத்தாழ சமமான இடத்தில் இருப்பார்கள் என்ற முடிவுகள் வந்தன. உண்மையில் அது வாக்காளர்களின் அச்சத்தையே காட்டுகிறது.

கணிசமானவர்கள் அ.தி.முகவுக்கு வாக்களித்து விட்டு மாற்றிச் சொல்ல அழகிரி வகையறா மேல் இருந்த அச்சமே காரணம் என்று தெரிகிறது. அந்த அச்சத்தைக் களைவதே ஜெயலலிதாவின் சவாலாக இருக்கும்.கருணாநிதியின் தோல்வி இதழியல் நண்பர்களால் ஊகிக்கப்பட்டு விட்டிருந்தது. வசந்தகுமார் 140 இடங்கள் அதிமுக கூட்டணிக்கு கிடைக்கும் என தொகுதி வாரியாக சொல்லியிருந்தார். அதில் சரத்குமாரின் வெற்றி போன்ற சிறிய மாறுதல்களே இருந்தன. முற்றிலும் எதிர்பாராத விஷயம் இந்த பெரும் எதிர்ப்பலை. எனக்கு பெரிய அரசியல் ஈடுபாடு இல்லை என்றாலும் இம்முறை கருணாநிதி தோற்க ஆசைப் பட்டேன். இந்தியா முழுக்க தமிழர்களுக்கு ஓர் அவப் பெயர் உருவாகி விட்டிருக்கிறது – பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் கும்பல் என. தேர்தல் கமிஷன் உருவாக்கிய நெருக்கடிகள் அந்த பிம்பத்தை இன்னும் ஆழமாக நிலை நாட்டின.

அழகிரி கும்பலுக்கும் அந்த எண்ணம் தான். இம்முறை கருணாநிதி ஜெயித்திருந்தால் தமிழகத்தில் ஜனநாயகம் இல்லை என்றாகியிருக்கும். தமிழன் எச்சில் பொறுக்கி என இந்தியா எண்ண ஆரம்பித்திருக்கும். மீண்டும் தமிழகத்தின் சாமானிய மக்களுக்கு ஒரு வணக்கம். [சாமானிய மக்களை விட அதிகமாக இலவசங்களுக்கும், சலுகைகளுக்குமாக அலைந்து கனிமொழி காலிலும், தமிழச்சி காலிலும் தெண்டனிட்ட தமிழ்ச் சிற்றிதழ்கள் இனிமேல் என்ன செய்யும்? காலச் சுவடு, உயிர்மை, உயிரெழுத்து, அமிர்தா என எல்லா சிற்றிதழ்களிலும் அட்டைகளில் சசிகலா வகையறாக்களின் பேட்டி படம் வர ஆரம்பிக்குமா? இளவரசியின் கவிதை நூலுக்கு உயிர்மை லட்ச ரூபாய் செலவில் வெளியிட்டு விழா ஏற்பாடு செய்யுமா? காலச் சுவடு சசிகலாவின் முதல் பாராளுமன்ற உரையை அவர்களே எழுதி வெளியிடுவார்களா? சிற்றிதழ் ஆசிரியர் குழுக்களில் இணைய சசிகலா ஒத்துக் கொள்வாரா? இவர்களின் இலக்கிய ஆக்கங்களை தங்கள் அவ்வருடத்திய பெருமைப் படைப்புகளாக வெளியிட்டு புத்தகக் கண்காட்சிகளில் கட் அவுட் வைப்பார்களா? ஈசா, நினைக்கவே வயிற்றைக் கலக்குகிறதே!]

ஆச்சரியம் அளித்த தோல்வி லீமா ரோஸ். அவரது எதிர் வேட்பாளர் இன்று வரை குமரி மாவட்டத்துக்கே வராதவர். இளைஞர் காங்கிரசால் வேண்டா வெறுப்பாக இடமளிக்கப் பட்டவர். கவிமணியின் பேத்தி என்று சொல்லிக் கொண்டார். லீமா ரோஸ் ஐந்தாண்டுக் காலம் நேர்மையாக, துணிவாகப் பணியாற்றியவர். ஆனால் அவர் தோற்கக் கூடும் என்று ஏற்கனவே ஒரு முறை நினைத்தும் இருந்தேன். இந்தக் கடைசி வருடத்தில் அந்த அம்மையார் சட்டென்று ஆவிக்குரிய எழுப்புதல்களில் பங்கெடுத்துக் கிறித்தவ வாக்குகளைக் காபந்து செய்ய நினைத்தார். ஒட்டு மொத்த இந்து வாக்குகளும் கைவிட்டு போய் விட்டன.

அச்சுதானந்தனின் தோல்வி எதிர்பார்த்ததே. அதற்கான காரணத்தையும் ஏற்கனவே எழுதியிருந்தேன். அவர் நல்ல முதல்வர், கேள்விக்கு அப்பாற்பட்ட நேர்மை கொண்டவர். இம்முறை மார்க்ஸிய குண்டர் வாதத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தார். பல முக்கியமான விஷயங்களைச் செய்து முடித்தார். ஆனால் கட்சி எடுத்த ஒருமுடிவு அவரது தலைவிதியைத் தீர்மானித்து விட்டது. அப்துல் நாசர் மதனி என்ற மக்கள் விரோதியை, கீழ்த்தரமான மத வெறி வன்முறைக் கட்சியான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இண்டியா [அதன் அரசியல் வடிவமான என்.டி.எஃப்] தன் கூட்டணியாக ஏற்றுக் கொண்டது கட்சி. காரணம் காங்கிரசிடம் இருக்கும் முஸ்லீம் ஓட்டுகளைப் பிரிக்கும் ஆசை. மதனியின் விடுதலைக்காகக் கட்சிப் போராடியது. அவர் கோவையில் இருந்து விடுவிக்கப் பட்ட போது நான்கு அமைச்சர்களை விமான நிலையத்திற்கு அனுப்பி வரவேற்றது. கேரளம் முழுக்க வரவேற்புக் கூட்டங்கள் நிகழ்த்தியது. மதவெறியர்களின் வாக்குகள் கிடைத்தன. ஆனால் கோட்டயத்தில் கல்லூரி ஆசிரியரின் கையை வெட்டியது கேரளம் முழுக்க உருவாக்கிய அச்சமும், வெறுப்பும் கம்யூனிஸ்டுக் கட்சியின் விதியைத் தீர்மானித்து விட்டது. அச்சுதானந்தனின் நேர்மையும், சாதனைகளும் பயனற்றுப் போயின.

கல்கத்தாவுக்கு இரவு பத்து மணிக்கு வந்து சேர்ந்தோம். இங்கே மார்க்ஸியக் கட்சி மண்ணைக் கவ்வியக் கொண்டாட்டம். வங்காளத்தில் நடந்த முதல் தேர்தல் என்று சொன்னார் ஒருவர். தீதியின் வெற்றியைக் கொண்டாட நகரில் டாக்ஸியே இல்லை. இருபது கிலோ மீட்டருக்கு ஆயிரம் ரூபாயில் இருந்து ஆரம்பித்து பேரம்.

நான் 1989க்கு பின் கல்கத்தாவைப் பார்க்கிறேன். இன்னும் அழுக்கடைந்து இன்னும் சீரழிந்து இன்னும் நெரிசலாகிக் கிடக்கிறது இந்நகர். மக்களின் பேரில் இம்மி கூட அக்கறை இல்லாமல் தங்களுக்காக வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றும் குண்டர் கும்பலின் நலம் மட்டும் நாடி ஆட்சி நடத்திய ஒரு வீணர் குழுவால் கால் நூற்றாண்டாகச் சீரழிக்கப்பட்டுவிட்ட ஒரு மாநிலம். தீதி ஆட்சிக்கு வந்தது சரி, ஆனால் இந்த மாநிலத்தை அப்படி எவரும் மீட்டுவிட முடியாது.

From Sikkim jeyamohan

ஹௌரா அருகே ஒரு விடுதியில் இரவு தங்கினோம். காலையில் எழுந்து டீ குடிக்கத் தெருவுக்கு வந்தால் தெரு ஒரு கெட்ட கனவு போல் தெரிந்தது. இடிந்த பிரிட்டிஷ் கட்டிடங்கள் மேல் பெரும் ஆலமரங்கள் முளைத்திருந்தன. அறைகளுக்குள் ஆலமர வேர்கள். அங்கே மனிதர்கள் வாழ்ந்தார்கள். கடைகள் செயல்ப் பட்டன. சாக்கடைக் குப்பை, இடிபடுகள் நடுவே பட்டினி தெரியும் முகம் கொண்ட மக்கள். ஒரு டீ மூன்று ரூபாய். சென்ற கால் நூற்றாண்டாக மார்க்ஸியத்தின் பேரால் வங்காளத்தில் எந்தத் தொழிலும் வளர விடப் படவில்லை. இங்கே இருந்த சணல் ஆலைகள் இழுத்து மூடப் பட்டன.

இங்கே நிகழ்ந்தது என்ன என எங்களை இங்கே வரவேற்ற நவீன் என்பவர் சொன்னார். வாக்குச் சாவடிகள் மீதான வன்முறை ஆதிக்கம் வழியாக நிலை பெற்ற ஓர் அரசு எதையுமே மாற்றாமல் அப்படியே இருக்க வைத்தது. இந்தியா பொருளியல் முன்னேற்றத்தில் எங்கோ செல்ல, வங்கம் அப்படியேக் கிடக்கிறது. சாலைகளில் புதிய கார்களைப் பார்க்காமல் இந்தியாவின் எந்தச் சந்திலும் பயணம் செய்ய முடியாது. கல்கத்தாவில் சைக்கிள் ரிக்‌ஷாக்களும், புராதனமான அம்பாசிடர் வண்டிகளும், முட்டி மோதுகின்றன. நவீன வணிக உலகின் தடங்களே இல்லை. விளம்பரங்கள் கூட குறைவு. புழுதி படிந்த, இடிந்த பிரிட்டிஷ் கட்டிடங்களும் சாக்கடை தேங்கிய தெருக்களும் தான் இந்நகரம். சுருங்கச் சொன்னால் ஒரு கியூபா .

From Sikkim jeyamohan

தொலைக் காட்சிப் பேட்டியில் ஆனந்த பசார் பத்திரிகை ஆசிரியர் சொன்னார் , வங்காளத்தின் பிரச்சினை என்பது இளைஞர்கள் இந்த மாநிலம் மேல் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதே . அவர்கள் கிளம்பிச் சென்று கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த மாநிலம் மேல் நம்பிக்கை உருவாகச் செய்ய வேண்டும், இந்த மாநிலம் திரும்பி எழக் கூடும் என அவர்கள் எண்ண வேண்டும், இல்லையேல் மீட்பு இல்லை என்றார். அது நிகழலாம். ஆனால் வாய்ப்பு மிக குறைவு. எனக்கே கல்கத்தா மீளும் என்ற எண்ணம் வரவில்லை. இது அழிக்கப் பட்டு விட்ட நகரம்.

பகலில் எரியும் வெயிலில் பேலூர் மடம் சென்றோம். அந்த வெயிலுக்கு ஆறுதலாகத் தோன்றியது எதிரே ஓடிய ஹூக்ளி நதி மட்டுமே. பேலூர் மடம் முழுக்க நல்லக் கூட்டம். குள்ளமான வங்காளப் பெண்கள், குர்தா அணிந்த பாபுக்கள். பூக்குடலைகளுடன் பூஜைகளுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். பேலூர் மடத்தின் ஓங்கியக் கட்டிடத்தை வெளியே நின்று தான் பார்த்தோம். ஏனோ அது பெரிதாகக் கவரவில்லை. நான் இருபது வருடங்களுக்கு முன் தாளமுடியாத மன எழுச்சியுடன் அங்கே நின்று கண்ணீர் சிந்தியிருக்கிறேன். இப்போது சட்டென்று அது கட்டிடமாக மாறி விட்டது. ஒருவேளை அதிகாலையில் அல்லது அந்தியில் வந்திருந்தால் வேறு மனநிலை ஏற்பட்டிருக்கலாம்.

From Sikkim jeyamohan

நாங்கள் ஒரு படகில் ஏறிக் கொதிக்கும் வெயிலில் வியர்வைப் பெருக தட்சிணேஸ்வரம் சென்றோம். சென்று இறங்கியதும் குளிக்கலாமென்றார் அரங்கசாமி. உடம்பு எரிந்தது. வேறு வழியில்லை. ஒரு மணி நேரம் நீந்திக் குளித்தோம். உள்ளே சென்ற போது தட்சிணேஸ்வரத்தை மூடி விட்டார்கள். திரும்பி பேலூர் செல்ல மனமில்லை. வெயில். டாக்ஸியை அங்கே வரச் சொல்லிவிட்டு ஒரு ஓட்டலில் நுழைந்து மட்டமான உணவை உண்டோம். உருளைக் கிழங்கு சப்ஜியில் நிறையத் தண்ணீர் கலந்தது போல இருந்தது கறி. அதை ஊற்றி ஆறிப்போன சோற்றை உண்பது உண்மையில் ஒரு வாழ்வனுபவம்தான்.கல்கத்தாவில் மனம் மலரும் அனுபவமாக நான் உணர்ந்தது பேலூரிலும், தட்சிணேஸ்வரத்திலும் வழிக்  கேட்ட போதும், உதவிக் கோரிய போதும் அந்த மக்கள் காட்டிய இனிய முகபாவனையும் சகஜமாக உதவ முன்வந்ததும் தான். அபாரமான மக்கள். வன்முறையற்ற பண்பாடு கொண்டவர்கள். அதுவே வங்கம் மேல் உருவாகும் நம்பிக்கைக்கு ஆதாரம்!

From Sikkim jeyamohan

(மேலும்)

முந்தைய கட்டுரைஅண்ணா -கடிதங்கள்
அடுத்த கட்டுரைபொருளியல் – கடிதங்கள்