அன்புள்ள ஜெயமோகனுக்கு,
சமீபத்தில் தமிழ் தேடி வலையில் அலைந்துக் கிடைத்த முத்தாய் உங்கள் பக்கம் .
முன் பின் யான் அறிய உங்கள் எழுத்து. முதல் முறை ஒரு தரிசனம் .
யானை டாக்டர் படித்தபின், ஒரு வாரம் வெறுமையுடன் இருந்தேன்.
பயணம் என்பது ஒரு புத்துணர்வு அதை எப்போதும் விரும்பி செல்வேன் .
முதல் முறையாக டாப் ஸ்லிப் சென்றேன்.
யானை டாக்டர் இல் படித்த விஷயங்கள் என்னை அறியாமல் பற்றி கொண்டன.
படித்த விஷயம் அனுபவமாக மாறும் என்பதைப் பயிற்சி இன்றி உணர்ந்தேன் .
பாஸ்கரன் பெருமாள்
அன்புள்ள பாஸ்கரன்
டாப் ஸ்லிப்பில் அவருக்கு ஒரு நினைவகம் உள்ளது, அவர் வாழ்ந்த வீடு
ஜெ
==========================
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வார இறுதி நாட்கள் உங்கள் எழுத்தைப் படித்துத் திளைப்பதிலேயே சென்றுவிடுகிறது. ‘யானை டாக்டர்’ படிக்கப் படிக்க கண்ணீர் பெருகியபடியே இருந்தது. திருச்சியில் எப்பொழுதும் கோயில் யானைக் கண்ணில் பட்டுக் கொண்டே இருக்கும். ஸ்ரீரங்கம், மலைகோட்டை, திருவானைக்காவல், சமயபுரம் என்று ஊரைச் சுற்றி யானைகள். ஸ்ரீரங்கத்தில், எங்கள் தெருவில், வெள்ளிக்கிழமை தோறும் கோயில் யனையைக் கூட்டி வருவார்கள். அதைப் பார்த்து என் அப்பா கண் கலங்குவதைக் கண்டிருக்கிறேன். நாங்கள் யாரும் பார்க்காத விதத்தில் சாமர்த்தியமாக மறைத்துக் கொள்வார். விடுமுறைக்கு ஊர் செல்லும் பொழுதெல்லாம், சிறு குழந்தையாக இருந்த என் மகன், வாய்விட்டு அழுவான். “யானை பாவம், யானை பாவம்” என்பான்.
என் மகன் கௌதமுக்கு இருபது வயதாகிறது. உங்கள் மகன் அஜிதனை போல தான். இயற்கை விரும்பி. காடு, மலை, விலங்குகள், பறவைகள் தான் அவனது உலகம். வரலாறு, புவீயியல், மானிடவியல் பாடங்களிலும் விருப்பம் அதிகம். கல்லூரியில், வரலாறு, மானிடவியல் மூன்றாம் வருடம் படிக்கின்றான். சென்ற முறை இந்தியா போன பொழுது, ஆனைமலை காட்டுக்குள் நடந்து சென்றோம். எட்டு மணி நேரம் ஆனது. வழியில் யானைக் கூட்டத்தை பார்த்தோம், சிறுத்தையின் வாலை மட்டும் பார்த்தோம், மற்ற நிறைய மிருகங்களைப் பார்த்தோம். பாதி வழியில் மரண பயம் வந்து விட்டது. உயிரோடு திரும்புவோம் என்ற நம்பிக்கையே இல்லை. கௌதம் மிகவும் அனுபவித்தான். கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டுக் காட்டை முழுவதுமாக அனுபவித்தான். மறக்க முடியாத அனுபவம். இங்கு அமெரிக்காவில் நிறைய தேசிய பூங்காக்கள் இருக்கிறது. ஒவ்வொரு பூங்காவுக்கு செல்லும் பொழுதும் பேச்சிழந்து போய் விடுவோம். இயற்கையின் அமைதியும், காடும், விலங்குகளும், பறவைகளும் நம்மை ஒரு தூசிக்குச் சமமாக ஆக்கி விடுகிறது. ஆனால், இங்கு நம் யானை இல்லையே ஜெயமோகன்…….
பறவைகள் பற்றிய திரைபடம் “விங்டு மைக்கிரேஷன்”(Winged Migration) பார்த்திருக்கிறீர்களா? விலங்குகளுக்கு மனிதர்கள் தேவையில்லை. மனிதர்களுக்கு தான் விலங்குகள் தேவை.
என்னுடைய Facebook பக்கத்தில் உங்களுடைய ‘யானை டாக்டர்” சொடுக்கு கொடுத்திருக்கிறேன். என்னால் முடிந்தது அது தான்.
நேரம் ஒதுக்கி படித்ததற்கு மிக்க நன்றி.
ரமா கண்ணன்.
ஒஹையோ
அன்புள்ள ரமா கண்ணன்
எப்படி இருக்கிறீர்கள்? முகம் நினைவிலிருக்கும் ஒருவரின் கடிதம் இன்னும் அதிக மகிழ்ச்சி அளிக்கிறது.
இன்றைய இளைஞர்களில் அதிகமானவர்களுக்கு சூழியல் மேல் ஆர்வம் உருவாகி வருவதைக் காண்கிறேன். எப்போதும், எதையும் நம்பிக்கையுடன் அணுக முடியும் என்ற என் எண்ணத்துக்கு அது ஊக்கமளிக்கிறது.
நீங்கள் சொல்வதை நானும் எழுதியிருந்தேன். யானை இருந்தால் தான் அது காடு – சாமி இருக்கும் கோயில் போல. காட்டுக்குள் யானை உள்ளது என்ற எண்ணம் அளிக்கும் திகில் இல்லாமல் காடு பாதியாகக் குறைந்து விடும்
ஜெ