நமது அமெரிக்கக் குழந்தைகள்-3

தமிழ் விக்கி இணையப்பக்கம்

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2

நாம் நம் குழந்தைகள் முன் வைக்கவேண்டிய தமிழின் பண்பாட்டு வெற்றிகள் உண்மையில் என்ன?

ஆனால் அதற்கு முன்பாக நாம் எதையெல்லாம் சொல்லக்கூடாது என்று பார்ப்போம். முதல் விஷயம் நம் சூழலில் இருந்து நம்மை வந்தடையும் அரைகுறைச் செய்திகள், போலிச்செய்திகளை பகிரலாகாது. அது நம்மை நம் குழந்தைகள் முன் முட்டாள்களாகவே ஆக்கும்.

ஏன்? அச்செய்திகள் அரசியல்நோக்குடன் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படுபவை. பின்னர் மிகப்பெரிய ஊடகவல்லமையால் பரப்பப்படுகின்றன. அதை முதிர்ச்சியில்லாத, தானே வாசிக்கும் அறிவும் இல்லாத பெருங்கூட்டம் மிகையுணர்ச்சியுடன் பரப்புகிறது. அச்செய்திகள் நம் சூழலில் நிறைந்துள்ளன. நம்மை அறியாமலேயே நமக்குள் வருகின்றன.

அவை ‘அனைவராலும் நம்பப்படுபவை’ என்று நாம் எண்ணச்செய்யப் படுகிறோம். அவற்றை நம்புவது தேசப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று என்றெல்லாம் நினைக்கச் செய்யப்படுகிறோம். அவை எப்போதுமே மிகையுணர்ச்சி சார்ந்தவையாக, எதிரிகளை கற்பனை செய்து அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படுபவையாக, நம்மை சீண்டும் தன்மை கொண்டவையாகவே இருப்பதைக் காணலாம். பெரும்பாலான இத்தகைய போலிச்செய்திகள் ‘மறைக்கப்பட்ட வரலாறு’ என்ற முத்திரையுடன் மட்டுமே சொல்லப்படுகின்றன.

(எவராவது மறைத்தால்தான் நாம் வரலாற்றையே திறந்து பார்ப்போம். கண்முன் பல்லாயிரம் பக்கங்களாக விரிந்து கிடக்கும் வரலாற்றை திரும்பியே பார்க்கமாட்டோம்)

பொய்கள் ஏன் பரப்பப்படுகின்றன? இது ஜனநாயக யுகம். ஜனநாயகத்தில் எந்த கருத்து மக்களை ஒன்றாகத் திரட்டுகிறதோ அதுவே அதிகாரம் ஆகிறது. அரசை கைப்பற்றவும் செல்வமும் ஆதிக்கமும் கொள்ளவும் உதவுகிறது. மக்களை எளிதில் திரட்டும் கருத்துக்களுக்குச் சில இயல்புகள் உண்டு. அவை அம்மக்களின் பழம்பெருமையை தூண்டிவிடுவனவாக இருக்கும். அவர்களுக்கு எதிரிகளை உருவாக்கி அந்த எதிரிகள் மேல் வெறுப்பை தூண்டிவிடுவனவாக இருக்கும்.

பழம்பெருமிதம், எதிரிமீது வெறுப்பு ஆகிய இரண்டுமே மக்களை எளிதில் ஒருங்கிணைக்கும் கருத்துக்கள். ஆகவே அவற்றைத்தான் அரசியலாளர் அதிகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இவ்வாறு பழம்பெருமிதம், எதிரிமீது வெறுப்பு இரண்டையும் கருத்துக்களாக ஆக்கி அவற்றை பரப்பி அதிகாரத்தை அடையும் இயக்கமே பரப்பியல் இயக்கம் (Populism) எனப்படுகிறது. நம் அரசியலியக்கங்கள் அனைத்துமே அத்தகையவை.

பரப்பியல் இயக்கம் அரை உண்மைகளையும் பொய்களையும் உருவாக்கும். அவற்றை ஒற்றைப்படையான ஓரிரு வரிகளாக ஆக்கும். அவற்றை கொஷங்களாக கூச்சலிடும். மிகையுணர்ச்சியை உருவாக்கும். அவற்றை கொஞ்சம் சந்தேகப்படுபவர்களை எதிரிகள் என முத்திரைகுத்தி வசைபாடும், ஏளனம் செய்யும். எதிர்த்தரப்புடன் எவ்வகையிலும் உரையாட முற்படாது.

இந்தியா போன்ற சமூகங்கள் நெடுங்காலம் ஒடுக்கப்பட்டவை, வறுமையில் இருப்பவை. ஆகவே தாழ்வுணர்ச்சி கொண்டவை. அதனால்தான் இங்கே போலிப்பெருமிதப்பேச்சு எடுபடுகிறது. மக்களிடம் அவர்களின் சோம்பல், ஒற்றுமையின்மை, அறியாமை எதையுமே  தலைவரும் சுட்டிக்காட்ட முடியாது. ஏற்கனவே தாழ்வுணர்ச்சி கொண்டிருக்கும் மக்கள் அதனால் சீற்றம் அடைவார்கள். அவ்வாறு சுட்டிக்காட்டும் அறிஞர்களை வெறுப்பார்கள். எல்லா பிரச்சினைகளுக்கும் எதிரிகள்தான் காரணம் என்று சொல்பவரையே அவர்கள் ஏற்பார்கள். தலைவர் என கொண்டாடுவார்கள்.

நேர்மாறாக, ஐரோப்பிய, அமெரிக்க குடிமக்கள் வெற்றிபெற்றவர்கள். ஆகவே உயர்வுணர்ச்சி கொண்டவர்கள். உலகுக்கு வழிகாட்டுதல், உலகை காப்பாற்றுதல் ஆகியவை தங்கள் பொறுப்பு என நம்புபவர்கள். தங்களை உயர் நாகரீகமடைந்தவர்கள் என எண்ணுபவர்கள். அவர்களின் ஆதிக்கவுணர்ச்சியையோ சுரண்டலையோ அங்குள்ள எந்த அமெரிக்க அரசியல்வாதியும் சுட்டிக்காட்ட முடியாது. அவர்களின் உயர்வுமனப்பான்மையை தூண்டிவிடும்படியே அங்கே அரசியல்வாதிகள் பேசுவார்கள்.

பரப்பியல் அளிக்கும் கருத்துக்களை கொண்டிருப்பது ஓர் இழிநிலை. அது நம்மை நாமே பாமரர் ஆக அறிவித்துக்கொள்வது. எதையும் முறையாக பயிலாமல், சூழலில் இருந்து கிடைக்கும் எளிய பிரச்சார வரிகளை பிள்ளைகளிடம் சொன்னால் நாம் அவர்களுக்கு குப்பையை அள்ளி ஊட்டுகிறோம் என்றுதான் பொருள். நமக்கு நம் அறியாமை காரணமாக, நம் தாழ்வுணர்ச்சி காரணமாக, நம் பற்றுகள் மற்றும் காழ்ப்புகள் காரணமாக அந்த எளிய பிரச்சார வரிகள் உவப்பானைவையாக இருக்கலாம். ஆனால் அவற்றை அறிவுத்தரப்பாக எண்ணினோம் என்றால் நாம் நஞ்சைப் பரிமாறுகிறோம்.

நம் சூழலில் இருந்து அவ்வாறு ஏராளமான அரைகுறைச் செய்திகள், பொய்ச்செய்திகள் சாதாரணமாக நம்மிடையே புழங்குகின்றன. அவற்றைச் சொல்பவரின் அறிவியக்கத் தகுதி என்ன, அவருடைய சார்பு என்ன என்று பாருங்கள். மேடையில் நமக்கு சந்தோஷமளிக்கும்படி வித்தாரமாகப் பேசுபவர் அறிஞர் என நம்பும் மடமையை நாம் கைவிட்டே ஆகவேண்டும்.

தமிழ்தான் உலகிலேயே தொன்மையான மொழி, தமிழர்கள் உலகிலேயே தூய்மையான தொன்மையான இனம், திருக்குறள் உலகிலேயே சிறந்த நூல், கீழடி உலகிலேயே தொன்மையான தொல்லியல்களம், தமிழ் நூல்களில் அறிவியல் நிறைந்துள்ளது, தமிழ்க்கோயில்களில் உலகப்பொறியியலின் உச்சங்கள் உள்ளன, ககதமிழர்கள் வரலாறு மறைக்கப்படுகிறது என ஒருபக்கம் கூச்சல். உலகிலேயே தொன்மையான மதம் இந்துமதம், உலகிலேயே ஞானம் இருப்பது இந்தியாவிலே மட்டும்தான், எல்லா அறிவியலும் வேதங்களிலே உண்டு- இப்படி இன்னொரு பக்கம். இவ்வண்ணம் ஏகப்பட்ட சொற்குப்பைகள் நம் செவிவழி சிந்தையை அடைந்துள்ளன. அவற்றை நம் குழந்தைகளிடம் சொல்லும்போது நாம் உலகின் மிகச்சிறந்த கல்விமுறை உள்ள ஒரு நாட்டின் கல்விநிலையங்களில் படிக்கும் குழந்தைகளிடம் அபத்தமாக உளறிக்கொண்டிருக்கிறோம் என்றாவது புரிந்துகொள்ளவேண்டும்.

சரி, சொல்லத்தக்கவை என்ன?

தமிழுக்கு மகத்தான் பண்பாட்டு மரபொன்று உள்ளது. அந்தப் பண்பாடு இலக்கியம், கலை, மதம் என மூன்று களங்களில் முதன்மையாக உறைகிறது.

சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை, அதாவது தொல்பழங்காலம் முதல் தற்காலம் வரை அறுபடாது நீடிக்கும் ஓர் இலக்கிய மரபு தமிழுக்கு உண்டு. தமிழின் தொன்மை அல்ல நமது பெருமைக்குரிய விஷயம். தமிழகத்தை விட தொன்மையான பண்பாட்டு மரபுகள் உலகில் உள்ளன. தமிழகத்தை விட இலக்கிய வளர்ச்சியும் தொன்மையும் உள்ள மொழிகளும் உள்ளன. தமிழின் அறுபடாத தொடர்ச்சி என்பதுதான் நமது முதல்பெருமை. அத்தகைய தொடர்ச்சி கொண்ட பண்பாடுகள் உலகில் சிலவே எஞ்சியுள்ளன.

ஆனால் அத்தொடர்ச்சியை அர்த்தபூர்வமாக இலக்கிய படைப்புகளினூடாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றாலொழிய அது வெற்று பெருமிதப்பேச்சாகத்தான் இருக்கும். ஒருவருக்கு சங்க இலக்கியம் தெரியும், ஆனால் சுந்தர ராமசாமியின் எழுத்து தெரியவில்லை என்றால் அவர் தமிழின் மெய்யான பெறுமதி என்ன என்று அறிந்திராதவர் என்றே பொருள். சங்க இலக்கியப் பெருமை கூறும் ஒருவர் சினிமாப்பாடலாச்சிரியரை தமிழின் முதன்மைக் கவிஞர் என்று சொல்லுவார் என்றால் அவர் தமிழ் மரபை இழிவுபடுத்துகிறார் என்றே பொருள்.

இன்று எழுதப்படும் ஒரு படைப்பு இரண்டாயிரமாண்டு தொன்மையான படைப்புக்கு மிக அணுக்கமாக உள்ளது, இரண்டாயிரமாண்டு தொன்மையான ஒரு படைப்பு இன்றைய படைப்பை தீர்மானிக்கிறது என்றால் அது உலக இலக்கியக் களத்திலேயே மிக அரிதான ஒன்று. நம்மைவிட தொன்மையானதும் நம்மைவிட பலமடங்கு பெரியதுமான இலக்கிய மரபு சீனமொழிக்கு உண்டு. ஆனால் அந்தமொழி தன்னை முழுமையாக மறுவடிவம் எடுத்துக்கொண்டுதான் நீடிக்கிறது. நாம் அப்படி அல்ல. நாம் எழுத்துருக்களையே மாற்றிக்கொண்டிருக்கிறோம். கபிலரின் பாடல் இன்றைய புதுக்கவிதையேதான்( கபிலர் தமிழ் விக்கி )

உலக இலக்கிய வெளியில் பெருமிதத்துடன் கொண்டு சென்று வைக்கும் தகைமை படைத்த படைப்புகள் நவீனத்தமிழில் எழுதப்பட்டுள்ளன என்று  என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். தமிழில் இருபது சிறுகதை ஆசிரியர்களை மிக எளிதாக உலகச்சிறுகதைக் கலைஞர்களின் வரிசையில் கொண்டு நிறுத்த முடியும். இன்று வரை அத்தகைய ஒரு நல்ல தொகுதி ஆங்கிலத்தில் வரவில்லை. ’இது தமிழின் சாதனை, படித்துப்பாருங்கள்’ என்று தங்கள் குழந்தைகளை நோக்கி ஒரு தமிழ்த்தந்தை எடுத்து கொடுக்க தகுதி கொண்ட ஒரு இலக்கியப் பெருந்தொகுதி ஆங்கிலத்தில் இல்லை.நம் இலக்கிய முன்னோடிகள், இலக்கியமரபு, பண்பாட்டு மரபு பற்றி ஆங்கிலத்தில் வாசிக்கக்க் கிடைப்பவை மிகக்குறைவு.

இன்று தமிழின் தொன்மை முதல் சமகாலம் வரையிலான தொடர்ச்சியை ஆங்கிலத்தில், உலக இலக்கியக் களத்தில் சொல்பவர்கள் ஆய்வாளர்களான ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களுமே. நொபுரு கரஷிமா முதல் தாமஸ் புரூய்க்ஸ்மா வரை.

தமிழின் பெருமிதங்களில் இரண்டாவது, இங்குள்ள் மாபெரும் கலைவெற்றிகள். நம் கலைவெற்றிகள் மூன்று களங்களில் உள்ளன. ஒன்று, நம் கோயிற்கலை மற்றும் சிற்பக்கலை. இரண்டு நம் வெண்கலச் சிற்பக்கலை. இரு களங்களிலும் உலகநாகரீகத்தின் சொத்து என்று சொல்லத்தக்க கலைநிகழ்வுகளை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அவற்றைப் பற்றி ஆராய்ந்து விரிவாக எழுதியவர்கள் ஆங்கிலேயரும் அமெரிக்கர்களுமே.

மூன்று நம் இசைமரபு. அதன் பண்ணிசைவேர்களும் நவீன வடிவமும் நம் சாதனைகள். அதை நாம் இன்னும் உலகத்தின் கண்களுக்கு கொண்டுசெல்லவில்லை. பண்டிட் ரவிசங்கர் இந்துஸ்தானியை கொண்டுசென்றதுபோல நமக்கு ஓர் ஆளுமை அமையவில்லை. நாம் அவ்வாறு எவரையும் முன்வைக்கவுமில்லை.

மூன்றாவதாக மதம். ’மதமற்ற தமிழன்’ என்ற கூச்சலை கேட்டுக்கொண்டிருக்கிறோம். அவ்வாறு கூச்சலிடுபவர்கள் அனைவருமே, ஆம் அனைவருமே, ஒருவர் கூட மிச்சமில்லாமல், இங்குள்ள மதமாற்ற அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்பது நான் ஐயமில்லாமல் அறிந்த விஷயம்.

மதச்சார்பும் இறைநம்பிக்கையும் வேறு. அது ஒருவருக்கு இல்லாமலிருக்கலாம். ஒருவேளை எதிர்காலத்தில் அத்தகையோரின் எண்ணிக்கை கூடலாம். ஆனால் மதத்தின் வடிவிலேயே நம் ஈராயிரம் வருட தத்துவசிந்தனைகள் ஒருங்கமைக்கப்பட்டுள்ளன. மதத்திலேயே பல்லாயிரமாண்டு பண்பாடு ஆழ்படிமங்களாக தொகுக்கப்பட்டுள்ளது. அவற்றை இழப்பவர் பண்பாட்டை இழக்கிறார்.

மதத்தின் ஆழ்படிமங்கள் தொன்மங்களாக, குறியீடுகளாக, பல்வேறு வகை ஆசாரங்களாக நம்மிடம் உள்ளன. அவற்றை ‘மூடநம்பிக்கை’ என்று பின்தங்கிய அறிவுச்சூழலில் நின்றுகொண்டு நாம் சொல்லலாம். அமெரிக்க கல்விச்சூழலில் உயர்நிலைக் கல்வி பயிலும் ஒரு குழந்தை சொல்லாது. அவற்றை ஆழ்படிமங்கள், படிமங்கள் என காணவும் ஆராயவும் அவற்றின் மதிப்பை உணரவும் அவர்களால் இயலும்.

தமிழ்நிலத்தில் உருவான தனித்தன்மை கொண்ட மூன்று தத்துவப்பேரியக்கங்கள் உள்ளன. ஒருங்கிணைந்த தமிழகத்தில் உருவானது சங்கர அத்வைதம். தூய அறிவை அது இறையுருவென முன்னிறுத்துகிறது. அதை மறுத்து கூடவே விரிவாக்கி அன்பையும் வழிபடுதலையும் உள்ளடக்கி உருவானது விசிஷ்டாத்வைதம். அது சென்னையின் ஸ்ரீபெரும்புதூரிலும் ஸ்ரீரங்கத்திலும் உருவானது. தொல் தமிழ் தத்துவக்கொள்கைகளை காஷ்மீர சைவத்துடன் இணைத்து நிகழ்த்திய உரையாடலின் வழி உருவானது தமிழுக்கே உரிய சைவ சித்தாந்தம்.

இம்மூன்றையும் அவற்றின் உயர்நிலைகளை அடுத்த தலைமுறை தமிழ் அமெரிக்க இளைஞர்களுக்கு அளிக்க முடியுமெனில், அவர்களில் தத்துவம் மேல் ஆர்வம் கொண்டவர்கள் தங்களைப்பற்றிய பெருமிதத்தை அடைய முடியும். அம்மூன்றில் எதை அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள், எதை மறுக்கிறார்கள் என்பது அவர்களுடைய தேர்வாக அமையட்டும். அவர்கள் அவற்றை முழுமையாக மறுத்து வேறொன்றை உருவாக்குவார்கள் எனில் அது நம் வெற்றி. தத்துவத்தில் எந்த தரப்பும் தவறல்ல. எந்த தரப்பும் அழிவதில்லை. எந்த தரப்பும் மறுக்கப்படாததும் அல்ல.

இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து பிளேட்டோவின் கருத்துமுதல்வாதம் அதே விசையுடன் மானுட சிந்தனையில் நீடிப்பதை உணரும் ஒருவருக்கு சங்கரருடன் விவாதிக்க அறிய எவ்வளவோ வாய்ப்புகள் உள்ளன. சரியான பொருளில் தமிழின் மூன்று தத்துவங்களும் அமெரிக்காவில் உயர்கல்வி பற்றி எழும் தமிழ்க் குழந்தைகளின் முன்சென்று நிற்குமெனில் யார் அறிவார், அடுத்த தலைமுறையில் அத்தத்துவங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் சிந்தனைகள் அவர்களிடமிருந்து உருவாகக் கூடும். உலகிற்கு தமிழின் கொடையாகவும் தமிழுக்கு தன் சிந்தனை அடையாளமாகவும் அவை அமையக்கூடும்.

இன்று அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழ்க்குழந்தைகள் கிரேக்க, ரோமானிய, மறுமலர்ச்சிக்கால தத்துவ சிந்தனைகள் அறிமுகமாயிருக்கின்றன. அவர்களுக்கு தமிழ்த்தத்துவம் எவையும் பெயரளவுக்குக் கூட அறிமுகமல்ல. அவர்களில் ஆர்வத்தை உருவாக்கும் அளவுக்கு அவை அறிமுகப்படுத்தப்படவும் இல்லை. தத்துவம் என்றால் என்னவென்றே அறியாதவர்களின் தத்துப்பித்துவங்களே அவர்களுக்கு மேடையுரைகள் வழியாக அளிக்கப்படுகின்றன. தந்தையர்கள் தங்கள் முழுமுற்றான அறியாமையிலிருந்து உருவான பாமர நம்பிக்கைகளை அவர்களிடம் சொல்லி தமிழில் சிந்தனை ஒன்றுண்டா என்ற எண்ணத்தை அவர்களில் உருவாக்கியிருக்கிறார்கள். தாங்களும் கேலிக்குள்ளாகி தமிழ் மரபையும் கேலிப்பொருளாக்கிவிட்டிருக்கிறார்கள்.

இங்கே ஒன்றைக்குறிப்பிட வேண்டியிருக்கிறது 2017 ஆம் ஆண்டு தமிழில் உருவான தனித்தன்மை கொண்ட ஒரு தத்துவத்தின் ஆயிரம் ஆண்டு நிறைவு. சொன்னால்தான் பலருக்கு தெரியும், ராமானுஜரின் ஆயிரமாண்டு அது. ராமானுஜர் உருவாக்கியது என இரண்டு மரபுகளைச் சொல்லலாம். ஒன்று, இன்றும் நீடிக்கும் வைணவ சம்பிரதாய மரபு. இன்னொன்று விசிஷ்டாத்வைத தத்துவ மரபு.

வைணவச் சம்பிரதாய மரபுகள் இன்று பலவாறாக பிரிந்து தங்களுக்குள் பூசலிட்டுக்கொண்டு, வழிபாடாகவும் சடங்குகளாகவும் மூர்க்கமான நம்பிக்கைகளாகவும் மாறி ஒருபக்கம் கொந்தளிக்கின்றன. ராமானுஜரின் ஆயிரமாண்டு நிறைவை அனைவரும் சேர்ந்து ஒரு பெருவிழாவாக எடுக்கும் அளவுக்கு கூட அவர்களிடம் ஒற்றுமையோ உளவிரிவோ இல்லை.

அந்த குறுகிய வழிபாட்டு முறையை ,ஆசாரங்களை அப்படியே நமது அடுத்த தலைமுறைக்கு ஒருபோதும் கொடுக்கலாகாது. கொடுத்தால் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை. ஏற்றுக்கொண்டால் அவர்கள் தங்கள் சிந்தனையில் குறுகலையும் பின்னடைவையுமே அடைவார்கள். ஏனென்றால் அவை சென்ற நூற்றாண்டுகளுக்காக உருவாக்கப்பட்டவை. நவீன உலகுடன் தொடர்பற்றவை.

ஆனால் ராமானுஜரின் விசிஷ்டாத்வைத தத்துவம் ஒரு தத்துவமென, ஓர் இறையியலென, அடுத்த தலைமுறையிடம் கொடுக்கப்பட்டிருந்தால் படைப்பூக்கம் கொண்ட அமெரிக்கத் தமிழர்களின் தலைமுறைகள் அதில் உளம் படிந்திருந்தால் பெருநிகழ்வுகள் நிகழ்ந்திருக்கும். அவ்வாறு நிகழவில்லை.

தமிழகத்தில் கூட ராமானுஜரின் விசிஷ்டாத்வைத தத்துவத்தின் ஆயிரமாண்டு நிறைவுக்காக ஒரு சர்வதேச மாநாட்டை கூட்ட முடியவில்லை. ஒரு நண்பர் ஊக்கமளிக்க அதற்கான ஒரு முயற்சியில் நான் ஈடுபட்டபோது பலவகை வைணவர்களிடமிருந்து வந்த கசப்புகளும் எதிர்ப்புகளும் என்னை பின்னடையச் செய்தன. பணம் பிரச்சினை இல்லை, எல்லா தரப்பினரையும் திரட்ட முடியாது என்பதே சிக்கல். ஒருவர் செய்வதை இன்னொருவர் விரும்பவில்லை. ஒட்டுமொத்தமாக எவரும் எதுவும் செய்யவில்லை.

எண்ணிப்பாருங்கள், அமெரிக்கத் தலைநகரில் உலகின் முதன்மையான தத்துவ சிந்தனையாளர்கள், தத்துவத்தின் அத்தனை தரப்புகளையும் சேர்ந்த அறிஞர்கள் பங்கு கொள்ளும் ஒரு மாபெரும் சர்வதேச மாநாடு விசிஷ்டாத்வைத தத்துவத்தைப் பற்றி நிகழ்ந்திருந்ததென்றால் அது நம் ஒவ்வொரு குழந்தைகளின் உள்ளத்தில் உருவாக்கக்கூடிய பாதிப்பென்ன? அதன் நீண்டகால விளைவென்ன?

அந்த உளவிரிவுக்கும் கல்விக்கும் நிகராகுமா தமிழிலிருந்து சினிமா நடிகர்களை அழைத்துவந்து குத்தாட்டம் போடுவதும், மேடைப்பேச்சாளர்களை அழைத்துவந்து நாலாந்தர நகைச்சுவைக்கு சிரித்து மகிழ்வதும்? கூடவே தங்கள் ஆரம்பக்கல்வி பெறும் குழந்தைகளை அழைத்து வந்து ஆங்கில உச்சரிப்பில் திருக்குறளை ஒப்பித்தல், செலவேறிய பரதநாட்டிய உடையணிவிக்கச்செய்து கண்மையைத் தீற்றிக்கொண்டு கையைக்காலை ஆட்டுதல்  என அசட்டுக் கலைநிகழ்ச்சிகளில் ஈடுபடுவதுதான் நாம் செய்வது

ஜப்பானிய எழுத்தாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒன்றைச்சொன்னார். ஜப்பானிய மொழியிலிருந்து மொழியாக்கம் செய்யப்படும் எந்தப்படைப்புக்கும் அமெரிக்காவில் ஒரு குறைந்த பட்ச பிரசுரவாய்ப்பும் விற்பனையும் உள்ளது. ஏனெனில் அமெரிக்காவில் குடியேறிய ஜப்பானிய இனத்தவரின் அடுத்த தலைமுறையினர் ஆங்கிலத்தில் ஜப்பானிய வாழ்க்கையைப் படிக்க விரும்புகிறார்கள். அவர்களுக்கு ஜப்பானிய மொழி தெரியாது. அமெரிக்கப் பண்பாட்டின் ஒரு பகுதியாக மாறிவிட்டவர்கள் அவர்கள்.

ஆகவே எந்த ஜப்பானிய நூலுக்கும் குறைந்தது இருபத்தைந்தாயிரம் பிரதிகள் விற்பனையை அமெரிக்க -ஜப்பானிய சமுதாயமே உறுதிப்படுத்துகிறது. ஆகவே எந்த ஒரு பதிப்பகமும் ஒரு ஜப்பானிய நூலை நம்பி வெளியிட முடியும். மேலதிகமாக ஒரு இருபத்தைந்தாயிரம் பிரதிகளை ஆங்கிலேய சமூகத்திடம் அவர்கள் விற்றார்கள் என்றால் அந்த நூல் பெருவெற்றி அடைந்தது என்று அர்த்தம். முரகாமி உலக எழுத்தாளராக அறியப்படுவது இந்த அடித்தளத்தின் மீதுதான்.

இவ்வாறு அத்தனை ஜப்பானிய நூல்களுக்கும் ஓர் அடிப்படை விற்பனை இருப்பதனால் ஆண்டுக்கு ஒரு சில நூறு ஜப்பானிய நூல்கள் ஆங்கிலத்தில் வருகின்றன. ஒரு ஜப்பானிய இளைஞன் ஜப்பானின் அனைத்து பகுதிகளைப்பற்றியும் மிகச்சிறந்த முறையில் பயில்வதற்கான இலக்கிய-பண்பாட்டு நூல்கள் ஆங்கிலத்தில் குவிந்து கிடக்கின்றன.

ஓர் அமெரிக்க நூலகத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஜப்பானிய பண்பாட்டு நூல்களும் படைப்பு நூல்களும் ஒரு பகுதியையே நிறைத்திருக்கின்றன. அதைக்கண்ணுறும் ஜப்பானிய இளைஞனுக்கு ’நான் ஒரு ஜப்பானியன்’ என்று சொல்வதில் பெருமை இயல்பாகவே அமையும். அது அவனுக்கு தனி அடையாளத்தை அளிக்கும். விலக்கத்தை அல்ல, மாறாக அமெரிக்கன் என்னும் அடையாளத்துக்கு மேலதிகமாக ஒரு அடையாளத்தை அவன் அடைவான்.

அமெரிக்கன் என்னும் அடையாளத்தை விட்டுவிட்டு தமிழன் என்ற அடையாளத்தை நம் குழந்தைகள் அடைய முடியாது. கூடவும் கூடாது. அமெரிக்கன் என்ற அடையாளத்துக்கு மேலதிகமாக ஒரு அடையாளத்தை, தமிழன் என்று தன்னுணர்வை நம் குழந்தைகள் அடையவேண்டுமெனில் அத்தகைய ஒரு பெருமித வரலாறு அவர்களுக்கு வேண்டும்.

இன்று தமிழிலிருந்து ஆங்கிலத்தில் வெளிவந்த நூல்களே மிகக்குறைவு. அவற்றில் நல்ல மொழியாக்கங்கள் மிக அரிது. அவற்றில் எவ்வகையிலேனும் இலக்கியரீதியாகப் பொருட்படுத்தக்கூடியவை அரிதினும் அரிது. அந்நூல்களும் எந்த வகையிலும் அமெரிக்க ஊடகங்களால் கவனிக்கப்படவில்லை. அமெரிக்க ஹிந்திச் சமூகம் இன்று தங்கள் நூல்களை வாங்கத் தொடங்கியிருக்கிறது. அதுவே கீதாஞ்சலி போன்ற ஒருவரின் வெற்றி. தமிழர்கள் இன்னும் புத்தகங்களை பற்றி யோசிக்கவே இல்லை.

எண்ணிப்பாருங்கள், தமிழிலிருந்து எந்தநூல் மொழிபெயர்க்கப்பட்டு அமெரிக்காவுக்கு வந்தாலும் ஐந்தாயிரம் பிரதிகள் அல்லது பத்தாயிரம் பிரதிகள் அமெரிக்கத் தமிழ்ச் சமுதாயத்தால் உறுதியாக வாங்கப்படும் என்னும் சூழல் அங்கிருந்தால், அடுத்த பத்தாண்டுகளில் சிலநூறு தமிழ் நூல்கள் ஆங்கிலத்தில் கிடைக்கும். அந்த நூல்த்தொகுப்பு தன்னியல்பாகவே அடுத்த தலைமுறைக்கு முன் தமிழ்ப் பண்பாட்டை சரியான முறையில் அறிமுகப்படுத்திவிடும். அவ்வண்ணம் நிகழ்கிறதா என்று பாருங்கள். அடுத்த இருபதாண்டுகளில் நிகழ வாய்ப்பாவது உள்ளதா?

நேர் மாறாக, எழுத்தாளர்களைத் தூற்றும் ஒரு பெருங்கூட்டம் அல்லவா அமெரிக்காவில் தமிழ்க்கூச்சலுடன் திரண்டுள்ளது? அரசியல்வாதிகளையும் நடிகர்களையும் கொண்டாடுபவர்கள், எவ்வகையிலேனும் தமிழுக்கு பங்களிப்பாற்றுபவர்களில் அறியவந்த அனைவரையும் அவர்கள் தங்கள் கட்சியரசியலுக்கு ஒவ்வாதவர்கள் என்றால் அவமதிக்கிறார்கள். எஞ்சியோரை அவர்கள் அறிவதே இல்லை.

இதில் ஒரு வேடிக்கை உண்டு. அமெரிக்காவில் பலரிடம் பேசும்போது தமிழில் தரமான நூல்கள் இல்லை, ஆகவேதான் தரமான ஆங்கில நூல்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துகிறோம் என்று அவர்கள் சொல்வதுண்டு. உள்ளத்தில் பெருகி எழும் கசப்பையும் வசைச்சொல்லையும் அடக்கிக்கொண்டு, மெல்லிய கேலியுடன், ‘அப்படி நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்த ஆங்கில நூல் எது?’ என்று கேட்டால் தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தில் உள்ள ஒரு சர்வசாதாரணமான பரப்பியல் நூலைச் சொல்வார்கள். ‘சரி, தமிழில் எந்த நூலை படித்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டால் எந்த நூலையுமே கேள்விப்பட்டும் இருக்க மாட்டார்கள்.

இது ஒரு பசப்பு. தன் குழந்தை ஆங்கில மையப்பண்பாட்டில், பரப்பு பண்பாட்டில் சென்று அமையவேண்டும் ,வெற்றி பெறவேண்டும் என்ற விழைவு. அதற்காக மட்டுமே உழைக்கிறார்கள். ஆனால் தாங்கள் தமிழின் எதிர்காலத்திற்காக, தங்கள் குழந்தைகள் தமிழர்கள் என்ற அடையாளம் பேணப்படவேண்டும் என்று கவலைகொண்டிருப்பதாக ஒரு பாவனையை நடிக்கிறார்கள். ஒரு எழுத்தாளன் முன் பாவனைகள் நடக்காது. அவனது பாவனைகளை கடந்து பார்க்கும் திறனே ஒரு எழுத்தாளனை உருவாக்குகிறது. அவன் முன் ஒருபோதும் தன்னை புனைந்து முன் வைக்கக்கூடாது என்று கூட இவர்களுக்கு தெரிவதில்லை. ஏனெனில் இவர்கள் எழுத்தாளனை அறியமாட்டார்கள்.

எதிர்காலத்தில் தமிழ் அமெரிக்காவில் வாழவேண்டுமா என்ற கேள்விக்கான விடை இது. தமிழ் மொழியும் பண்பாடும் அங்குள்ள குழந்தைகளின் அமெரிக்க அடையாளத்தை தவிர்த்து வேறு ஒரு அடையாளமாக, ஒரு மாற்று அடையாளமாக நம் குழந்தைகளிடம் இருக்க முடியாது. அமெரிக்க அடையாளமே அவர்களை வெல்லச் செய்யும். அந்த அமெரிக்க அடையாளத்த்துக்கு மேலதிக அடையாளமாக ஒரு தனித்தகுதியாக தமிழ் அடையாளம் நீடிக்க வேண்டும், நீடிக்க முடியும். அனைவரிலும் அவ்வாறு நிகழமுடியாது. சிறுபான்மையினரிடமே அந்த தேடல் இருக்கும். ஆனால் அந்த எண்ணிக்கை எவ்வளவு கூடுகிறதோ அவ்வளவு நல்லது

அவ்வாறு அடுத்த தலைமுறையில் அடையாளம்  தேடிவருபவர்களிடம் தமிழும், பண்பாடும் நீடிக்க வேண்டுமெனில் தமிழின் மெய்யான வெற்றிகள், சிறப்புகள் அடையாளப்படுத்தப்படவேண்டும். அதைச் செய்ய அறிஞர்களால் தான் முடியுமே ஒழிய தங்களைத் தாங்களே அறிஞர்களாக முன் வைக்கக்கூடிய எளிய தொழிற்நுட்பவியலாளர்களால் இயலாது. அறிஞர்களை நம்புங்கள். அறிஞர் சொற்களை தலைக்கொள்ளுங்கள். அமெரிக்கர்களுக்கு கூறும் முதல் அறிவுரை இதுவே.

*

இக்கட்டுரையில் உள்ள எண்ணங்களை பலமுறை பலரிடம் சொன்னதுண்டு. எழுதும் தகுதி எனக்கில்லை என தோன்றியது, ஏனென்றால் அப்போது நான் எதையும் இதன்பொருட்டு  செய்ததில்லை. இப்போது தமிழ் விக்கி என்னும் மாபெரும் கனவு நனவாகியுள்ளது. இது வளரும். ஆங்கிலத்தில் முழுமையாகவும் சரியாகவும் தமிழ்ப் பண்பாட்டியக்கமும், அறிவியக்கமும் தமிழ் விக்கி வழியாக அறிமுகப்படுத்தப்படும். உருவாகிவரும் அமெரிக்க தமிழ் இளைஞன் பெருமிதம் அடையத்தக்க ஒரு வரலாறு இப்பக்கங்களில் இருக்கும். அவர்களுக்கு நாம் அளிக்கவில்லை என்று சொல்லநேராது. இவற்றை கைக்கொள்ளும் அளவுக்கு அவர்கள் வளர்க்கப்படுவார்களா, அதற்கான சூழல் அமையுமா என ஊழ் தீர்மானிக்கட்டும்.

(நிறைவு)

தாமஸ் புரூய்க்ஸ்மா
பர்ட்டன் ஸ்டெயின்
அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி
மார்த்தா ஆன் செல்பி

பிரெண்டா பெக்

 

முந்தைய கட்டுரைபூண்டி பொன்னிநாதர் ஆலயம்
அடுத்த கட்டுரைமுகம் விருது, அன்புராஜ்