நமது அமெரிக்கக் குழந்தைகள்-2

தமிழ் விக்கி இணையப்பக்கம்

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1

நம் அமெரிக்க இந்தியக் குழந்தைகள் உலகெங்கும் இருந்து அமெரிக்காவில் குடியேறிய வெவ்வேறு இனத்துக் குழந்தைகளைப்போல தங்கள் தனியடையாளத்தை இழந்து அமெரிக்க மையப்பண்பாட்டுடன் இணைய முயல்கிறார்கள் என்றேன். அவர்கள் முழுமையாகவே அவ்வாறு ஆவார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆகவே அவர்களை எப்படி தமிழ்ப்படுத்துவது என்கிற கேள்வியை நான் எதிர்கொள்வதில்லை.

அவ்வண்ணம் நம் குழந்தைகள் அமெரிக்கர்களாக ஆவதை ஓர் எதிர்மறை அம்சமாக நான் நினைக்கவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். அவ்வாறு அவர்கள் ஆவதை தவிர்ப்பதற்காக நாமெல்லாம் இந்தியாவில், தமிழ்நாட்டில் சுருங்கிக்கொள்ள வேண்டும் என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன்.  உலகை வெல்வது என்பது எந்த இனத்துக்கும் முன்னாலுள்ள அறைகூவல். ரிக்வேதம் உலகை சென்று நிறையுங்கள் என்றே ஒவ்வொரு குலத்துக்கும் ஆணையிடுகிறது.

நம் அமெரிக்கக் குழந்தைகள் நல்ல அமெரிக்கர்களாக ஆகட்டும். அமெரிக்காவை வென்று ஆளட்டும். கூடவே ஒன்றை சொல்ல விரும்புகிறேன். அவர்களுக்கு எதிர்காலத்தில் தமிழ் அடையாளம் ஒன்று தேவைப்படலாம். இந்துமத அடையாளம் தேவைப்படலாம். சைவமோ வைணவமோ சாக்தமோ. அல்லது பௌத்த, சமண அடையாளங்களைக்கூட அவர்கள் தேடலாம். அப்போது அவர்களுக்கு அது முறையாகக் கிடைக்கும்படி நாம் செய்துள்ளோமா?

ஏன் அந்த தேவை எழுகிறது? ஒரு குறிப்பிட்ட அகவை வரை தமிழ்த்தன்மையை இழந்து அமெரிக்க மையப்பண்பாட்டில் பொருந்தி, அமெரிக்க அடையாளத்தை அடைய நம் குழந்தைகள் முயல்கிறார்கள். ஆனால் ஒருபோதும் அவர்களால் அதில் முழுமையான வெற்றியை அடைய முடியாது. ஒவ்வொரு தருணத்திலும் தொண்ணூறு சதவீதத்தை அடைந்த பிறகு எஞ்சும் பத்து சதவீதம் எய்தவே முடியாத பெருந்தொலைவு என்பதை அவர்கள் உணர்வார்கள். இது எல்லா ‘அயல்’ இனங்களும் உணர்வதுதான்.

நம் குழந்தைகள் ஓர் எல்லையில் அமெரிக்கப் பண்பாட்டில் அவர்களுக்கு நிபந்தனையிடப்பட்ட இடம் மட்டுமே உள்ளது என உணர்வார்கள். ஒரு சிறு துளி மிஞ்சியிருக்கும். உச்சத்தில் பராக் ஒபாமா உணர்வதையே நானும் உத்தேசிக்கிறேன் என்று கொள்ளுங்கள். அதை கற்பனைசெய்து புரிந்துகொள்ள உங்களால் முடியாவிட்டால் விடுங்கள், இக்கட்டுரை உங்களுக்கு அல்ல.

வளர்ந்தபின்னர் எல்லைக்குட்பட்டதும் நிபந்தனைகொண்டதுமான அந்த அமெரிக்க அடையாளத்தை ஏற்றுக்கொண்டு , அதை தன் அகமாகவும் முகமாகவும் இயல்பாகச் சூடிக்கொண்டு,  அதன் எளிய உலகியல் சௌகரியங்களில் ஈடுபட்டு வாழப்போகிறவர்கள்தான் நம் குழந்தைகளில் மிகப்பெரும்பாலானவர்கள். அவர்களுக்கு ஒரு மனக்குறையும் இருக்காது. அவர்கள் தங்களை வென்றவர்கள் என்றே எண்ணிக்கொள்வார்கள்.  நான் பேசுவது அவர்களைப் பற்றி அல்ல.

ஆனால் ஒரு பத்து சதவீதக் குழந்தைகள் ஒருபடி மேலான நுண்ணுணர்வு கொண்டவர்களாக இருக்கலாம். மேலும் கூரான தன்னுணர்வு அவர்களிடமிருக்கலாம். கலைஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் அவர்களிடமிருந்தே வருவார்கள். அவர்கள் உள்ளத்தால் வாழ்பவர்கள் அல்ல, ஆழுள்ளத்தால் அல்லது நனவிலியால் வாழ்பவர்கள். அவர்கள் சமகாலத்தில் திளைப்பவர்கள் அல்ல, எதிர்காலத்தை கனவு காண்பவர்கள். அவர்களின் மகிழ்ச்சி சாதனை எதுவும் உலகியல் சார்ந்தவையாக இருக்காது. அவர்கள் இலக்காக்குவது அறிவுத்தளத்தில், கலைத்தளத்தில், ஆன்மிகத்தளத்தில் இருக்கும். அங்கு மட்டுமே அவர்கள் நிறைவடைவார்கள். அந்த பத்துசதவீதம் பேரைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்.

அந்த படைப்பூக்கம் கொண்ட எதிர்கால அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகள்  தங்களுக்கு என ஒரு கலாசாரத் தனியடையாளம் இருக்கவேண்டும் என்று விரும்பலாம். தங்கள் ஆன்மிகத்தேடலுக்கு ஒரு விரிந்த, ஆழ்ந்த அகவெளி இருக்கவேண்டும் என எண்ணலாம். அவ்வண்ணம் வேர்களை தேடிச்சென்ற ஐரோப்பிய வம்சாவளியினர், ஆப்ரிக்க வம்சாவளியினர், ஜப்பானிய வம்சாவளியினர் அமெரிக்காவில் ஏராளமாக உள்ளனர். அவர்களில் பலர் பலதுறைகளில் முன்னோடிகள், சாதனையாளர்கள். தமிழ்க்குழந்தைகளில் இருந்தும் அத்தகையோர் சிலர் உருவாகலாம். இப்போது வரை அப்படி எவரையும் நான் காணவில்லை, எதிர்காலத்தில் வரலாம்.

ஆனால் இது குழந்தைகளின் வளர்ச்சியின் தொடக்கக் கட்டத்தில் நிகழ்வது அல்ல. அடையாளம் காணத்தக்கதும் அல்ல. அவர்களின் ஆளுமை முதிர்ந்தபின், உலகியலின் இயல்பான வெற்றிகள் எல்லாவற்றையும் சாதாரணமாகக் காணும் நிலையை அடைந்தபின், இந்தத் தேவை உருவாகிறது. இப்படிச் சொல்கிறேன், ஒரு குழந்தை டெஸ்லா காரையோ, செஸ்டோனி காலணிகளையோ கண்டு பரவசம் அடையாத நிலையை அடைந்தபின் உருவாகும் தேடல் இது. ராக் ஸ்டார் அல்லது சூப்பர் சி.இ.ஓ ஆகிவிடவேண்டும் என்ற கனவு அர்த்தமற்றதாக ஆனபின் உருவாவது.

அது அடிப்படையில் நான் யார் என்ற கேள்வி. அக்கேள்வி எழுந்தபின் தன் வேர்சார்ந்த அடையாளம் என்ன என்ற தேடல் எழலாம். மீண்டும் சொல்கிறேன், இதத்தேவை அனைவருக்கும் உருவாகக்கூடியது அல்ல. சாதாரணமாக மக்களில் 90 சதவீதம் பேருக்கும் தான் யார் என்னும் அடையாளம் என்பது அவர்கள் வாழும் சூழலில் இருந்து அவர்கள் உருவாக்கிக் கொள்வது மட்டுமே. சூழல் அவர்களுக்கு அளிப்பது மட்டுமே. சூழலில் புழங்குவதற்கான ஒரு நாணயம் மட்டுமே அது. நான் பேசிக்கொண்டிருப்பது தன்னுள் நோக்கி அவ்வினாவை எழுப்பும் மிகச்சிறுபான்மையினர் பற்றி மட்டும்.

அந்நிலையில் ’நான் அடிப்படையில் ஒரு தமிழன்’ என்று ஒரு படித்த அமெரிக்க இளைஞன் சொல்ல விரும்பலாம். உலகியல் வெற்றியை எல்லாம் கடந்து அவ்வாறு ஓர் அடையாளம் அவனுக்கு தேவைப்படலாம். அல்லது அவ்வண்ணம் ஒரு தவிப்பை அவன் ஆழமாக உணரநேரலாம். இது பல களங்களில் நிகழும் என்றாலும் நான் நன்றாக அறிந்த இரு களங்களைச் சொல்கிறேன். ஒன்று, ஆன்மிகம். இன்னொன்று இலக்கியம்.

ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் ஆழ்படிமங்களும் அவற்றின் நுண்ணிய பெருக்கமும்தான் அடிப்படையான செயல்பாடுகள். ஆழ்படிமங்கள் என்பவை ஓரிரு தலைமுறைகளில் உருவாகி வருபவை அல்ல. அவை பழங்குடி வாழ்க்கையில் முளைத்து, வெவ்வேறு பண்பாட்டுக் காலகட்டங்கள் வழியாக வளர்ந்து, மொழியிலும் மதத்திலும் உறைந்து, நம்மை வந்தடைபவை. நாமறியாமலேயே நம் ஆழத்தில் உறைபவை. நம் ஆழ்மனம் என்றும் நனவிலி என்றும் திகழ்பவை.

நான் ஒருவருக்கு ஆன்மிகப் பயிற்சி அளிப்பேன் என்றால் அவரிடம் ‘கலாச்சாரரீதியாக  நீ யார்?’ என்றுதான் முதலில் கேட்பேன். அவருடைய ஆயிரம் தலைமுறை வேர் என்ன என்று பார்ப்பேன். ஓர் ஐரோப்பியனின் ஆழத்தில் இருந்து தோர் அல்லது டயானாவை பிரிக்கமுடியாது. ஓர் ஆப்ரிக்கனின் ஆழத்திலிருந்து டம்பல்லாவை பிரிக்க முடியாது. ஊழ்கத்தின் ஒவ்வொரு கணத்திலும் அவை எழுந்து வந்துகொண்டிருக்கும்.

இலக்கியம் சமகாலம் சார்ந்தது அல்ல. அது சமகாலத்தைப் பேசும், ஆனால் அது காலமில்லா வெளி ஒன்றை உருவாக்குகிறது. இறந்தகாலத்தை நிகழ்காலம் வழியாக எதிர்காலம் வரை கொண்டுசெல்லும் ஒரு செயல்பாட்டையே நாம் இலக்கியம் என்கிறோம். இறந்தகாலத்தின் ஆழமே இலக்கியத்தின் ஆழம். எதிர்காலத்தின் மீது கவியும் இறந்தகாலமே இலக்கியத்தின் என்றுமுள்ள கனவு.

ஆன்மிகம் காலமின்மை கொண்டது. ஓர் உயிர் தன் வளர்சிதைப் பரிமாணத்தையே காலமெனக் கொண்டுள்ளது. அந்த வளர்சிதைப் பரிணாமம் இல்லாமல் உயிரின் சாராம்சம் என மாறாமல் உறைவதென்ன என உணர்வதே ஆன்மிகம்.

அவ்வாறு ஒரு தமிழ் இளைஞன் ‘நான் தமிழன்’ சொல்ல விரும்பும்போது அவன் அவ்வாறு பெருமிதமாகச் சொல்லத்தக்க ஒரு தமிழ்ப் பண்பாட்டை அவர்களுக்கு அளித்திருக்கிறோமா என்று அமெரிக்க தமிழர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழ்ப்பண்பாட்டின் ஆழத்தை, முழுமையை அவனுக்கு நாம் கையளிக்கிறோமா?

சற்றும் இல்லை என்பதே கசப்பூட்டும் உண்மை. நாம் அளிப்பது நமக்கு பண்பாடு எனத் தோன்றும் சில பொதுப்பரப்பு அரசியலையும் களியாட்டுகளையும் மட்டுமே. நாளை தமிழ்ப்பண்பாடு தேடி நம் குழந்தைகளில் ஒருவன் வந்தால் நாம் அளித்திருப்பவற்றைப் பற்றி அவன் எண்ணிக் கூசவே செய்வான்.

தமிழ்ப் பண்பாடு என்று தமிழகத்தின் எளிய கட்சியரசியலையும், சாதியரசியலையும் அதன் முடிவில்லா காழ்ப்புகளையும் மட்டுமே நாம் அமெரிக்க மண்ணில் அறிமுகம் செய்கிறோம். தமிழகத்திலுள்ள கேளிக்கை சார்ந்த பரப்புக்கலைகளை, தமிழகத்தின் தரமற்ற மேடைக்கலாச்சாரத்தை கொண்டுசென்று அமெரிக்க மண்ணில் நிறுத்துவதையே அங்குள்ள தமிழர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் செய்து வருகிறார்கள்.

தங்கள் குழந்தைகளுக்கு உணவில், கல்வியில், மிகச்சிறந்ததை அளிக்க வேண்டும் என்று விரும்பும் அதே பெற்றோர் அக்குழந்தைகளுக்கு தமிழ்ப்பண்பாட்டில் மிகத்தாழ்ந்த ஒரு தளத்தை அளிக்கிறார்கள். அழுகிப்போன உணவை ஊட்டுவதுபோல. ஏனென்றால் ஊட்டுபர்களுக்கு அதுதான் பிடித்திருக்கிறது. ஏன் பிடித்திருக்கிறது என்றால் அதற்கு அப்பால் அவர்களுக்கு எதுவும் தெரியாது. ஏன் தெரியாது என்றால் அவர்கள் இளமைமுதல் வெறும் தொழில்நுட்பக் கல்வி மட்டுமே பெற்று அமெரிக்காவுக்காகத் தயாரானவர்கள்.

அமெரிக்காவிலிருக்கும் தமிழர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் அதிகபட்சம் பத்தாம் வகுப்பு வரை பள்ளியில் தமிழ் பயின்றவர்கள். அவர்களில் தமிழகப் பண்பாட்டின் ஏதேனும் தளம் சார்ந்த ஓர் எளிய அடிப்படைப் பயிற்சி உடையவர்கள் அரிதினும் அரிதானவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் எட்டாம் வகுப்பு முதல் மிகக்கடுமையான தொழிற்பயிற்சிக்கல்விக்குச் சென்றவர்கள். பலவகையான கடும் கல்விப்பயிற்சிகள் வழியாகவே தேர்வுகளை வென்று, தொழிலை அடைந்து அமெரிக்கா சென்று வேரூன்றியவர்கள். இங்குள்ள ’அமெரிக்கப் போட்டி’ அத்தகையது.

அவர்கள் பணிகிடைத்துச் சென்றபின் அங்கும் கடுமையாக போராடி தொழிற்சூழலில் நிலைகொள்ள வேண்டியிருக்கிறது. அங்கே ஒரு குடும்பத்தை உருவாக்கவேண்டியிருக்கிறது. அதன்பின் சற்றே மூச்சுவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக கலையிலக்கியம் பண்பாடு என திரும்புபவர்கள் மிகமிகச் சிலரே. அமெரிக்கத் தமிழ் நண்பர்கள் திரும்பத் திரும்பச் சொல்வது ஒன்று உண்டு. அமெரிக்கத் தமிழர்களில் அரைசதவீதம்பேர் கூட எதையாவது வாசிப்பவர்கள் அல்ல. அதாவது ஆங்கிலத்திலோ தமிழிலோ பரப்பிலக்கியம் படிப்பவர்களே அவ்வளவுபேர்தான். இந்தியாவிலுள்ள படித்தவர்களிடையே வாசிப்பவர்களின் விகிதாச்சாரத்தைவிட அமெரிக்கத் தமிழர்களிடையே அந்த விகிதாச்சாரம் மிகக்குறைவு.

அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எந்தவகையான தமிழ்க்கலாச்சாரத்தை அளிக்க முடியும்? அவர்கள் அறிந்ததெல்லாம் ஊடகம் வழியாக வந்துசேரும் அரசியலும் கேளிக்கையும்தான். அவற்றை அவர்கள் குழந்தைகளுக்கு அளிக்கிறார்கள். பெரும் கவலையுடன் அக்குழந்தைகளுக்கு தமிழ் எழுத்துக்களையும் சொற்களையும் மூளைக்குள் திணிக்கிறார்கள். அவை எந்த வகையில் அக்குழந்தைக்கு உதவியானவை? அக்குழந்தைகளில் ஒருசாரார் நாளை தன் தமிழ் அடையாளத்தை தேடினால் அவர்கள் வந்துசேர்வது இந்த சில்லறை அரசியலுக்கும் சினிமாவுக்கும்தானே? அமெரிக்காவின் நவீனப் பண்பாட்டில் முதிர்ந்து, அதற்கப்பால் என தேடிவரும் அக்குழந்தைகளுக்கு இவை அருவருப்பை அன்றி எதை உருவாக்கும்?

அமெரிக்கத் தமிழ்ப்பெற்றோர் ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். அவர்களின் பிள்ளைகள் உலகின் மிகச்சிறந்த கல்விமுறை ஒன்றில் பயில்கிறார்கள். கலாச்சாரக் கல்வியையும் தற்சிந்தனையையும் அடிப்படையாகக் கொண்ட கல்விமுறை அது. நேர் மாறாக, இந்தியப்பெற்றோர் மிகமிகப் பின்தங்கிய ஒரு கல்விமுறையில், பலவகையிலும் சீரழிந்து வெறும் சம்பிரதாயமாக மட்டுமே ஆகிவிட்ட கல்வியமைப்புகளில் இருந்து,  வெறும் தொழிற்கல்வி மட்டுமே பெற்று அங்கே சென்றவர்கள். எந்தவகையான பண்பாட்டு அறிதல்களும் இல்லாதவர்கள்.

ஒரு பத்துபக்கம் சொந்தமாக வாசித்து புரிந்துகொள்ளவோ, ஒரு இரண்டு பக்கம் தன் சிந்தனைகளை எழுதிக்காட்டவோ தெரியாதவர்களே அமெரிக்கப் பெற்றோரில் 90 சதவீதம் பேரும் என்பதே உண்மை. அதற்குச்  சான்று, அந்தப்பெற்றோரிலேயே ‘எலைட்’ என்பவர்கள் சமூக ஊடகங்களில் எழுதும் கருத்துக்களும், அவற்றிலுள்ள மொழிநடையும். ஒருவகை கலாச்சாரத் தற்குறிகள் தமிழ்ப்பெற்றோர். அவர்கள் பிறந்து வளர்ந்த ஊர் பற்றி ஒரு பத்துநிமிடம் சரியான தகவல்களுடன் பேசத்தெரியாதவர்கள்.

(இந்தக் கட்டுரையையே அந்த 90 சதவீதம்பேரால் படிக்க முடியாது. அவர்களுக்கு தமிழில் 300 சொற்கள் கொண்ட முகநூல் பதிவுகளேகூட படிக்க நீளமானவை. ஆங்கிலத்தில் எளிய மொழி கொண்ட, 100 நூறுவார்த்தைக் குறிப்புகளே அவர்களின் எல்லை. நான் எழுதுவது அவர்களில் எஞ்சிய அந்த பத்துசதவீதம் பேருக்காக. அவர்களிலேயே ஓர் ஐந்தாயிரம் பேர் இதைப் படித்தாலே வெற்றிதான்.)

அத்தகைய பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ‘சென்றடைய’ வேண்டும். அதற்காக கொஞ்சம் உழைக்கவேண்டும். கொஞ்சம் அசலாக வாசிக்கவேண்டும். கொஞ்சம் தங்களை மேம்படுத்திக்கொண்டே ஆகவேண்டும். முகநூலில் வாசிப்பதை, வாட்ஸப் வழியாகத் தெரிந்ததை அறிவு என நம்பி வாழும் நடுத்தரவர்க்கப் பேதமையில் இருந்து அவர்கள் வெளிவந்தே ஆகவேண்டும். அறிவுத்தளத்தில், இலக்கியத்தில், என்ன நடக்கிறதென்று தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

மாறாக தமிழ்ச்சங்க குழு அரசியல், பட்டிமன்ற ரசனை, தமிழ்சினிமா கொண்டாட்டங்கள், மாரியம்மன் கூழூற்றல், வெங்கடாசலபதி லட்டு, ஆண்டோடாண்டு ஃபெட்னாவில் அசட்டுக் கொண்டாட்டங்கள் என வாழ்ந்தால் உங்கள் குழந்தைகள் உங்களை ஒரு பொருட்டாக எண்ணமாட்டார்கள். அவர்கள் உங்களிடமிருந்து தொலைந்தே போவார்கள்.

அமெரிக்காவில் தமிழர்கள் பல பொது அமைப்புகளை உருவாக்கியிருக்கிறார்கள். தமிழ்ச்சங்கங்கள், பண்பாட்டு அமைப்புகள். ஆனால் அவற்றின் மிகப்பெரிய சிக்கல் அவற்றை முன்னின்று நடத்துபவர்களும் இதேபோல தொழில்நுட்பக் கல்வி கற்று, எந்தவகையான பண்பாட்டுக் கல்வியும் பெறாதவர்கள்தான் என்பதுதான்.

தொழிற்கல்வி என்பது எந்த வகையிலும் பண்பாட்டுக்கல்வி அல்ல என்பதை திரும்பத் திரும்ப தமிழ்ச் சமுதாயத்துக்கு சொல்ல வேண்டியிருக்கிறது. உலகில் எங்குமே பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்வியில் உயர்தகுதி கொண்ட ஒருவர் ’கல்விமான்’ என கருதப்படுவதில்லை. அறிஞர் என ஏற்கப்படுவதில்லை. அவர் திறனாளர் மட்டுமே. அவருடைய துறையில் அவருடைய சாதனை என்ன என்றே பார்க்கப்படுகிறது. கல்வி என்பது ஒட்டுமொத்தத் தன்மை கொண்டது. பண்பாட்டுக் கல்வி என்பது முற்றிலும் வேறு.

தமிழர்களாகிய நாம் நம் ஆழ்ந்த தாழ்வுணர்வால் ஒருவர் தொழிற்கல்வி கற்று தேர்ந்தாலே அவரை அறிஞர் என எண்ணுகிறோம். காரணம், வேறு எந்த அறிஞரை விடவும் தொழிற்கல்வி கற்றவருக்கு ஊதியம் அதிகம். நம் நடுத்தரவர்க்க உளவியலின் கணிப்பில் ஒருவரின் வருமானமே அவருடைய தகுதியை தீர்மானிக்கிறது. கசப்பூட்டுவது என்னவென்றால் தொழிற்கல்வி கற்றவரே தன்னை அவ்வாறு ஓர் அறிஞராக கற்பனைசெய்துகொண்டு அறிஞர்களை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வந்து நிற்பதுதான். விளைவாக மெய்யான அறிவுத்தளத்தில் தாங்கள் அவமானப்படுவதுகூட தெரியாத அளவுக்கு இந்த தொழில்நுட்பர்கள் அப்பாவிகளாகவும் இருக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் பாஸ்டனில் ஒருவர் என்னுடைய சந்திப்புக்கு வந்து, இலக்கியம் சார்ந்து மிக அடிப்படையான விஷயங்கள் கூடத் தெரிந்துகொள்ளாமல் உளறித்தள்ளி, என்னிடம் கண்டனத்தை பெற்றுக்கொண்டார். பொறுத்துப்பார்த்து, தாளவே முடியாமல்தான் நான் அவரிடம் சொன்னேன். “அமெரிக்காவில் இருக்கிறீர்கள். இங்குள்ள அறிவுச்சூழலின் நெறி என்ன என்று கொஞ்சமாவது தெரிந்துகொள்ளக்கூடாதா? ஒரு கூட்டத்துக்கு வருவதற்கு முன் விக்கிபீடியாவிலாவது அது என்ன, அங்கே பேசுபவர் யார் என்று தெரிந்துகொள்ளக் கூடாதா? கொஞ்சம்கூட தெரியாத ஒரு களத்தில் வந்து அமர்கையில் கொஞ்சம் காதைக்கொடுத்து கேட்போம் என்றுகூட அமெரிக்க அறிவியக்கத்தில் இருந்து கற்றுக்கொள்ளக்கூடாதா?”

நான் வெளியே வந்த போது அவருடைய மனைவி சீற்றத்துடன் என்னிடம் வந்து “அவரை யார் என்று நினைத்தீர்கள்? அவர் அமெரிக்காவின் மிகப்பெரிய அறுவை சிகிச்சை நிபுணர்…” என்றார். நான் சொன்னேன். “அவர் ஓர் அறுவைசிகிச்சை நிபுணர் தானே? நான் அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தால் அவருக்கு உரிய ஊதியம் கொடுத்து அமர்த்திக்கொள்கிறேன். அறிஞர் சபையில் அவருக்கு என்ன வேலை?”

பண்பாட்டு அறிவு என்பது தொழில்நுட்ப அறிவுக்கு முற்றிலும் வேறானது.  ஓர் அறுவை சிகிச்சை நிபுணர் என்பவர் தொழில்துறை வல்லுநர் மட்டுமே. ஒரு பொறியியலாளர், ஒரு கணக்கியலாளர், ஒரு கணிப்பொறி நிரல் எழுத்தாளர், ஒரு மருத்துவர் எந்த வகையிலும் அறிவியக்கவாதி அல்ல. அறிவியக்கத்தின் அடிப்படைகள் கூட அவர்களுக்குத் தெரிந்திருக்காமல் இருக்கவே வாய்ப்புகள் மிகுதி.

ஏனெனில் தொழிற்கல்விக்கு ஒருவர் இன்று ஒருவர்  தன் நேரத்தில் பெரும்பகுதியை அளிக்கவேண்டியிருக்கிறது. அத்துறையில் வெல்ல வேண்டுமென்றால் வாழ்க்கையையே அளிக்கவேண்டியிருக்கிறது. அதற்கு இணையாகவே ஒருவர் இலக்கியத்திலோ, அறிவுத்துறையிலோ அடிப்படைகளைப் பயில்வதற்கும் அதில் எதையாவது சாதிப்பதற்கும் அதேபோல வாழ்க்கையை அளிக்கவேண்டியிருக்கிறது. தங்கள் தொழில்துறைகளில் சொல்லும்படி எதையும் செய்ய முடியாமலானவர்கள், ஓய்வுபெற்றவர்கள் வந்து அமரும் திண்ணை அல்ல அறிவியக்கம்.

வரக்கூடாதென்றில்லை. ஓய்வுப்பொழுதில் அறிவியக்கப் பங்களிப்பாற்றிய எத்தனையோபேர் உண்டு. ஆனால் தங்கள் எல்லை என்ன, இடமென்ன என்பதை தொழில்நுட்பத் தளத்தினர் உணரவேண்டும். அந்த அடக்கம் தமிழ்ச்சூழலில் பெரும்பாலானவர்களிடம் இல்லை என்பதே பிரச்சினை.

இந்த தொழிற்துறைப் பயிற்சி கொண்டவர்கள் தங்களை அறிஞர்கள் என்றும் பண்பாட்டுச் செயலாளர்கள் என்றும் எண்ணிக்கொள்வதால் உருவாக்கும் சீரழிவையே அமெரிக்காவில் பெரிதும் பார்க்கிறேன். பெரும்பாலும் தங்கள் துறைகளில் சொல்லும்படி எதையும் செய்ய இயலாமல், அங்கே தங்கள் எல்லைகள் வகுக்கப்பட்டுவிட்டதை அறிந்த, தொழில்நுட்பப் பணியாளர்களே அங்கே பண்பாட்டுச் செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.

இந்த தொழில்துறையாளர்களுக்கு பண்பாட்டுப் பயிற்சி இருப்பதில்லை. பண்பாட்டுப் பயிற்சி தங்களுக்கு இல்லை என அறியுமளவுக்குக் கூட அவர்கள் கூர்மையானவர்கள் அல்ல. பெரும்பாலானவர்கள் பெரியமனிதர்களுக்குரிய மிதப்புடன் எல்லாம் தெரிந்தவர்களாக கற்பனை செய்துகொள்கிறார்கள்.

ஆகவே அவர்களுக்கு உண்மையான பண்பாட்டுச் செயல்பாட்டாளர்களைப்பற்றி எதுவும் தெரியாது. ஆனால் மிகையார்வத்துடன் தங்கள் எளிமையான ரசனைக்கும், தங்கள் தாழ்ந்த அறிவுநிலைக்கும் ஏற்றவர்களை அவர்கள் தமிழ்ப் பண்பாட்டின் முகங்களாகத் தூக்கிப்பிடிக்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கு கையளிக்கிறார்கள். அமெரிக்காவில் பெரிய டாக்டர் என்பார்கள், நாலாந்தர சொற்பொழிவின் பத்திரிகைபாணி ஜோக்குகளை கேட்டு கெக் கெக் என்று சிரித்து மகிழ்ந்து அதை ஒரு மாபெரும் அறிவுச்செயல்பாடு என உண்மையாகவே நம்புவார்கள். அங்கே திரும்பத் திரும்ப இவர்களைப் பார்க்கலாம்.

முச்சந்தி நகைச்சுவை வெடிகளைப் போடும் ஒரு சாதாரணப் பட்டிமன்றப் பேச்சாளரை தமிழகத்தின் பண்பாட்டு அடையாளமாக கொண்டு வந்து தங்கள் குழந்தைகள் முன் நிறுத்துகையில் அக்குழந்தைகளுக்கு எதை அளிக்கிறோம் என இந்த அமெரிக்க அமைப்பாளர்கள் உணர்வதில்லை. அக்குழந்தைகள் உள்ளத்தில் எந்த வகையான மதிப்பின்மையை உருவாக்குகிறோம் என்று அவர்களுக்கு சுரணையே இருப்பதில்லை.

அமெரிக்காவில் நான் பார்த்தது அடுத்த தலைமுறைக்கு அங்கு வாழும் தங்கள் தந்தையின் மேல்,  அவரைப்போன்றவர்கள் மேல், ஒட்டுமொத்தமாக இந்தியர்கள் மேல் இருக்கும் ஆழமான இளக்காரத்தையே. இதை சொல்லவந்து, சரி எதற்கு வம்பு என்றுதான் 2008 ல் ‘வாக்களிக்கும் பூமி’ என்ற பெயரில் எழுதிவந்த அமெரிக்கப் பயணக்கட்டுரையை நிறுத்திக் கொண்டேன். உண்மையில் அங்கே ஒவ்வொரு இளைஞர் கண்ணிலும் அந்த உதாசீனத்தையும் இளக்காரத்தையும் இப்போதும் பார்க்கிறேன். அது ஒரு கூரிய முள். அது ஒரு பெரிய பண்பாட்டு நிகழ்வின் சான்று.

அமெரிக்கப் பண்பாடென்பது அவ்விளக்காரத்தை நேரடியாகவும் மூர்க்கமாகவும் வெளிப்படுத்த பயிற்றுவிப்பதல்ல. அது நாசூக்குகளின் நாகரீகம். ஆனால் தமிழ்ப்பண்பாடு அல்லது தமிழ் சார்ந்து ஓரிரு சொற்றொடர்கள் எவராவது பேசும்போதே அமெரிக்க பதின்வயதினரின் கண்களில் வரும் அக்கறையின்மையும் ஏளனமும் மிகத் தீவிரமானவை. இந்தியாவில் இருந்து வரும் என்னைப்போன்ற ஒருவருக்கு அந்த இளையோரில் ஒருவர்கூட தமிழ் பற்றி அல்லது இந்தியா பற்றி ஒரு சில எளிய கருத்துக்களைக்கூட தெரிந்துகொள்ள முயற்சி செய்யாதிருத்தல் முகத்திலறையக்கூடியது. தாங்கள் சந்திப்பவர் எவர் என அவர்கள் இணையத்தில் ஒருமுறை தேடிப் படித்துப்பார்ப்பதுகூட இல்லை.

தொடக்கத்தில் எனக்கு அந்த அலட்சியம் ஓர் அவமதிப்புணர்வை உருவாக்கியது உண்மை. சிகாகோவில் 2009ல்  நான் ஒரு தமிழ்க்குடும்ப சந்திப்பு நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தேன் (பசியாகிவரும் ஞானம் என்னும் உரையை அங்கே ஆற்றினேன்). ஏறத்தாழ நூறு தமிழ்க் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தனர். உணவுக்குப்பின் நான் பேச அமர்ந்தேன். ஓர் இளையோர், ஒரே  ஒரு இளையோர் கூட அந்த அவையில் வந்து அமரவில்லை. ஓர் இளையோர்கூட என்னிடம் வந்து ஒரு வார்த்தை பேசவில்லை. ஓர் இளையோருக்குக் கூட நான் யார் என்று தெரியவில்லை.

(அங்கு வந்திருந்த தமிழர்களிலேயே மூன்றுபேருக்குத்தான் என்னை முன்னரே தெரிந்திருந்தது. அந்நிகழ்ச்சிக்கு நான் அழைக்கப்பட்டதே அந்த அமைப்பில் என்னுடைய வாசகர் ஒரே ஒருவர் (சந்திரசேகர்) இருந்தார் என்பதனால்தான். நானும் அமெரிக்காவை அறியும் ஆர்வத்தால்தான் சென்றேன்).

அவ்விளையோரில் பெரும்பாலானவர்கள் பதின்பருவத்தவர். அமெரிக்காவில் பள்ளிகளில், கல்லூரிகளில் பயில்பவர்கள். ஆகவே அவர்களுக்கு எழுத்து, எழுத்தாளர் என்றால் என்னவென்று நன்றாகவே தெரியும். எழுத்தாளர் ஒருவரைச் சந்தித்தேன் என அமெரிக்காவில் ஒரு பள்ளி அல்லது கல்லூரியில் சொல்வதற்கு எவ்வளவு மதிப்பு என்பதை அதன்பின் பலமுறை நான் நேரில் அறிந்திருக்கிறேன். வெள்ளைக் குழந்தைகளிடம் அந்தப் பேரார்வத்தைக் கண்டிருக்கிறேன். ஆனால் இந்தியா அல்லது தமிழ்நாடு என்பதை விடுங்கள், ஓர் அன்னியநாட்டு எழுத்தாளன் வந்து பேசுகிறான் என்னும் எளிய ஆர்வம்கூட அந்த தமிழ் இளையோரிடம் வரவில்லை. ஒருவர்கூட வந்தமர்ந்து ஒரு சொற்றொடரைக்கூட கேட்கவில்லை.

ஓர் இளைஞர், ஒரே ஒருவர் வந்து அமர்ந்திருந்தால்கூட நான் அத்தனை பாதிக்கப்பட்டிருக்க மாட்டேன். அது ஒரு பூங்கா. நான் பேசும்போதெல்லாம் வெளியே அவ்விளையோர் பேசிச் சிரித்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். நான் பேசியபடியே அவர்களை பார்த்தேன். அவர்களின் அந்த உடல்மொழி அமெரிக்க கணக்குக்கு கொஞ்சம் அதீதமானது. அமெரிக்காவில் இளையோர் பொது இடங்களில் அவ்வளவு சத்தம் போடுவதில்லை. அவ்விளையோர் எனக்கு என்ன சொல்ல விரும்புகிறார்கள் என எனக்குத் தெளிவாகப் புரிந்தது. தங்கள் அலட்சியத்தை தெரிவிக்கிறார்கள். தாங்கள் வேறொரு ‘முன்னேறிய’ ‘நவநாகரீக’ சமூகத்தி அங்கத்தினர் என சொல்ல விரும்புகிறார்கள். அவர்கள் உதறிவிட்ட, முற்றாக உதற விரும்புகிற ஓர் உலகைச் சேர்ந்தவன் நான்.

இன்று அதே புறக்கணிப்பையும் ஏளனத்தையும் அவர்களுக்கு அடுத்த தலைமுறையினரின் கண்களில், பாவனையில் பார்க்கையில் பிரியமாகப் புன்னகை செய்யவே தோன்றுகிறது. அவர்கள் வேறொரு போர்க்களத்தில் போரிடுபவர்கள். அவர்களுக்கு எந்த ஆயுதத்தையும் அவர்களின் பெற்றோரும் சமூகமும் அளிக்கவில்லை. மாறாக தமிழ், பண்பாடு என்றெல்லாம் கால்களில் இரும்புக் குண்டுகளை கட்டி விடவே செய்கிறார்கள். என்னை அவர்கள் தங்கள் பெற்றோர் கொண்டு வந்து அறிமுகம் செய்யும் இன்னொரு பட்டிமன்ற உளறல்காரர் என்றே நினைத்திருக்க வாய்ப்பு மிகுதி. இன்னொரு வகையில் என்னை அவர்கள் அறிய எந்த வழியும் இல்லையே.

என்னுடைய பதிமூன்று ஆண்டுக்கால அமெரிக்கப் பயணங்களில் இதுவரை அதிகபட்சம் பத்து இளையோர் மட்டுமே ஏதேனும் வகையில் தமிழைப் பற்றியோ இந்தியாவைப்பற்றியோ பேசப்படும்போது சிறு ஆர்வத்தை கண்களில் காட்டியிருக்கிறார்கள். மற்றவர்கள் தங்கள் தந்தையரின் வற்புறுத்தலுக்கு இணங்க வந்து ஒரு ஹாய் சொல்லி, தோள்குலுக்கி மறைபவர்கள். அந்த ’ஹாயை’யே முழுமையான அமெரிக்க உச்சரிப்பில் சொல்ல வேண்டுமென்பதிலும், அமெரிக்க உடல் மொழியில் ஒரு பொருட்டின்மையைக்காட்ட வேண்டுமென்பதிலும் அவர்கள் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்கிறார்கள். ஒருவர் கண்களை வெறுமையாக வைத்துக்கொண்டு ஹாய் சொன்னால் அமெரிக்காவில் என்ன அர்த்தம் என்று அறியுமளவுக்கு எனக்கு அமெரிக்காவும் ஐரோப்பாவும் அறிமுகம்தான். அப்படி எத்தனை ’ஹாய்’கள்!

அந்தத் தலைமுறைக்கு முன் தமிழை எவ்வண்ணம் நிறுத்துகிறோம் என்பது தான் இன்றைய மிகப்பெரிய அறைகூவல். அவர்களுக்கு அவர்களுடைய பண்பாடென்பது உலகத்தின் தலைசிறந்த பண்பாடுகளில் ஒன்று என்று மெய்யாகவே காட்டவேண்டும். அப்படி காட்ட வேண்டுமெனில் தமிழகத்தின் பரப்பியல் தளங்களில் கொப்பளிக்கும் வெற்றுணர்ச்சிகளைக் கொண்டு சென்று அவர்கள் முன் வைப்பதில் எந்தப்பொருளுமில்லை.

அரசியல்வாதிகள் தமிழகத்திலுள்ள கல்வியறிவு குறைவான, பெரும்பாலும் பின்தங்கிய மக்களை வெறியேற்றி தங்கள் கீழே ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கி முன்வைக்கும் கோஷங்களை அமெரிக்காவில் நம் பிள்ளைகள்முன் கூவுவது அவர்கள் கண்ணில் நம்மை கேலிப்பொருட்களாக ஆக்கும். தெரிந்துகொள்ளுங்கள், அவர்கள் எல்லா பண்பாடுகளின் வரலாற்றையும் அறியும் புறவயமான கல்விமுறை ஒன்றில் பயில்பவர்கள். அவர்களுக்கு உலகின் தொல்வரலாறு கொஞ்சம் தெரியும். நமது அசட்டு உணர்ச்சிகளையும் நம் அறியாமையையும் அவர்கள் முன் வைக்க நாம் கூசவேண்டும்.

தமிழின் உண்மையான பண்பாட்டு வெற்றிகளை, தமிழின் சாதனைகளை, தமிழின் தொன்மையான அடையாளங்களை அவர்களுக்கு நாம் சொல்ல வேண்டும். அதற்கு எந்த முயற்சியும் அமெரிக்க தமிழர்களிடையில் இல்லை. அதற்கு எதிரான எல்லா செயல்பாடுகளும் முழுவிசையுடன் நிகழ்கின்றன என்பதே வருந்தும் உண்மை. அங்கே தமிழ்க்கூச்சல் இடுபவர்களில் நானறிந்து எவருக்கும் எந்த வாசிப்புப் பழக்கமும் இல்லை. எந்த பண்பாட்டு அறிமுகமும் இல்லை. அக்கறையும் இல்லை. அவர்களிடமிருப்பது ஒருவகை அரசியல்மூர்க்கம் மட்டுமே.

ஏறத்தாழ 1992ல் அமெரிக்கா சென்று மீண்ட சுந்தர ராமசாமி எழுதிய ‘தாழ்ந்து பறக்கும் தமிழ்க்கொடி’ என்னும் வரியையே மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.

(மேலும்)

சுந்தர ராமசாமி -தமிழ்விக்கி

முந்தைய கட்டுரைமா.கிருஷ்ணன், அவருடைய முன்னோடிகள்
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி தூரன் விருது- கடிதங்கள்