கரசூர் பத்மபாரதி – கடிதமும் பதிலும்

அன்புள்ள ஜெ

தமிழ் விக்கி – தூரன் விருது கரசூர் பத்மபாரதிக்கு அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய சூழலில் தமிழில் ஆய்வியக்கத்தை அறிவுக்களத்தில் அடையாளப்படுத்திக் கொண்டே இருந்தாகவேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு ஆய்வுக்களம் மலினப்பட்டிருக்கிறது.

என்ன நடந்துகொண்டிருக்கிறது? முதலில் சொல்லப்படவேண்டியது இப்போது யூஜிசி நிபந்தனைக்குப் பிறகு முனைவர் ஆய்வுசெய்தால்தான் கல்லூரி ஆசிரியர் வேலை என ஆகிவிட்டது. ஆகவே எப்படியாவது முனைவர் பட்ட ஆய்வுக்கு முண்டியடிக்கிறார்கள். எவ்வளவு சீக்கிரம் அதை முடித்தால்தான் வேலை. கல்லூரி ஆசிரியராக முனைவர் பட்ட ஆய்வை நிபந்தனையாக்கியவர்கள் அடிமடையர்கள். பழங்காலத்தில் முனைவர் பட்ட ஆய்வெல்லாம் பத்துப்பதினைந்து ஆண்டுகள் செய்தனர். அதுவரை ஒருவன் வேலையில்லாமல் இருக்க முடியுமா? முனைவர் பட்ட ஆய்வைச் செய்தால்தான் வேலை என்றால் அதை ஓரிரு ஆண்டுகளில் ஒப்பேற்றவே எவரும் முனைவார்கள். அதுதான் நடக்கிறது. ஆய்வேடுகள் எல்லாமே ரெடிமேட் தயாரிப்புகள். ஒரு தொழிற்சாலை போல ஆய்வேடுகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு பெரிய வணிகமாகவே ஆய்வு நடைபெறுகிறது. இன்று ஆய்வேடுகளில் எவை முக்கியமானவை என்று எவரும் சொல்லமுடியாது. இத்தனை ஆயிரம் ஆய்வேடுகளை எவர் படிக்கமுடியும்?

கல்வித்துறைக்கு வெளியே உள்ள ஆய்வுகளில் முந்தி நிற்பது அரசியல்சார்புநிலைகள்தான். ஏதாவது ஒரு அரசியல் நிலைபாடு எடுத்து அதையொட்டி ஆய்வு செய்யவில்லை என்றால் அந்த ஆய்வேட்டுக்கு வாசகர்களே இருக்க மாட்டார்கள். ஆனால் கட்சிநிலைபாடு எடுத்துவிட்டால் ஆய்வேட்டுக்கு வெளியீட்டுக்கூட்டங்களும் வாசகர்கூட்டங்களும் நடைபெறும். விவாதங்களும் கட்டுரைகளும் வெளிவரும்.

மூன்றாவது, ஆய்வேடுகளை ஏற்கனவே பணமும் அதிகாரமும் உள்ளவர்கள் எழுதுவது. பெரும்பாலும் அரசு அதிகாரிகள். அவர்கள் ஓய்வுபெற்றபின் எதையாவது எழுதுகிறார்கள். தமிழகத்தின் தலைசிறந்த ஆய்வறிஞர்கள் என்று அவர்களை ஊரே கொண்டாடுகிறது. நம்மூர் மனநிலை அது. திருவுடை மன்னனை திருமாலே என வணங்கியவர்கள்தானே நாமெல்லாம்? அங்கே விமர்சனமே இல்லை. போற்றிப்பாடல்கள் மட்டும்தான்.

இந்த குழப்பங்கள் நடுவே அவ்வப்போது அற்புதமான ஆய்வுகள் வருகின்றன. கள ஆய்வுசெய்து எழுதப்படும் ஆய்வேடுகள் பல உள்ளன. செய்பவர்களின் ஆத்மார்த்தமான ஈடுபாட்டால்தான் அவை அப்படி உருவாகின்றன. அவை எங்கும் மதிக்கப்படுவதில்லை. அவற்றுக்கு வாசகர்களே இல்லை. அத்தகைய உண்மையான ஆய்வேடுகளை அறிவுப்புலத்தில் உள்ளவர்கள் கவனிக்கவேண்டும். அது ஆய்வாளர்களுக்கும் ஊக்கமளிக்கும். அறிவுப்புலத்திலும் புதிய வெளிச்சம் வந்து சேரும்.

கரசூர் பத்மபாரதியின் இரண்டு ஆய்வேடுகளுமே அற்புதமானவை. மிக முக்கியமான ஆய்வாளர். அவருக்கு என் வாழ்த்துக்கள். இந்தப்பணி மீண்டும் தொடரட்டும்

எஸ்.தண்டபாணி

அன்புள்ள தண்டபாணி,

நீங்கள் குறிப்பிடும் அந்த இடைவெளி தமிழ் அறிவுலகுக்கும் ஆய்வுலகுக்கும் நடுவே உள்ளது. கரசூர் பத்மபாரதி முற்றிலும் அறியப்படாதவர் அல்ல. நானே அவரைப் பற்றி எழுதியிருக்கிறேன்.

ஆனால் இந்த விருது அறிவிப்புக்குப் பின் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், பொதுக்களத்தில் ஆய்வாளர்களாக அறியப்படுபவர்கள் எவரிடமிருந்தும் ஒரு கடிதம்கூட வரவில்லை. எவரும் ஒரு சம்பிரதாயமாகக்கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை. முற்றிலும் உதாசீனமாகக் கடந்து செல்கிறார்கள்.

ஆச்சரியமென்னவென்றால் என்னுடைய வழக்கமான வாசகர்கள் ஒருவர்கூட ஒரு வரி வாழ்த்துக்கடிதம்கூட அனுப்பவில்லை. ஒரே ஒரு எதிர்வினைகூட வரவில்லை. முழுமையான மௌனம். கடிதங்கள் எல்லாமே எப்படியோ கல்வித்துறை சார்ந்தாவ்ர்களிடமிருந்துதான்.

இந்த அலட்சியமும் புறக்கணிப்பும் நம் சூழலிலுள்ள மாபெரும் நோய்க்கூறு ஒன்றின் சான்று. நம் அறிவுக்களம் எந்த அளவுக்கு தேக்கம்கொண்டு, தன்னைத்தானே நக்கிக்கொண்டு, வம்பளந்துகொண்டு சுழன்றுகொண்டிருக்கிறது என்பதைக் காட்டுவது

ஜெ

முந்தைய கட்டுரைகடலின் எடை- கடலூர் சீனு
அடுத்த கட்டுரைகுமரகுருபரன் விழா- கடிதங்கள்