அன்பின் ஜெமோவிற்கு வணக்கம்.
நலம்.நலமே சூழ்க.
புதுவையில் மணிமாறனை மட்டுறுத்தியாகக்கொண்டு செயல்படும் சிறுகதைக் கூடலில் கடந்த சில வாரங்களாக சொத்தையான கதைகளை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டதால் உறுப்பினர்கள் சோர்வடைந்திருந்த நிலையில் மணிமாறன்தான் நாம் மீண்டும் ஜெவுக்கே சென்றுவிடுவோம் என்று எங்களை ஆற்றுப்படுத்தினார். ஏனென்றால் யானை படுத்தாலும்.. படுக்காது.. படுத்தாலும் குதிரை மட்டந்தான் என்பதாக எங்களைத் தேற்றிக்கொண்டு புனைவுக்களியாட்டக் கதைகளில் ஒன்றான ‘எண்ணும்பொழுது’ கதையை இந்த வாரம் எடுத்துக் கொண்டு விவாதித்தோம்.
’எண்ணும்பொழுது’ கதையை இப்பொழுது விவாதத்திற்காக வேண்டி மறு வாசிப்பு செய்யும்போது அதன் வாசகர் கடிதங்களையும் சேர்த்தே வாசித்தேன்.அப்ப்..பா எத்தனை கடிதங்கள்.எத்தனை விதமான அலசல்கள். எத்தனை பேர் அதில் மூழ்கி முத்தெடுத்திருக்கின்றனர்.சரி நாமும் நம் பங்கிற்கு ஏதாவது செய்து கதை விவாதத்தில் வைத்துப் பார்ப்போம் என்று எத்தனித்த போது என் கைகளில் அகப்படுவதென்னவோ வெற்றுக் கிளிஞ்சல்கள்தானோ என்ற ஐயம் வருகிறது. அக்கதை இன்னும் மூடுசூளையாக நின்று யாரும் எளிதில் அணுக முடியாத தூரத்தில்தான் இருந்து கொண்டிருக்கிறது.அந்த வகையில் அது ஒரு வெற்றிக் கதைதான்.
தெற்குத்திரு வீட்டின் கன்னி கதையில், முதலில் சந்தேகப்பட்டது போம்பாளரா இல்லை தெற்குத்திரு வீட்டின் கன்னியா என்ற கேள்வியை பெரும்பாலரான வாசகர்கள் முன் வைத்திருந்தார்கள்.
என்னைக் கேட்டால் போம்பாளர்தான் என்பேன்.என் தரப்பு இதுதான், கடலில் தத்தளித்து உயிர்ப் போராட்டத்தில் இருக்கும் நிலையிலும் ஒற்றைக் கையால் நீந்திக் கொண்டே அந்த முல்லைக் கொடியை விட்டு விடாமல், போராடி கரை சேர்த்ததிலிருந்தே போம்பாளரின் மனதில் சந்தேகத்தின் நிழல் படிந்து விட்டது என்பது வெளிப்படையாகிறது.முல்லைக் கொடியில் பூ உதிர்ந்துவிட்டதாக அவர் கனவு காண்கிறார். திடுக்கிட்டு விழித்து தோட்டத்திற்கு வந்து பூக்களை எண்ணிப் பார்க்கிறார். சந்தேகம் அவரது ஆழ் மனதில் எந்த அளவிற்கு இறங்கியிருந்தால் அது கனவின் வழி வெளிப்படும்? அப்படியென்றால் முதலில் எண்ணியவர் போம்பாளர்தானே?
ஆனால் கதையில் கடைசிவரை அவர் கடலுங்கரை வீட்டின் கன்னி விரிக்கும் வலையில் சிக்காமல் தூய்மையானவராகவே சித்தரிக்கப் பட்டாலும் அவரது மனம் சந்தேகத்தால் திரிபடைந்ததாலேயே அங்கே அவரது மோதிரம் வெளுக்கத்தொடங்கி விட்டது.வெளுத்த மோதிரத்தைக் கண்ட கன்னியின் மனதிலும் சந்தேகம் குடிகொண்டதால் இங்கே முல்லைக் கொடியும் வாடி விட்டது .இரண்டும் ஒரு சேர ஒரே கணத்தில் நிகழ்ந்ததாகவே கொள்ள என் மனம் ஒப்பவில்லை.என்ன இருந்தாலும் தெய்வமாகிப்போன கன்னியை நாம் சந்தேகப் படலாகாது.ஒரு அணுவிடைக்கால வேறுபாடாவது இருந்திருக்கும்.
ஆனால் இரண்டு ஆத்மாக்களும் அப்பழுக்கற்றதாக இருந்ததால்தான் அவை சொர்க்கங்கள் நோக்கி வெவ்வேறு திசையில் பயணப்பட்டன. நாட்டார் கதை தன்னளவில் தெளிவாக இருப்பதாகவே நாம் கொள்ளலாம்.
சரி இங்கே நிகழ் உலகத்திற்கு வருவோம்.போம்பாளரின் மறுபதிப்பாகவே கதையில் வரும் ’அவன்’ பிரதி பலிக்கிறான்.அவர் அங்கே தெற்குத் திரு வீட்டின் கன்னியை நீரின் பிம்பத்தில் பார்த்து காதல் கொள்கிறார் என்றால், இங்கே இவன் ’அவளை ‘ கண்ணாடியில் பார்த்து மயக்கம் கொள்கிறான். எழுத்தாளரின் இந்த உத்தியால் வாசகன் வெகு இயல்பாக இரண்டு கதைகளையும் ஒன்றெனப் பார்த்து கதைக்குள் தங்களைப் பொருத்திக்கொள்ள முடிகிறது.
எழுத்தாளர் இக்கதையில் வரும் அவனையும் அவளையும் ஒர் ஆதர்ச தம்பதிகளாகக் காட்டுகிறாரா என்றால் அதற்கான குறிப்புகள் எதுவும் வாசகனுக்குக் கிடைக்கவில்லை.போம்பாளராவது கன்னியுடன் பதினாறு ஆண்டு காலம் மனமொன்றி சேர்ந்து வாழ்ந்தார் என்று வருகிறது.இங்கே இவர்கள் தம்பதிகளாக சேர்ந்து வாழ்வது எப்போதிருந்து,எத்தனைக் காலமாய் என்ற குறிப்புகளை ஆசிரியர் ஞாபகமாய் கொடுக்கவில்லை.மாறாக அவர்கள் உறவு திருமணம் தாண்டிய வேறு ’ஏதோ’ ஒரு பிணைப்பின் வழியாக ஒடிக்கொண்டிருக்கிறது என்று நினைக்கும் படியான உரையாடல்களை கதையில் ஊடாட விட்டு மேற்கொண்டு வாசகனின் கற்பனைக்கே விட்டுவிடுகிறார்.அதுதான் ஜெமோ.
அவன் அந்த நேரத்தில் அவளைச் சீண்டும்போது அவள் பிகு பண்ணிக் கொள்கிறாள்.அதற்கு அவன் “நீ என்ன பெரிய இவ மாதிரி” -என்கிறான்.அதற்கு அவள் “ஆமாம் நான் பெரிய இவதான்.அதற்குத்தானே இங்கே ஓடி வர்றீங்க” என்கிறாள்.
அதேபோல் அவள் தாலிக்கொடியைக் கழற்றி கண்ணாடியில் மாட்டுகிறாள்.மற்ற நகைகளை கிண்ணத்தில் போட்டு அதை மட்டும் ஏன் அங்கே மாட்டுகிறாய் என்று கேட்கிறான்.கிண்ணத்தில் போட்டு எடுக்கும்போது சிக்கலாகி பின் அதை சிக்கெடுப்பது சிரமமாகி விடுகிறது என்று பதில் கூறிய அவளுக்கு “ஆமாம் தாலிச் சிடுக்கு” என்று அவளுக்குப் புரிந்தும் புரியாததுமான ஒரு முனகல் வார்த்தையை உதிர்க்கிறான்.கதையில் இதுவும் அவிழ்க்கப்படவேண்டிய முடிச்சு.
கதையில் வரும் இந்த இரண்டு வரிகளும் உண்ணிப்பாகக் கவனிக்கப் பட வேண்டியவை.அங்கு உறவுச் சிக்கல் இருப்பதை வாசகனுக்குக் கூறாமல் கூறும் வரிகள்.
அவள் இவனைத் தன் ’விளையாட்டே’ போன்ற உதாசீனத்தால் சீண்டுகிறாள்.அதுவும் ஒவ்வொரு முறை அறிவார்ந்த உரயாடலின்போதும்.அதன் வழி அங்கே ஒரு மெல்லிய வெறுப்பு அவன் மனதில் அரும்புவதை நம்மால் அவதானிக்க முடிகிறது.இதுவரை அவளது பேரழகுதான் அவனைக் கட்டிப் போட்டு வந்திருக்கிறது.அந்தக் கட்டு இனி மெல்லத் தளரும்.கூடவே அவ நம்பிக்கை வளரும்.அதன் தொடக்கம்தான் இன்று அவனை அந்த தெற்குத் திருவீட்டுக் கன்னியின் கதையை அவளிடம் கூறவைத்திருக்கிறது.கதையைக் கூறும்போது அவள் கண்களில் தெரியும் சிறு சலனத்தை கவனிக்கவும் அவன் தவற வில்லை.(வாசகர்களும் இந்த ’சலனம்’ என்ற ஒற்றை வார்த்தைப் பிரயோகத்தின் ஓராயிரம் அர்த்தங்களை அனுவித்து ரசித்திருப்பார்கள் என்று நினக்கிறேன்) அவளும் இவன் எதற்காக அந்தக் கதையைக் கூறுகிறான் என்று உணராமலில்லை.அதையும் அவள் விளையாட்டே போன்ற உதாசீனத்தின் வழி கடக்க முயன்று தோற்றுப் போகிறாள்.அவனுக்கு இதில் வெற்றிதான்.
அவளும் ஏதோதோ சிந்தனை வயப்பட்டவளாக இரவில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருப்பதை அவள் வாய்மொழியாகவே கூறவைத்து இரண்டு பேரும் ஒரே அலை வரிசையில் வந்திருப்பதை ஆசிரியர் நமக்குக் கோடிட்டுக் காட்டுகிறார்.
இருவருக்கும் இடையில் ’எண்ணம்’ குடி கொண்டுவிட்டது. இனி என்ன? இனி இருவரும் எண்ணி எண்ணிப் பார்ப்பார்கள்.எண்ணும்பொழுதும் எண்ணும்பொழுதும் சந்தேகம் கூடும். நம்பிக்கை குறையும், அவ நம்பிக்கை வளரும்.
அங்கு கோணச்சி மந்திர உச்சாடனம் பண்ணி இருவரையும் எண்ண வைத்துப் பிரித்தாள். ஆனால் இவர்கள் தங்கள் கோண புத்தியால் பிரியப் போகிறார்கள் அவ்வளவுதான் வித்தியாசம்.
நன்றி ஜெமோ,இந்த அற்புதமான கதையைக் கொடுத்ததிற்கு.
என்றும் அன்புடன்,
இரா.விஜயன்
புதுச்சேரி-10
விஷ்ணுபுரம் பதிப்பகம்
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307