இந்த மாதங்களில்…

வடகிழக்குக்கு ஒரு பயணம்

இந்த ஏப்ரல், மே மாதங்கள் குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை நல்ல மாதங்களே. கொஞ்சம் வெயில் இருந்தாலும் காலையிலும், மாலையிலும் அருமையான குளிர் காற்றடிக்கும்.  மலையடிவாரத்தில் நடை செல்ல அருமையான நேரம். பிள்ளைகள் படிப்புத் தொல்லை இல்லாமல் உடனிருக்கும். ஆனாலும் சென்ற இரு வருடங்களாக இந்த மாதங்கள் மனச் சுமை மாதங்களாக ஆகி விட்டிருக்கின்றன. ஈழ நண்பர்களின் இழப்பு, அந்த அவல நிகழ்ச்சிகள்.

குரூரமாக என்னையே ஆராய்ந்து பார்க்கையில் சில விசித்திரங்கள் மனதில் படுகின்றன. ஒன்று எவ்வளவு பெரிய அவலம் என்றாலும் நமக்குத் தெரிந்த சிலர் அதில் இருக்கையில் தான் அதை நாம், நம் அவலமாக நினைக்க முடிகிறது. மரணங்கள் பற்றிய செய்தி வரும் போது சம்பந்தப் பட்டவரின் வயதுடன் நம் வயதை நாம் ஒப்பிட்டுக் கொள்கிறோம். நம்மை விட சில வருடங்கள் மூத்தவரென்றால் அந்த மரணத்தை கொஞ்சம் நியாயப் படுத்திக் கொள்ளலாம் என இயல்பாகவே ஓர் எண்ணம் வருகிறது. நம்மை விட மிக இளையவர் என்றால் அடாடா என்ற எண்ணம். ஆனால் நம்முடைய அதே வயது என்றால் ஒரு ஆழமான நடுக்கம்.

இவ்வளவு மனப்பாரமும் ஒரு அபத்தமான சுய மைய நோக்கு காரணமாகத்தானா? எத்தனை அபத்தமான, இழிவான ஒன்றாக என் மனஆழம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். மனித மனம் ஒரு ஆழமான இருட்டுப் பள்ளம் என்று எப்போதும் தியான மரபு சொல்லி வருகிறது. காமம், குரோதம், மோகம் என்று மூன்று அழுக்குகள் கொண்டது. உண்மையில் மூன்றாவதே கேவலமான அழுக்கு. மோகம் என்பது சுய மோகம் தான். அந்த மோகமே பிறவற்றில் ஏறுகிறது.

என்னைத் திட்டுபவர்கள் உற்சாகமாக ’சுயமோகன்’ என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இருக்கலாம்.  நானே அதைத் தான் என் வாழ்க்கை முழுக்க ஆகப் பெரிய பிரச்சினையாகச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். பிறர் இந்த அளவுக்கு சுய மைய நோக்கு இல்லாதவர்களாக இருக்கலாம். இன்னும் எளிமையானவர்களாக இருக்கலாம். அவர்களின் குற்றச்சாட்டுகள் முன் தலைகுனிந்து’ ஆம், அப்படி இருக்க நேர்ந்து விட்டது. எழுதிய படைப்புகளின் பேரில் அதற்காக மன்னித்து விடுங்கள்’ என்று மட்டுமே சொல்ல முடியும் என்னால்.

இருபதாண்டுகளுக்கு முன் நித்யா என்னைப் பற்றிச் சொன்னார். ‘தியானத்தில் நீ ஈடுபடுவது நீ இரும்புக் குண்டை தூக்கி தலைமேல் வைத்துக் கொண்டு நீர் மேல் நடப்பது போல, காரணம் நீ எழுத்தாளன்’. தாகூரின் ‘சாதனா’ என்ற நூலே சிறந்த உதாரணம். அவருக்கு மொழி தான் கைகூடுகிறதே ஒழிய நான், நான் என்றே அவரது அகம் நீரில் பந்து போல எப்போதும் எல்லா வரிகளிலும் மேலே எம்புகிறது.  ஆம், எழுத்தாளர்களுக்கும், கலைஞர்களுக்கும் சுய மோகம் அதிகமாக இருக்கும், இருந்தாக வேண்டும். இத்தனை லட்சம் பேர் எழுதிய பிறகு வியாசன் முதல் தல்ஸ்தோய்க்குப் பிறகு, நானும் எழுதுகிறேன் என்பதே ஒரு சுயமைய நோக்குதான்.

அகங்காரம் இல்லாதவன் எதையும் எழுத முடியாது. எழுத வேண்டுமென்றால் அகங்காரத்தைப் பயின்று உருவாக்கிக் கொள்ளக் கூட வேண்டும் என்று தோன்றுகிறது.  எல்லா எழுத்தாளர்களும் நான், நான் என்றே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு இரு முகங்கள் உண்டு. எழுத்தாளன் தன்னையே ஒரு சடலமாக ஆக்கி தன் சோதனை மேடையில் பரப்புகிறான் என்கிறார் எலியட். ஆகவே அவன் தன்னைப் பற்றி பேசுகிறான். அது நான், நான் என ஒலிக்கிறது.

அப்படி எழுதியவை அவன் அறிந்தவை அல்ல, உள்ளுணர்வும் படைப்பூக்கமும் ஒன்றாகும் நேரத்தில் அவனிடம் கைகூடுபவை. ஆகவே அவனை விட பெரியவை. எழுதும் போது மட்டுமே அவனறிந்தவை. அவற்றை எழுதி விட்டமையாலேயே அவன் நான், நான் என்று எண்ணிக் கொள்கிறான். இது இரண்டாவது முகம். இரண்டில் இருந்தும் தப்புவது கடினம்

எழுத்தாளனின் வழி ஒன்று தான். எதிலும் தன்னை வைத்து கற்பனை செய்து அறிந்துகொள்வது. அதன் சாத்தியங்கள் எல்லையற்றவை. அவனால் பல நூறு பல்லாயிரம் வாழ்க்கைகள் வாழமுடியும். அதன் வரையறைகளும் பல. அவனால் தான் சென்று படியாத எதையுமே எழுத முடியாது. சுந்தர ராமசாமி சொன்னார், அவர் அவரது ஆளுமை இடம்பெறாத எதையும் எழுதியதில்லை. எல்லா கதைகளிலும் அவர் இருப்பார் என.  நவீனத்துவத்தின் வழி அது. நான் இன்னும் நுட்பமாக மாறு வேடம் போட, கூடு பாயக் கற்றுக் கொண்டேன். என் எழுத்து முறை வேறு.

இந்த மனச்சுமை மாதங்களில் அடிபட்ட மெல்லுறுப்பு போல என் அகங்காரம்தான் வீக்கம் கொண்டு கனத்து வலிக்கிறதா? 2009ல் இந்த நாட்களில் ராஜமார்த்தாண்டன் அண்ணாச்சியின் மரணம் நிகழ்ந்தது.   அதன்பின் லோகிதாஸின் மரணம். ஈழத்தில் இருந்து மரணச் செய்திகள் வந்து குவிந்து கொண்டிருந்த நாட்கள். கண் முன் ஒரு வரலாற்று அவலம். அதன் மறு பக்கமாக ஒரு பெரிய தரிசனம் போல காந்தி யார் என நான் கண்டு கொண்டு வெறியுடன் எழுதிக் குவித்து மெல்ல, மெல்ல சமனமானேன்.

எப்போதுமே நான் என்னை ஆழமாக பாதிக்கும் விஷயங்களை உடனே எழுதுவதில்லை.  உணர்ச்சிகரமான பாதிப்பு என்றால் கூட அந்த உணர்ச்சிகளை எழுதலாம். தார்மீகமான பாதிப்பு என்றால் மீள்வதற்கு ஒரு காலம் தேவைப் படுகிறது. அவற்றில் இருந்து விலகிச்செல்லவே முயல்வேன், உடலளவில், மன அளவில். 2009ல் காந்தி பற்றி வாசித்த நூல்களும், நூற் குறிப்புகளும் அதற்கு உதவின. சொற்கள் பிரமாதமான திரைகள்.  சட்டென்று ஏற்பாடான அமெரிக்கப் பயணம் எல்லாவற்றையும் மனதின் மூலையில் தள்ள உதவியது.

ஆனால் 2010ல் அந்த வேகம் ஏதும் நிகழவில்லை. ஏப்ரல் தொடங்கவே முகங்கள் எழ ஆரம்பித்தன.  எழுதுவதற்கு மனம் குவியவில்லை. இப்போது மனத்தின் இன்னொரு விசித்திரம் தெரிந்தது. அந்த இழந்துபோன நண்பர்களையே அவர்களின் அவலத்துக்காக வெறுக்க அது முயன்றது. வரலாற்றை, மக்களை தங்கள் விருப்பப் படி புரிந்து கொண்ட முட்டாள்கள், வெறுப்பை வளர்த்துக் கொண்டு அந்தத் தீயில் எரிந்தழிந்தவர்கள், ஒரு மாபெரும் கூட்டுத் தற்கொலை. பலநூறு பாவனைகள் வழியாகவே மனம் ஒன்றைத் தாண்டிச் செல்கிறது.

எதும் எழுத முடியவில்லை.  பழைய விஷயங்களாக இணையத்தில் போட்டுக் கொண்டிருந்தேன். சென்ற வருட அமெரிக்கப் பயணம் போல இம்முறை ஏதும் அமையவில்லை.  ஆகவே சட்டென்று கும்பமேளா செல்லலாம் என்று நினைத்தேன். நண்பர்களுடன் கிளம்பினேன். ஏப்ரல் 12 , 2010 அன்று கும்பமேளா சென்றோம். ஆனால் திரும்பி வந்ததும் அந்த மனமூட்டம் மிக வலுவாகி விட்டது.

இந்த மனநிலை ஒரு விசித்திரச் சிக்கல். ஒரு ஊமை வலி இருந்து கொண்டே இருக்கிறது. அது எரிச்சலாக, பொறுமையின்மையாக உருமாறி எங்கே எவரிடம் வழியுமென தெரிவதில்லை.  எழுத்துக்களில் மிகையான வெளிப்பாடு இன்னும் ஆபத்தானது. வர்மாணியின் கைபோன்றது என் மொழி. நான் நினைப்பதை விட அதற்கு நுண்புள்ளிகள் தெரியும். நான் உத்தேசிக்காத அடிகளை அது கொடுத்து விடும். சென்ற வருடம் ஏப்ரல் 16 அன்று   இளம் எழுத்தாளரான ஆர் அபிலாஷ் பற்றி  எழுதிய ’ஆன்மாவை கூவி விற்றல்’ என்ற கட்டுரை அப்படிப் பட்ட ஒன்று

ஒரு துணுக்குறலுடன் அதை உணர்ந்த பின் இந்த மனநிலையில் எழுத வேண்டாமென நிறுத்திக் கொண்டேன். ஏப்ரல் இருபது அன்று வணக்கம் போட்டு தற்காலிகமாக எழுதுவதை நிறுத்திக் கொண்டேன்.  அதன் பின் ஜூன் வரை எதுவும் எழுதவில்லை.  என்ன நடக்கிறது என்றவர்களுக்கு சரியான பதில் சொல்லவும் முடியவில்லை.

அந்த ஏப்ரல் மாதத்தில் என் பிரியத்திற்குரிய டாபர்மான் நாய் டெட்டி இறந்து போனது. ஒரு மருந்து அதிகப் படியாக போனதன் விளைவு. அது என் கைகளில் துடித்து கைகால்கள் இழுத்துக் கொண்டு அடங்கிய போது நான் எங்கெங்கோ நானறியாத மண்ணில் இறந்த என் நண்பர்களை எண்ணிக் கொண்டேன். அழவில்லை, அழக் கூடாதென முடிவெடுத்தவன் நான்.

நீண்ட மௌனம். சிறகு புதைத்து அமர்ந்திருந்த நாட்கள். ஜூன் 27 அன்று எங்கே இருக்கிறீர்கள் என்ற கவிதை அந்த மனநிலையின் வெளிப்பாடாக இருந்தது. சில கடிதங்கள் அல்லாமல் வேறு ஒன்றும் எழுதவில்லை.  ஜூலை 17 அன்று வழக்கமான பருவ மழைப் பயணம். அது மெல்ல என்னை மீட்டது. கிட்டத் தட்ட மூன்று மாத இடைவெளிக்குப் பின்னர் எழுதியது அம்மாவைப் பற்றிய கட்டுரையான சுவையாகி வருவது. சிறிய உணர்ச்சிகரமான கட்டுரை. அதுவே மீண்டும் எழுத்துக்குள் கொண்டு வந்தது என்னை. அதன் பின் ஆகஸ்டில் ஒரு ஊட்டி கூட்டம். நண்பர்கள்…

இந்த வருடமும் ஏப்ரல். இன்னும் அதிக சுமையுடன். இவ்வருடம் என் இன்னொரு செல்லமான லாப்ரடார் நாய் ஹீரோ இறந்து விட்டது. டிக் ஃபீவர் என்றார்கள். காய்ச்சலுக்கு அளித்த மருந்தினாலா, காய்ச்சலினாலா தெரியவில்லை ஈரல் வேலை செய்யாமலாகி விட்டது. அவனுக்கு எட்டு வயது. அவனைப் பற்றி ஒன்றும் எழுதவில்லை.

நான் நினைத்தது போலன்றி காலம் செல்லச் செல்ல இந்த சுமை இன்னும் கனப்பது வியப்பையும், வலியையும் அளித்தது. இன்று இன்னும் பல நினைவுகளுடன் கலந்து விட்டது இது. ஐரோம் ஷர்மிளா பற்றி எழுதுவதற்காக ஐரீஷ் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும் பையாஃப்ரா குடியரசு பற்றியும் வாசித்துக் கொண்டிருந்தபோது இந்த நினைவுகள் இன்று தனிப்பட்ட இழப்புகளாக அல்லாமல் ஒரு முக்கியமான மானுட அவலமாக ஆகி விட்டிருப்பதை உணர்ந்தேன்.

மனிதர்களுக்குள்ள பரஸ்பர அவநம்பிக்கை என்பது ஒரு பெரிய அரசியல் சக்தி. மிக எளிதாக கையாளப் படுவது. மிக எளிதாக தீப்பற்றிக் கொண்டு அழிவை உருவாக்குவது. மனிதர்களுக்குள் உள்ள நம்பிக்கையின் அரசியல் மிகச் சிக்கலானது. மிக, மிக மெதுவாக சலனம் கொள்வது. பொறுமை இழக்கச் செய்வது. ஆனால் அழிவற்றது, ஆக்கப் பூர்வமானது. மீண்டும் நெல்சன் மண்டேலா. மீண்டும் காந்தி.

இது பற்றி பேசவே விழைகிறேன். ஆனால் யார் கேட்க வேண்டும் என்று நான் நினைக்கிறேனோ அவர்கள் கேட்கும் நிலையில் இல்லை.  ஈழ நண்பர்கள் ஆழமான மனச் சோர்வில் மூழ்கிக் கிடக்கிறார்கள். அல்லது தன்னிரக்கத்தில். இந்த மனநிலையை பயன் படுத்திக் கொண்டு எங்கும் வழக்கமான சில்லறை வசைபாடிகள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் உருவாக்கும் ஒற்றைப் படையான, தட்டையான வரலாற்றுச் சித்திரத்தை ஏற்றுக் கொள்ளாமல் பேசும் அனைவரையுமே துரோகிப் பட்டம் சுமத்த முண்டியடிக்கிறார்கள். ஒருநாளும் நான் அவர்களை பொருட் படுத்தியவனோ அவர்களிடம் பேசியவனோ அல்ல.

மேலும் எனக்கே இவை இன்னும் குழப்பமானவையாக சிக்கலானவையாகத் தான் உள்ளன. ஆக்கப் பூர்வமான மாற்றுத் தரப்புகள் வழியாகவே எனக்கே ஒரு தெளிவு வரக்கூடும். அது இன்று சாத்தியமே அல்ல. ஆகவே வேறு வழி இல்லை. இன்னும் அதற்கான நேரம் வரவில்லை.

ஆகவே வழக்கம் போல இன்னொரு பயணம். நண்பர்களுடன் வரும் மே 13 அன்று கிளம்பி பத்து நாட்கள் சிக்கிம், பூட்டான் சென்று வருகிறோம்

 

காந்தியப்போராட்டம்

விடைகொடுத்தல்

ராஜமார்த்தாண்டன்

லோகித் தாஸ்

எங்கே இருக்கிறீர்கள்

முந்தைய கட்டுரைஅண்ணா ஹசாரே-கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாடு,வாசிப்பு – கடிதங்கள்