உலகெலாம்…

 

சென்னையில் ஒரு நண்பரின் காரில் சென்றுகொண்டிருந்த போது அவர் பட்டி மன்ற கேசட் ஒன்றைப் போட்டார். துளித் துளியாக நான் கேட்டிருந்த திண்டுக்கல் லியோனியின் குரலைத் தொடர்ந்து பதினைந்து நிமிடம் கேட்டது அப்போது தான். சுருளிராஜன், தீப்பொறி ஆறுமுகம் கலவை. அது மிக வெற்றிகரமாக தமிழ்நாட்டை வலம் வருவதற்கான காரணங்கள் பல இருக்கலாம். முக்கியமானது முழுமையான அறியாமை மட்டுமே அளிக்கும் அவரது தன்னம்பிக்கை .

அறிவார்ந்தது, முக்கியமானது, பிரபலமானது எனக் கருதப்படும் விஷயங்களையெல்லாம் திண்டுக்கல் லியோனி தூக்கிப் போட்டு உடைக்கும் போது பாமரத் தமிழ் மனம் மகிழ்ச்சி அடைகிறது. இந்த மனத்தின் உளவியலை நாம் கவனிக்க வேண்டும். இவர்கள் எதையும் உழைத்து தெரிந்து கொள்வதிலோ, சிந்திப்பதிலோ ஆர்வமற்றவர்கள். அந்த அறியாமை காரணமாக தாழ்வுணர்ச்சி கொண்டவர்கள். ஆகவே அறிவார்ந்ததோ, அங்கீகாரம் பெற்றதோ ஆன எந்தச் செயலையும் ஒரு வகை எரிச்சலுடனோ, நக்கலுடனோ பார்ப்பவர்கள். சமூக சேவகிக்கு விருது என்றோ விஞ்ஞானிக்கு பரிசு என்றோ தினத்தந்தியில் படித்ததுமே அதே டீக்கடையில் உட்கார்ந்து அதைக் கடுமையாக விமரிசிக்க ஆரம்பித்து விடுபவர்கள். எல்லா இடத்திலும் இவர்கள் உண்டு என்றாலும் தமிழ்நாட்டில் இவர்கள் எண்ணிக்கையில் மிக அதிகம். அறியமையையேத் தங்கள் தகுதியாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள் இவர்கள்.

லியோனி அவ்வுரையில் பெரிய புராணத்தை நக்கல் செய்கிறார் .ஒரு கிராமத்துக்கு அவர்கள் குழு சென்று ‘உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் … ‘ என்று பாட , உள்ளூர் விவசாயிகள் ‘ ‘அய்யா என்ன பாடுறீங்க? ‘ என்று கேட்கிறார்கள். ‘ ‘பெரிய புராணம் ‘ ‘ என்கிறார் இவர்.  ‘எங்க புராணம் தான் பெரிய புராணமா கெடக்கே. சினிமாப் பாட்டு எதாவது பாடுங்க ‘ என்கிறார்கள். அப்படித் தான் இவர்கள் ‘எளிய மக்களிடையே’ இறங்கி வந்தார்களாம். உண்மையில் லியோனி புலியாட்டம் ஆடக் கற்றிருந்தால் எளிய மக்கள் மேலும் மகிழ்ந்திருப்பார்கள்.

லியோனிக்கு தெரிந்த அந்த ஒரே பெரிய புராணப் பாடல் அக்காவியத்தின் துவக்கக் கவிதை. காவியத்தை எழுதத் திட்ட மிட்ட பிறகு நெடுநாளாக முயன்று அதற்கு ஒரு தொடக்கம் கிடைக்காமல் திணறிக் கொண்டிருந்த சேக்கிழாருக்கு கருவறையின் இருளில் இருந்து சிவபெருமானே ‘உலகெலாம்’ என அடியெடுத்துக் கொடுத்ததாக புராணக் கதை. இலக்கியத்தின் செயல்முறை புரிந்தவர்களுக்கு எத்தனை ஆழமான உருவகம் இது எனப் புரியும். எங்கோ ஆழத்தில் உள்ள இருண்ட கருவறை ஒன்றிலிருந்து எப்படியோ எழுந்து வரும் ஒரு சொல்லை வைத்துச் சட்டென்று தொடங்கி விடுபவையாகவே எல்லாப் பெரும் படைப்புகளும் உள்ளன. முதல் வார்த்தை ‘வருவது’ வரைக் கவிஞனால் எதையுமே எழுத முடிவதில்லை. அது வந்த பிறகு காவியம் தன் போக்கில் எழுதப் பட்டபடியே இருக்கிறது.

அந்த முதல் சொல் ‘உலகெலாம்’ என்பது எவ்வளவு அற்புதமான விஷயம்! ஒரு கவிஞனைப் பொறுத்தவரை காவியம் எழுதுவதன் நோக்கம் உலகத்தையே தன் சொல்லால் அள்ளி விட வேண்டுமென்பதே . அந்த முதல் சொல்லை உணர்ந்தபோது சேக்கிழாரின் மனம்தான் எந்த அளவுக்கு பொங்கி எழுந்திருக்கும். ‘உலகம் முழுக்க’ என்ற சொல்லுக்கு பல தளங்கள். இதோ உலகெலாம் கேட்கும் பொருட்டு சொல்கிறேன். உலகில் உள்ள அனைத்தையுமே சொல்லி விடப் போகிறேன்……பெருங்காவியங்களின் முதல் சொல் இவ்வாறு மாபெரும் மன எழுச்சி ஒன்றை அடையாளம் காட்டுவதாகவே அமைகிறது . ‘ ‘மூவா முதலா உலகம்’ ‘ என சீவக சிந்தாமணி ஆரம்பிக்கிறது. ‘ ‘சொல்லும் பொருளும்’ ‘ என மகாகவி காளிதாசனின் ரகுவம்சம்.

ஆனால் அடுத்த வார்த்தையிலேயே சேக்கிழாரின் சுயபோதம் திரும்பி வருகிறது. உலகெலாம் உணர்ந்தாலும் அறிய முடியாதவனைப் பற்றிய காவியம் இது என அவரது விவேகம் அவருக்குச் சொல்கிறது. கவிஞனின் மன உத்வேகத்துக்கும், மெய்ஞானியின் அடக்கத்துக்கும் இடையேயான மோதலும், சமரசமுமே ‘திருத்தொண்டர் புராண’த்தை பெரிய புராணமாக ஆக்குகிறது என்பேன்.

இந்த முதல் கவிதையிலேயே இக்காவியத்தை உருவாக்கிய மன எழுச்சியும், மனப் போராட்டமும் உள்ளடங்கியுள்ளன.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு உலாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

இவ்வரிகளின் பொருளை கூர்ந்து பார்க்கும் போது ஆழமான வியப்பு நம்மை ஆட்கொள்கிறது. உலகத்தை முழுக்க உணர்ந்தாலும் உணர முடியாதவன், உலகத்தில் உள்ளவர்கள் எவராலும் உணர முடியாதவன் என முதல் வரி அறிவுக்கு அப்பாற்பட்டவனாக ஈசனைக் கற்பிதம் செய்கிறது. அடுத்த வரி நிலவைச் சூடியவன் கங்கையை அணிந்தவன் என மிகத் திட்டவட்டமாக ஒரு சித்திரத்தை அளிக்கிறது . அடுத்த வரி எல்லையே இல்லாத பேரொளி என மிக அருவமாக இறையை உருவகித்துக் கொள்கையில் அதற்கடுத்த வரி அம்பலத்தில் ஆடுபவன் என வகுத்துரைக்கிறது. அருவமும், உருவமும் ஆனவனின் பாதங்களை பணிவோமென அறை கூவுகிறது இப்பாடல் .

உண்மையில் புராணங்களுக்கு உள்ள கடமையே இது தான். அறிவுக்கும், அளவைகளுக்கும் அப்பாற்பட்ட ஒன்றை அறிவுக்கும் புலன் அனுபவங்களுக்கும் உட்பட்டதாக வகுத்து உரைக்க முயல்பவை அவை. புரணங்களின் கற்பனை வீச்சு முழுக்க இதற்குத்தான் பயன் படுத்தப் படுகிறது. தமிழ் புராணங்களில் முதன்மையானதாகிய பெரிய புராணம் முழுக்கவே கடலைச் சிமிழில் அடைத்துக் காட்டவும், வானை ஆடியில் பிரதிபலித்துக் காட்டவும் மாபெரும் கவி மனம் செய்யும் முயற்சியைக் காணலாம்.

 

மறுபிரசுரம் – முதற்பிரசுரம் May 12, 2011 

முந்தைய கட்டுரைபாவண்ணனுக்கு விளக்கு விருது -ஓர் எதிர்வினை
அடுத்த கட்டுரைஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது