அன்புள்ள ஜெமோ,
உலகத் தொழிலாளர்களை பற்றிய உங்களது கட்டுரை…. எப்படி உலக மயமாக்கல், நவீனத் தொழில் நுட்பம், உலகளாவிய உழைப்புப் பரவல் போன்ற புதிய கூறுகள் உழைப்பாளிகளின் உரிமைகளையும், தொழிற் சங்கங்களையும் நசுக்கி விட்டதை நேரடியான உண்மைகளால் தெளிவாகப் புரிய வைத்தது.
என்னுடைய கோணத்தில் தொழிற் சங்கங்களின் நசிவிற்கு இந்திய அரசாங்கம், தொழிற்சாலை நிர்வாகிகள், தொழிற்சாலை முதலீட்டாளர்கள் மற்றும் தொழிற் சங்கங்களின் அனைத்து அதிகாரங்களையும் அள்ளிக் கொண்டு முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைக்கும் மைய அமைப்புகள் (federal) அல்லது அரசியல் கட்சிகள் தான் காரணம்.
இந்திய அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தொழிலாளர் உரிமைகளையும், அவர்களின் நல விஷயங்களையும் பொருட்படுத்துவது இல்லை. விதிகள் மீறும் நிறுவனங்களின் மீது உத்தரவிடுவதற்கும், வற்புறுத்துவதற்கும் தொழிலாளர் நல ஆணையாளர்களுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் சார்பு நிலை அல்லது செயல்படா நிலை எடுத்து பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்கள். வேலையை முடித்து விட்டு வந்து நிறுவனத்தின் வாயிலில் நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிடுவது மற்றும் வேகத்தை, உற்பத்தியை குறைத்தல் போன்ற கவன ஈர்ப்பு போராட்டங்களாகட்டும், உள்ளிருப்பு வெளியிருப்பு மற்றும் உண்ணாவிரதம் போன்ற வேலை நிறுத்தம் போராட்டமாகட்டும், ஜனநாயகமானவையே. இதற்கு நிர்வாகம் கொடுக்கும் தண்டனை வேலை நீக்கம். இதற்கு தொழிலாளர் நல ஆணையாளர் மற்றும் அமைச்சகம் சொல்வது கோர்ட்டில் சேலஞ்ச் செய்யுங்களென்று. கூடுதலாக நம் காவல் துறையும் சில பலா பலன்களை நிறுவனத்திடம் எதிர்பார்த்தோ அல்லது எங்கிருந்தோ வரும் உத்தரவுப்படியோ தொழிலாளர்கள் மீது மிரட்டல் வழக்குகளை போடுகிறது. இன்றும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மிரட்டல் வழக்குகளுக்காக நீதி மன்றத்திற்கும், காவல் நிலையத்துக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். மிரட்டல் உண்மையென்றால் அவர்களின் மீது நிர்வாகமே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். வழக்கு என்பது தவிர்க்கப் பட வேண்டியது.
பன்னாட்டு தொழிலாளர் நல நிறுவனத்தின் (ILO) அழுத்தத்தால், வளைகுடா நாடுகளின் தொழிலாளர் நல அமைச்சகங்களும் சில பெருந்தொழிற்சாலை நிர்வாகங்களும் இணைந்து தொழிற் சங்கங்களை ஆரம்பிக்க ஊக்குவித்து வருகிறது. தொழிலாளர்கள் சுதந்திரமாக குழுவாக இணைந்து தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க, சமஉரிமைகளடைய, நல்வாழ்வு பயன்கள் மற்றும் ஊதியங்களை ஒட்டு மொத்த பேரங்களில் பெற, நாடு தழுவிய அல்லது உலகளாவிய மைய அமைப்புகளுடன் இணைந்துக் கொள்ள பன்னாட்டு தொழிலாளர் நல நிறுவனம் இதற்கு விதிகளையும் வழி காட்டுதல்களையும் வகுத்திருக்கிறது.
ஒரு புதிய தொழிற்சாலை தொடங்கும் போது, முதலில் தொழிலாளர்களுக்கு பயிற்சிகள்… அடுத்து வணிகஉற்பத்தி தொடங்குவார்கள். அப்போதே தொழிற் சங்கத்தையும் தொடங்க, தொழிலாளர்களை நிர்வாகம் ஊக்கப் படுத்த வேண்டும். நிர்வாகமே தகுதியான ஆலோசகர்களின் துணை கொண்டு தொழிற் சங்கம் தொடங்க, பதிவு செய்ய, அவர்களுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க பயிற்சி அளிக்க வேண்டும். தொழிற்சாலையின் குறிக்கோள்கள் மற்றும் தொழிற்சாலையின் வளர்ச்சியின் மூலம் தான் தொழிலாளர்கள் வளர முடியும் என்ற புரிதல்களை ஏற்படுத்த வேண்டும். எப்படி குறைகளை நிர்வாகத்துக்கு எடுத்துரைப்பது, தொழிற்சாலையின் விதிகள் மற்றும் அவற்றை பின்பற்றுவது போன்ற பயிற்சி அளிக்க வேண்டும். இந்த புரிந்துணர்வு இருந்தாலே தொழிற் சங்கத்தை தவறாக பயன் படுத்தும் வாய்ப்பு குறையும். தவறு செய்த தொழிலாளர்களின் மீது எடுக்கப் படும் ஒழுங்கு நடவடிக்கைக்கு எதிராக போராட மாட்டார்கள். நிர்வாகத்துக்கும் தொழிலாளர்களுக்குமிடையே எப்பொழுதும் நல்ல சுமூகம், பரஸ்பர நம்பிக்கை இருக்கும். அனைத்து தொழிலாளர்களுக்கும் நிபுணத்துவ மற்றும் பாதுகாப்பு பயிற்சிகளை நிர்வாகம் பாரபட்சமின்றி அளிக்க வேண்டும். பத்து வருடம் தொடர்ந்து பணியாற்றும் ஒரு தொழிலாளி ஒரு பொறியாளனுக்கு சமம். அங்கே அவனுக்கு பதவி உயர்வு அளிக்கப் பட வேண்டும். ஆனால் ஒரு தொழிலாளி எந்த நிபுணத்துவ பயிற்சியும் மற்றும் பதவி உயர்வும் இல்லாமல் தொழிலாளியாகவே ஒய்வு பெறுகிறான் என்பதே நிஜம்.
பொதுவாக தொழிற்சாலை ஆரம்பித்தவுடன் தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கிறார்கள். 240 நாள் வேலை முடிந்தவுடன் ஒப்பந்தத்தை ரத்து செய்து ஒரு மாத இடைவெளி விட்டு மறு ஒப்பந்தம் செய்கிறார்கள். அவர்களில் யார் நல்ல அடிமைகளாக இருக்கிறார்களோ, அவர்களை பணி நிரந்திரம் செய்வார்கள். அனைத்து விதத்திலும் அவர்களுக்கான உரிமை மறுக்கப் படுகிறது அல்லது தாமதிக்கப் படுகிறது. நன்றாக இறுக்கி, வரிந்து, வரிந்து கட்டப் பட்ட வெடி மருந்து தானே நன்றாக வெடிக்கிறது.…. கையால் அமுக்கப் பட்ட ஸ்ப்ரிங், கையைப் பிளந்து கொண்டு வெளி செல்கிறது.… அது போல, மனித உரிமை மறுப்பு அத்து மீறல் போன்ற ஒரு சிலரின் ஆயுதங்களால் விரட்டப் படும் பெரும்பான்மை நிராயுதபாணிகள், அழிவு அவலம் போன்ற முட்டுச் சந்தின் சுவற்றில் முட்டி தங்களை திரட்டிக் கொண்டு திருப்பி அடிக்கிறான். அப்போது தன் பலத்தை ருசிக்கிறான். விதிகளை மீறுகிறான். பீடத்தில் அமர்ந்தவனை நம்ப மறுத்து வெறுக்கிறான். அதிலிருந்து நிர்வாகமும் தொழிற் சங்கமும் அவநம்பிக்கையின் மீது அமர்ந்து கொள்வதால் அமைதியும், சுமுகமும் கெட்டுப் போய் விடுகிறது. இந்த சந்தர்ப்பத்தை மனிதவள அதிகாரிகள் நன்றாக பயன் படுத்திக் கொண்டு சுமுகத்தை மேலும் சிதைத்து நிர்வாகத்தை பிடிகொள்கிறார்கள். நிறுவனத்தின் தூண்கள் எனப்படும் தொழிலாளிகள் மற்றும் முதலீட்டாளர்களிடம் விரிசலை உண்டாக்குகிறார்கள்.
தற்போதைய மனிதவள பற்றாக்குறை சூழ்நிலையில், குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. இந்த மாதிரி விஷயங்களை, முதலீட்டாளர்களிடம் நிர்வாகிகள் தெரிவிப்பது நடைமுறை. அதற்கு முதலீட்டாளர்களோ “நீங்கள் என்ன செய்வீர்களோ செய்யுங்கள், ஊதியத்தைக் கூட்ட வேண்டுமானால் கூட்டுங்கள். எங்களுக்குத் தேவை நிறுவனம் வளரவேண்டும், நம்முடைய தயாரிப்புகள் சந்தையை ஆக்கிரமிக்க வேண்டும், இலாபமும் வேண்டும்“. குறிப்பாக என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில், அனுமானத்தில் பெரு மற்றும் நடுவாந்திர முதலீட்டாளர்களின் நிலைப்பாடு இதுவாகத் தான் இருக்கும். இலாபம் பாதிக்காமல் தொழிலாளர்களின் ஊதியங்களை கூட்ட வேண்டுமானால், நிர்வாகிகள் சிலவிஷயங்களை செய்ய வேண்டும். மதிப்பு கூட்டிய தரமான தயாரிப்புகளை உற்பத்திசெய்வது, மனித ஆற்றலைக் கூட்டாமல் தயாரிப்புகளின் வடிவமைப்பையும் செய்முறைகளையும் மாற்றி உற்பத்தியைப் பெருக்குவது, அதிக உற்பத்திக்கான சந்தையை தேடுவது, தேவையற்ற செலவினங்களை குறைப்பது போன்ற நடவடிக்கைகள். இது நிர்வாகிகளின் வேலைப் பளுவை அதிகமாக்கும். ஆனால் நிர்வாகிகளின் குறுக்குவழியோ, அதிக உழைப்பை உறிஞ்சி குறைந்த ஊதியத்தை தருவதுதான். நிர்வாகிகளுக்கு எப்பொழுதுமே அதிக உபரி நேரம் கிடைக்கும். அந்த உபரி நேரத்தைக் கொண்டு அறிவை நுட்பத்தை விசாலமாக்குகிறார்கள். தங்களுக்குள்ளே அதிகார அரசியல் லாபிகளை செய்து, நிறுவனத்திற்குள் அதிகாரத்தை வெளிக் காட்ட முயற்சிக்கிறார்கள். தவறுகளை மறைக்க முயல்கிறார்கள். தொழிலாளிகளுக்கு இந்த வாய்ப்பு என்றுமே கிட்டாது.
நிறுவனம் கடன்களையும், வட்டிகளையும், தேய்மானத்தையும் (Depreciation cost) சரிக்கட்டி லாபம் பார்க்க ஆரம்பித்தவுடன் முதலீட்டாளர்களின் மறைமுக சுரண்டல் ஆரம்பித்து விடும். அந்நிறுவனத்தின் தொழில் நுட்பத்தை வேறு சகோதர நிறுவனத்திற்கோ அல்லது வெளி நிறுவனத்திற்கோ கொடுத்து ராயல்டியை பதுக்கி விடுவார்கள். முதலீட்டாளர்களின் மற்ற நிறுவனங்களை மூடும் போது, அதன் பழைய இயந்திரங்களை அதிக விலை கொடுத்து வாங்க நிர்வாகிகளை நிர்பந்திப்பார்கள். மேலும் நிறுவனத்துக்கு தொடர்பில்லாத செலவினங்கள். இந்தமாதிரி பல சுரண்டல்கள் லாபத்தை குறைத்து தொழிலாளர்களின் பயன்களை பாதிக்கும். தொழிற் சங்கம் என்றாலே நிர்வாகத்திலும் பங்கெடுப்பவர்கள் என்ற பொறுப்பு இருப்பதால், நிறுவனத்தின் பேலன்ஸ் சீட்டை தொழிற் சங்க மக்கள் குடைய ஆரம்பித்து குறைகளை சுட்டுகிறார்கள். இதை நிர்வாகமும், முதலீட்டாளர்களும் விரும்புவதில்லை.
புதிதாக தொழிற் சங்கம் தொடங்கும் தொழிலாளர்களுக்கு வெளி ஆலோசகர்கள் மற்றும் அமைப்புகளின் உதவி அவசியம். சில வெளி ஆலோசகர்கள் யூனியன் கமிட்டியை முன்னிறுத்தாமல், தாங்களாகவே நிர்வாகத்தை மிரட்டுவார்கள் அல்லது தொழிலாளிக்கு பாதகமான ஆலோசனையை வழங்குவார்கள். ஏற்கனவே யூனியன் ஆரம்பித்ததை, ஏதோ குற்றச் செயலென்று நினைத்து அலர்ஜியினுடன் இருக்கும் நிர்வாகமும் பதிலுக்கு சுமுகத்தை தாறுமாறாக்கி விடுகிறது. குறிப்பாக நெய்வேலி மின் நிலையம் மற்றும் போக்குவரத்து தொழிற் சங்கங்களை ஆட்சியிலிருக்கும் அய்யாவோ அம்மாவோதான் கட்டுப் படுத்துகிறார்கள். அனைத்து தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைகளும் சிக்கல்களும் ஒன்றல்ல. நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்களின் சமூக, பொருளாதார, கலாச்சார காரணங்கள் மற்றும் தயாரிப்புகளின் மதிப்பு லாபங்களால் வேறு வேறானவை. பொது நிறுவனங்களின் ஊதியங்களும், நலப்பயன்களும் தனியார் துறையால் தர முடியாது. அதனால் அவர்களின் பிரச்சனையைப் பேச, முடிவெடுக்க மற்றும் ஒப்பந்தம் போட தொழிற் சங்கத்திற்குத்தான் அதிக அதிகாரங்கள் இருக்க வேண்டும். வெளித் தொடர்புகள் யூனியனுக்கு சட்ட ஆலோசனைகள் மற்றும் தார்மீக ஆதரவு வழங்கலாம். பிரச்சனைகள் பெரிதாகும்போது அரசாங்கம் தலையிட வற்புறுத்தலாம். ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் யூனியன் இருந்தால் அவர்களுக்கிடையே ஒத்துணர்வு குறைந்து விடுகிறது. சில கட்சி யூனியன்கள் வடதென் துருவங்களாக செயல் படுகின்றன. உனக்கு ஒத்துப் போவதெல்லாம் எனக்கு ஒத்துக்காது என்ற போக்கு. சில நேரங்களில் குழுவன் முறையும் நடக்கிறது. குழப்பமான சூழ்நிலையை நிர்வாகம் தனக்குச் சாதகமாக பயன்படுத்தி பிரித்தாழ்கிறது.
இன்றைய பார்வையில் என்னுடைய புரிதல் இது. பத்து வருடத்திற்கு முந்தைய என் புரிதல் வேறாகத்தான் இருந்தது. நான் நிற்கும் இடத்தின் சுழலுக்கு தகுந்த மாதிரி என் பார்வையின் கோணம் மாறுவது சரியா என்று தெரியவில்லை.
கதிர், ஒமன்.
மதிப்புக்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கட்கு,
இடதுசாரி அரசியல், மார்க்சியம் பற்றிய தாங்கள் பதிவு குறித்து நட்பு ரீதியான ஒரு உரையாடலும், கருத்துப் பரிமாற்றமும் தேவைப் படுகிறது.
முன்னதாக, தற்போது மேற்குலகில் நடைபெற்று வரும் ஒரு விவாத நிகழ்வை தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
தங்களது பதிவில் மார்க்சியம் குறித்து தாங்கள் முன்வைத்த அதே போன்ற விமர்சனங்களை, டெர்ரி ஈகிலேடன்(Terry Eagleton) என்ற பிரசித்திப் பெற்ற மார்க்சிய பண்பாட்டு விமர்சகர் தனது சமீபத்திய “Why Marx was right” எனும் நூலில் விவாதிக்கிறார். பத்து விமர்சனக் கருத்தாக்கங்களை எடுத்துக் கொண்டு மார்க்சியத்தின் இன்றைய பொருத்தப் பாட்டினை நிறுவுகிறார்.
உதாரணமாக, நீங்கள் முன்வைத்த விமர்சனத்தின் நீட்சியாக கீழ்கண்ட மறுப்பை எடுத்துக் கொள்ளலாம்.
Objection: Marxism believes in an all-powerful state. Having abolished private property, socialist revolutionaries will rule by means of despotic power, and that power will put an end to individual freedom. This has happened wherever Marxism has been put into practice; there is no reason to expect that things would be different in the future. It is part of the logic of Marxism that the people give way to the party, the party gives way to the state, and the state to a monstrous dictator. Liberal democracy may not be perfect, but it is infinitely preferable to being locked in a psychiatric hospital for daring to criticize a savagely authoritarian government.
இந்த மறுப்பை மறுத்து ஆசிரியர் வாதங்களை அடுக்குகிறார்.
கீழ்க் கண்ட மறுப்பும் உங்கள் வாதத்துடன் சேர்ந்ததாக தோற்றமளிக்கிறது.
Marx was a materialist. He believed that nothing exists but matter. He had no interest in the spiritual aspects of humanity, and saw human consciousness as just a reflex of the material world. He was brutally dismissive of religion, and regarded morality simply as a question of the end justifying the means. Marxism drains humanity of all that is most precious about it, reducing us to inert lumps of material stuff determined by our environment. There is an obvious route from this dreary, soulless vision of humanity to the atrocities of Stalin and other disciples of Marx.
இதையும் ஆசிரியர் மறுத்து எழுதுகிறார்.
(உங்களது மார்க்சிய எதிரிகளின் வாதங்களோடு ஒப்பிடுவதாக எண்ண வேண்டாம். ஆனால், இடதுசாரிகள் மத்தியில் எழும் விமர்சனங்களை செழுமைப் படுத்தி மார்க்சியத்தை தூற்றிட எதிரிகள் பயன் படுத்துவது வழக்கம்.)
நூலிலிருந்து தங்களது விமர்சனத்தையொட்டிய சில மேற்கோள்களை அளித்துள்ளேன்.
“But the so-called socialist system had its achievements, too. China and the Soviet Union dragged their citizens out of economic backwardness into the modern industrial world, at however horrific a human cost; and the cost was so steep partly because of the hostility of the capitalist West.”
“Building up an economy from very low levels is a backbreaking, dispiriting task. It is unlikely that men and women will freely submit to the hardships it involves.”
“Revolution is generally thought to be the opposite of democracy, as the work of sinister underground minorities out to subvert the will of the majority. In fact, as a process by which men and women assume power over their own existence through popular councils and assemblies, it is a great deal more democratic than anything on offer at the moment. The Bolsheviks had an impressive record of open controversy within their ranks, and the idea that they should rule the country as the only political party was no part of their original programme.”
சமூக வரலாற்று இயக்கம், சமூக மாற்ற இலட்சியவாதம் குறித்த தர்க்கரீதியான, தரமான விவாதங்களும், விமர்சனங்களும் அரிதாகிப் போன தமிழ் அறிவுலகத்தில் மேற்கண்ட தங்களது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறேன். இது மார்க்சியத்திற்கும், மார்க்சிய இயக்கங்களுக்கும் பலம் சேர்க்குமே தவிர பலவீனப் படுத்தாது. அடுத்து தங்களது விமர்சனங்கள் குறித்த கருத்துக்களை தங்களுக்கு தெரிவிக்கிறேன்.
நன்றி.