மார்க்ஸியம்-கடிதங்கள்

நமது இடதுசாரிகளிடம் எதிர்பார்ப்பது என்ன?

ஜெ,

வணக்கம்! நலமா? நீங்கள் எதிர் பார்ப்பது, இடது சாரிகளால் எப்போதும் நிறைவேற்ற இயலாது என்பது என் கருத்து! எளிமை என்ற தன்மை ஒன்று மட்டுமே அவர்களின் நல்லியல்பு! ஆனால் அது ஒன்று மட்டுமே  போதாது! எனக்கு அவர்களைப் பற்றிய எதிர்மறை அனுபவங்களே உள்ளது! எங்கள் மாவட்டம் அவர்களால் அழிந்து
இருக்கும்! கல்வி, உழைப்பு, தொழில் போன்றவை மூலம் சிறிது சிறிதாக மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன!
அன்புடன்!
தண்டபாணி!

*

எங்கோ படித்தது

“உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்”  என்றார் கார்ல் மார்க்ஸ்ஆனால் உலக முதலாளிகள் ஒன்று சேர்ந்து விட்டனர்.

கார்திக்

*

அன்புள்ள ஜெ

இடதுசாரிகள் பற்றிய எனது கடிதத்திற்கு மிக விரிவான ஒரு கட்டுரையையே பதிலாக எழுதியிருப்பதற்கு நன்றி.
மார்க்ஸிய இடதுசாரி அரசியலின் இன்றைய நடைமுறை சிக்கல்களை நீங்கள் எழுதியிருப்பதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். அதற்கு விளக்கமளிப்பதும், வழக்கமான தனிப்பட துவேஷத்துடன் உங்களைத் தாக்கி பேசாமல் ஆரோக்கியமான நோக்கத்துடன் இதை விவாதிப்பதும் தான் உண்மையான இடதுசாரிகளின் கடமை என்று நினைக்கிறேன். அப்படிப்பட்ட விவாதங்கள் வழியாகவே என்னைப் போன்ற இடதுசாரிகளின் மீது மதிப்பு கொண்டவர்களுக்கு மேலும் தெளிவான பாதைகள் விரியும் என்றும் நம்புகிறேன்.
உங்களது மூன்றாவது குற்றச்சாட்டான ”இடதுசாரிகள் நம் பாரம்பரியம் மீதும், பண்பாடு மீதும் கொண்டுள்ள எதிர்மறைப் பார்வை சார்ந்தது” என்பதை பற்றி மட்டும் என் அனுபவத்தை சொல்ல நினைக்கிறேன். சிறுவயதில் அருமனை மற்றும் நாகர்கோவில் சுற்று வட்டார கோயில் திருவிழாக்களில் நடக்கும் குறத்தி களி, ஓட்டந்துள்ளல், கணியான் கூத்து, வில்லுப் பாட்டு இன்ன பிற நாட்டார் கலைகளை கண்டு வியந்திருக்கிறேன் அவை நம் மக்களின் பண்பாட்டின் வேர்களை, கதைகளை எனக்கு சொன்னவை. இப்படி நமது பண்பாட்டின் ஆழங்களை நமக்கு கலைகள் மற்றும் உத்சவங்களின் வழியாக கடத்துவதில் கோவில்களின் பங்கு மிக முக்கியமான ஒன்று. இடதுசாரிகளின் மீது மதிப்பு கொண்ட பின்னும் எனக்கு இந்த நம்பிக்கையில் மாற்றமில்லை. சுஜித் மாமா போன்றவர்களும் இதை தடுக்கவில்லை. ஏன் நானும் அவருமே எத்தனையோ இரவுகள் பல கோயில்திருவிழாக்களை சைக்களிலும், தோட்டு வரம்புகள் வழியாக நடந்தும் போய் பார்த்திருக்கிறோம்.

நீங்கள், மற்றும் பவா.செல்லத்துரை போன்ற நான் மதிக்கும் படைப்பாளிகளின் பங்களிப்புகளுடன், தமிழகத்தில் ஒரு அலை போல தொண்ணூறுகளில் எழுந்த இடதுசாரி கலை இரவுகளில் தான் பிற தமிழக நாட்டார் கலைகளைப் பிறகு கண்டு வியந்தேன். ஓம் முத்துமாரி போன்ற மக்களின் கலைஞர்களையும், தப்பாட்டம் போன்ற பிற தமிழகப் பகுதிகளை சேர்ந்த நமது பண்பாட்டின் நாட்டாரியல் கலைகளையும் கண்டு ரசித்திருக்கிறேன்.

மதபிடிப்புள்ள தினமும் கோவிலுக்கு சென்று குளித்து தொழுதுவிட்டு வரும் எனது சில நண்பர்களை விட கோயில்கள், சிற்பங்கள், நாட்டார் கலைகள் மீது இப்போதும் ஆர்வமுள்ளவனாகவே  நான் இருக்கிறேன். இடதுசாரிகள் மீதான மதிப்பும், சிந்தனையும் என் பண்பாட்டுடன் உள்ள தொடர்பையும் அதன் மீதான மதிப்பையும் எந்த விதத்திலும் கெடுத்து விடவில்லை என்றே நான் நினைக்கிறேன். மலைக்காட்டு குளிர் அடர்த்தியாக இறங்கி நின்ற வயநாட்டின் திருநெல்லி கோவிலின் முன்பு, பண்பாட்டின் ஆழங்களை எண்ணி உடல் சிலிர்த்து நின்றதற்கு எந்தவிதத்திலும் ஒரு இடதுசாரி மனோபாவம் (பொருள் முதல் வாதம்) தடையாக இருக்கவில்லை என்பதையும் இங்கே நினைவு கூர்கிறேன்.

அன்புடன்
சந்தோஷ்


http://ensanthosh.wordpress.com/

அன்புள்ள சந்தோஷ்

கொஞ்சம் வருத்தம்.

நீங்கள் கேட்ட கேள்விக்கு நீண்ட பதிலை அளித்திருந்தேன்.

உண்மையில் அந்தக்  கேள்விக்கு  இப்போது சொன்ன எல்லாவற்றையும் அதற்கு முன்னரே மார்க்ஸியம் இன்று தேவையா என்ற கட்டுரையிலேயே பதில் சொல்லியிருந்தேன் .  பல கட்டுரைகளில் நீங்கள் இப்போது சொல்லியிருப்பவற்றுக்கு மிக விரிவான பதில் உள்ளது.

நான் சொல்வது மார்க்ஸியர்கள் தனிப் பட்டமுறையில்  சாமி கும்பிடுகிறார்களா , நாட்டுப்புற கலைகளை ரசிக்கிறார்களா என்றெல்லாம் அல்ல. தனிப் பட்டமுறையில் அவர்களில் பெரும்பாலானவர்கள் அப்படி  இல்லை என நானும்  அறிவேன்.

அவர்கள்  ஒரு கருத்துத் தரப்பாக  இந்திய மரபுக்கு இது வரை அளித்து வந்துள்ள விளக்கம் என்பது அதன் ஆழத்தை உதாசீனம் செய்து, அதை சிறுமை செய்வதாகவே உள்ளது என்பதுதான்.   அவர்களின் மரபெதிர்ப்பு நோக்கு என்பது ஒட்டு மொத்த பண்பாட்டு  நிராகரிப்பாக உள்ளது என்பதுதான். அதை விரிவாகவே பேசியிருந்தேன். ஆர்வமிருந்தால் நீங்கள் ராகுல சாங்கிருத்யாயனில் இருந்து வாசிக்க ஆரம்பிக்கலாம்.

நடைமுறையிலும் அந்த நோக்கு  அவர்களை எப்படி இந்துத்துவ எதிர்ப்பு என்ற பேரில் இந்து மரபு மீதான எதிர்ப்பாக ஆக்கியிருக்கிறதென சொல்லியிருந்தேன். அதுதான் அப்துல் நாசர் மதனியை ஆதரிப்பது வரை கொண்டு வந்து விட்டிருக்கிறது

ஜெ

முந்தைய கட்டுரைபரிந்துரை
அடுத்த கட்டுரைஈழம்,கடிதங்கள்