கொற்றவை-கடிதம்

அன்புமிக்க ஜெயமோகன்,
வணக்கம்.பாலையில் வசித்த பிராமணர்கள் வாமாச்சார வழிபாட்டு
முறையைப் பின்பற்றியவர்களாக இருக்கலாம்.அதிலும் போக நிலையிலிருந்து மேற்செல்லாதவர்களாக இருந்திருக்கக் கூடும்.

அதேபோல சிலம்பில் எனக்கு சுவாரசியம் தரும் பகுதிகளில் ஒன்று
மாதவியை “பெருந்தோள் மடந்தை”என்று இளங்கோவடிகள்
வர்ணிப்பது.”சிறப்பிற் குன்றா செய்கையிற் பொருந்திய
பிறப்பிற் குன்றா பெருந்தோள் மடந்தை”.தோள்வலிமை ஆடவர்களின் இலக்கணமாகப் பேசப்பட்டு வரும் வர்ணனை மரபில்இது வித்தியாசமாக இருந்தது.

மரபின் மைந்தன் முத்தையா

 

அன்புள்ள முத்தையா,

பெருந்தோள் என்ற வர்ணனை வேறெங்கும் இல்லையா? உங்களைப்போன்ற தமிழறிஞர்களே சொல்லும்போது ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கும் ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. ஆனால் ‘பணைத்தோள்’ என்ற வர்ணனை சங்க இலக்கியத்தில் உண்டு இல்லையா?

ஜெ

 

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் தற்போது வாசிக்க கொற்றவை வாங்கி வைத்திருக்கிறேன்.தாங்கள் கொற்றவை
நாவல் எழுதும் போது இளையராஜாவின் ஒரு பாடலை
திரும்பத் திரும்ப ஆயிரம் தடவைக்கும் மேலாக கேட்டதாக
குறிப்பிட்டிருந்தீர்கள். அந்தப் பாடல் எது என குறிப்பிட்டால் நாவலைப்
படிக்கும் போது தாங்கள் எழுதும் போது அடைந்த மனஎழுச்சியில் சில
சதவீதங்களையாவது நானும் பெற முயற்சி செய்ய ஏதுவாகும். நன்றி

கு.மாரிமுத்து

அன்புள்ள மாரிமுத்து,

இலக்கிய ஆக்கம் பற்றிய முற்றிலும் பிழையான ஒரு பார்வையில் இருந்து எழும் வினா இது. ஒரு இலக்கிய ஆக்கம் தன்னளவில் முழுமையானது. அதற்கு  அதை எழுதியவனின் ஆளுமையின் துணை தேவை இல்லை. அவனுடைய விளக்கம், அவனுடைய வாழ்க்கைக் குறிப்பு, அது எழுதப் பட்ட விதம் எதுவும் அதை மேலதிகமாக விளக்கி விடுவதில்லை. அது முன் வைப்பவை எல்லாமே அதிலேயே இருக்கும்

ஓர் இலக்கியப் படைப்பின் ஆசிரியனைப் பற்றிய அல்லது அவனுடைய ஆக்கத் தன்மை பற்றிய தகவல்கள் எல்லாமே புறமே உள்ளவை. அவை கலைஞன், கலை பற்றிய சில தெளிவுகளை அளிக்கின்றன அவ்வளவு தான். அவற்றைத் தனியாகவே விவாதிக்க வேண்டும். ஒருபோதும் அந்த இலக்கிய ஆக்கத்துடன் பொருத்திக் கொள்ளக் கூடாது. அது மிக, மிகப் பிழையான வாசிப்பையே உருவாக்கும்

நான் அந்நாவலை கறுப்பு டீ சாப்பிட்டபடி எழுதியிருக்கலாம். எழுதிய போது மழை பெய்திருக்கலாம். ஆகவே நீங்களும் கறுப்பு டீயும், மழையும் இருந்தால்தான் புரிந்து கொள்ள முடியும் என்பதுண்டா?

உண்மையில் அந்தப் பாடலின் துணை இல்லாமல் அந்நாவல் உங்களுக்கு அனுபவம் எதையும் அளிக்கவில்லை என்றால் வாசிப்பதை விட்டு விடலாம். இப்போதைக்கு அதற்குள் நுழையும் நிலையில் நீங்கள் இல்லை என்பதே அதன் பொருள்

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

உண்மையில் தங்களின் புனைவுகளுக்கு நான் முழுமையாக ஆட்பட்டிருக்கும் காலமிது. வாசிப்பனுபவத்தினூடே இசையனுபவமும் சேர்த்தனுபவிக்கும்
பேரார்வத்தால் எழுந்த கேள்வி மட்டுமே அது. அதனுடைய அபத்தம் இப்போது புரிகிறது.
என் கேள்வி சிறு சலிப்பை உங்களுக்கு ஏற்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்.
தங்களின் எழுத்தினூடாகவே உங்களை நிறுவிக் கொள்கிறீர்கள்.
நன்றி

கு.மாரிமுத்து

 

அன்புள்ள மாரிமுத்து

சலிப்பெல்லாம்  இல்லை. உங்களை குழுமத்திலும் அறிந்தவன் அல்லவா? வாசிப்பின் ஆரம்ப நிலைகளில் உருவாகும் பிழைகள் அஸ்திவாரப் பிழைகளாக ஆகி விடும். ஆகவே அவற்றை கறாராக களைந்தாக வேண்டும்.  அதனால்தான்  மொத்தமாக அந்த பிரச்சினையைப் பற்றி எழுதினேன். உங்கள் நினைவில் அது நின்றாகவேண்டுமென்பதற்காக அந்த கூர்மை

நான் நம்பவும், நேசிக்கவும் கூடியவர்களிடமே அத்தகைய கூரிய பதிலைச் சொல்வேன்.

ஜெ


கொற்றவை ஒரு கட்டுரை

சிலம்பு ஒருகடிதம்

கொற்றவை ஒருகடிதம்

விஷ்ணுபுரம் கொற்றவை கடிதங்கள்

கண்ணகி நடந்த மதுரை

கொற்றவை கடிதங்கள்

கொற்றவை

கொற்றவை- மரபின் மைந்தன்

திட்டமிடலும் தேர்ச்சியும் இணைந்த எழுத்து- அ.ராமசாமி

கொற்றவை ஒரு பச்சோந்திப்பார்வை-ராம்பிரசாத்

கொற்றவை கோசம்பி-அரவிந்தன் நீலகண்டன்

தமிழின் நல்லூழ் கொற்றவை-இரா சோமசுந்தரம்

தமிழ்நேயம் கொற்றவை சிறப்பிதழ்

கொற்றவை ஒரு கடிதம்

சிலப்பதிகாரம் ஒரு புதிய பதிப்பு

 

முந்தைய கட்டுரைஈழப் படுகொலைகள்,காலச்சுவடு
அடுத்த கட்டுரைபரிந்துரை