கழு, கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

பீடம் கதையை ஏற்கனவே படித்துள்ளேன்.சென்றமுறை படித்தபொழுது கடிதம் எழுதவில்லை.இன்று மீண்டும் படித்தேன். எழுகிற கேள்வி யார் இந்த கழுமாடன்? அவன் எப்படி தெய்வமாக மாறுகிறான்? காந்தியும் ஒரு கழுமாடனா? மானுடநிரை இன்றுவரை எத்தனை கழுமாடன்களை கண்டுள்ளது? கவிஞர் மரபு, குரு மரபு போல் கழுமாடன் மரபும் இங்குள்ளதோ?அத்தனை கழுமாடன்களும் ஒன்றா?.

யார் இந்த கழுமாடன்?

நாம் அனைவரும் தான். அளவுகளில் வேறுபாடு இருக்கலாம். பொறுத்துப்போகிற மனம் எதோ ஒரு நொடியில் நிமிர்ந்து எழும் தரும் யாவரும் கழுமாடனே!. மனதின் இருளை, இவ்வெளியின் செயற்கையான மேடு பள்ளங்கள் உருவாக்கும் சோர்வை, சூழல் உண்டாக்கும் வெற்றுத்தடையை மீற துணியும் யாவரும் கழுமாடனே!

அவன் எப்படி தெய்வமாக மாறுகிறான்?

தெய்வம் ஒரு நினைவுப்பொருள். நமக்குள் உள்ள உன்னதத்தை நமக்கு நினைவு படுத்தும் ஒரு தூண்டல்.கழுமாடன்கள் கொஞ்சம் பெரிய உன்னதத்தை ஒரு கூட்டத்துக்கு நினைவுபடுத்துகிறான். பின் தெய்வம்தானே!

காந்தியும் ஒரு கழுமாடனா?

கொஞ்சம் பெரிய, இந்தியா நன்றாக அறிந்த, உலகம் தெரிந்து கொண்ட, வேறு நாட்டு மக்களும் கொண்டாடிய கழுமாடன்.

மானுடநிரை இன்றுவரை எத்தனை கழுமாடன்களை கண்டுள்ளது?

சிலை முன் நின்று  தெய்வத்திடம் ஒரு குழந்தை கேட்கிறது. உனக்கு எங்களை எவ்ளோ பிடிக்கும்?. தெய்வம் இறங்கிவந்து, இரண்டு கையையும் விரித்து காண்பிக்கிறது. இரு கைகளும் விரிந்துகொண்டே செல்கிறது. அத்தனை கழுமாடன்கள் வந்துகொண்டே இருப்பார்கள்.

கவிஞர் மரபு, குரு மரபு போல் கழுமாடன் மரபும் இங்குள்ளதோ?

பரிணாமம் என்பது உயிரியலின் மரபு. இங்கு அத்தனையும் அதன் முந்தியவற்றின் மரபு. விதிகள் கழுமாடன்களுக்காக தளர்வதில்லை.

அத்தனை கழுமாடன்களும் ஒன்றா?.

ஆம். இல்லை. சுண்டனும், உருமனும் ஒன்றா? இவர்கள் இருவரும் காந்தியும் ஒன்றா? ஒரே பாதையில் வெவ்வேறு வாகனத்தில் செல்லும் பயணிகள்.

அன்புடன்,

மோகன் நடராஜ்

***

அன்புள்ள ஜெ

கழு, பீடம் என்னும் இரண்டு கதைகளையும் வாசித்தேன். தமிழக தலித் இலக்கியப் புலத்தில் எழுதப்பட்ட கதைகள் எதற்கும் இல்லாத வீரியம் உள்ள கதைகள் அவை. தன்னை கழுவிலேற்றிக்கொண்டு பழிவாங்குபவன். அதுதான் ஒடுக்கப்பட்டவனின் வஞ்சம். அந்த பீடத்தில் வந்து தலைமுறை தலைமுறையாக அமர்பவர்கள். எதிர்ப்பு என்பதை இத்தனை தீவிரமாக அண்மையில் எழுதிய கதைகள் வேறு இல்லை.

கே.ராஜேந்திரன்

விஷ்ணுபுரம் பதிப்பகம்

[email protected]

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

முந்தைய கட்டுரைவிபுலானந்தரும் க.நா.சுவும்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஜமீன்தாரிணி உரை