குருகு

செங்குருகு
செங்குருகு

விடுமுறைக்கு அஜிதன் ஊருக்கு வந்திருக்கிறான்.  கூடவே இருந்து பேசிக் கொண்டிருக்கிறான். அவன் வாசிக்கும் புத்தகங்களுக்கும், அவற்றை அவன் விவாதிக்கும் விதத்துக்கும், அவனுடைய பேச்சின் மழலைக்கும் சம்பந்தமே இல்லை. இன்னும் பயலுக்கு ட வருவதில்லை ர தான்.  ரிச்சர்ட் டாக்கின்ஸின் பரிணாமத்தைப் பற்றிய நூலை  [The Greatest Show on earth] எனக்கு விவரித்துக் கொண்டிருந்தான். மொத்தத்தில் எனக்கு புரிந்தது பரிணாமவாதிகளிலேயே டார்வின்வாதிகளுக்கும் மெண்டல்வாதிகளுக்கும் நடுவே நுட்பமான ஒரு பிரிவினையும், உள் விவாதமும் உண்டு என்பதே. டாக்கின்ஸ் மெண்டல்வாதி. நான் பாதிநேரம் மழலையைத் தான் ரசித்துக் கொண்டிருந்தேன்.

இந்த உயிர்க் குலமே ஓர் அலகிலா விளையாட்டு என்ற எண்ணத்தையே சுற்றி விரிந்த வெளி மலையடுக்குகளும், வயல்வெளியும், மரங்களும், பறவைகளும் உருவாக்கின. அதில் ஒரு துளியே நான்.  ஆம், வானில் பறக்கும் புள்ளெலாம் நான்’ பரிணாமம் என்பது இயந்திர வளர்ச்சி அல்ல. அது ஒரு லீலை. விளையாட்டு என்பது ஒவ்வொரு கணமும் புதியன நிகழ்வதன் மூலமே அர்த்தம் பெறக் கூடிய ஒன்று.

கணியாகுளம் பாறையடியின் விரிந்த வயல் வெளியை ஊடறுத்து ஓடும் ஓடையின் இருகரைகளிலும், அடர்ந்த நாணலும், தாழையும்.  கோடையானாலும் நீரோட்டம் கொஞ்சம் இருந்தது.  செந்தவிட்டு நிறமான கூர் அலகுள்ள ஒரு சிறிய பறவை சட்டென்று டிராக் என்ற தொண்டை ஒலியுடன் தபதபவென பறந்து ஓடைக்கு மறுபக்கம் சென்று புதருக்குள் மறைந்தது. பறவையியல் அஜிதனின் பொழுதுபோக்கு. ‘அது என்னடா பறவை?’ என்றேன். ‘அது சின்னமன் பிட்டர்ன்…[ Cinnamon Bittern] தமிழிலே அதுக்கு  செங்குருகுன்னு பேரு’ என்றான்

நான் ‘குருகுன்னா கொக்குதானே?’ என்றேன். உடனே சந்தேகம் வந்தது ‘குருகுன்னா நாரைன்னும் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன்’ அஜிதனுக்கும் அவனது மானசீக ஆசானாகிய தியோடர் பாஸ்கரனுக்கும் குனிய வைத்து கும்முவதற்கு வாகான பிடியை நானே கொடுத்து விட்டேன். ஆரம்பித்து விட்டான்.

‘அப்பா, சங்கப் பாட்டுகளை வாசிக்கணும்னா இயற்கையை கொஞ்சமாவது தெரிஞ்சிருக்கணும். அவங்கள்லாம் கற்பனையிலே எழுதி விடலை. எழுதினவங்க விவசாயி, கொல்லன் இந்தமாதிரி ஆளுங்க. அவங்க கண்ணு முன்னாடி பாத்ததைத் தான் எழுதினாங்க. பொதுவா பழங்குடிகள் எதையுமே நேரிலே பாத்து அதைத்தான் சொல்லுவாங்க. சங்க இலக்கியத்திலே உள்ள பாட்டெல்லாம் அப்டித்தான்னு தியோடர் பாஸ்கரன் சொல்றார். ஆனா பின்னாடி வந்த புலவர்களுக்கு ஒரு அனுபவமும் கெடையாது. அவங்க எழுதினதை வச்சு இவங்க இஷ்டத்துக்கு வெளையாடினாங்க. இப்ப பாதி பேருக்கு சங்கப் பாட்டையே புரிஞ்சுகிட முடியல்லை’’

‘குருகுன்னா இந்த பறவையத்தான் சொல்லியிருக்காங்களா?’ என்றேன். ‘கண்டிப்பா. நீ வேணுமானா பாரு. நான் எட்டு பாட்டு ரெஃப்ர் பண்ணியிருக்கேன்.  எந்தப் பாட்டிலேயும் குருகு சாதாரணமா பறந்திட்டிருந்ததா இருக்காது. குருகு ரொம்ப அபூர்வமான பறவை அப்பா. வயலிலேயே நாளெல்லாம் வேலை செய்றவங்க கூட வருஷத்துக்கு ஒருவாட்டிகூட பாக்க முடியாது. ரொம்ப ஷை டைப். ஓடைக் கரையில புதருக்குள்ள ஒளிஞ்சு உக்காந்திருக்கும். மீன், நண்டு எல்லாம் புடிச்சு திங்கும். சத்தம் போடுறதே கெடையாது. சங்க காலத்திலே உள்ள பாட்டுகளிலே அதோட இந்த நேச்சரைப் பத்தித்தான் எப்பவும் சொல்லியிருப்பாங்க’

அவன் சொன்னதை வைத்துப் பார்த்தால் குருகு இயல்பான ஒரு பறவையாக அல்லாமல் அபூர்வமான ஒரு பறவையாகவே சொல்லப் பட்டிருக்கும். சட்டென்று நினைவில் வந்தது கபிலரின் குறுந்தொகைப் பாடல்.

“யாரும் இல்லை; தானே கள்வன்;

தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?

தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால

ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்

குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே!”

[குறு – 25]

[வேறு யாருடனும் அல்ல, தனக்குத் தானே தான் பொய் சொல்கிறான். அவன் அப்படி பொய் சொன்னால் நான் என்ன செய்வேன்?  நான் அவனைச் சேர்ந்த அந்நாளில் தினைச்செடியின் அடித்தாள் போல் சிறிய மென்மையான கால்கள் கொண்டதும், ஒழுகும் நீரில் ஆரல்மீனை பார்த்து அமர்ந்திருந்ததுமான குருகும் அருகே இருந்தது].

ஆச்சரியம்தான். சாதாரணமான இருந்த கவிதை இந்த உட்குறிப்பு ஏறியவுடன் சட்டென்று மேலெழுந்து விட்டது. எல்லா உரைகளிலும் நான் அவனை புணர்ந்த போது அருகே இருந்த கொக்குதான் சாட்சி அதற்கு என்ற எளிய விளக்கமே இருக்கும். அதில் ஆழமான கவித்துவமும் இல்லை. கொக்கு எங்கும் இருப்பதுதான்

ஆனால் குருகு என்னும் போது கதையே வேறு. அது கண்ணில் படுவதற்கு மிகமிக அபூர்வமான பறவை. அது மட்டுமே சாட்சி என்பதில் உள்ள துயரம் பல மடங்கு கனமானது. அந்த அபூர்வமான சாட்சியை எங்கே போய் பிடிப்பது? குருகு புதருக்குள் வெகுநேரம் அமைதியாக பதுங்கியிருக்கும். அந்த உறவின் அதி ரகசியத் தன்மைக்கு அதை விட நல்ல குறிப்பு வேறு இல்லை.

ஓர் அபூர்வமான கவிதையை அதில் இருக்கும் நுண்ணிய இயற்கைக் குறிப்பு தெரியாமல் இதுவரை இழந்திருந்தோமா என்ன? குருகை தேடி  கையில் கிடைத்த பிறபாடல்கள் வழியாகச் சென்றேன்.

’எறிசுறவம் கழிக்கானல் இளங்குருகே என்பயலை

திருத்தோணிபுரத்துறையும் வெறிநிறார் மலர்க்கண்ணி

வேதியர்க்கு விளம்பாய்’

[தாக்கும் சுறா மலிந்த கழிநீர் சோலையில் வாழும் இளம் குருகே என் பிரிவு நோயை திருத்தோணி புரத்தில் வாழும் செந்நிறமான மலர் மாலை அணிந்த வேத முதல்வனிடம் சென்று சொல்ல மாட்டாயா?]

என்று ஞானசம்பந்தரின் வரிகளில் குருகு நெய்தல்நிலத்தைச் சேர்ந்ததாக சொல்லப் படுகிறது. ஆனால் கடலில் அல்ல. கழிக்கானல் என தெளிவாகவே அது நதிமுகத்தை சேர்ந்தது என்று கூறுகிறது. குருகு சங்கப் பாடல்களில் பெரும்பாலும் தாழைப் புதர்களுடன் சம்பந்தப் படுத்தப் பட்டே சொல்லப் படுகிறது. அதன் விவரணைகளில் வெண்குருகு அதிகமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மையில் மஞ்சள் குருகு.  தாழை பூப்பொதியை தன் இணையென நினைத்து குருகு மயங்குவதாக சங்கப் பாடல் சொல்கிறது. தாழைப்பூவின் பொன் மஞ்சள் நிறமே மஞ்சள் குருகின் நிறம்.

குருகு என்பதற்கு சங்கு என்றும் பொருள் உண்டு. குருகு என்ற சொல்லுக்கு சுருண்டது, குறுகியது, சுருக்கமானது என்ற பொருள். சிறிய பறவையானதனால் இப்பெயரா? நரைத்திருப்பதனால் நாரை என்பது போல. அல்லது கொக்கில் இருந்து வேறுபடுத்திக் கொள்வதற்காக நாரை என்றும் குருகு என்றும் குணப் பெயர்களை சூட்டினார்களா?

குருகு பற்றிய வர்ணனைகளில்

கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்

ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்

[கோழி சத்தமிட குருகும் எங்கும் சத்தமிடுகிறது.  ஏழ்நரம்புள்ள யாழ் இசைபாட வெண்சங்கும் முழங்குகிறது]

என்று குருகின் ஒலியை சிலம்புதல் ஒலி என்று திருவெம்பாவை சொல்கிறது. அதன் குரல் இனியதல்ல. அது கோழியின் குரல் போல காதுகளை உரசிச் செல்லும் ஒலிதான். தினையின் தாள் போன்ற கால்கள் கொண்டது என்றும் அகவல் ஒலி எழுப்புவது என்றும் கபிலன் குருகை விவரிக்கிறான்.

குருகூர் என்பது ஆழ்வார் திருநகரியின் பெயர். நம்மாழ்வாரின் மூதாதையரான திருவழுதி வளநாடனின் பாட்டனராகியக் குருகன் என்ற அரசன் இத்தலமிருந்த பகுதியைச் தலைநகராகக் கொண்டு ஆண்டமையால் அவன் நினைவாக குருகாபுரி ஆயிற்று என்று சொல்லப் படுகிறது. குருகு என்ற தமிழ்ச் சொல்லுக்கு நாரை, கோழி, சங்கு என்ற பல பொருளுண்டு. சங்கு இத்தலத்திற்கு வந்து மோட்சம் பெற்றதாலும் குருகூர் ஆயிற்று என்பதுண்டு.

ஆனால் குருகு என்ற பறவையில் இருந்தே குருகூர் என்ற சொல் வந்திருக்கும் என்பதற்கான ஆதாரம்  கம்பன் சடகோபர் அந்தாதியில் ‘கயல் குதிப்ப திரங்குங் கழை நெடுந்தாளிர்தொடுத்த செந்தேனுடைத்து பரக்கும் பழன வயற்குருகூர்’ என்று சொல்லியிருப்பதுதான். இன்றும் ஆழ்வார் திருந்கரி இருப்பது குருகு வாழும் ஓடைகளும், வயல்களும் மண்டிய தாமிரவருணிக்கரைச் சூழலில் தான்.

குருகு நாரை [Heron ] குடும்பத்தைச் சேர்ந்த சிறிய பறவை. அதிகம் பறக்காமல் தாவிச் செல்லும் பறவை இது. குட்டையான கழுத்துள்ளது. கனத்த குரைப்புக் குரல் எழுப்பி, சிறகடித்து புதரிலிருந்து இன்னொரு புதர் நோக்கி பறந்து செல்லும். இந்தியாவில் செங்குருகு [ Cinnamon Bittern]  மஞ்சள் குருகு [ Yellow Bittern]  கருங்குருகு [Black Bittern]ஆகியவை பரவலாகக் காணப் படுகின்றன. ஒருமுறை பார்த்தபின் என் வீட்டு கொல்லைப் பக்கத்தின் புதருக்குள்ளேயே ஒன்றைப் பார்த்தேன்.

அப்படியானால் நான் இது வரை வாசித்த சங்கப் பாடல்களை சரியாகத் தான் புரிந்து கொண்டிருக்கிறோமா,  நாம் இயற்கையில் இருந்து விலகும் தோறும் நம்முடைய மரபுச் செல்வங்களான சங்கப் பாடல்களும் பொருளிழந்து போய் விடுமா என்ற பீதி எனக்கு ஏற்பட்டது. அதற்கேற்ப விக்கிப்பீடியாவின் பயனர் பேச்சு பகுதியில் குருகு என்பது கூழைக் கடா தான் என்ற அபத்தமான விவாதத்தைக் கண்டு திகில் கொண்டேன்.

’பழந்தமிழில் இதனைக் குருகு என்று அழைத்துள்ளார்கள். கூழைக்கடா என்பது தற்காலத்தில் வழங்கும் பெயர். கூழை என்பது வால் குட்டையாகவோ வாலே இலாமலோ இருக்கும் விலங்கைக் குறிக்கப் பயன்படும் சொல். இங்கு குட்டையாகவும், வால் குறுகியும் இருப்பதால் இதனை கூழைக்கடா என்கிறார்கள்’ என்று விக்கி விவாதத்தில் இருக்கிறது. [பயனர் செல்வா]. ஆச்சரியமாக இருந்தது. கூழைக்கடா என்பது  Pelican பறவைக்கான பெயர். தென் மாவட்டங்களில் மிகப் பிரபலமான பெயர் இது. வெண்ணிற உடலும் விறகு போல பெரிய அலகும் கொண்ட இந்தப் பெரிய பறவை குமரி மாவட்டம் முழுக்க வந்து செல்லக் கூடிய ஒன்று.

கூழைக்கடா
கூழைக்கடா

 

முனைவர் பட்ட களப்பணிக்காக மேற்கு மலைகளில் இருக்கும் கார்த்தி என்ற ஆய்வாளரிடம் தொடர்பு கொள்ளும் விக்கி பயனர்குழு அவர் குருகு அல்லது குருட்டுக் கொக்கு எனப்படும் பறவை Indian Pond Heron என்பதாக இருக்கலாம் என்று சொன்னதாக குறிப்பிடுகிறது. குருட்டுக் கொக்கு என்று குருகு சொல்லப் படுவதுண்டு. காரணம் அது புதர்களுக்குள் கண்ணுக்கு தெரியாமல் அமர்ந்திருப்பதனால் தான்.

மீண்டும் ஐயம் கொண்டு அஜிதனிடம் கேட்டேன் ’பிட்டர்ன் தான் குருகு என்று உன்னிடம் யார் சொன்னது?’  என்று. கோபத்துடன் ‘யார் சொல்லணுமோ அவங்க. இங்க வயலிலே வேலை செஞ்சிட்டிருந்த தலித் பெரியவர் சொன்னார்’. ஆம், அப்படியென்றால் சரியாகத் தான் இருக்க வேண்டும்.

ஆனால் அவருடைய தலைமுறையும் மறைந்த பின்னர் நாம் சங்கப்பாடல்களின் வார்த்தைகளை மட்டும் வைத்துக்கொண்டு மயிர்பிளந்து ஆராய்ச்சி செய்துகொண்டிருப்போம் போலும். வேதங்களைப்போல சங்கப்பாடல்களும் அப்போது மர்மமான அர்த்தங்கள் கொண்ட நூல்களாக ஆகிவிட்டிருக்கும். விதவிதமாக உரைகள் எழுதலாம். சடங்குகளுக்கு  மந்திரங்களாக பயன்படுத்தலாம்.

மறுபிரசுரம் – முதற்பிரசுரம் May 9, 2011 

பழைய பண்பாட்டுக் கட்டுரைகள்

கூந்தப்பனை

இலையப்பம்

தாலப்பொலி

தெரளி

சேட்டை

 

முந்தைய கட்டுரைமழையில் முளைப்பவை- கடிதம்
அடுத்த கட்டுரைஏழாம் உலகம், வாசிப்பு