உலகின் மிகச்சிறந்த காதல்கதை – டெய்ஸி

அன்புள்ள ஜெ

ரஷிய இலக்கியங்களை பற்றி நிறைய படித்திருந்தாலும் மொழிபெயர்ப்பு புத்தகங்களைப் படிக்க ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. “போரும் அமைதியும்”, “அசடன்” ஆகியவைகளை எடுத்துப் பார்த்துவிட்டு வைத்து விடுவேன். போன வாரம் “அன்னா கரினினா” பயந்து கொண்டே எடுத்தேன். மூன்றே நாட்களில் படித்து முடித்துவிட்டேன். இரவில் எல்லாரும் தூங்கின பிறகுதான் படிக்க ஆரம்பிப்பேன். நேரம் போனதே தெரியாமல் வாசித்து விட்டு காலையில் அலுவலகம் போக வேண்டுமே என்று அரை மனதாய் தூங்கினேன். உள்ளுக்குள் அப்படியே இழுத்துக் கொண்டது.

1875-77 வருடங்களில் எழுதப்பட்டது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் புத்தம் புதியதாய், எந்த நாட்டின் பின்புலத்தோடும் இணைத்துப் பார்க்கக் கூடியதாய் உள்ளது. உலகின் மிகச் சிறந்த காதல் கதை என்று அட்டையில் உள்ளது. ஆனால் இது வெறும் காதல் கதை மட்டும் அல்ல.

பெரிய இயற்கை வர்ணனைகள் இல்லை. சுற்றுப்புறத்தைப் பற்றிய விளக்கங்கள் இல்லை. வெறும் மனிதர்களும் அவர்கள் மன ஓட்டங்களும், மனநிலைகளும்தான். ஒரு காரியம் நம் மனதில் உச்சமாய் இருக்கும்போது அதைப் பற்றி நாம் சிந்திப்பதும், அந்த உச்சநிலையில் இருந்து இறங்கியதும் அதே காரியம் நமக்கு என்னவாய் தோன்றுகிறது என்பதும் மிக அழகாய் விவரிக்கப் பட்டுள்ளது.

வெளி நாடுகளில் இருப்பவர்களைப் பற்றி நாம் நினைத்துக் கொள்கிறோம். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழ்வார்கள். யாரோடு வேண்டுமானாலும் சேர்ந்து வாழ்வார்கள். நாம் சொல்கிற கலாச்சார சிக்கல்கள் அவர்களுக்கு இல்லை. எத்தனை கணவர்கள், மனைவிகள் வேண்டுமென்றாலும் பிரச்னை இல்லை. இதெல்லாம் நமது அறியாமைதான். அவர்களுக்கும் கலாச்சார சிக்கல்கள் உண்டு. விவாகரத்து செய்ய வலுவான காரணம் வேண்டும். விவாகரத்து செய்யாமல் அடுத்த ஆணோடு சேர்ந்து வாழ்ந்து பிறக்கும் குழந்தைகள் கணவனின் வாரிசாகவே கருதப்படும் என்பதெல்லாம் ஆச்சரியமாய் இருந்தது.

நான் சிறு பிள்ளையாய் இருந்தபோது எங்கள் வீட்டை எப்போதும் பூட்டினது கிடையாது. எப்போதும் யாராவது ஒருவர் வீட்டில் இருப்பார்கள். அப்பாவும், பெரிய அண்ணனும் வேலை முடிந்து வந்தால் வீட்டை விட்டு நகர மாட்டார்கள். பகல் ஷிப்ட், நைட் ஷிப்ட் என்று யாராவது ஒருவர் வீட்டில் இருப்பார்கள். எனக்குத் தெரிந்து நாங்கள் வீட்டை பூட்டிவிட்டு போனது எங்க மாமா பையனின் திருமணத்திற்கு. அந்தத் திருமணத்தில் அத்தையுடைய சகோதரியின் பெண் 17 வயதானவள் மிக மிக அழகிய பெண். திருச்சியில் கலைக்காவிரி என்னும் ஒரு இசை நடனக் கல்லூரி உள்ளது. அதில் படிக்கும் பெண்கள் சீருடையாய் சுடிதார் அணிந்து புடவை முந்தானைப் போல ஷால் போட்டு இடுப்பை சுற்றி அணிந்திருப்பார்கள். எங்களுக்கெல்லாம் அந்த சீருடை அணிந்த பிள்ளைகளைப் பார்க்கவே ஆசையாய் இருக்கும்.

அப்போதெல்லாம் நாங்கள் பாட்டு, டான்ஸ் என்று கேட்டிருந்தால் பெட்டியில் வைத்து குழியில் இறக்கியிருப்பார்கள். அந்தப் பெண் அப்பொழுது கலைக்காவிரியின் புகழ் பெற்ற நடனக் குழுவைச் சேர்ந்தவள். அதனால் அவளுடைய உடை, நகைகள், ஒப்பனை எல்லாம் மிக அழகாய் அவளைக் காட்டியது. என் உறவின் முறை உள்ள பையன்கள் எல்லாம் அவளைச் சுற்றித்தான் இருந்தார்கள். கல்யாண வீட்டிலேயே அவளுக்கு நிறைய திருமண பேச்சு வந்தது. ஆனால் அவள் இருப்பதிலேயே கடைந்தெடுத்த ஒரு அயோக்கியனை காதலித்து திருமணம் செய்து கொண்டு மிகச் சிறிய வயதிலேயே செத்துப் போனாள். இந்தக் கதையின் அன்னாவை நான் அந்த பெண்ணோடு சேர்த்துப் பார்த்துக் கொண்டேன்.

கதாநாயகி அன்னா. பரிசுத்தமான தூய அழகு கொண்டவள். கொஞ்சம் அன்னாவைவிட வயது கூடிய கணவன் கரீன். செரிஜா எனும் அழகிய குழந்தை. நல்ல சமூகத்தில் ஓரளவு மேல்படியில் உள்ள குடும்பம். கணவனுக்கு நல்ல அரசாங்க உத்யோகம். எல்லோரும் பார்த்து பொறாமைப்படக் கூடிய வாழ்க்கைதான் அன்னாவினுடையது. தன் தம்பியின் குடும்பத்தின் பிரச்சனையை (தம்பியின் கள்ள உறவு) தீர்ப்பதற்கு அவர்களின் வீட்டிற்கு வரும் அன்னா தன் தம்பி மனைவியின் தங்கையின் (கிட்டி) காதலனை (விரான்ஸ்கி), ஏறக்குறைய திருமணம் நிச்சயிக்கப்படப் போகிற நேரத்தில் கவர்ந்து கொள்கிறாள். இதில் முரணாய் தம்பியும் அவள் மனைவியும் கடைசி வரை பிரியவே இல்லை.

கிட்டிக்கு துரோகம் இழைக்க வேண்டும் என்றோ, தன் கணவன் கரீனை ஏமாற்ற வேண்டும் என்றோ திட்டம் எதுவும் போடாமல் ரொம்ப இயல்பாய் அதை செய்கிறாள். கணவனோடு இருந்து கொண்டே விரான்ஸ்கி கூடவும் உறவில் இருக்கிறாள். கிட்டி கடைசி நிமிடத்தில் அவள் திருமணம் மாறி வேறு பாதையில் போனதும் அவள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப் படுகிறாள். கரீன் எல்லாம் தெரிந்து கொண்டாலும் அன்னாவை எச்சரிக்கிறான். மற்றபடி அவன் கடிந்து கூட ஒன்றும் சொல்வதில்லை. மனைவியின் பிறழ் உறவு தெரிந்தும் அந்த நேரத்திலும் கண்ணியத்தைக் கடைபிடிக்கிற கணவனை அவள் எப்படி விரும்ப முடியும்.

கணவனின் வீட்டில் இருந்துகொண்டே காதலனின் குழந்தையை பெற்றெடுக்கிறாள். பிரசவ நேரத்தில் மரணத்தைத் தொட்டு மீள்கிறாள். அந்த நேரத்தில் கணவனின் அருகாமையை மட்டுமே விரும்புகிறாள். அவனும் முழு மனதோடு மன்னிக்கிறான். உடல் தேறியதும் கைக்குழந்தையை மட்டும் எடுத்துக் கொண்டு காதலனோடு வீட்டை விட்டு வெளியேறுகிறாள். அதன்பின் விரான்ஸ்கி ஒரு செல்ல நாய்க்குட்டிபோல் அவள் கூடவே இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள். அவனுக்கு என்று ஒரு பொழுது போக்கு, நண்பர்கள், அவனுடைய குடும்ப உறுப்பினர்கள் எதுவும் அவனுக்கு இருக்கக் கூடாது என்று அவனைக் கசக்கி பிழிகிறாள். கொஞ்சம் நேரம் கழித்து அவன் வீட்டிற்கு வந்தாலும் அவன் வேறு யாரோடோ தொடர்பில் இருக்கிறான், என் மேல் இருந்த நேசம் போய்விட்டது என்று மருகுகிறாள். இன்னும் தன்னை கவர்ச்சியாய் காட்டிக் கொள்கிறாள். ஆனால் விரான்ஸ்கி அவள் மேல் மாறா காதல் கொண்டவன். ஒரு நேரம் அவள் தரும் துன்பம் தாளாமல் அவளிடம் கோபம் கொண்டாலும் அவளின் அழகிய முகத்தைப் பார்த்ததுமே மறுபடி மறுபடி பணிந்தே போகிறான். அன்னாவைப் போல் அடுத்த உறவுகளில் (வெளியே தெரியாமல்) இருப்பவர்கள் அவளை அவமானப்படுத்துகிறார்கள். ஆனால் அவளுடைய நெருங்கிய உறவினர்கள் எல்லாருமே அவளை பார்க்காதபோது திட்டினாலும் அவளைக் கண்டவுடன் அவளின் அழகு அவர்களை வேறு விதமாய் பேச விடவில்லை.

மனைவியாய் இருக்கும்போது சாதாரணமாய் உள்ள பெண்கள் இப்படி வேறு ஒரு உறவில் இருக்கும்போது ஏன் மாறிப் போகிறார்கள். அவர்களுக்கே தெரிகிறது. இது உண்மையான நேசம் இல்லை. பால் கவர்ச்சி மட்டுமே. எப்போது வேணுமானாலும் இது தீர்ந்து போகும் என்று உள்ளூர உணர்ந்து கொண்டே வருகிறார்கள் என்றே நான் நினைத்துக் கொள்கிறேன்.

கிட்டியை ஒரு தலையாய் காதலித்த லெவின் அவள் மனம், உடல் தேறி வந்ததும் அவளை அணுகி திருமணம் செய்து கொள்கிறான். கிட்டி முதலில் இருந்தே யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் ஈரெட்டாய் இருக்கிறாள். ஆனால் லெவின் கிராமத்தான். விரான்ஸ்கி நாகரீகமானவன். எனவே அவனைத் தேர்கிறாள். பிறகு மனம் மாறி உண்மையாகவே லெவினை நேசித்து அவனைப் பிடித்துக் கொள்கிறாள். இந்த நாவலில் லெவின்தான் இயல்பாய் இருக்கிறான். கிட்டி இல்லை என்றதும் மனதில் அவளை எதிர்மறையானவளாக நினைத்துக் கொள்கிறான். திட்டுகிறான். வேறு வேறு காரியங்களில் மனதைப் பிரயாசைப் பட்டு செலுத்திக் கொள்கிறான். அவள் தனியாய் இருக்கிறாள் என்று அறிந்ததும் மறுபடியும் முயற்சி செய்யலாமா என்று நினைக்கிறான். இப்பொழுது அவளை நேர்மறையானவளாக நினைத்துக் கொள்கிறான். திருமணம் தேதி நிச்சயித்த உடன் அந்த நாட்களில் வளையத்தை தாண்டக் கற்றுக்கொண்ட நாய் ஒன்று சரியாய் தாண்டியதும் அதற்கு ஏற்படக் கூடிய குதூகலம் தனக்கு கிடைத்திருப்பதாய் எண்ணிக் கொள்வது மட்டுமல்லாமல் மற்றவர்களிடமும் சொல்கிறான்.

திருமணம் முடிந்ததும் மனைவி யாரிடமாவது சிரித்துப் பேசினால் கோபம் கொள்கிறான். தனக்கு வேறு எந்தப் பெண் மேலாவது ஒரு சாய்வு ஏற்பட்டால் அதையும் உடனே மனைவியிடம் சொல்லி பாவமன்னிப்பு வாங்கிக் கொள்கிறான். மனைவியின் குடும்பத்தினரை நேசிக்கிறான். வீட்டில் கூப்பிட்டு உபசரிக்கிறான். கஷ்டப்படும் தன் மச்சினிக்கு உதவுகிறான். அன்னா செய்த தவறால் பாதிப்புக்கு உள்ளாகவேண்டிய கிட்டி ஒரு லட்சியக் கணவனைக் கண்டு கொள்கிறாள். அவளைப் பொறுத்த வரையில் அவளுக்கு அன்னா செய்தது ஒரு நல்ல காரியம்.

இந்த நாவலில் எல்லோரும் ஒருவரை ஒருவர் நல்ல கிறிஸ்தவ தர்மத்தின்படி நடந்து கொள்ளுங்கள், மன்னியுங்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அப்படி எல்லாரும் எல்லோரையும் மன்னித்து விடமுடியுமா? இப்பொழுதும் திருப்பலியில் மன்னிப்பின் மேன்மைகளைப் பற்றித்தான் பிரசங்கம் செய்கிறார்கள். இயேசு கிறிஸ்து சொன்னவைகளில் மிகவும் எளிமையாய்த் தோன்றுகின்ற காரியங்கள்தான், கடைபிடிக்க மிகவும் அரிதானவைகள். “உலகெங்கும் போய் நற்செய்தியை அறிவித்து எல்லா இனத்தாரையும் என் சீடராக்குங்கள்,” இது ரொம்ப சுலபமாய் செய்யக்கூடிய ஒரு காரியமாய் எப்பொழுதும் இருக்கிறது. “உன்னை நேசிப்பது போல் உன் அயலானை நேசி” என்பதும் ஏழெழுபது முறை (கணக்கில்லாதமுறை) பிறரை மன்னியுங்கள் என்பது மிக மிக கஷ்டமானது.

இந்த நாவலில் என்னை மிகவும் பாதித்த என்னுடையதாய் மாறிப் போன ஒரு வசனம் “விவேகமானவர்கள் புத்திசாலித்தனமுள்ளவர்களிடம் இருந்து இதை மறைத்து வைத்தீர்கள். குழந்தைகளுக்கு இதை சொல்லிக் கொடுத்தீர்கள்.”

முதன்முதலில் அன்னா இந்த நாவலில் அறிமுகம் ஆகும்போது ஒரு ரயில் விபத்து. கடைசியில் அவளே ரயிலில் பாய்ந்து உயிரை விடுகிறாள். எதுவும் தற்செயல் இல்லை என்பது போல மேலே இருந்து பார்க்கிறவர்களின் நாடக மேடை போல இந்த பூமியில் நம் வாழ்க்கை இருக்கிறது. நீங்க சொல்வது போல “மேல உள்ளவன் களிக்குதான்.”

படித்து முடித்து 3 நாட்கள் ஆனாலும் வெளியே வர முடியவில்லை.

டெய்ஸி.

***

முந்தைய கட்டுரைகரசூர் பத்மபாரதி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎஸ்.ராமகிருஷ்ணன்கள்