ஈழப் படுகொலைகள்,காலச்சுவடு

காலச்சுவடு இதழ் சார்பில் இந்த பொதுக் கடிதம் எனக்கு வந்து சேர்ந்தது.  பொதுவாக இவ்வகை விஷயங்களில் தலையிடக் கூடியவனல்ல நான் என்றாலும் இந்த கடிதம் அளித்த மன வேதனை அதிகம். ஆகவே இதை விவாதத்திற்கு முன் வைக்கிறேன்.

*

அன்புள்ள நண்பரே

காலச்சுவடு சார்பாக 8.5.2011 அன்று சென்னை தி.நகர் செ.நெ.தெய்வநாயகம் மேல்நிலைப் பள்ளியில் நடை பெறுவதாக இருந்த ஈழம் சிங்கத்தின் நகங்கள் என்னும் தலைப்பிலான ஐ.நா.போர்க் குற்றம் தொடர்பான அறிக்கை குறித்த விவாத அரங்கு ரத்து செய்யப் பட்டுள்ளது. இது தொடர்பான பொறுப்பாசிரியரின் அறிக்கை இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. இத்தகவலை மற்ற நண்பர்களுக்கும் தெரியப் படுத்துமாறு அன்புடன் கோருகிறேன்.

இக்குறுகிய கால அறிவிப்பால் ஏற்படும் சிரமங்களுக்காக வருந்துகிறோம்.

தேவிபாரதி

பொறுப்பாசிரியர்,

காலச்சுவடு

 

சுற்றறிக்கை

===========

அன்பிற்குரிய வாசகர்களுக்கு,

 

கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக நடைபெற்று வரும் ஈழத் தமிழர்களின் அரசியல் வாழ்வுரிமைப் போராட்டங்களில் காலச்சுவடு செலுத்தி வந்துள்ள ஈடுபாடும் அக்கறையும்  நினைவூட்டக் கூடிய அளவுக்குப் பழமையானதல்ல. இந்த உண்மையைக் காலச்சுவடோடு தொடர்புடைய வாசகர்கள், படைப்பாளிகள், அறிவுத் துறை நண்பர்கள் நன்கறிவார்கள். ஈழப் பிரச்சினையின் அனைத்துப் பரிமாணங்களையும் விருப்பு வெறுப்பற்ற இதழியல் நேர்மையோடு பதிவு செய்து வந்திருக்கிறது காலச்சுவடு. வாசகர்கள் தம் எதிர்வினைகள், விவாதங்கள் மூலம் அவற்றைச் செழுமைப் படுத்தி விரிவு படுத்தியிருக்கிறார்கள். ஈழப் பிரச்சினை சார்ந்து முன்வைக்கப் பட்ட மாற்றுக் கருத்துகளுக்கான இடம் மறுக்கப் பட்டதுமில்லை. இதழியல் சார்ந்த பதிவுகள் தவிர காலச்சுவடு, கருத்தரங்குகள், விவாத அரங்குகள் வாயிலாகவும் அத்தகைய உரையாடல்களை ஒருங்கிணைத்து வந்திருக்கிறது.  ஈழப் பிரச்சினை தொடர்பான உரையாடல்களைத் திமுக அரசு கடுமையாகத் தடுத்து வந்த ஒரு கட்டத்தில், சென்ற 2010 ஜூலை மாதத்தில் காலச்சுவடு பதிப்பகத்தால் நடத்தப்பட்ட எட்டு ஈழ நூல்கள் வெளியீட்டு விழா அத்தகைய உரையாடல்களுக்கான வெளியை உருவாக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.  1988 முதல் 2009வரை காலச்சுவடில் இடம்பெற்ற ஈழம் தொடர்பான அரசியல் பதிவுகள் ‘சிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும்’, ‘போரும் வாழ்வும்’ என்னும் தலைப்புகளில் இரு தொகுதிகளாகச் சென்ற ஆண்டு வெளியிடப் பட்டமை, காலச்சுவடின் ஈழம் தொடர்பான அக்கறைக்கு வலுவான சான்று.

அவ்வகையில் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப் பட்ட இலங்கைப் போர்க் குற்றங்கள் பற்றிய அறிக்கையின் மீதான ஒரு விவாத அரங்கை 08.05.2011 அன்று ‘ஈழம்: சிங்கத்தின் நகங்கள்’ என்னும் பெயரில் நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்தோம். எழுத்தாளர்கள் பா. செயப்பிரகாசம், இராஜேந்திர சோழன், பேராசிரியர் வி. சூரியநாராயண், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான ச.பாலமுருகன்,  டாக்டர் பால் நியூமென், பத்திரிகையாளர் ப்ரியா தம்பி ஆகியோர் அவ்விவாத அரங்கில் பங்கு கொள்வதற்கு இசைந்தனர்.

கூட்டம் பற்றிய தகவல்கள் வந்தவுடனேயே இணையத்திலும், வலைப்பூக்களிலும், நேரடியாகவும், தொலைபேசி வாயிலாகவும் அதற்கெதிரான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப் பட்டதை அறிந்தோம். கூட்டத்தில் பங்கேற்க இசைவு தெரிவித்திருந்த பால் நியூமென்,  காலச்சுவடு இலங்கைத் தமிழர்கள் நலனில் அக்கறையற்ற ஒரு இதழ் எனத் தன் நண்பர்கள் சொன்னதாலும் வி. சூரியநாராயண் அவர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொள்ள முடியாது எனக் கூறிக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது எனத் தெரிவித்தார். பிறகு நடைபெற்ற தீவிரமான எதிர்ப்பிரச்சாரத்தின் விளைவால் கூட்டத்தில் பங்கேற்கவிருந்த இராஜேந்திர சோழன் அவர்களும் தன் மறுப்பைத் தெரிவித்தார். ச. பாலமுருகன் தயக்கத்துடன் தன் மறுப்பைத் தெரிவித்தார். பா.செயப்பிரகாசம்  கூட்டத்தை ஒத்தி வைக்கலாம் என ஆலோசனை கூறினார்.

மிகக் குறுகிய கால அவகாசமே இருந்ததால் எங்களால் காவல் துறை அனுமதியும் பெறமுடியவில்லை. கூட்டத்திற்கெதிரான தீவிரப் பிரச்சாரம், பங்கேற்பாளர்கள் மீதான அவதூறுகள், நேரடியான, மறைமுகமான மிரட்டல்கள் முதலான எதிர்ப்பாளர்களின் பாசிசப் போக்குகள் கூட்டம் ஆரோக்கியமான விவாதத்திற்கு வழி வகுக்கும் என்னும் நம்பிக்கையை உருவாக்கவில்லை. கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்குப் பாதுகாப்பற்ற  நிலை உருவாக்கப் பட்டிருப்பதையும் அனுமானித்தோம். பங்கேற்பாளர்களில் நான்கு பேர் வர மறுத்து விட்ட நிலையில் மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கான அவகாசமும் எங்களுக்கில்லை. விவாத அரங்கை வன்மத்தின் ஊற்றுக் கண்ணாக மாற்றி அதன் மூலம் மாற்றுக் கருத்துகளுக்கான வெளியை அழிக்க நினைக்கும் முயற்சிகளுக்குத் துணை போக எங்களுக்கு விருப்பமும் இல்லை. எனவே வரும் ஞாயிறன்று நடைபெறவிருந்த கூட்டம் ரத்து செய்யப் படுகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இலங்கை அரசின் போர்க் குற்றங்களை அம்பலப் படுத்துவதற்கான வாய்ப்பைக் கொண்டிருந்த ஒரு கூட்டத்துக்குத் தமிழ் உணர்வாளர்களே தடையாக இருப்பது நகை முரண்.

எங்கள் அழைப்பை ஏற்று வருகை தரச் சம்மதித்த பங்கேற்பாளர்களுக்கும் கூட்டம் நடத்துவற்கான அரங்கைத் தந்துதவிய செ. நெ. தெய்வநாயகம் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்துக்கும் ஒத்துழைத்த அனைத்து நண்பர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தேவிபாரதி,

பொறுப்பாசிரியர், காலச்சுவடு.

*

இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்று எளிதில் அறிய முடிந்தது. காலச்சுவடு நடத்தும் கண்டனக் கூட்டம் மூலம் அந்த இதழுக்கு அதைச் சார்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் வந்து விடக் கூடாது என்ற நோக்கத்துடன் திட்டமிட்டு இம்முயற்சி குலைக்கப் பட்டிருக்கிறது. இதைச் செய்தவர்கள் இங்கே தங்களை மட்டுமே ஈழ விஷயத்தில் அக்கறை கொண்டவர்களாக முன்வைக்க விரும்புகிறார்கள். அதாவது ஒரு தொழில் மீதுள்ள காப்புரிமைபோலவே இதை அவர்கள் காண்கிறார்கள்.  ஆகவே முழுக்க, முழுக்க அவதூறுப் பிரச்சாரம் மூலம் இந்த முயற்சியை வெற்றிகரமாக தோற்கடித்து விட்டார்கள்.

இதை ஈழ நண்பர்கள் கவனிக்க வேண்டும் என்றே இதை எழுதுகிறேன். தமிழகத்தில் இருந்து ஈழப் படுகொலைகளுக்கு எதிராக சுதந்திரமான அமைப்பு சார்ந்து எழுவதற்கிருந்த முதல் குரல், முதல் கூட்டம், நிறுத்தப் பட்டு விட்டது. அனேகமாக இதுவே ஒரே கூட்டமாகவும் இருக்கும். மேற்கொண்டு சில அரசியல் கட்சிகளின்  போலிக்குரல்கள் அல்லாமல் வேறெந்த முறையான எதிர்ப்பும் எழப்போவதில்லை.  அவை எவராலும் கவனிக்கப் படவும் போவதில்லை.

இப்போதே காலம் கடந்து விட்டது. இன்று வரை தமிழகத்தில் ஒன்றும் நிகழவில்லை. இனி இந்த விஷயம் இப்படியே மறக்கப் பட்டு விடும். தமிழ்ச் சமூகத்தின் எதையும் கவனிக்காத லௌகீக ஓட்டத்தில் இது ஒரு நினைவாகக் கூட எஞ்சப் போவதில்லை.

பதிலுக்கு இந்த காப்புரிமை கொண்டவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? மிகையுணர்ச்சி கொண்ட சொற்களைக் கொட்டுவார்கள். ஆங்காங்கே கூடி எதையாவது முழங்குவார்கள். இது சம்பந்தமாக ஒருவர் என்னிடம் சொன்னார் ‘ஈழ மக்கள் அழிவதை எதற்காக பார்ப்பன இதழ் கண்டிக்க வேண்டும்?’ என்ன விசித்திரமான தர்க்கம்?  ஈழ மக்கள் அழிந்ததை உலகில் உள்ள அத்தனை பேரும் தான் கண்டிக்க வேண்டும். மொத்த இந்தியாவே கண்டிக்க வேண்டும். அதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தாக வேண்டும்

உண்மையில் இந்தத் தடைகளை உருவாக்குபவர்களுக்கு ஈழ மக்களின் அழிவு ஒரு பொருட்டே இல்லை. இன்னும்கூட பேரழிவு நிகழ்ந்திருக்கலாம் என்று இவர்கள் நினைப்பார்கள் போல. இந்த அழிவைப் பற்றி தமிழகத்தில் இருக்கும் கோபத்தையும், கசப்பையும் தங்கள் அரசியல் வெறுப்பரசியலின் கோஷங்களுக்கு சாதகமான சக்தியாக ஆக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். ஆகவே வேறு அரசியல் பேசுபவர்கள் அதைப் பற்றிப் பேசக் கூடாதென நினைக்கிறார்கள்.

ஈழத் தமிழர்களின் துரதிருஷ்டம் அவர்கள் கடந்த காலத்தில் இந்த மண் பொம்மைகளை பெரும் துணைகளாக நம்பியது. அவர்கள் அதற்கான விலையையும் கொடுத்து விட்டார்கள்.

இந்திய அரசு வேறு இந்திய மக்கள் வேறு என்று நான் அறிவேன். சராசரி இந்தியன் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவனாக, மனிதாபிமானியாக மட்டுமே இருக்கிறான். இந்திய நிலத்தில் முப்பதாண்டுகளாக அலைபவன் என்ற முறையில் வேறெந்த நாட்டுப் பிரஜைகளை விடவும் சாமானிய இந்தியர்களின் மனசாட்சி மேல் எனக்கு நம்பிக்கை உண்டு.

அப்படி இருந்தும் ஏன் ஈழப் படுகொலைகள் இந்திய மனசாட்சியை உலுக்கவில்லை? எங்கெங்கோ நிகழும் அழிவுகளுக்காக தாங்கள் உண்ணும் அரைக்கவளத்தில் பாதியை அளித்து ஆதரவுக் கரம் நீட்டும் சாமானிய இந்திய மக்கள் ஏன் ஈழத் தமிழர்களை விலகி நின்று பார்க்கிறார்கள் ?  ஏனென்றால் கடந்த காலத்தில் ஈழப்பிரச்சினை இங்கே பிரிவினைவாதத்தையும், சாதிக் காழ்ப்பையும் கக்கும் சிறிய குழுக்களால் தங்கள் கோஷமாக சுருக்கிக் கொள்ளப்பட்டது.

’ஈழத்தை வென்றதும் தனித் தமிழகம் பெறுவோம்’ என்று அவர்கள் கோஷமிடுகிறார்கள். ’இந்தியாவை அழிப்போம்’ என்கிறார்கள். அந்த கோஷத்துடன் எப்படி சராசரி இந்தியனின் மனசாட்சியுடன் உரையாட முடியும்?  அதைப்போல எதிரிகளுக்கு ஆயுதத்தை அளிக்கும் முட்டாள்தனம் வேறுண்டா என்ன?

இந்த வரலாற்றுத் தருணத்தில் ஒட்டு மொத்த இந்தியாவை நோக்கிப் பேசும் மனவிரிவுள்ள ஒரு தலைவர் நமக்கில்லை. இந்திய மனசாட்சி நோக்கி பேசும் ஒரு ஆளுமை நமக்கில்லை. இந்த சிறிய மனங்களின் வெறுப்புக் குரல்கள் எந்த அளவுக்கு எதிர்மறை விளைவை உருவாக்குமென ஈழ மக்களும் உணரவில்லை.

ஆகவே தான் இந்தியா இந்த பேரவலத்தை இன்னும் அறியாமலிருக்கிறது. உணர்ச்சிகரமாக உள் வாங்காமலிருக்கிறது. இந்த தருணத்தில் இந்திய ஊடகம் நோக்கி இதைக் கொண்டு செல்லும் ஆற்றல் கொண்ட எந்த அமைப்பும் மனிதரும் நமக்கில்லை. சிறிய அளவிலேனும் அதைச் செய்யும் சக்தி கொண்டது காலச்சுவடு. இந்திய ஆங்கில ஊடகங்களில் செல்வாக்குள்ளவர் அதன் ஆசிரியர். ஓர் அறிவார்ந்த ஊடகம் என்ற பிம்பம் உள்ள காலச்சுவடு செய்யும் முயற்சிகளுக்கு இந்திய ஊடகங்களில் மதிப்பு உண்டு. அதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.  அதன் முயற்சிகள் தடுக்கப் பட்டுள்ளன. தடுத்தவர்களால் எதையுமே செய்யவும் முடியாது. மிக, மிக வருந்தத் தக்க நிகழ்வு.

இந்தத் தருணத்தில் கருணாநிதியும், ஜெயலலிதாவும், வைகோவும், சங்கரய்யாவும், நல்லக்கண்ணுவும், இல கணேசனும் சேர்ந்து நின்றிருக்க வேண்டாமா? காலச்சுவடும், உயிர்மையும், குமுதமும் விகடனும், சேர்ந்து ஒரு மேடையில் நின்றிருக்க வேண்டாமா? அப்போதுதானே அந்த குரல் இந்தியாவுக்கு கேட்கும். ஒவ்வொருவரும் இங்கே மிகையான உணர்ச்சியுடன் உரக்கப் பேசுகிறார்கள். ஆனால் இன்னொருவர் எதுவுமே செய்துவிடக் கூடாதென்பதில் கவனமாக இருக்கிறார்கள்.

காலச்சுவடு இந்த கூட்டத்தை நிறுத்திக் கொண்டது பிழை. அதன் தொடர்புகளால் தமிழிலும், மலையாளத்திலும், கன்னடத்திலும் வங்கத்திலும் உள்ள அரசியல் எழுத்தாளர்களை, ஊடகவாதிகளை அது திரட்டி அந்தக் கூட்டத்தை நடத்திக் காட்டியிருக்க வேண்டும். பிரிவினை பேசும் சில்லறை அரசியல்வாதிகள் மட்டும் அல்ல பிறருக்கும் ஈழத்தமிழர் அழிவில் கண்டனம் இருக்கிறதென இந்திய ஊடகங்களுக்கு சொல்ல முடிந்திருக்கும்.

 

முந்தைய கட்டுரைஜக்கி-கடிதங்கள்
அடுத்த கட்டுரைகொற்றவை-கடிதம்