குழந்தைகளும் நாமும்

Bathing the baby -Elisha Ongere

நமது குழந்தைகள்

அன்புள்ள ஜெ

குழந்தைகள் பற்றிய உங்கள் கட்டுரை கண்டேன். அதைப்பற்றி ஏராளமான வசைகள். பெரும்பாலான வசைகளை வாசிக்கையில் ஒன்று தோன்றியது, நமக்கு உண்மையிலேயே புரிந்துகொள்வதில் மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது. எதையுமே படித்து உள்வாங்கும் பயிற்சி நமக்கு இல்லை. இது ஏற்கனவே நீங்கள் நம் பள்ளிகளைப் பற்றி எழுதிய கட்டுரைக்கான எதிர்வினைகளிலும் தெரிந்தது.

நான் கேட்பது இன்னொன்றுதான். நம் குழந்தைகளிடம் நாம் கொள்ளவேண்டிய சிறந்த உறவு என்ன? அவர்களை கண்டிப்பாக வளர்க்கவேண்டுமா?

ஜி.நாராயண்

***

அன்புள்ள நாராயண்

இந்தவகை கேள்விகளுக்கு பதில்சொல்ல நான் குழந்தை வளர்ப்பு நிபுணன் அல்ல. எனக்கு நம்பிக்கை இருப்பவற்றைச் சொல்கிறேன். நான் செய்தவை இவை. வெவ்வேறு வகையில் இவற்றை விரிவாக முன்னர் எழுதியிருக்கிறேன்

அ. குழந்தைகளிடம் நாம் உரையாடவேண்டும். செல்லம் கொஞ்சல் என்பது உரையாடல் அல்ல. தொடர்ச்சியாக அவர்களைக் கவரும்படி பேசுவது. கதைகள் மற்றும் செய்திகள் சொல்வது, அவர்கள் பேசுவதை செவிகொடுத்துக் கேட்பது இரண்டுமே உரையாடல் எனப்படுகிறது

அடம்பிடிக்கும் குழந்தைகள் பெரும்பாலும் எவராலும் போதிய அளவு செவிகொடுக்கப்படாதவைதான். என் நண்பர்கள் கண்டிருக்கலாம், என்னால் எந்தக்குழந்தையிடமும் உடனே ஓர் உரையாடலை தொடங்க முடியும். ஏனென்றால் நான் குழந்தைகளிடம் கொஞ்சுவதில்லை. தீவிரமாக உரையாடலை தொடங்கிவிடுவேன்.

ஆ. அவர்களுடன் விளையாடவேண்டும். நாம் செய்யும் வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துவதே மிகச்சிறந்த விளையாட்டு. குழந்தை மிக விரும்பும் விளையாட்டு பெரியவர்களின் உலகில் நுழைந்து எதையாவது செய்வதுதான்.

இ. குழந்தைகளை கைக்குழந்தையாக நடத்தக்கூடாது. பேச ஆரம்பிக்கும்போதே பெரியவர்களைப்போல நடத்தலாம். பெரிய விஷயங்களைப் பேசலாம். ஆலோசனைகள் கேட்கக்கூடச் செய்யலாம்.

ஈ. எந்தப் பொருளையும் கேட்டதும் வாங்கித்தரக் கூடாது. அதை அவர்கள் ஈட்டிக்கொள்ள வேண்டும். அதற்காக அவர்கள் எதையாவது செய்யவேண்டும். பொம்மைகள் வாங்கிக் குவிக்கலாகாது. பொம்மைகள் அவர்களே செய்யவேண்டும். அல்லது நாமும் இணைந்து செய்யவேண்டும்.

உ.அடம் பிடித்து அவர்கள் ஒன்றை அடையலாமென எண்ணச் செய்யக்கூடாது.

ஊ. குழந்தைக்கு அப்பா மீது எந்நிலையிலும் பெருமதிப்பு இருக்கவேண்டும். அப்பாவுக்கு பிடிக்காததைச் செய்யலாகாது, அப்பாவிடம் நற்பெயர் பெறவேண்டும் ஆகிய உணர்வுகள் குழந்தைகளிடம் இருக்கவேண்டும். அதுவே வாழ்நாள் முழுக்க அவர்களை கட்டுப்படுத்தும் சக்தி. அப்பா என்னும் இடம் நம் பண்பாடு ஈட்டிக்கொண்ட ஒரு மாபெரும் உருவகம். குழந்தைகளிடம் அந்த பிம்பம் சிதைய விடவே கூடாது. ஆகவே அப்பாவை குழந்தை வேலை ஏவுவது, அப்பா குழந்தைக்கு பணிவிடை செய்வது எல்லாம் அக்குழந்தைக்கு அப்பா என்னும் ஆளுமை இல்லாமல் ஆக்குவதுதான்.

எ. குழந்தைகளை தண்டிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் கண்டிப்பது அவசியம். எது தனக்கு பிடிக்கவில்லை என்பதை குழந்தையிடம் தந்தை கண்டிப்பாகச் சொல்லியாகவேண்டும். ஒரு வயது முதலே.

ஏ. ஆனால் ஒரு குழந்தை தனக்கு என்ன பிரச்சினை என தந்தையிடம் சொல்லும் இடம் எப்போதும் இருக்கவேண்டும். எல்லா வயதிலும்.

*

வெளியுலகம் இரக்கமற்ற விதிகளால், போட்டிகளால் ஆனது. ‘பிறர்’ எனப்படும் பல்லாயிரம் பேரால் ஆனது. ஆகவே எந்த விதிகளும் இல்லாத ஓர் உலகை உருவாக்கி, அதில் ஒரே ஒரு சக்கரவர்த்தியாக குழந்தையை வாழவிடுவது குழந்தைக்கு நன்மை செய்வது அல்ல.

எந்த மனிதரும் சில அடிப்படை ஆதிக்கங்களால் கட்டுப்படுத்தப்பட்டே இங்கே வாழ்கிறார்கள். அரசு, சமூகம், மரபு, குடும்பம், அலுவலகம், கல்விநிலையம் என பல்வேறு அமைப்புகளின் ஆதிக்கங்கள் இல்லாமல் எவரும் வாழமுடியாது.

அந்த ஆதிக்கங்களின் கண்கூடான வடிவமாக உடனடியாக அறிமுகமாகிறவர் தந்தை. (அல்லது தாய். நான் என்னைப்பற்றிப் பேசுகிறேன்) அவர் அந்த ஆதிக்கங்களின் பெறுமதி என்ன என்று குழந்தைக்கு விளக்குபவராகவும், குழந்தையை புரிந்துகொண்டு அதை அளிப்பவராகவும் இருக்கவேண்டும்.

அந்நிலையில் ஆதிக்கம் என்பது நேர்நிலையாக, நல்லபடியாக குழந்தைக்கு அறிமுகமாகிறது. அதைக் கையாள குழந்தை கற்றுக்கொள்கிறது. தந்தையின் கடமை அதுவே. அதை அளிக்காத தந்தை உண்மையில் குழந்தைக்கு பெரிய தீங்கையே செய்கிறார்.

*

கடைசியாக, இதையெல்லாம் செய்தால் குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றிபெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள் என உறுதி உண்டா? இல்லை. அது அவர்கள் தங்கள் வாழ்க்கையை எதிர்கொள்ளும் முறை சார்ந்தது. நாம் செடி எப்படி வளரவேண்டும் என்று ஆணையிடமுடியாது. நீரூற்றுவது எப்படி என்று மட்டுமே நான் சொல்கிறேன்

ஜெ

பிகு. நம் மக்களுக்கு ஒரு கட்டுரையை மட்டுமல்ல, எளிய குறிப்புகளையே படித்து புரிந்துகொள்ள மிகப்பெரிய சிக்கல் உள்ளது. மனப்பாடக் கல்வி உருவாக்கும் தீங்கு. நம் கல்விமுறை புரிந்துகொள்ள சொல்லித்தருவதில்லை. இங்கே மிகப்பெரும்பாலானவர்களால் எந்தையும் வாசித்து புரிந்துகொள்ளவோ, சாராம்சப்படுத்தவோ, அதனடிப்படையில் எதிர்வினை ஆற்றவோ முடியாது. புரிதலில் தங்களுக்குச் சிக்கல் இருப்பதையே அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். எங்கும் ஒற்றை வரியை எடுத்து அதனடிப்படையிலேயே அவர்களால் எதிர்வினையாற்ற முடியும். ஏனென்றால் நாம் கல்விக்கூடங்களில் கற்பது அந்த அடிக்கோடிட்டு படிக்கும் வழக்கத்தைத்தான்.

இதுபற்றிய பழைய கட்டுரைகள்:

நாம் புரிந்துகொள்கிறோமா?
அறிதலென்னும் பயிற்சி
முந்தைய கட்டுரைஎஸ்.ராமகிருஷ்ணன்கள்
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி தூரன் விருது