எழுத்தாளர் ஜெயமோகனுக்கு அன்பு வணக்கம்!
என்னுடைய பெயர் பிரதாப். ஈரோடு மாவட்டம் சென்னிமலை சொந்த ஊர். தற்போது கொரியாவில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். தங்களுடைய காடு நாவலை கடந்த வெள்ளிக்கிழமை வாசித்து முடித்தேன்!
நீங்கள் எழுதியதைப் போலவே “முடிவு ஒரு பித்துநிலை” தான். நாவலை படித்து முடித்து விட்டு ஒரு பித்துப்பிடித்த பற்றற்ற பெருமௌனம் எனக்குள் சூழ்ந்துகொண்டது. ஒரு பிரிவின் தாக்கத்தில் இருந்து மீள முயன்று கொண்டிருந்தபோது இந்நாவலை வாசிக்க நேர்ந்தது. காதல், காமம், நிலையின்மை போன்ற வாழ்வின் பல்வேறு நிலைகளின் மீது ஒரு மாறுபட்ட புரிதலை உண்டாக்கியது இந்நாவல் எனலாம்.
நீலியைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்! மோகமுள் நாவலில் வரும் கங்காவிற்கு பிறகு, நீலியைத் தான் என் இதயத்துக்குள் ஊறல் போட்டு வைத்திருக்கிறேன். எழுத்துகளின் வாயிலாக நமக்குத் தெரியவரும் கதாப்பாத்திரங்களின் மீதான காதல் என்ன வகைப் பைத்தியக்காரத்தனம் என்று தெரியவில்லை. ஆனால் அவற்றை ரசிப்பதில் ஒரு தனி போதை இருக்கத்தான் செய்கிறது. இந்நாவலின் தாக்கம் எனக்குள் நெடுநாட்கள் இருக்கப் போகிறது என்பது மட்டும் உண்மை!
இந்த ஆராய்ச்சி எல்லாம் இல்லை என்றால் உண்ணாமல் உறங்காமல் கூட வாசித்து முடித்திருப்பேன் போலும். அப்படி ஒரு கட்டிப்போட வைக்கும் நடையை உங்கள் எழுத்தில் கண்டேன். “எதுக்கு இந்த ஆராய்ச்சி எல்லாம் பண்ணீட்டு, கருமத்த! கழுவி ஊத்தி மூடீட்டு போய் நிம்மதியா சுவாசிக்கலாம்!” என்றெல்லாம் கூடத் தோன்றியது. ஆனால் என்னுடைய தேடலுக்கும், பேராசிரியர் ஆக வேண்டும் என்ற கனவுக்கும், பயணங்களுக்கும் தீனி போடுவதாக இந்த நாவல் அமைந்தது எனக்கு பெருமகிழ்வைத் தந்தது.
பிரதாப்