தமிழ் விக்கி- தூரன் விருது- கடிதங்கள்

கரசூர் பத்மபாரதி -தமிழ் விக்கி பதிவு

அன்புள்ள ஜெ

தமிழ் விக்கி தூரன் விருது கரசூர் பத்மபாரதிக்கு வழங்கப்பட்டுள்ளமை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அன்னாருடைய இரண்டு ஆய்வேடுகளின் நூல்வடிவங்களும் மிக நேர்த்தியானவை. மிகச்சிறப்பான முறையில் எழுதப்பட்டவை. தமிழ்ச்சமூகம் காணமறந்த இருண்ட உலகங்களை ஆய்வுகள் எப்படி வெளிக்கொண்டுவர முடியும் என்று காட்டியவை. மிகுந்த அர்ப்பணிப்புடனும் கல்வியியல் ஒழுக்கத்துடனும் கரசூர் பத்மபாரதி இந்தப்பெரும்பணியைச் செய்துள்ளார்.

கல்வித்துறை ஆய்வுகளைப் பொறுத்தவரை அவற்றில் ஆய்வேடு ஏற்கப்பட்டுள்ளதா என்பதே அளவீடு. மற்றபடி ஆய்வின் தரம் பற்றிய அகவய அளவுகோல்கள் இல்லை. ஆனால் முன்பெல்லாம் உரைகள், உரையாடல்கள் வழியாக தகுதியான ஆய்வேடுகள் அறிஞர்களால் முன்னுக்குக் கொணரப்படும். இப்போது அது நிகழ்வதில்லை. அந்தப் பெரும்பணியை தமிழ் விக்கி அமைப்பு செய்து வருகின்றது என்று நினைக்கிறேன். என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

கி.கிருஷ்ணசாமி

அன்புள்ள ஜெ.

கரசூர் பத்மபாரதியின் நரிகுறவர் இனவரைவியல், திருநங்கையர் இருநூல்களையும் வாசித்திருக்கிறேன். நல்ல நாவல்கள் அளவுக்கே அகஎழுச்சி அளிக்கக்கூடிய வாழ்க்கைச்சித்திரங்களாக அவை இருந்தன. அவற்றிலுள்ள தரவுகளும், அவற்றைச் சீராகத் தொகுத்து அளித்திருக்கும் முறையும் பிரமிக்கச் செய்தன. மாற்கு எழுதிய அருந்ததியர் வாழும் முறை என்ற நூல் மட்டுமே இந்நூல்களுக்குச் சமானமானதாகச் சொல்லத் தக்கது.

கரசூர் பத்மபாரதி போன்ற ஓர் ஆய்வாளருக்கு தமிழகத்தில் நல்ல ஓர் ஆசிரியர் பணிகூட அமையவில்லை, ஆரம்பப்பள்ளிஆசிரியையாகப் பணியாற்றி இப்போது சும்மாவே இருக்கிறார் என்பது நம் கல்வித்துறையின் சீரழிவை, நம் ஆய்வு அமைப்புகளின் தரக்குறைவை காட்டும் செய்தி

கணபதி சுப்ரமணியம்

முந்தைய கட்டுரைசெயலும் ஒழுங்கும்
அடுத்த கட்டுரைகடலின் எடை- கடலூர் சீனு