கரசூர் பத்மபாரதி -தமிழ் விக்கி பதிவு
அன்புள்ள ஜெ,
தமிழ் விக்கி – தூரன் விருது முனைவர் கரசூர் பத்மபாரதிக்கு வழங்கப்படும் செய்தி அறிந்து மகிழ்ந்தேன். அவருடைய நரிக்குறவர் இனவரைவியல் நூலை வாசித்திருக்கிறேன். தமிழக மானுடவியல் ஆய்வில் ஒரு பெரிய பாய்ச்சல் அந்நூல். பொதுவாக இங்கே கள ஆய்வு என்பது மிகக்குறைவு. நூல்களில் இருந்து நூல்கள் என்பதே வழக்கம். கரசூர் பத்மபாரதி துணிச்சலுடனும் அர்ப்பணிப்புடனும் கள ஆய்வுசெய்தவர். மிக நேர்த்தியான முறைமையுடன் ஆய்வுகளைச் செய்தவர். ஆனால் கல்வித்துறை சார்ந்த எந்த அங்கீகாரமும் இல்லாதவர். அவருக்கு அளிக்கப்பட்ட இந்த விருது மிக மனநிறைவை அளிக்கிறது.
தமிழ் விக்கி போன்ற ஓர் அமைப்பின் பணி என்ன என்பது ஒவ்வொரு பதிவிலும் தெரிகிறது. இந்த விருதும் அதற்குச் சான்றாக அமைகிறது.
ஆ.தெய்வநாயகம்
***
அன்புள்ள ஜெ,
கரசூர் பத்மபாரதி என்ற பெயரை நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அவருடைய எந்த நூலையும் வாசித்ததில்லை. அவருடைய விக்கி பக்கத்தைச் சென்று பார்த்தேன். அதிலுள்ள தகவல்கள் பிரமிக்கச் செய்கின்றன. மிகுந்த அர்ப்பணிப்புடன் பெரும்பணிகள் செய்துள்ளார். தமிழில் இத்தகைய ஆய்வுகள் மிக அரிதானவை.
ஆனால் இப்படிப்பட்ட மாபெரும் ஆய்வாளருக்கு ஓர் ஆசிரியர் பதவிகூட நம் கல்வித்துறையால் அளிக்கப்படவில்லை என்பதும் அவருடைய கல்வித்தகுதியும் ஆய்வுத்தகுதியும் முழுமையாகவே வீணாகின்றன என்பதும் வருத்தமளிக்கிறது
ரா. மீனாட்சிசுந்தரம்
***