நமது சிற்றிதழ்கள் -கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

நீங்கள் சொன்னது மாதிரியே தமிழின் எல்லா சிற்றிதழ்களும் ஒரே குரலில், ஒரே கருத்தை அண்ணா ஹசாரே பற்றி எழுதி விட்டார்கள் கவனித்தீர்கள் அல்லவா? ஒரே சிந்தனைப் போக்குதான். அண்ணா ஹசாரே அயோக்கியர், முட்டாள், மோசடி செய்கிறார். அவர் காஷ்மீருக்காக அல்லது வடகிழக்குக்காக போராடவில்லை. இவ்வளவுதான்.

நீங்கள் எழுதிய போது நான் நம்பவில்லை. ஆனால் வாசிக்க நேர்ந்தபோது ஆச்சரியம் பிறகு கசப்பு. இந்த அரைவேக்காடுகளை நாம் சிந்தனையாளர் என்கிறோம் இல்லையா?

சரவணன்

சரவணன்,

தமிழ்ச் சிற்றிதழ்கள் என்பவை கருத்தியல் விவாதம் நிகழ்த்தும் ஒரு தளமாக இருந்த காலம் இன்றில்லை. இன்று அவை பல்வேறு நோக்கங்களுடன் நடத்தப் படும் லாப நோக்குள்ள பெரிய அமைப்புகள். ஆகவே லாபம் அளிக்கும் தரப்பு மட்டுமே பேசப் படும். இந்திய வெறுப்பு போல லாபம் அளிக்கும் ஒரு கருத்தியல் இன்று வேறு இல்லை.  மெல்ல, மெல்ல இந்திய வெறுப்பே ஒரு அரசியல் சரி ஆக மாறி விட்டிருக்கிறது. ஆகவே அவை வேறு ஒர் தரப்பை பேசவே போவதில்லை.

சென்ற சில வருடங்களுக்கு முன் அத்தனை சிற்றிதழ்களும் ஒரே குரலில் கனிமொழி புகழ் பாடிக் கொண்டிருந்தன. தமிழச்சிக்கு கட் அவுட் வைத்தன. ஒரு முறை தமிழில் வந்த ஏழு சிற்றிதழ்கள் ஒரே மாதத்தில் கனிமொழியை அட்டையில் போட்டிருந்தன. அதைப் பற்றி நான் கடுமையாக எதிர் வினை செய்திருந்தேன்.  [கனிமொழி வணக்கம்] ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்த அந்த காலகட்டத்தில்  தமிழில் எந்த இலக்கிய மேதைக்கும் அளிக்கப் படாத கௌரவங்களை இந்தப் பெண்மணிகளுக்கு அளித்தவை, அந்த பெரும் கொள்ளையில் ஏதேனும் சில்லறை சிதறாதா என்று அந்தப் பெண்மணி பின்னால் சென்றவை நம் சிற்றிதழ்கள். இவர்களா  அண்ணா ஹசாரேவை புரிந்து கொள்ளப் போகிறார்கள்?

உயிரெழுத்தில் எஸ்.வி ராஜதுரையின் வழக்கமான வசை. தமிழச்சியை இலக்கிய மேதை என அட்டைப் படம் போடும் அந்த இதழுக்கு அண்ணா ஹசாரே அல்ல முப்பதண்டுக் காலம் கருத்தியல் மோசடிகளையே புற வாழ்க்கையாகக் கொண்டு வாழும் எஸ். வி ராஜதுரை தான் சரியான முகம்.  என்ன ஒரு வசை மாரி. வீரமணியின் அதே குரல், அதே தர்க்கம். சரிதான்.

காலச்சுவடில் க. திருநாவுக்கரசு எழுதுகிறார். ‘ஊழலை எதிர்த்து அல்லாமல் காஷ்மீர் மக்களின் பிரச்சினைக்காகவோ, வடகிழக்கு மக்களுக்காகவோ பெரும் தொழிற் திட்டங்களால் தங்கள் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து இடப் பெயர்விற்கு ஆளாகும் பழங்குடி மக்களுக்காகவோ ஹஸாரே சாகும் வரை உண்ணா விரதமிருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?’

ஊழல் மக்கள் ஒவ்வொரு நாளும் உணரும் பிரச்சினை. அந்தப் பிரச்சினைக்கு எதிராக  மக்களைத் திரட்டி போராடுவதற்கும்  மக்களுக்குச் சம்பந்தமில்லாத பிரிவினைப் போராட்டங்களுக்காக உண்ணா விரதமிருப்பதற்கும் உள்ள வேறுபாட்டை இவர்களுக்கு எப்போது சொல்லிக் கொடுப்பது? சத்தியா கிரகப் போராட்டம் என்பது மக்களின் கருத்தைத் திரட்டிக் குவி முனை கொள்ளச் செய்யும் போர் முறை, தற்கொலை அல்ல என்று எப்படி புரிய வைப்பது? பெரும் திட்டங்களுக்காக இடப் பெயர்வு செய்யப் படும் மக்களுக்காக போராடியவர்களும் காந்தியர்களே என்று இந்த ஆராய்ச்சியாளருக்கு யார் சொல்வது?

இந்தப் போராட்டம் என்பது அண்ணா ஹசாரே நெடுங்காலமாகச் செய்து வரும் ஒரு தொடர் போராட்டம். கடந்த இருபதாண்டுக் காலமாக அவரது வாழ்க்கை ஊழலுக்கு எதிராக மக்களின் மனசாட்சியுடன் பேச அவர்களின் கருத்தை திரட்ட மட்டுமே ஒதுக்கப் பட்டுள்ளது. அவரது போராட்டத்தின் வெற்றிகளை, தகவலறியும் உரிமை போன்றவற்றை, இன்று நாம் ஒவ்வொருவரும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்

அவரை இன்னும் வலிய போராட்டங்கள் மூலம் தாண்டிச் செல்வதே அவரை மறுப்பவர்கள் அளிக்கும் பதிலாக இருக்க முடியும்.  மாறாக அவரை மட்டம் தட்டுவதும், ஐயங்களை கிளப்பி விடுவதும்  இவர்களின்  உள்நோக்கங்களை மட்டுமே காட்டிக் கொடுக்கின்றன.

வணிக ஊடகங்களின் மழுங்கடிப்புகளை விட இந்த மோசடிக்காரர்கள் உருவாக்கும் சிந்தனைத் திரிபுகளில் இருந்து மீள்வது தமிழகத்திற்கு இன்னும் கடினம்

ஜெ

=================================

 

அன்புள்ள திரு ஜெயமோகன்,

தமிழ் இந்து இணைய தளத்தில் வெளியான என்னுடைய கட்டுரையிலிருந்து சில வரிகளை எடுத்துக் காட்டி, அதை வீரமணி போன்றவர்களின் குற்றச் சாட்டோடு சேர்த்து, அப்படி குற்றம் சாட்டும் அளவுக்கு அன்னா ஹசாரே என்ன செய்தார் என்ற வினா எழுப்பியுள்ளீர்கள். இது குறித்து சிறிய விளக்கம் அளிக்க எனக்கு அனுமதிப்பீர்கள் என நினைக்கிறேன். என் கட்டுரையின் நோக்கம் அன்னா ஹசாரேயின் போராட்டத்தை எதிர்ப்பது அல்ல. மேலும் அதே கட்டுரையில் பின்னால், அந்தக் குழுவில் முன்னாள் போலீஸ் அதிகாரி கிரன் பேடி இருப்பதும், ஏராளமான இளைஞர்கள் ஆதரவு அளிப்பது ஆறுதல் அளிக்கிறது. இளைஞர்கள் ஊழலை வெறுக்கிறார்கள், போராடத் துடிக்கிறார்கள் என்றும் எழுதியிருக்கிறேன்.

இதில் ஹசாரே குறித்து எழுதிய செய்தி என்னவென்றால், “லோக்பால்” மசோதா உடனடியாகக் கொண்டு வரப்பட வேண்டுமென்கிற அவரது கோரிக்கைய குறை கூற அல்ல, ஆனால், அதற்கு முன்பாக இந்த நாட்டைக் குலுக்கி எடுத்த முக்கியமான மூன்று ஊழலின் போது (ஆண்டிமுத்து ராசா & கோ.வின் 2ஜி ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல்) இவர் குரல் கொடுக்கவில்லையே என்ற ஆதங்கம்தான். இவரது நோக்கத்தை சந்தேகிக்கவில்லை. ஆனால் இவரது நடவடிக்கை தொடர்ந்து ஒரே மாதிரியாக இருக்கவில்லை என்பதுதான். அவரது தகுதிகள் குறித்தும் என் கட்டுரையில் ஒரு பாராவில் விவரமாக எழுதியிருக்கிறேன். ஆகவே தாங்கள், கட்டுரையைப் பிரித்துப் பார்க்காமல் ஒட்டுமொத்தமான கருத்தைச் சரியான கண்ணோட்டத்தோடு (right perspective) பார்க்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

தங்கள் உண்மையுள்ள
தஞ்சை வெ.கோபாலன்.

===================

அன்புடையீர்!

சில நாட்களுக்கு முன்பு தங்களுக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தேன். அதில் ‘தமிழ் இந்து”வில் வெளியான எனது “புனிதர்களே சட்டங்களை இயற்றட்டும்” எனும் கட்டுரையில் சிறு பகுதியை எடுத்து வெளியிட்டு நான் அன்னா ஹசாரேக்கு எதிராக எழுதியிருப்பதாகக் கருத்துத் தெரிவித்ததற்கு பதிலாக அந்த மெயில் அனுப்பினேன். அதில் நான் கொடுத்திருந்த விளக்கத்தைப் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

மாபெரும் ஊழல்கள் நடந்தபோது வாய் திறக்காத அன்னா ஹசாரே இப்போது லோக்பால் மசோதாவுக்கு உண்ணாவிரதம் இருப்பது ஏன் என்பது என் வினா. குஜராத் முதல்வரையும், பிஹார் முதல்வரையும் பாராட்டிவிட்டுப் பின்னர் போலி மதச்சார்பின்மையாளர்கள் எதிர்த்த பிறகு தன் கருத்தை மாற்றிக் கொண்டதும் மன உறுதி படைத்தவருக்கு அழகா? ஆம்! அவர்கள் ஆட்சி முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வது என்றும் நான் பாராட்டியது சரி என்றும் ஏன் அவரால் அடித்துக் கூற முடியவில்லை? ஊழலின் ஊற்றுக்கண் என்று பரவலாக சோனியாவைப் பற்றி மக்களும் ஊடகங்களும் பேசி வருகையில், அவரும் ஊழலுக்கு எதிரான போரில் கலந்து கொள்ள வேண்டுமென்று அழைப்பு விடுக்கும் அன்னா ஹசாரேயைப் பார்த்து அழுவதா சிரிப்பதா?

ஆனானப் பட்ட மகாத்மா காந்தியே விமரிசனத்துக்கு உட்பட்டவராக ஆகி விட்ட பிறகு அன்னா ஹசாரே போன்றவர்களை அவர்களது முரணான நடவடிக்கைகளுக்காக‌ ஏன் விமர்சிக்கக் கூடாது? யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அப்படி அவர் நோக்கம் சரியென்றால் அவரைப் போன்ற, கிரன் பேடியைப் போன்ற அப்பழுக்கற்ற தேசபக்தர்களை ஒருங்கிணைத்து ஊழலுக்கு எதிராகப் போராட முன்வர வேண்டுமே தவிர, ஊழலின் நிழல் படிந்தவர்களை துணைக்குக் கூப்பிடுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? கண்ணை மூடிக்கொண்டு இவர்  தொடங்கிய இயக்கத்தை மக்கள் ஏற்றுக் கொள்ள முன்வருவார்களா? நீங்கள் இதற்கு உடன் உங்கள் கருத்தைத் தெரிவிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
நன்றி. தங்கள் உண்மையுள்ள

தஞ்சை வெ.கோபாலன்.

அன்புள்ள கோபாலன் அவர்களுக்கு

நான் என்னுடைய கருத்தை மிக விரிவாகவே எழுதி விட்டேன். உங்கள் கேள்விகளுக்கான பதில்களும் அதில் விரிவாகவே உள்ளன
’மாபெரும் ஊழல்கள் நடந்தபோது வாய் திறக்காத அன்னா ஹசாரே இப்போது லோக்பால் மசோதாவுக்கு உண்ணாவிரதம் இருப்பது ஏன் என்பது என் வினா ’ என்று கேட்கும் போதே அண்ணா இது வரை என்ன செய்தாரென்றே உங்களுக்கு தெரியாதென்று புரிந்து கொள்கிறேன்.

இடதோ வலதோ நீங்கள் அத்தனை பேரும் பதறியடித்து அண்ணா ஹசாரே மேல் பாய்ந்து பிடுங்குவதைப் பார்க்கையில் ஒன்று தோன்றுகிறது. உங்கள் இரு தரப்பின் மாய்மாலங்களுக்கு அப்பால் ஓர் அரசியல் இங்கே வந்துவிடுமோ என்று அச்சப்படுகிறீர்கள். அவ்வளவுதான்

அன்புடன்
ஜெ

==============================


கனிமொழி வணக்கம்

உயிர் எழுத்து

காலச்சுவடுக்கு தடை

அண்ணா ஹசாரே-1 | jeyamohan.in

அண்ணா ஹசாரே,வசைகள் | jeyamohan.in

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் 

அண்ணா ஹசாரே, இடதுசாரி சந்தேகம் 






 

 

 

முந்தைய கட்டுரைகஸ்தூரிரங்கன் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஜக்கி-கடிதங்கள்