என் சமரசங்கள் என்ன?

அன்புள்ள ஜெயமோகன், நலமாயிருக்கிறீர்களா ?

‘என்னுள் இருந்த சுய அடையாளம் தேடிப் பரிதவித்த அந்த இளைஞன் மன எழுச்சி தாளாமல் கண்ணீர் மல்கினான். ஞானம் மட்டுமே தன் சுயமாகக் கொண்டு இப்படித் தலைநிமிர்ந்து நடக்க முடிந்தால், இந்த உலகின் பணம், அதிகாரம், அற்ப வேட்கைகள் அனைத்தையும் இப்படி காலடி வைத்து இலகுவாகத் தாண்ட முடிந்தால் மட்டுமே நான் வாழ்ந்தவன், வென்றவன் என்று எண்ணிக் கொண்டேன்’

‘இவர்கள் இருந்தார்கள்’ நூலில் பெரும் பணக்காரர்கள் மத்தியில் ஞானம் ஒன்றை மட்டுமே தன் இயல்பாகக் கொண்ட க.நா.சு. பற்றி நீங்கள் எழுதியுள்ள வரிகள். (’இவர்கள் இருந்தார்கள்’ பக்கம் 81)

தற்போது (2022) நீங்கள், உங்களை இம்மாதிரி உணர்கிறீர்களா? சாகித்திய முதலிய விருதுகள் வேண்டாம் என்று நீங்கள் விலக்கியதை நான் அறிவேன். ஆயினும், கொண்ட கொள்கைகள், பொருளியல் சார்ந்து உங்கள் நிலைப்பாட்டில் இருந்து மாற வேண்டிய, விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுண்டா? நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்களைக் கடக்கவும், சில குழுக்களிடம் ஒத்துப் போகவும் சமரசங்கள் செய்துகொள்ள வேண்டிய நிலை உங்களுக்கு ஏற்பட்டதுண்டா? இது, இலக்கிய வாழ்க்கை குறித்தான கேள்வியே தவிர, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்வியன்று.

சுருக்கமாக : உங்களை அந்த 1985 க.நா.சு. இடத்தில் பொருத்திப் பார்க்க உங்களால் முடிகிறதா?

நன்றி
ஆமருவி தேவநாதன்

***

அன்புள்ள ஆமருவி தேவநாதன்,

என்னுடைய வாழ்க்கையை கொஞ்சம் அடுத்து அறியும் எவருக்கும் இந்தக் கேள்வி எழாது என நினைக்கிறேன். இக்கேள்வி மிக அப்பாலிருந்து எழுகிறது. சரிதான், அதற்கான பதில் இது.

என்னிடம் பல குறைபாடுகள் உண்டு. குணக்கேடுகளும் உண்டு. அவை பெரும்பாலும் ஒருமுனை நோக்கி தன்னை குவித்துக் கொள்வதனால் விளைபவை. அத்துடன் படைப்பியக்கச் செயல்பாடு என்பது ஒருவன் தன்னுள் உள்ள அனைத்தையும் குத்திக் கிளறிவிடுவதுதான். காமம், வன்முறை, கீழ்மைகள், இருள்கள். அவற்றை அவன் தெளியவைக்க கொஞ்சம் தாமதமாகும். அதற்கான வழி இலக்கியத்துக்குள் இல்லை. இலக்கியம் இலக்கியவாதிக்கு வழிகாட்டாது. வாசகனுக்கே வழிகாட்டும். எழுதுவது அதுவாகி நடிப்பது. வெளியே வர வேறொரு பிடிமானம் தேவை.

அந்தக் கொந்தளிப்பும், நிலையழிவும், சமநிலையின்மையும் என்னிடமுண்டு. அதன்பொருட்டு நட்பு, உறவு அனைவரிடமும் எப்போதும் மன்னிப்பு கோரிக்கொண்டேதான் இருக்கிறேன்.

ஆனால் சமரசங்கள்? அதுவும் கொள்கைகளில்? இல்லை.

எங்கும் எப்போதும் குறைந்தது ஐம்பதுபேர் சூழத்தான் சென்ற இருபதாண்டுகளாக வாழ்கிறேன். அந்தரங்கம், தனிப்பட்ட வாழ்வு என ஒன்று இல்லை. அணுக்கமுள்ளோர் அறியாத ஒன்றும் என் வாழ்வில் இல்லை.

அவ்வண்ணம் அணுகியறிந்தோர் எவரும் ஐயமின்றி உணர்வது ஒன்றே, இலக்கியத்தில், கருத்தில் எங்கும் எவ்வகையிலும் நான் சமரசம் செய்துகொள்வதில்லை.

அவ்வண்ணம் சமரசம் செய்துகொள்ளாமல் இருப்பதனாலேயே ஒரு இலக்கியப் பார்வையை தத்துவப் பார்வையை, ஆன்மிகப் பார்வையை தீவிரமாக முன்வைப்பவனாக இருக்கிறேன். அதையொட்டியே என்னைச் சுற்றி இத்தனை பேர் திரண்டிருக்கிறார்கள்.

இவர்கள் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். அத்தனைபேரும் வாசிப்புப் பழக்கமும், இலட்சியவாத நோக்கமும் கொண்டவர்கள். கலைகளில், இலக்கியத்தில், சேவைக் களத்தில் பெரும்பங்களிப்பாற்றுபவர்கள்.

சொல்லப்போனால் இன்று இவ்வண்ணம் முதன்மைப் பங்களிப்பாற்றும் ஏறத்தாழ அனைவரையுமே எங்கள் திரள் என ஆக்கிக் கொண்டிருக்கிறோம். வெளியே இத்தரத்தில் அதிகம்பேரை நீங்கள் பார்க்கமுடியாது. வெளியே பேசும்குரல்களென தெரியவருபவர்கள் மிகப்பெரும்பாலும் ஏதேனும் அரசியல் நம்பிக்கை சார்ந்து திரண்டவர்களாகவே இருப்பார்கள். கூட்டுக்குரல்களே அவ்வாறு ஒலிக்கின்றன, தனிமனிதக்குரல்கள் மிகமிக அரிது.

என்னை சூழ்ந்திருப்போர் எவருக்கும் உலகியல் சார்ந்து எதையும் நான் அளிப்பதில்லை. அவர்களிடமிருந்து நேரமும் பொருளும் பெறவே செய்கிறேன். அளிப்பது நான் கொண்டிருக்கும் இலட்சியவாதத்தை மட்டுமே. அந்த நம்பிக்கையை மட்டுமே.

இலட்சியவாதம் மீதுதான் எல்லாக் காலகட்டத்திலும் ஆழமான அவநம்பிக்கை மனிதனிடம் இருக்கிறது. ஏனென்றால் உலகியல் சார்ந்தே அன்றாட வாழ்க்கை உள்ளது. சமூகமதிப்பு உள்ளது. லட்சியவாதம் அதற்கு எதிரானது.

அந்த அவநம்பிக்கையுடன் வருபவர்களே அனைவரும். அவர்கள் கூர்ந்து கவனிப்பார்கள். பலகோணங்களில் பரிசீலிப்பார்கள். எப்படியேனும் இலட்சியவாதத்தைப் பொய்யென்றாக்கிவிடவேண்டும் என்றே அவர்களின் அகம் ஏங்கும். அதையும் மீறி ஆணித்தரமான நம்பிக்கை உருவான பின்னரே அவர்கள் இலட்சியவாதத்தை ஏற்கிறார்கள்.

அப்படி வந்தவர்கள்தான் என்னுடன் இருப்பவர்கள் அனைவருமே. அவ்வண்ணம் கூர்ந்து நோக்கி, ஐயப்பட்டு, மெல்லமெல்ல ஏற்று ஓர் அமைப்பென ஆனவர்கள் நாங்கள். சென்ற பதிநான்கு ஆண்டுகளாக ஏறத்தாழ அனைவருமே அதே தீவிரத்துடன், அதே நம்பிக்கையுடன் இருந்துகொண்டிருக்கிறோம். மேலும் மேலும் புதியவர்கள் வந்து சேர விரிந்துகொண்டும் இருக்கிறோம்.

காரணம் நான் முன்வைக்கும் அந்தச் சமரசமின்மை. அதன் மூலம் முன்வைக்கப்படும் மதிப்பீடுகள். மனிதர்கள் எப்போதும் இன்னொரு மனிதனையே நம்புகிறார்கள். வெறும் கொள்கைகளையோ தத்துவங்களையோ அல்ல. ஒருவனால் மெய்யாகவே முன்வைக்கப்படும்போது மட்டுமே கொள்கையும் தத்துவமும் இன்னொரு மனிதனால் ஏற்கப்படுகிறது.

*

அத்தகைய முழுமையான சமரசமின்மை சாத்தியமா? ஆம், அதற்கான வழி ஒன்றே. எதைச் செய்கிறோமோ அதில் உச்சமாக ஆதல். ஒரு துறையின் முதன்மை நிபுணர் எவ்வகையிலும் எவர் முன்னாலும் சமரசம் செய்துகொள்ளவேண்டியதில்லை என்பதை உங்கள் தொழிலை கொஞ்சம் கவனித்தாலே தெரிந்துகொள்ளலாம்.

சமரசம் தேவைப்படுவது, நமது போதாமைகள் மற்றும் பலவீனங்களால்தான். எந்த அளவுக்கு போதாமையும் பலவீனமும் இருக்கிறதோ அந்த அளவுக்குச் சமரசம் தேவையாகிறது.

ஒரு துறையின் முதன்மைத் திறன் கொண்ட ஒருவரின் சமரசமின்மை என்பது அவருடைய மேலதிகக் குணமாகவே உண்மையில் கருதப்படுகிறது. சொல்லப்போனால் அவர் திமிருடன் இருப்பதேகூட ஏற்கப்படுகிறது. பலசமயம் அந்த திமிரை விரும்பவும் செய்கிறார்கள்.

நான் என் தொழிலில். சினிமாவில், நுழைந்து 18 ஆண்டுகள் ஆகின்றன. என்னுடன் சினிமாவில் நுழைந்த பலர் இன்றில்லை. நான் புகழ்பெற்ற எழுத்தாளனாக, என் நண்பர் லோகிததாஸால் வலுக்கட்டாயமாக இழுத்து சினிமாவுக்கு கொண்டு செல்லப்பட்டேன். என் நண்பர்கள் சுகா, வசந்தபாலனால் அடுத்தடுத்த படங்கள் வந்தன. நான் இன்றுவரை எவரையும் தேடிச்செல்லவில்லை.

இந்த பதினெட்டு ஆண்டுகளில், ஒருவர்கூட ஒரு பைசா கூட எனக்கு பணம் பாக்கி வைத்ததில்லை. நின்றுவிட்ட படத்துக்குக் கூட பணம் தந்திருக்கிறார்கள். நான் எழுதியதை எடுக்காதபோதுகூட பேசிய பணத்தை அளித்திருக்கிறார்கள்.

காரணம் நான் எங்கும் வளைவதில்லை என்பது. அது உருவாக்கும் ஆளுமைச்சித்திரம். இன்றுவரை முதன்மை மதிப்பு இல்லாமல் எங்கும் எவரிடமும் பணியாற்றியதில்லை. வாசல்வரை வந்து வரவேற்காத எவரையும் பார்த்ததில்லை.

ஏனென்றால், நான் ஒரு தனிமனிதனாக தனிப்பட்ட பலவீனங்களே இல்லாதவன். சினிமாவில் அதற்கு மிகப்பெரிய மதிப்பு உண்டு. அத்துடன் ஓர் எழுத்தாளனாக நான் பொதுவாக எதிர்பார்க்கப்படும் அளவுகோல்களுக்கும் பலமடங்கு மேல் பங்களிப்பாற்றுபவன். ஒரு படத்தை முழுமையாக எழுதி, முழுமையான ஆராய்ச்சிச் செய்திகளுடன் அளிப்பேன். எனக்குரிய ஊதியத்துடன் என்னை அமர்த்தும் இயக்குநர் நேரடியாகவே படப்பிடிப்புக்குச் செல்லமுடியும்.

அந்த இரண்டுமே மதிப்பை, நிமிர்வை உருவாக்குகின்றன. தமிழில் இதுவரை எழுதிய எழுத்தாளர்களில் எல்லாவகையிலும் முதலிடத்திலேயே இருக்கிறேன் என சினிமாத்துறையினர் அறிவார்கள். அது பங்களிப்பின் விளைவாக மட்டுமல்ல, நிமிர்வின் வழியாகவும் அடைந்தது. வெளிப்படையாகச் சொன்னால் நிமிர்வே ஊதியத்தையும் வரையறை செய்கிறது.

*

ஆனால், இத்தனை ஆண்டுகளில் வேறுசில சமரசங்களை அடைந்துகொண்டிருக்கிறேன். அது என் ஆளுமையில் இயல்பாக உருவாகி வருகிறது.

முதலில் பிறரது தனிமனித பலவீனங்கள், குணக்கேடுகள் முன்பு போல எரிச்சலை அளிப்பதில்லை. உடனடியாக சில சமயம் எதிர்வினை ஆற்றினாலும் மனிதர்கள் எவர் மீதும் நீடிக்கும் ஒவ்வாமை என ஏதுமில்லை. முன்பு ஒழுக்கம் ஓர் அளவுகோலாக இருந்தது. இன்று அதெல்லாம் ஒரு விஷயமே அல்ல என நினைக்கிறேன்.

ஆகவே எவராயினும் ஏற்பதற்கு இன்று எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அது என் நண்பர்கள் பலருக்குச் சில சமயம் திகைப்பை அளிக்கிறது என தெரியும். ஆனால் எதுவும் அவ்வளவெல்லாம் பெரிய விஷயம் அல்ல என்னும் உளநிலை நோக்கிச் செல்கிறேன்.

அதேபோல, இலக்கிய மதிப்பீடுகள். முன்பு திறனற்ற அல்லது மேலோட்டமான எழுத்துக்கள் மேல் ஓர் ஒவ்வாமையை அடைவேன். போலி எழுத்துக்கள் எரிச்சலூட்டும். இலக்கிய அளவுகோல்களில் சமரசமே இல்லாமல் இருக்கவேண்டும் என்றும், கடுமையாக எதிர்வினை ஆற்றவேண்டும் என்றும் உறுதி கொண்டிருந்தேன்.

இன்று அப்படி அல்ல. இந்த வாழ்க்கையில், தமிழ்ச்சூழலில், ஏதாவது கலை, இலக்கியம் மற்றும் அறிவுச் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் பற்பல பல்லாயிரங்களில் ஒருவர் என அறிந்திருக்கிறேன். ஆகவே எல்லா செயல்பாடுகளுமே நல்லவைதான், உயர்ந்தவைதான், செயலாற்றும் எல்லாருமே எனக்கு வேண்டியவர்கள்தான்.

கலையில், சிந்தனையில் கொஞ்சம் தர வேறுபாடு இருக்கலாம். அந்த வேறுபாட்டை மழுங்கடிக்கவேண்டியதில்லை. அதை முன்வைக்கலாம். ஆனால் எதிர்ப்பதும், நிராகரிப்பதும், எரிச்சல்கொள்வதும் தேவையற்றவை என்று தோன்றுகிறது. ஏதேனும் ஒருவகையில் பங்களிப்பாற்றிய எல்லாரையுமே அரவணைக்கவே நினைக்கிறேன்.

அதை இப்போது எல்லாரையும் தழுவிக் கொள்கிறேன், எல்லாரையும் பாராட்டுகிறேன் என்றெல்லாம் சொல்கிறார்கள். இருக்கட்டும், அது என்னுடைய இன்றைய மனநிலை, அவ்வளவுதான்.

*

நம் சமூகத்தில் பல்லாயிரம் பேரில் ஒருவர்தான் ஏதேனும் தளத்தில் தனித்திறனும், அதை மேம்படுத்திக்கொள்ளும் சலியா உழைப்பும் கொண்டவர். அவர் அடையும் வெற்றிகளை மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் போதாமையால், தங்கள் பலவீனங்களால் தொடர்ச்சியாகச் சமரசங்கள் செய்துகொண்டு வாழ்பவர்கள்.

ஆகவே அவர்கள் வெற்றிபெற்றவர்கள் தங்கள் சமரசங்களைப் போல மேலும் சமரசங்கள் செய்துகொண்டவர்கள் என்று எண்ணிக்கொள்கிறார்கள். அவர்களால் வேறுவகையில் கற்பனை செய்ய முடியாது. வென்றோர் மற்றும் முதன்மையானவர்களின் சரிவுகளை சாமானியர் உள்ளூர விரும்புகிறார்கள். ஆகவே புகழ்பெற்றவர்களின் சமரசங்கள்  மற்றும் சரிவுகளைப் பற்றி வம்புபேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

அந்த வம்புகள் வழியாகவே சாமானியர் தங்களை நியாயப்படுத்திக் கொள்ள முடியும். தங்கள் எளிய வாழ்க்கையை பெரிய மனசோர்வில்லாமல் வாழ்ந்து தீர்க்க முடியும். தங்கள் இருப்பு, தங்கள் வாழ்க்கை பற்றி அவர்களுக்கே இருக்கும் அகக்கூச்சத்தை கடக்கமுடியும்.

எளிய மனிதர்கள் தங்கள் கால்களால், தங்கள் எண்ணங்களால் நிற்கமுடியாதவர்கள். அவர்களுக்கு அமைப்புகளாகத் திரண்டே நிலைகொள்ள முடியும். சாதி, இனம், மதம், கட்சி, கோட்பாடு என பல திரள்கள். அதிலொன்றாக தங்களை உணர்ந்தால் மட்டுமே அவர்களால் தன்னம்பிக்கை கொள்ள முடியும். அவர்களால் நிமிர்ந்து நடந்து வாழ்வைக் கடப்பவர்களைப் புரிந்துகொள்ள முடியாது.

வம்புகள் வசைகள் அவதூறுகள் என எல்லா பொதுவெளியிலும் கொப்பளிப்பவர்கள் அவர்கள்தான். அவர்கள்மேல் அனுதாபமும் பிரியமுமே எனக்கு உள்ளது. பெரும்பாலும் அவர்களை ஒரு புன்னகையுடன் அணுகுகிறேன். வாழ்ந்தாள் முழுக்க க.நா.சு. எளிமையான அமைப்புசார்ந்த மனிதர்களின் அவதூறுகளையும் காழ்ப்புகளையும் ஏளனங்களையும் சந்தித்துக்கொண்டிருந்தார். இன்று அவரைப்பற்றிய அவதூறுகளை எண்ணினால் புன்னகையே எழுகிறது. அவரும் இந்தப் புன்னகையை வந்தடைந்திருந்தார்.

சுருக்கமாகச் சொல்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மான் சமரசம் செய்துகொள்ள வேண்டியதில்லை. சிறுவனாகவே அவருக்கு அது தேவைப்படவில்லை. போராடி மேலே வந்த இளையராஜா போராடும் காலத்திலேயே சமரசம் செய்யத் தெரியாதவர்தான். மணிரத்னமோ, கமல்ஹாசனோ, சச்சின் டெண்டுல்கரோ எவருடன் எதன்பொருட்டு சமரசம் செய்துகொள்ளவேண்டும்?

இலக்கியமாயினும் சினிமாவாயினும் என் களத்தில் நான் முதன்மையானவனாகவே நுழைந்தேன். அவ்வண்ணமே இருப்பேன். பிறர் என்னுடன் போட்டியிடுவதைப் பற்றி கற்பனைசெய்யக்கூட முடியாத தொலைவிலேயே திகழ்வேன். அந்த உச்சத்தை கீழே நிற்பவர்களிடம் எளிதில் விளக்க முடியாது. கீழிருக்கும் எதுவும் அங்கில்லை. சமரசங்கள் மட்டுமல்ல, சஞ்சலங்களும் ஐயங்களும்கூட இல்லை.

கீழிருக்கும் பெரிய மலைகள் எல்லாம் அந்த உயரத்தில் வெறும் கூழாங்கற்கள். நீங்கள் நினைக்கவே மலைக்கும் செயல்களெல்லாம் அங்கே எளிமையானவை. ஆனால் அங்கே வேறு அழுத்தங்கள் உண்டு. கீழிருப்போர் எண்ணிப்பார்க்கமுடியாத தீவிரங்கள் அவை. மிக நுண்மையானவை. அங்கே ஒரு படியில் இருந்து அடுத்த படிக்கு ஏறவேண்டும் என்றால் பல்லாயிரம் காதம் பறக்கவேண்டும்.

அங்கே சென்றபின் கீழிருந்து அடையத்தக்கதாக ஒன்றுமில்லை. பாராட்டுக்கள், விருதுகள், அங்கீகாரங்கள் எவற்றுக்கும் எப்பொருளும் இல்லை. எவருடைய பாராட்டு? நாம் எந்த தளத்தை விட்டு முற்றிலும் விலகிச் சென்றிருக்கிறோமோ அங்கிருந்து ஒரு பாராட்டு வந்து என்ன ஆகப்போகிறது?

நாம் எய்தவேண்டியவை அங்கே அதற்கும் அப்பால் உள்ளன. நாம் அடைந்த உச்சங்களுக்கு அப்பால் அடுத்த உச்சமாக. அடைய அடைய எஞ்சும் ஒன்றாக. அதை நோக்கிச்சென்றுகொண்டே இருப்பதன் பேரின்பத்தை அடைந்தவர்கள் உச்சத்தில் திகழ்பவர்கள். அவர்களின் உளநிலைகளை கீழிருந்து எவரும் அளந்துவிடமுடியாது.

ஆனால் இன்னொன்று உண்டு. அங்கே அவ்வுயரத்தில் சட்டென்று வந்து கவியும் வெறுமை. அனைத்தையும் விட்டுவிடவேண்டும் என எழும் ஒரு வகை அகத்துடிப்பு. அதை வெல்ல வலுக்கட்டாயமாக கீழே வந்தாகவேண்டியிருக்கிறது. இங்கே எதையாவது பற்றிக் கொண்டிருக்கவேண்டியிருக்கிறது.

*

அந்த உயரம் பற்றி நான் உங்களுக்காகச் சொல்லவில்லை. பொதுவாக இதை வாசிக்கும் இளைஞர்களுக்காகச் சொல்கிறேன். அவர்களில் பலர் அந்த உச்சம் நோக்கி வரவிருப்பவர்கள் என்பதனால்.

ஒருவன் வாழ்நாளில் கொள்ளவேண்டிய முதல் ஞானம் என்பது தன்னைவிட அறிவால், செயலால், எய்தியவையால், இயற்றியவையால் முன்சென்ற பெரியவர்களிடம் கொள்ளும் அடக்கம்தான். என்றேனும் அவனும் அத்தகையோன் ஆக அதுவே முதல்படி.

அப்படி ஓர் உயரம் உண்டு என உணரவேண்டும். அதைச் சென்றடைதல் அரிது என அறியவேண்டும். அதை நோக்கி தவமிருக்கவேண்டும். அதற்கு அந்த உயரத்தை அடைந்தவர் மீதான மதிப்பு மிக அடிப்படையானது. எனக்கு அது இருந்தது. நான் தேடித்தேடிச்சென்று அடிபணிந்துகொண்டிருந்தேன்.

அப்படி ஓர் உயரம் இல்லை என்று எண்ணிக்கொள்ளலாம். எல்லாரும் சமம்தான், சாதிப்பவனும் சாமானியனும் ஒன்றுதான் என்றெல்லாம் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அப்படி சொல்பவன் ஒருபோதும் உயரமென்ப ஒன்றையும் எய்தப்போவதில்லை. அவன் இருந்த இடத்தை தேய்க்கும் எளியவன், வம்புபேசி வாழ்ந்து தீரவேண்டியவன்.

அந்த அடக்கத்தை இழந்து, உயர்ந்து எழுந்தவர்களை தன் அன்றாடத்தாலும் தன் சிறுமையாலும் அளவிட முயல்பவன் தன் ஞானத்துக்கான முதல் வழிதிறப்பையே மூடிக்கொள்கிறான். எளிய வம்பனாகி, தன்னை மேலும் சிறியோனாக்கிக் கொள்கிறான். உள்ளூர தன் சிறுமையை எண்ணி கூசி, அதை வெல்ல வெளியே மேலும் சிறுமையை கொட்டிக்கொண்டிருக்கிறான்.

சில விஷயங்கள் மிக மிக எளிமையானவை, கண்கூடானவை, வழிமுன் மலை என தூலமாக நின்றிருப்பவை.

*

சரி, அசாதாரணமான திறன்கள் கொண்டவர்கள், செய்துகாட்டியவர்கள் மட்டுமே சமரசம் இன்றி இருக்க முடியுமா? இல்லை. முதன்மையானவர்கள் எந்த இழப்பும் இன்றி சமரசம் இல்லாமல் இருக்க முடியும் என்றே சொல்லவந்தேன். அவர்களின் உலகை பொதுவாக நம் சூழல் அனுமதிக்கிறது. ஏனென்றால் அவர்கள் அனைவருக்கும் பயனுள்ளவர்கள். வண்டு எல்லா சிலந்திவலையையும் அறுத்துச்செல்லும். சிலந்திவலை இருப்பதையே அது அறியாது.

அவ்வாறல்லாதவர்கள், சற்று குறைவான தனித்திறனும் தீவிரமும் கொண்டவர்கள், சமரசமின்மை கொண்டிருந்தால் அதன் விளைவாக சில இழப்புகளுக்கு ஆளாவார்கள். அவ்விழப்புகளை உற்றார் சுட்டிக்காட்டவும் செய்வார்கள். அவ்விழப்பு குறித்த பிரக்ஞை அவர்களுக்கும் இருந்துகொண்டே இருக்கும்.

ஆனால் சமரசமில்லாமல் இருப்பதன் தன்னிமிர்வு மிகப்பெரிய சொத்து. சிறுமைகளற்றவன் என ஒருவன் தன்னைத்தானே உணர்வது மிகப்பெரிய வெற்றி

ஜெ

முந்தைய கட்டுரைமுத்தம்பெருமாள், நடிகர் சிம்பு
அடுத்த கட்டுரைகாடு, ஒரு கடிதம்