அன்புள்ள ஜெ,
நான் வளர்ந்தது அருமனை. அங்கே என் உறவினர்களில், கம்யூனிஸ்ட் கட்சியிலும் தொழிற்சங்கங்களிலும் இருப்பவர்கள் ஒரு புறம், இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சியில் இருப்பவர்கள் மறு புறம் என்கிற சூழலில் தான் நான் வளர்ந்தேன். ஆர்.எஸ்.எஸ் சாகாக்களில் சிறுவனாகக் கலந்து கொண்டிருக்கிறேன். விளையாட்டும், உடற்பயிற்சியும், தேசபக்தி பாடல்களுமாக கழியும் அந்தி வேளைகள் எனக்கு அப்போது மிகப் பிடித்திருந்தன.
பிறகு மெல்ல வாசிக்கும் பழக்கம் ஆரம்பித்த போது இடதுசாரி சிந்தனை உள்ளவர்களே எனக்கு நட்பானார்கள். ஆர்.எஸ்.எஸில் உள்ள ஒரு நண்பனுக்குக் கூட தினமலரும், வாரமலரும் தாண்டி ஒன்றும் வாசிக்கும் பழக்கம் இருக்க வில்லை. ஆனால் இடதுசாரி நண்பர்களே குறிப்பாக சுஜித் என்கிற எனது மாமா தான் சிறு பத்திரிகைக்களையும் நிறைய புத்தகங்களையும் தந்து என் வாசிப்பு பழக்கத்தை நான் தொடர ஊக்குவித்தவர். முதன் முதலாக ரப்பர் நாவலை தந்து உங்களை எனக்கு அறிமுகப் படுத்தியவரும் அவர் தான். இந்து மதம், அப்படி இப்படி என்று பேசித் திரிந்த எனது சில மாமாக்களை விட இடதுசாரி சுஜித் மாமா தான் புராணங்கள் பற்றியும் நாட்டுப் புறக் கலைகள் பற்றியும் என்னுடன் நிறைய உரையாடியவர்.
பின்பு நான் கண் கூடாக பார்த்த விஷயங்கள். மதப்பிடிப்பு, கடவுள் நம்பிக்கை உள்ள மத சம்பந்தமான அரசியல் உள்ள எனது மாமாக்களும், அவர்கள் நண்பர்களும் பணத்தை வட்டிக்கு விடுவதிலும் பணத்திற்காக மனுஷத் தன்மையற்று நடந்து கொள்வதையும் பார்த்திருக்கிறேன். ஆனால் இடதுசாரி சிந்தனையுள்ள கடவுளை மறுக்கிற எனது சுஜித் மாமா போன்றவர்கள் எப்போதும் மனிதர்கள் மீதான உண்மையான அக்கறையுடனும், அடுத்தவர்களை பணத்திற்காக சுரண்டாதவராகவும் இருப்பதையும் பார்த்திருக்கிறேன். இவை பத்தாம் வகுப்பு படித்துகொண்டிருந்த எனக்கு அவரிடம் மிகுந்த நம்பிக்கையையும், இடதுசாரி சிந்தனைகளின் மீது ஒரு பெரும் மரியாதையையும் ஏற்படுத்திற்று.
மேலும் நான் வளர வளர விளவங்கோடு, திருவட்டார் தொகுதிகளில் நடக்கும் அரசியலை கவனிக்க ஆரம்பித்தேன். ஹேமச்சந்திரன், டி. மணி போன்ற இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் எம்.எல்.ஏவாக இருந்தபோது கூட அருமனை முக்கில் சாதரணமாக நடமாடுவதும், பேருந்தில் பயணிப்பதையும் பார்த்திருக்கிறேன். ஆனால் மற்ற கட்சிகளில் எம்.எல்.ஏவாக ஏன் ஒரு வார்டு கவுன்சிலராக இருப்பவர்கள் கூட செய்யும் அலப்பறைகளையும் ஒப்பிட்டு பார்த்திருக்கிறேன். இந்த இடதுசாரிகளின் எளிமை வெறும் தத்துவமாக மட்டுமில்லாமல் நடைமுறையிலும் இருப்பதைக் கண்ட எனக்கு ஒரு இடதுசாரி சிந்தனை உள்ளவனாக இருக்க வேண்டும் என்கிற ஆசை என்னுள் ஏற்பட்டது.
ஆனால் இன்று வரைக்கும் நான் மார்க்சின் மூலதனத்தையோ மார்க்சிய தத்துவங்களையோ ஆழமாகப் படித்தவன் அல்ல. ஒரு உண்மையான இடதுசாரியுமில்லை. நேரடியாக என் முன் நடக்கும் மனிதர்களின் வாழ்கையிலிருந்தும், என் வாழ்கையிலிருந்துமே நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் எனது மகனின் ஒருவயதின் போது சோறூட்டும் சடங்கை எங்கள் குலதெய்வ கோவிலான மேலாங்கோட்டம்மனின் கோயிலில் தான் நடத்தவேண்டும் என்று விரும்பி சென்று நடத்தினேன். ஆனால் அந்த கோயிலின் பழமையான கட்டமைப்பை மாற்றி காங்கிரீட் பில்டிங்கில் கலர் பெயிண்டுகள் தேய்த்து மார்டனாக மாற்றி விட்டிருக்கிறார்கள். (இதை பற்றி உங்களுக்கு ஏற்கனவே ஒரு முறை மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன்.)
சமீபத்தில் சிவாலயத்திற்காக என் மனைவி, மகனுடன் ஊருக்கு வந்திருந்த போது திருவிடைக்கோடு கோவிலின் அழகான பழமையான ஓடுவேய்ந்த முன் மண்டபத்தை இடித்து விட்டு காங்கிரீட்டில் கோபுரம் கட்ட காசு வசூலித்து கொண்டிருந்தார்கள். அதை பார்த்து நான் உள்ளூர வேதனைப் பட்டேன். இந்த பழமையின் அழகியலை, எனக்கு கற்றுக் கொடுத்தது எனது இடதுசாரி சுஜித் மாமா தான். ஆனால் அந்த அழகியல் உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் அதை காங்கிரீட் கட்டடங்களாக மாற்ற பணம் வசூலித்து கொண்டிருந்தவர்கள் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் இளைஞர்கள்.
திருநந்திக்கரை கோவில் மட்டுமே அப்படியே அழகாக மெயிண்டன் பண்ணுகிறார்கள். உண்மையில் அந்த கோவில் நிர்வாகத்தில் இடதுசாரிகள் பங்கு கொள்கிறார்கள் என்று ஒரு குற்றசாட்டு “கம்மூனிஸ்டுகளுக்கு கோவிலில் என்ன வேலை” என்று சில வருடங்களுக்கு முன்னால் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்பியது எனக்கு லேசாக ஞாபகத்திற்கு வந்து போனது. இது உண்மையா என்று எனக்கு தெரியாது.
உலக மயமாக்கல், தாராள மயமாக்கல் என்று தொண்ணூறுகளின் துவக்கத்தில் காங்கிரஸ் அரசு முனைப்பாக இருந்தபோது அதை எதிர்ப்பதில் முன்னணியில் நின்றவர்கள் இடதுசாரிகள் தான். அந்த உலக மயமாக்கல் தான் இன்று நம் பண்பாட்டையும், கலைகளையும், நமது விளையாட்டுகளையும் மெல்ல, மெல்ல அழித்துகொண்டு வருகிறதை என் சிற்றறிவிற்கு தெரிகிறது. அந்த உலக மயமாக்கல், மேற்கத்திய மயமாக்கலையும் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இடதுசாரிகள் ஆனால் எனக்கு தெரிந்து எந்த ஒரு இந்து அமைப்போ அல்லது இந்துத்துவம் பேசி அதிகாரத்திற்கு வந்த பா.ஜ.கவோ எதிர்ப்பு தெரிவித்து நான் பார்க்கவில்லை.
இன்று நானும் இந்த உலக மயமாக்கலில், தாராள மயமாக்கலில் முக்கிய பங்களிப்பாற்றும் விளம்பர துறையில் தான் வேலை பார்க்கிறேன். இந்த வியாபார வெறி கொண்ட உலக மயமாக்கலின் உள்ளே இருந்து பார்க்கும் போது தான் தெரிகிறது இது எத்தனை வன்மமாக நமது பண்பாட்டின், மனிதர்களின், கிராமங்களின் மீது தன் வலையை வீசுகிறது என்பதை! மத மாற்றம் மாதிரியான விசயங்களை விட இந்த வியாபாரமய அன்னியமாக்கல் தான் இன்னும் வேகமாக நமது கிராமங்களை, பண்பாட்டை, விவசாயத்தை அழித்து வருகிறதை பார்க்கிறேன். இந்த இடத்தில் தான் நான் இடதுசாரிகளின் மேல் மதிப்பு கொள்கிறேன். இதைத் தொடக்கத்திலேயே எதிர்த்தவர்கள் அவர்கள் தான்.
இதை நான் ஏன் எழுதுகிறேன் என்றால் இடதுசாரிகள் என்றாலே எதிர் மறையாகவே எப்போதும் நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் நான் நேரடியாக பார்த்து கொண்டிருக்கும் அனுபவம் வேறாக இருக்கிறது. உண்மையிலேயே மனசுக்கு பட்டதை கேட்கலாம் என்று தோன்றியது ஆகவே தான் இக்கடிதம்.
அன்புடன்
சந்தோஷ்
http://ensanthosh.wordpress.com/
அன்புள்ள சந்தோஷ்
நீங்கள் சொல்லக் கூடிய அனைத்தையும் இன்னமும் அழுத்தமாகச் சொல்லக் கூடியவன் நான். இந்தியாவில் இடதுசாரிகளை இன்றும் ஒரு பெரும் தார்மீக சக்தி என்றே நான் நினைக்கிறேன். இப்போதும் அவர்கள் ஆற்றக் கூடிய சமூக -அரசியல் பணி ஒன்று உள்ளது. அந்தப் பணியை அவர்கள் ஆற்றவில்லை என்பதே என்னுடைய குற்றச் சாட்டாக எப்போதும் உள்ளது.
இடதுசாரிகள் என நான் சொல்வது மார்க்ஸிய அடிப்படைகள் கொண்ட கட்சிகளை. அவர்கள் தங்கள் கோட்பாடுகளில் உள்ள காலத்துக்கு ஒவ்வாதவற்றை களைந்து விட்டு, தங்கள் அரசியல் நடவடிக்கைகளில் இன்னும் ஜனநாயகப் பண்புகளை மேற் கொண்டு இன்னும் விரிந்த தளத்தில் தங்கள் பங்களிப்பை மேலெடுக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்.
விரிந்த கோணத்தில் பார்த்தால் உலகமெங்கும் மார்க்ஸிய அடிப்படை கொண்ட அரசியலியக்கங்களுக்கான தேவை ஒன்றுள்ளது. அந்த தேவை இன்று முதலாளித்துவம் ஒற்றைப் பெரும் சக்தியாக வளர்ந்து விட்டிருக்கும் நிலையில் இன்னும் பிரம்மாண்டமானதாக ஆகியிருக்கிறது.
இடதுசாரிகள் ஆற்ற வேண்டிய வரலாற்றுப் பாத்திரம் என்பது இன்றைய முதலாளித்துவ அரசியலுக்கு இணையான எதிர்ச் சக்தியாக அமைவது என்பதுதான். அவர்கள் இல்லாத இடத்தில் கட்டுப்படுத்தும் விசைகள் இல்லாமல் முதலாளித்துவம் கொடூரமான சுரண்டலாக மாறி விடுகிறது. அரசு, வணிக நிறுவனங்கள், ஊடகங்கள் என்ற ஒரு கூட்டுச் சக்தி உருவாகி ஒட்டு மொத்த சமூகத்தையே முழுமையான அடிமைகளாக ஆக்கி, கடைசித் துளி உயிர்ச் சக்தி வரை உறிஞ்சி, சக்கைகளாக ஆக்கி விடுகிறது.
அந்த சக்திக்கு எதிராக சாமானிய உழைக்கும் மக்களின் சக்தியைத் திரட்டி ஒரு வரலாற்று விசையாக ஆகவேண்டியது இடதுசாரிகளின் பொறுப்பு. எந்நிலையிலும் உழைப்பாளியின் குரலாக அமைவது, அதற்கான அமைப்புகளை உருவாக்கி நடத்துவது, அந்த கருத்துச் சக்தியை அரசியல் ஆற்றலாக ஆக்கி அரசையும் பொருளியலையும் கட்டுப் படுத்துவது ஆகியவற்றை அவர்கள் செய்தாக வேண்டும்.
இந்த இணைய தளத்திலேயே கட்டுரைகளில் நீங்கள் பார்க்கலாம். நம் இடதுசாரிகளின் நேர்மை, அவர்களின் அறிவார்ந்த அணுகுமுறை பற்றி பல கட்டுரைகளை நான் எழுதியிருக்கிறேன். ஜெ.ஹேமச்சந்திரன் முதல் பெல்லார்மின் வரையிலான இடதுசாரி அரசியல்வாதிகள் மிகுந்த மரியாதையுடன் தான் எப்போதும் என்னால் குறிப்பிடப் பட்டிருக்கிறார்கள்.
ஏன் , இலட்சிய வாதம் பற்றிய என் நம்பிகைகளின் நூலான அறம் சிறுகதை தொகுப்பைக் கூட என் ஆதர்ச பிம்பங்களில் ஒருவரான ஜெ.ஹேமச்சந்திரன் அவர்களுக்குத் தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன் [வம்சி புத்தக நிலையம் வெளியிடவிருக்கிறது]
தனிப்பட்ட முறையில் இ.எம்.எஸ் அவர்களின் சிந்தனைகள் என்னை உருவாக்கியவை. எப்போதும் விவாதங்களில் அவரை ஒரு பெரும் சிந்தனையாளராகவும் ஆசானாகவும் மட்டுமே முன் வைத்து வருகிறேன் என்பதையும் பல கட்டுரைகளில் காணலாம்.
ஒரு தொழிற்சங்கவாதியாக நான் இருந்த காலம் வரை இடதுசாரித் தொழிற் சங்கத்திலேயே இருந்துள்ளேன். இடதுசாரித் தொழிற் சங்க வாதம் மேல் இன்றும் நம்பிக்கை உண்டு.
மார்க்ஸிய வரலாற்றுப் பார்வையையே வரலாற்றின் பரிணாமத்தையும், செயல்முறையையும் அணுகுவதற்கான மிகச்சிறந்த தத்துவக் கருவியாக நான் நினைக்கிறேன். என் கட்டுரைகள் அனைத்திலும் அதைத் தான் கையாண்டு வருகிறேன்.
அதே சமயம் எனக்கு மார்க்ஸியம் மீதும், இன்றைய மார்க்ஸியர்கள் மேலும் கடுமையான விமர்சனங்கள் உண்டு. என் நம்பிக்கையையும், விமர்சனத்தையும் சரியான விகிதத்தில் ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலில் சொல்லியிருக்கிறேன்.
பொதுவாக எதிர்மறைக் கருத்தைச் சொல்லும்போது அதற்கு அதிக அழுத்தம் விழுந்து விடுகிறது. அந்த எதிர்மறைக் கருத்து அதற்கு முன்னர் சொல்லப்பட்ட நேர்நிலைக் கருத்துக்களுடன் இணைத்து அதன் மறுபக்கமாகவே கொள்ளத் தக்கது என்பது என் எண்ணம். என் இணைய தளக் கட்டுரைகளில் இடதுசாரிகளைப் பற்றிய நூற்றுக்கணக்கான சாதகமான குறிப்புகள், கருத்துக்கள் உள்ளன.
இந்த தருணத்தில், உங்கள் கேள்விக்குப் பதிலாக இரண்டையுமே சொல்லிப் பார்க்கலாமென நினைக்கிறேன். அடிப்படை அளவில் வேறெந்த அரசியல் வாதியை விடவும், வேறெந்த அரசியல் செயல் பாட்டாளனை விடவும் இடதுசாரி அரசியல்வாதியும், செயல் பாட்டாளனும் மிக மிக மேலானவர்கள்.
இடதுசாரி என்ற அறச்சக்தி
இடதுசாரி அரசியலின் அடித்தளமாக இருப்பவை இரு பண்புகள். ஒன்று, அரசியலை பொதுச் சேவைக்கான வாய்ப்பாக காணும் நோக்கு. அதற்கான தியாக மனநிலை. இரண்டு, எதையும் அறிவார்ந்து ஆராயக் கூடிய போக்கு. தர்க்க பூர்வமாக சிந்திப்பதும் அதற்கு தேவையான வாசிப்பும்.
இந்த இரு அம்சங்களும் பிற அரசியல் செயல் பாட்டாளர்களிடம் மிக மிகக் குறைவு. ஒரு சிலர் இருக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் அப்படி இல்லை. இந்துத்துவ தரப்பினரில் முதல் பண்புள்ள சிலரை நான் கண்டிருக்கிறேன். இரண்டாவது அம்சம் அவர்களிடம் ஒரு பூச்சாகக் கூட இல்லை. அவர்களை உண்மையில் அறிவார்ந்த போக்குக்கு எதிரான போக்குள்ளவர்கள் என்றே நான் சொல்லத் துணிவேன்.பிற அரசியல் செயல் பாட்டாளர்களில் இந்த இரு கூறுகளுமே இருக்காது. அவர்கள் வெறும் சுயநல மந்தைகள்.
ஆகவே நம்முடைய பொதுச் சூழலின் தார்மீக சக்தியாகவே இடதுசாரிகள் விளங்கி வருகிறார்கள். நம்முடைய கிராமங்களில் எங்கே ஒரு இடதுசாரி செயல் பாட்டாளன் இருக்கிறானோ அங்கே அடிப்படை தார்மீகத்தின் குரல் ஒலிக்கத் தான் செய்யும். மனித உரிமைகளுக்காகவும், பொருளியல் உரிமைகளுக்காகவும் கிராம அளவில் இடதுசாரிகளின் குரல் தான் முதன்மையானது.
இந்தியப் பெருநிலத்தில் பெரும் பகுதி இன்னமும் நிலப்பிரபுத்துவ அமைப்புக்குள் , நிலப் பிரபுத்துவ மனநிலைக்குள் அழுந்திக் கிடக்கிறது. ஆக்கப்பூர்வமான இடதுசாரி அரசியல் அதை உடைத்து வெளிக்கொணரும் ஆற்றல் கொண்டது. இடதுசாரி அல்லாதவர்களின் கோட் பாடுகளுக்கும் நடை முறைகளுக்கும் அந்த வல்லமை இல்லை. இந்துத்துவர்கள் போன்ற வலதுசாரிகள் இன்னும் பின்னோக்கி அதை கொண்டு செல்லக் கூடியவர்கள்.
இன்றைய சூழலில் நாம் இதை வெளிப்படையாகவே காணலாம் எந்த ஒரு சமூகப் போராட்டமும் அதில் ஒரு இடதுசாரிப் பங்களிப்பு இல்லையேல் மிக எளிதில் நிலப்பிரபுத்துவ- முதலாளித்துவ சக்திகளால் கடத்திச் செல்லப் படும். அதன் அடிப்படைகள் திரிக்கப் படும். சாதிகளாக திரளும் சமூக இயக்கங்களில் இதை தெளிவாகவே காணலாம். தலித் இயக்கங்களில் கூட.
நம்முடைய தொழிற் சங்க இயக்கத்திற்கு இடதுசாரிகளின் கொடை மகத்தானது என்று நான் நம்புகிறேன். நில அடிமை முறை வேரூன்றிய நம் தேசத்தில் இடதுசாரிகளின் தொழிற் சங்கக் கட்டுமானம் மூலமே உழைப்பாளிக்கு அடிப்படை வாழ்க்கையுரிமையும், கௌரவமும் கிடைத்தது. இடதுசாரித் தொழிற் சங்கங்கள் உருவாக்கிய அலை காரணமாகவே எல்லா துறைகளிலும் உழைப்பாளி தன் உழைப்பை ஒரு பொருளாதார சக்தி என உணர்ந்தான். அதைத் தன் ஆயுதமாக கருத ஆரம்பித்தான்.
இடதுசாரிகள் அல்லாத எல்லா தொழிற் சங்கங்களும், தொழிற் சங்கம் என்ற இலக்கை கைவிட்டு வெற்று அரசியல் நோக்குடன் கட்சிகளின் அடியாட்களாக மருவியவையே. குறிப்பாக இந்துத்துவ தொழிற் சங்கங்களும், திராவிட தொழிற் சங்கங்களும்.
தொழிற் சங்கங்களுக்கான மூன்று இலக்கணங்கள்
- தொழிலாளர்களைத் திரட்டுவது
- கற்பிப்பது
- போராடுவது
மூன்றையும் அவை செய்வதில்லை. மாதாமாதம் சந்தா வாங்க தொழிலாளரை சந்திக்கச் சோம்பல் பட்டுக் கொண்டு போனஸ் பணத்தில் வருடாந்தர சந்தா வாங்கக் கூடியவை அவை.
நான் தனிப்பட்ட முறையில் மதிக்கும் அரசியல் தலைவர்களில் அனேகமாக அனைவருமே இடதுசாரிகள் தான். ஜே.எச். முதல் அச்சுதானந்தன் வரையில். நான் மதிக்கும் அரசியல் நண்பர்களில் பெரும்பாலும் அனைவருமே இடதுசாரிகளே.
இவ்வளவுக்கும் மேல் நின்று கொண்டு தான் இடதுசாரிகள் மேல் என் விமர்சனங்களை வைக்கிறேன். அவை என் கண்ணில் படக் கூடியவை என்பதனால்.
மார்க்ஸியம் என்ற மாற்றுக் கருத்தியல்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முக்கியமான கருத்தியலான மார்க்ஸியம் அடிப்படையில் ஒரு மகத்தான அகத் தரிசனத்தின் தர்க்கப் பூர்வமான விரிவாக்கம். இப்படி அதைச் சொல்லலாம் :
மனிதர்களுக்கு இந்த பூமியின் வளங்களில் சம உரிமை உள்ளது. ஆனால் இயற்கையின் பரிணாம விதிகளால் சம வாய்ப்பு கிடைப்பதில்லை. அந்த சம வாய்ப்பை அளிக்கும் ஒரு லட்சிய சமூகத்தை நோக்கியே வரலாறு வழியாக மானுட குலம் பரிணாமம் அடைந்து சென்று கொண்டிருக்கிறது’
– இது மார்க்ஸிய இலட்சிய வாதம்
இந்த வரலாற்றுப் பரிணாமத்தை விளக்க வரலாற்றை ஆராயும் ஒரு தத்துவக் கோட்பாட்டை மார்க்ஸ் உருவாக்கினார். அதன்படி வரலாறு உற்பத்தி, வினியோகம், நுகர்வு என்னும் அடிப்படை பொருளியல் செயற்பாடுகளின் விளைவாகவே முன்னகர்கிறது. அதுவே அடித்தளம். கலாச்சாரம், அரசு எல்லாமே மேல் கட்டுமானம் மட்டுமே. அடித்தளப் பொருளியல் சக்திகள் தங்களுக்குள் முரண்பட்டு மோதுகின்றன. அந்த மோதலின் விளைவாகவே வரலாற்றில் முன்னகர்வு சாத்தியமாகிறது.- இது மார்க்ஸிய தத்துவம்
உற்பத்தி சக்திகளின் முரணியக்கம் மூலம் இயல்பாகவே சமூக மாற்றம் நிகழ்ந்து கம்யூனிச சமூகம் வரும் என்றார் மார்க்ஸ். உற்பத்தி சக்திகளில் மையமானதான தொழிலாளர் வர்க்கம் கிளர்ந்தெழுந்து உற்பத்தி மூலங்களை கைப்பற்றும் என்றார். அதுவே புரட்சி. அதன் மூலம் நிலம், தொழிலாளர்கள் என இரு உற்பத்தி சக்திகள் மட்டுமே எஞ்சும் நிலை வரும். நிலத்தைப் பொருளாக ஆக்கும் சக்தியாக தொழிலாளர் மட்டுமே இருப்பார்கள். முதலீடு, நிர்வாகம் இரண்டும் தொழிலாளருக்குள்ளேயே அடங்கி விடும். ஆகவே உற்பத்தியின் உபரி முழுக்க, முழுக்க தொழிலாளர்களுக்கு வரும். அரசு பண்பாடு எல்லாமே அவர்களுடையதாக ஆகும் பொன்னுலகு!
அந்த தரிசனத்தில் ஒரு நடைமுறை மாற்றத்தைச் செய்தார் லெனின். தொழிலாளர்கள் தாமாகவே புரட்சியைச் செய்ய மாட்டார்கள், வரலாற்றுணர்வும், சித்தாந்த ஞானமும் உள்ள அரசியல் செயல்பாட்டார்கள் சிலர் கூடி தாங்களே தொழிலாளர்களின் பொருட்டு அதைச் செய்யலாம், தொழிலாளர்களை அவர்கள் தலைமை தாங்கி அரசை ஆளலாம், அவர்களே தொழிலாளர்களை அரச வல்லமையால் கட்டுப் படுத்தி கம்யூனிச சமூகத்தை அமைக்கலாமென்றார்- இது மார்க்ஸிய அரசியல்.
மார்க்ஸியம் உலகின் இன்றைய அரசியலில் ஒரு முக்கியமான மாற்றுச் சக்தி என்பதில் ஐயமில்லை. மார்க்ஸியம் இல்லையேல் உலகில் இன்றுள்ள நலம் நாடும் அரசுகள் உருவாகி வந்திருக்காது. குடிமக்களுக்கு சமூகப் பாதுகாப்பு, அடிப்படை உரிமைகள் தேவை என்ற எண்ணமே முதலாளித்துவ அமைப்புக்கு உருவாகியிருக்காது. உண்மையில் மார்க்ஸியம் மானுட குலத்திற்கு அளித்த கொடை என்பது இதுவே.
பத்தொன்பதாம் நூற்றாண்டுமுதல் முதலாளித்துவத்துக்கும் மார்க்ஸியத்திற்கும் நிகழ்ந்த தொடர் விவாதங்கள், அதன் மூலம் ஒரு சமரசப் புள்ளியாக உருவான பல்வேறு சோஷலிச சிந்தனைகள் முதலாளித்துவத்திற்குள் மக்கள் நலம் சார்ந்த சிந்தனைகளை உருவாக்கின எனலாம். இன்று மெல்ல,மெல்ல முதலாளித்துவம் அந்த சிந்தனைகளை உதறி விட்டு மீண்டும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரக்கமற்ற வணிகப் போட்டியை மட்டுமே விதியாகக் கொண்ட நிலை நோக்கிச் செல்கிறது. இந்நிலையில் மார்க்ஸியத்தின் பங்களிப்பு முக்கியமானது, தவிர்க்க முடியாதது.
மார்க்ஸியர் இந்த வரலாற்றுப் பாத்திரத்தை உணர வேண்டும் என்பதே என் எண்ணம்.
மார்க்ஸியத்தின் பிழைகள், போதாமைகள்
இலட்சியக் கனவு, தத்துவம், அரசியல் என்ற மூன்றில் மார்க்ஸிய தரிசனம், அந்த இலட்சியக் கனவு எனக்கு என்றுமே மகத்தான ஒன்று என்றே தோன்றியிருக்கிறது. சமத்துவம் என்ற கருதுகோள் தொன்மையானதென்றாலும் சமத்துவத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக அமைப்பு என்பதற்கான கனவு மானுட சிந்தனையில் ஒரு பெரும் பாய்ச்சல். அந்தக் கனவும் அதன் விளைவான அறைக் கூவலும் என்றும் நிலை நிற்கக் கூடியது.
மார்க்ஸிய வரலாற்றாய்வுக்கு குறைகள் பல இருக்கலாம். அது பண்பாட்டின் , இலட்சியவாதத்தின் பங்களிப்பை குறைத்துக் காட்டுகிறது. ஆனால் வரலாற்றை மக்கள் வரலாறாக பார்ப்பதற்கான ஆகச் சிறந்த வழிமுறை அதுதான்.
ஆனால் மார்க்ஸிய அரசியல் காலத்தால் மிக, மிக பழையாகி விட்ட ஒன்று. ஜனநாயகத்தின் வலிமையையும், வாய்ப்புகளையும் உணராதது அது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமூக யதார்த்தங்களில் இருந்து அன்றைய அரசியலாளர் சிலரால் உருவாக்கப் பட்டது அது. அதை எப்போதைக்குமான வழியாக முன் வைப்பது மதவெறி போன்ற விசுவாசம் மட்டுமே. அதன் அடிப்படைக் குறைகள் என இரண்டு விஷயங்களைச் சொல்வேன்.
ஒன்று, புரட்சி என்ற அதன் உருவகம். புரட்சி என்ற கருத்து காலாவதியான ஒன்று. அச்சொல் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குரியது. பழைய வேளாண் யுகம் மறைந்து புதிய தொழில் யுகம் உருவான சந்திப்புக் காலகட்டமான பத்தொன்பதாம் நூற்றாண்டில் தீடீர் அரசியல் கொந்தளிப்புகள் அடிக்கடி நிகழ்ந்தன. ஒரு அமைப்பின் அடிப்படைகள் அழிந்த பின்னரும் அது அப்படியே ஒரு சடங்காகவும், சம்பிரதாயமாகவும் நீடிக்கும் நிலையில் சட்டென்று மக்கள் எழுச்சி மூலம் அந்த அமைப்பு சரித்து அழிக்கப் பட்டது.
இதைக் கண்ட அக்கால அரசியலறிஞர்களில் ஒருசாரார் சமூக மாற்றங்கள் அவ்வாறு ஒரு மக்கள் எழுச்சி மூலம் சட்டென்று நிகழ்ந்து விடும் என கனவு கண்டார்கள். அவர்களே புரட்சி என்ற கருத்தை, அச்சொல்லை உருவாக்கினார்கள். எல்லா மாற்றங்களும் புரட்சி மூலமே சாத்தியம் என்றார்கள். அச்சொல் வரலாற்றை அறியாத முதிரா மனங்களில் மனக்கிளர்ச்சியூட்டும் ஒன்றாக இன்றும் நீடிக்கிறது.
சமூகக் கட்டமைப்பு என்பது பல்லாயிரம் பல லட்சம் உட்கூறுகளின் சிக்கலான முரணியக்கம் வழியாக, ஒத்திசைவு வழியாக உருவானதாகும். ஆகவே அதில் நிகழக் கூடிய மாற்றம் என்பது மிக மெதுவாக அதன் அத்தனை கூறுகளையும் சீராக மாற்றியமைப்பதன் மூலமே நிகழ முடியும். ஒரே வீச்சில் ஒற்றை நிகழ்ச்சி வழியாக அதை உருவாக்க முடியாது. புரட்சி என்ற ஒன்று உண்டென்றால் அது சமூகத்தின் வளர்சிதை மாற்றம் வழியாக மெல்ல, மெல்ல நிகழ்ந்தேறுவதாகவே இருக்க முடியும்.
புரட்சி என்ற பத்தொன்பதாம் நூற்றாண்டு கருத்தின் மேல் கொண்ட நம்பிக்கை காரணமாக மார்க்ஸியம் உலகம் முழுக்க பேரழிவுகளை உருவாக்கியது. சமூக அமைப்பை சிலர் கிளர்ந்தெழுந்து தலைகீழாக ஆக்க தலைப் பட்டனர். அவர்கள் அழிக்கப் பட்டனர். அவர்கள் வென்ற இடங்களில் அவர்கள் சமூகத்தை மூர்க்கமாக திருத்தியமைக்க முயன்று அழித்தனர்.
உலகுக்கு மருந்து என்று நம்பி விஷத்தை ஊட்டியது மார்க்ஸியம். எந்த தீய கருதுகோளை விடவும் மார்க்ஸியமே மானுடத்திற்கு ஆகப் பெரிய அழிவுகளை உருவாக்கியது. ஸ்டாலின் முதல் இன்றைய கிம் இல் சுங் வரை மார்க்ஸியத்தின் புரட்சி என்ற கருத்தை நாசகார சக்தியாக ஆக்கிய அழிவாளர்கள் பலர்.
இரண்டாவதாக, மார்க்ஸியம் ஜனநாயகத்தை நம்பவில்லை. மக்கள் அவர்களே அதிகாரத்தைக் கையாள முடியாதென்றே அது நினைத்தது. அது அதிகாரத்தை மக்களின் பொருட்டு ஆயுதமேந்தும் புரட்சியாளர்களிடமே கொடுக்க முனைந்தது. உலகமெங்கும் அதிகாரத்தை அடைந்ததுமே புரட்சியாளர்கள் அடக்கு முறையாளர்களாக ஆனார்கள். தங்களுக்குள் அதிகார மோதலில் ஈடுபட்டு அழிந்தார்கள், பிறரை அழித்தார்கள்.
ஒருமுறை மக்கள் மார்க்ஸியர்களை ஆதரித்தால் பின் எந்த நிலையிலும் அவர்களிடமிருந்து மீட்பே இல்லை என்பதையே உலக வரலாறு காட்டுகிறது. புரட்சியரசு விரைவிலேயே மோசமான அடக்கு முறையாக, சர்வாதிகாரமாக ஆகி அந்த மக்களை கொன்றழிக்க ஆரம்பிக்கிறது. மார்க்ஸியத்துக்கு உலகம் அளித்த உயிர்ப்பலி அளவுக்கு எந்த மதத்துக்கும் அளித்ததில்லை. எந்த போருக்கும் அளித்ததில்லை! போதும்.
இந்த இரு அடிப்படையான பிழைகளைக் கைவிட்டு மார்க்ஸிய அரசியல் மீளும் போது மட்டுமே அது மார்க்ஸியத்தின் இன்றைய வரலாற்றுப் பாத்திரத்தை ஆற்ற முடியும். சமூக மாற்றத்தை ஒரு சீரான வளர்சிதை மாற்றமாகக் கண்டு, அதன் ஒவ்வொரு தளத்திலும் தன் கருத்தியல் பங்களிப்பை ஆற்றி, அதன் மூலம் சமூக மாற்றத்தை உருவாக்க அது முயல வேண்டும்.
மார்க்ஸியம் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டதாக ஆகவேண்டும். அரசியலதிகாரத்தை மக்களிடம் கொண்டு செல்ல அது முயல வேண்டும். மக்கள், மக்கள் என்று கூச்சலிடும் சில வெற்றுச் சாகசக்காரர்களிடம் அல்ல. அதன் பின்னரே அப்போது இன்றைய உலக அரசியலில் அது ஒரு பங்களிப்பாற்ற முடியும்.
ஆனால் இன்று உலகமெங்கும் உள்ள மார்க்ஸிய அரசியல்கட்சிகளில் பெரும்பாலானவை சீனா என்ற அரசு முதலாளித்துவ நாட்டையே கம்யூனிச நாடாக முன்வைக்கின்றன. அந்த சர்வாதிகார அரசின் உலக வல்லரசு நோக்கத்திற்காக ஐந்தாம் படைகளாக செயல் படுகின்றன. இதுவே நான் மீள, மீள சுட்டிக் காட்டும் அவலம்
இன்றைய மார்க்ஸிய அரசியலின் சிக்கல்கள்
நம்முடைய மார்க்ஸியர்களை அவர்கள் சார்ந்துள்ள கட்சியின் ஒட்டு மொத்த நிலைபாடுகளில் இருந்து பிரித்தே பார்க்க முடியும். நம் ஊரில் ஒரு மார்க்ஸியர் முக்கியமான தார்மீக சக்தியாக இருப்பார். ஆனால் மத்தியில் அவர்களின் கட்சி இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் எதிரான ஒரு நிலைப்பாட்டை எளிதாக எடுத்து விடும்.
காரணம் அந்தக் கட்சியின் தலைமை இந்த வேர்நிலை மார்க்ஸியர்களின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதே. அது என்றும் ரஷ்யாவாலோ, சீனாவாலோ கட்டுப் படுத்தப் படும் நிலையிலேயே உள்ளது. இது ஒன்றும் வெறும் கற்பனை அல்ல. கேரளத்தில் சி.அச்சுதமேனன் உட்பட மார்க்ஸியர்கள் எழுதிய சுயவரலாறுகளில் ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் நம் கட்சிகள் எப்படி முழுக்கமுழுக்க அன்னிய நாடுகளின் கட்டுப் பாட்டில் இருந்தன என்பதை வெளிப் படையாகவே எழுதியிருக்கிறார்கள். இன்றைய நிலையை நாளை எழுதுவார்கள்.
நம் மார்க்ஸிய அரசியலின் நடைமுறைச் சிக்கல்கள் என்னென்ன? ஒன்று அவர்களின் சமூகப் புரிதல். மார்க்ஸியக் கோட்பாடுகளைக் கொண்டு சூழலைப் புரிந்து கொள்ள முயன்று இந்த மண்ணையும், மக்களையும் புரிந்துகொள்வதில் அவர்கள் செய்யும் பெரும் பிழைகள் பெரிய தவறுகளை நோக்கி கொண்டு சென்றுள்ளன.
முதல் உதாரணம், வெள்ளையனே வெளியேறு போரின் போது நம் இடதுசாரிகள் இந்தியாவின் வெள்ளை அரசை ஆதரிக்க முடிவெடுத்தது. இரண்டாம் உலகப் போரில் ருஷ்யா ஆங்கிலேயர்களின் தரப்பில் இருந்தமையால் எடுத்த முடிவு அது.
இரண்டாம் உதாரணம், 1962ல் இந்திய- சீன போரின்போது சீனாவுக்கு சாதகமாக தரப்பு எடுத்தது. இவ்விரு முடிவுகளும் கட்சியின் அடிப்படை நேர்மையையே ஐயத்திற்குரியவை ஆக்கின. பின்னர் இவற்றைப் பெரும் தவறுகள் எனக் கட்சி ஒப்புக் கொண்டது.
ஆனால் இந்த முடிவுகளை கட்சி எடுத்த காலகட்டத்தில் காந்திக்கு எதிராக, காங்கிரசுக்கு எதிராக கட்சி அவதூறுகளை கக்கியிருக்கிறது. அந்த அவதூறுகள் அப்படியே நீடிக்கின்றன.
சமீபத்தில் இப்படிப் பட்ட முடிவு, இந்துத்துவ அரசியலை எதிர்க்க இஸ்லாமிய தீவிரவாத அரசியலை ஆதரிக்கும் நிலைபாடு. தேசிய அளவில் இந்துத்துவர்களை எதிர்க்க இஸ்லாமியர்களுக்கு வெறியூட்டும் செயலை பதினைந்தாண்டுகளாக கட்சி செய்து வருகிறது. மிக அபாயகரமான போக்கு இது.
கேரளத்தில் இதன் விளைவாக கட்சி அப்துல் நாசர் மதனி போன்ற மதவெறியர்களை, மக்கள் விரோதிகளை ஆதரித்தது. என் டி எஃப் போன்ற நாசகார சக்திகளை வளர்த்தெடுத்தது. கேரளத்தை வகுப்புவாத இருளில் தள்ளியது மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியே. இந்த பெரும் பிழையை இன்று கட்சி உணர்ந்து மன்னிப்பு கோருகிறது. ஆனால் இதற்காக ஆட்சியை இழக்கப் போகிறது.
அதேபோல வாக்கு வங்கிக்காக, கிழக்கு வங்க முஸ்லீம்களை மேற்கு வங்கத்தில் கூட்டம் கூட்டமாக குடியேற அனுமதித்து, குடிமக்கள் உரிமை வாங்கிக் கொடுத்ததைச் சொல்ல வேண்டும். தங்களுக்கு எதிரான தலித்துக்களை அந்த குடியேறிகளைக் கொண்டு அவர்கள் ஒடுக்கினார்கள். மரிச்சபி அந்த நடவடிக்கைக்கு சிறந்த உதாரணம். இன்று அந்த குடியேறிகள் இஸ்லாமிய அடிப்படைவாத சக்தியாக மாறி நிற்கின்றனர். இடதுசாரி அரசியலையே மேற்கு வங்கத்தில் அழிக்கப் போகின்றனர்.
இந்த வகையான முடிவுகளை ஏன் கட்சி எடுக்கிறது? கட்சியில் கீழிருந்து மேலே செல்லக் கூடிய கருத்து ஓட்டம் அறுபட்டிருக்கிறது. நாம் காணும் தியாகியும் பொது நல ஊழியருமான அடித்தள தோழரின் சிந்தனை மேலே சென்று சேர்வதில்லை. மேலே உள்ள முடிவுகள் அவர் மேல் ஏற்றப் படுகின்றன. அவர் எவ்வளவு நேர்மையானவராக இருந்தாலும் அவர் பேசுவது இந்த நாசகார அரசியலையே.
கட்சியின் பெரும்பாலான அரசியல் முடிவுகள் வெறுமே எதிர் நிலைபாடுகளால், உலகளாவிய அரசியல் போக்குகளின் அடிப்படையில் எடுக்கப் படுகின்றன. அங்கே இன்னும் மனிதபிமானத்துடன் இன்னும் உள்ளூர் நோக்குடன் முடிவெடுப்பவர்கள் தேவை. ஆனால் அவர்கள் அங்கே சென்று சேர்வதில்லை. பிரகாஷ் காரத் தான் அங்கே இருக்கிறார். அவர் பீடித் தொழிலாளியாக இருந்த மக்கள் தலைவரான அச்சுதானந்தனுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.
இடதுசாரிகள் மேல் என்னுடைய இரண்டாவது முக்கியமான குற்றச்சாட்டு அவர்களிடம் இருக்கும் கும்பல் மனநிலை. தொண்டர் மனநிலை என்றும் சொல்லலாம். அது தமிழகத்தில் குறைவு. கேரளத்தில் அவர்கள் ஒரு வன்முறைக்கும்பலுக்குரிய ஒற்றுமையும், வெறியும் கொண்டவர்கள். ஆகவே ஜனநாயகத்தில் நம்பிக்கை அற்றவர்கள். அடிதடிகளில் ஈடுபடுவதை அரசியல் நடவடிக்கை என நினைக்கிறார்கள்.
விளைவாக அவர்களிலேயே அடிதடி அரசியல்வாதிகள் உருவாகி மேலே எழுகிறார்கள். பிணராய் விஜயன் அப்படிப் பட்ட ஒரு அரசியல்வாதி. முன்பு இவர்களிடம் இருந்து இன்று காங்கிரஸில் இருக்கும் எம்.வி.ராகவன் புகழ் பெற்ற அடிதடி அரசியல்வாதி. இந்த அடிதடி அரசியல் மெல்ல, மெல்ல கருத்துச் செயல் பாட்டையே இல்லாமலாக்குகிறது. எதிர் தரப்பிலும் அடிதடி அரசியல்வாதிகளை உருவாக்குகிறது
கேரளத்தில் அரசியல் வன்முறைகள் வலது கம்யூனிஸ்டுகள், முஸ்லீம் லீக், காங்கிரஸ், பாரதிய ஜனதாவுடன் மார்க்ஸிய கம்ய்யூனிஸ்டுக் கட்சி மோதுவதன் விளைவாக உருவானவையாகவே இருக்கும். ஒரு தரப்பு எப்போதுமே இவர்கள் தான்.
இந்த கும்பல் மனநிலையை இவர்கள் அப்படியே தொழிற் சங்க நடவடிக்கைகளுக்குள் கொண்டு வருவதனால் கேரளத்தில் அட்டிமறி போன்ற அடாவடிகள் உருவாகின்றன. தொழிற் சங்கமே குண்டர் சங்கமாக உருவம் கொள்ளும் நிலை பிறக்கிறது. மெல்ல, மெல்ல குண்டர்கள் உள்ளே வருகிறார்கள். கேரளத்தில் தொழிற் சங்க இயக்கம் ஒரு மாஃபியாவாக மாறி விட்டிருக்கிறது. தோழர் என்று சொல்லும் போது நாம் உத்தேசிக்கும் அர்த்தமல்ல மலையாளிகள் உத்தேசிப்பது. அவர்களைப் பொறுத்த வரை சிவப்பு அட்டை போட்ட டைரியுடன் வந்து அடாவடி வசூல் செய்யும் ஒரு குண்டர்தான் ’சகாவு’
விளைவாக கேரளத்தில் இவர்கள் துறைமுகங்களைச் செயலிழக்கச் செய்து விட்டிருக்கிறார்கள். தொழில்களை முளையிலேயே கிள்ளி விட்டிருக்கிறார்கள். கல்விச் சாலைகளை அராஜக மையங்களாக ஆக்கி விட்டிருக்கிறார்கள். இந்த குண்டர் நிலையை கட்சி இனிமேல் தாண்டிச் செல்வதே கடினம். ஆனால் சென்றாக வேண்டும்
மூன்றாவதாக இடதுசாரிகள் மேல் நான் வைக்கும் குற்றச் சாட்டு, அவர்கள் நம் பாரம்பரியம் மீதும் பண்பாடு மீதும் கொண்டுள்ள எதிர்மறைப் பார்வை சார்ந்தது. இந்தப்பார்வை மார்க்ஸிடம் இருக்கவில்லை. லெனினிடம் இருக்கவில்லை. இ.எம்.எஸ்ஸிடமும் இருக்கவில்லை. ஆனால் நம் அடித்தள மார்க்ஸியரிடம் இது எப்படியோ இருக்கிறது. தமிழகத்தில் முட்டாள்தனமும், வெறுப்பும் மட்டுமே அரசியலியக்கமாக வடிவமெடுத்த திராவிட அரசியலில் இருந்து இதை இன்னும் விரிவாக கற்றுக் கொண்டு அந்த மொழியில் பேசுகிறார்கள்.
எந்த ஒரு சமூகத்திற்கும் ஒரு பாரம்பரியம் இருக்கும். அவர்களின் பண்பாடு பல நூற்றாண்டுகளாக முன்னோர்களால் உருவாக்கப் பட்டதன் தொடர்ச்சியே. அதில் காலாவதியாகிப் போன நம்பிக்கைகளும், வழக்கங்களும் இருக்கும். தீய அம்சங்களும் இருக்கும். ஆனால் அதுதான் அவர்களின் அடையாளம். அவர்களின் கலை, இலக்கியம், சிந்தனை அனைத்துமே அந்தத் தொடர்ச்சியில்தான் உருவாகும்.
பண்பாட்டின் எதிர் மறைக் கூறுகளை களைந்து அதை சமகாலத் தன்மையுடன் முன்னெடுப்பதையே எந்த அறிஞர்களும் செய்தாக வேண்டும். ஆனால் இங்கே மார்க்ஸியர்கள் அதைச் செய்யவில்லை. நேர்மாறாக கழுவிய நீரில் பிள்ளையையும் தூக்கி வீசுவதை செய்தார்கள். ஒரு தலைமுறையையே ஒட்டு மொத்தமாக, மரபில் இருந்தும் பண்பாட்டில் இருந்தும் விலக்கியவர்கள் அவர்கள். ஒட்டு மொத்த இறந்த காலத்தையே வெறுக்கக் கற்றுக்கொடுத்தார்கள்.
தன் முன்னோர்களை மதிக்காத சமூகம் வாழ்ந்ததில்லை. காலப்போக்கில் அந்த சமூகத்தின் தன்னம்பிக்கை அழியும். ஆன்ம வல்லமை சரியும். எதிர்த்து நிற்கும் ஆற்றலை இழந்து அது அன்னியச் சக்திகளுக்கு அடிமைப்படும். இடதுசாரிகள் நம் சமூகத்தின் தன்னம்பிக்கையை அழிக்க ஆனதையெல்லாம் செய்திருக்கிறார்கள். நம்மை பண்பாடற்ற காட்டு மிராண்டிகளாகச் சித்தரிக்கும் ஐரோப்பிய நோக்கை இங்கே மீண்டும், மீண்டும் முன் வைத்தவர்கள் அவர்களே.
பிளேட்டோ முதல் ஹெகல் வரையிலான கருத்து முதல் வாத மரபை தன் தத்துவப் பின்புலமாக ஏற்கவும் அவற்றுடன் விவாதித்து தன்னை முன்னெடுக்கவும் அவற்றில் கொள்ள வேண்டியவற்றைக் கொள்ளவும் கார்ல் மார்க்ஸால் முடியும் என்றால் நமக்கு ஏன் சங்கரரும், ராமானுஜரும் பழங்குப்பைகளாக இருக்கவேண்டும்? இந்த எளிய வினாவை நம் மார்க்ஸியர் ஏன் எழுப்பிக் கொள்வதில்லை?
இங்குள்ளவர்கள், நம் மொத்த மரபையே அறியாமையும், மூடத்தனமும் நிறைந்தவையாகச் சித்தரித்தார்கள். கெ.தாமோதரன் போன்ற விதிவிலக்குகள் உண்டு. ஆனால் இடதுசாரிகள் இதுவரை எடுத்த நிலைப் பாடென்பது இந்திய எதிர்ப்பு, மரபு எதிர்ப்பு தான். அதன் வழியாக இந்தியாவை இழிவு படுத்தவும் இதன் ஆன்ம வீரியத்தை அழித்து அடிமை கொள்ளவும் முனையும் ஏகாதிபத்திய சக்திகளின் கூலிப் படை போலவே செயல் படுகிறார்கள் அவர்கள்.
இன்றும் இந்துத்துவ எதிர்ப்பு என்ற பேரில் அவர்கள் இந்துமரபு எதிர்ப்பையே முன் வைத்து வருகிறார்கள். தமிழினி மே 2011 இதழில் மூத்த மார்க்ஸிய சிந்தனையாளரும், செயல்பாட்டாளரும், எழுத்தாளருமான ராஜேந்திரசோழன் வலுவான சொற்களில் இதையே எழுதியிருக்கிறார். மதங்கள் எல்லாமே மாயையான மீட்பை முன்வைப்பவை என்ற மார்க்ஸிய நிலைபாட்டில் நின்று அவர் இந்து, கிறித்தவ, இஸ்லாமிய மதங்களை ஒப்பிடுகிறார்.
இஸ்லாம் மதமும், கிறித்தவ மதமும் அந்த மக்களை எந்த விதமான வேறு வகை அரசியலுக்கும் சென்று விட அனுமதிக்காதவை, முழுமையான ஆதிக்கத் தன்மை கொண்டவை, பிறப்பு முதல் இறப்பு வரை அவர்களை கட்டுப்படுத்தி வைத்திருப்பவை என்று சொல்கிறார் ராஜேந்திர சோழன். இந்து மதம் விதிக்கும் ஒரே கட்டுப்பாடு சாதி சார்ந்தது, அதுவும் இன்று இல்லை என்கிறார்.
பிறமதங்கள் இந்தியாவில் இருந்தாலும் இந்திய அம்சங்களை முற்றிலும் நிராகரிக்கும் தன்மை கொண்டவை என்பதனாலேயே அவை அன்னிய மதங்களாக உள்ளன என்று சொல்லும் ராஜேந்திரசோழன் ‘பார்ப்பனிய மதம்’ தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளை உள்ளிழுத்து இடமளிக்கும் தன்மை கொண்டிருப்பதனால் இந்தியாவின் மதமாக இன்றும் நீடிக்கிறது என்கிறார்
‘எல்லா மதங்களும் ஆதிக்கத்துக்கு சேவை செய்பவை. எனவே எல்லா மதங்களையும் எதிர்த்து நிற்கவேண்டியது தானே. இதில் போய் ஒரு மதத்துக்கு சலுகை இன்னொரு மதத்துக்கு எதிர்ப்பு என்றால் இது என்ன நியாயம் என்று கேட்கிறோம்’
என்று சொல்லும் ராஜேந்திர சோழன்
’ஒரு தமிழன் இஸ்லாமியராக இருக்கலாம், கிறித்தவராக இருக்கலாம். ஆனால் இந்துவாக மட்டும் இருக்கக் கூடாது என்கிறது தமிழகத்தில் உள்ள ‘பகுத்தறிவு’ச் சிந்தனை. இதனடிப்படையில் இந்து மதத்தை விட்டு வெளியேறு என்ற முழக்கம் ஒரு சனநாயக சீர்திருத்த முழக்கம் போல் இங்கு முன் வைக்கப் படுகிறது. இது எவ்வளவு ஆபத்தானது என்பது தான் நம் விவாதத்திற்கு உரியது’ என்கிறார்.[மதம் மக்கள் மனக் கட்டமைவுகள்]
நான் நம் பெரும்பான்மை மார்க்ஸியர்கள் மேல் சொல்வது இதே குற்றச் சாட்டைத்தான். அவர்கள் தங்கள் மூடத்தனத்தால் ஒரு பழம் பெரும் பாரம்பரியம் அன்னிய ஏகாதிபத்திய சக்திகளால் வேருடன் கெல்லி அழிக்கப்படும் கொடூரமான வரலாற்று அநீதிக்கு துணை நிற்கிறார்கள். அதன் கருவியாகச் செயல்படுகிறார்கள். ஒருநாள் இதற்காகவும் அவர்கள் வருந்துவார்கள். அவர்கள் இங்குள்ள பெரும்பான்மை மக்களால் இதன்பொருட்டு இரக்கமின்றி கைவிடப்படுவார்கள். நாளுக்குநாள் நலிந்து மறைவார்கள்.
நாளை
நான் எதிர்பார்க்கும் மார்க்ஸியம் அதன் அடிப்படை அரசியல் நோக்கில் உள்ள பிழைகளை சீர்திருத்திக் கொண்டு ஜனநாயக நோக்குடன் சமத்துவத்திற்கான குரலாக ஒலிக்க வேண்டும். சமூக மாற்றத்தை நிகழ்த்தும் கருத்தியல் தரப்பாகச் செயல் பட வேண்டும்.
அதனடிப்படையில் இங்கே நம் மார்க்ஸியர்கள் நம் சமூகத்தை இன்னும் நுட்பமாகப் புரிந்து கொள்ள வேண்டும். கும்பல் மன நிலைகளைக் களைந்து மக்களிடமிருந்து அதிகாரத்தை பெற முயல வேண்டும். இந்த பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் புரிந்துகொண்டு இதன் வாழ்வுக்காக போராட வேண்டும்!
அவர்களிடம் அதை எதிர்பார்க்கிறேன். இந்தியாவும், உலகமும் எதிர்பார்க்கிறது!
[மறுபிரசுரம்,முதற்பிரசுரம் மே 1- 2011 ]
தொடர்புள்ள கட்டுரைகள்
====================
மாவோயிச வன்முறை ஒன்று, இரண்டு, மூன்று நான்கு
வெறுப்புடன் உரையாடுதல்
சேகுவேராவும் காந்தியும்
ஐஸ்வரியா ராயும் அருந்ததிராயும்