ஊழல், முதலாளித்துவம் -கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

அதியமான் அவர்களுக்கு அளித்த பதில் – மேற்கத்தைய உலகில் அரசு ஊழல்களின் வரலாற்றையும், அதற்கு எதிரான இயக்கங்களின் வரலாற்றையும் சில வரிகளுக்குள் அற்புதமாகத் தொகுத்தளித்திருக்கிறீர்கள்.

அமெரிக்காவில் மூன்று நூற்றாண்டுகளாகவே அரசு ஊழல்களும் (www.suite101.com/content/politican-corruption-in-america-a64786), சென்ற ஒரு நூற்றாண்டிலேயே பலமுறைகளாக பெருநிறுவனங்கள் Bailout என்ற பெயரில் அரசுப் பணத்தை கையகப் படுத்திய வரலாறும் நீங்கள் சொல்லும் விதத்திலேயே அமைந்துள்ளன.

வேடிக்கை என்னவென்றால் இந்த ஒரே வரலாற்றை தேவைக்குத் தகுந்தாற் போல் வலதுசாரிகளும், இடதுசாரிகளும் வித விதமாக மேல் விளக்கம் செய்து கொள்கிறார்கள்!

மது

அன்புள்ள ஜெ,

தங்களின் விரிவான பதிலுக்கு நன்றி.

///அங்கே ஜனநாயகம் வேரூன்றாத நாட்களில் ஊழலரசுகள் இருந்தன, படிப்படியாக உருவாகி வந்த ஜனநாயகப் பிரக்ஞை மூலம் அவை மக்கள் நலப் பணிகளிலும், நிர்வாகத்திலும் நேரடியாக ஊழல் நடப்பதை தடுத்துக் கொண்டன என்று எழுதியிருந்தேன்.

இதை நீங்கள் மறுக்கிறீர்கள் என்று புரிந்துகொள்கிறேன், சரியா?  முதலாளித்துவ நாடுகளில் ஊழலே  இல்லை, இருந்ததும் இல்லை என்பது உங்கள் தரப்பு. சோஷலிசம் இருந்த நாடுகளில் மட்டுமே ஊழல் இருக்கும் என்கிறீர்கள்.////

இல்லை. அப்படி சொல்லவில்லை. 50 வருடங்களுக்கு முன்பு ஐரோப்பாவில் ஊழல் மலிந்த அரசுகள் (இன்றைய இந்தியா போல்) இருந்தன என்று சொல்லியிருந்தீர்கள். 50 வருடங்களுக்கு முன்பு என்றால் 1961 ; அதாவது 40கள், 50களஒ சொல்கிறீர்கள் என்றே எடுத்து கொண்டேன். அன்று ஊழல் அங்கு இன்றைய இந்தியா போல் இல்லை என்றே சொல்கிறேன். 120 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலை வேறுதான். இருந்தும், இன்றைய இந்தியா போல் அனைத்து மட்டத்திலும் அன்று அங்கு ஊழல் இருந்தாக தோன்றவில்லை.

ஊழலுக்கும், சோசியலிச கொள்கைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அரசு பொருளாதாரத்தில் தலையிடும் போது, க்ரோனி கேபிட்டலிசமும், ஊழலும் உருவாகும் என்பதே யாதார்த்தம். ராஜாஜி 1965இல் இந்தியர்களின் நிலையில், 20 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றம் பற்றி சுருக்கமாக எழுதிய மிக முக்கிய கட்டுரை இது :

http://athiyaman.blogspot.com/2009/09/rajaji-on-sri-sri-prakasa-and-nehrus.html

முதலாளித்துவ நாடுகளில் ஊழலே இல்லை என்றெல்லாம் சொல்லவில்லை. சாத்தியம் இல்லை. ஜப்பான், இட்டாலி, தென் கொரியாவில் ஊழல் பற்றி படித்திருக்கிறேன். ஆனால் இன்றைய தைவானில் அப்படி இல்லை. சென்னையில் ஒரு உயர் பதவியில் உள்ள ஒரு தைவானியருடன் ஒரு சமயம் நீண்ட உரையாடல்.

அமெரிக்காவில் நிதி துறையில் பெரும் ஊழல் நடந்தது. காரணம் அரசு கொள்கைகள் : முக்கியமாக வீட்டு கடனுக்கு அரசு உருவாக்கிய மான்யங்கள் மற்றும் இன்செண்ட்வ்கள், ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை மிக மிகக் குறைத்து செயற்கையாக அப்படி வைத்ததால் உருவான பெரும் பண வெள்ளம், ஆசிய மத்திய வங்கிகள் டாலரை செயற்கையாக தூக்கி பிடித்திருப்பதால் உருவான distortions : all these ‘anti-market’ polices created this crisis.

எனது விரிவான ஆங்கில பதிவு :

http://athiyaman.blogspot.com/2009/04/distortions-in-money-markets-due-to.html

மற்றவை பிறகு.


Regards / அன்புடன்

K.R.Athiyaman  / K.R.அதியமான்
Chennai – 96

http://nellikkani.blogspot.com
http://athiyamaan.blogspot.com
http://athiyaman.blogspot.com (english)

 

ஜெ..

90களில், தேசியப் பால் வள நிறுவனத்தின் எண்ணெய் ப்ராஜக்டில் வேலை செய்து கொண்டிருந்த காலங்களில், குறைந்த சம்பளத்தையும், அங்குள்ள அரசாங்கத் தனமான டாடன் ஹாம் நடைமுறையையும் வெறுத்திருக்கிறோம். அப்போது எங்கள் கனவு நிறுவனம் ஹிந்துஸ்தான் லீவரும், ஐ.டி.ஸியும். அங்கு சென்று விட்டால் மோட்சம் என்பதே எங்கள் கனவு.

17 வருட தனியார் துறையில் வேலை செய்தும், பல விஷயங்களைக் கண்டும் உணர்ந்தது இதுவே. பொதுத் துறை நிறுவனங்களை விடத் தனியார் துறையில் ஊழலும், பாரபட்சமும் அதிகம். பொதுத் துறையில் ஊழல் எனச் சொல்லப் படும் பல விஷயங்கள், தனியார் துறையில் accepted practice. எடுத்துக் காட்டாக, சப்ளையர்/டிஸ்ட்ரிபூட்டர் கம்பெனி ஆட்களின் குடும்ப டூர், டின்னர்களுக்குச் செலவு செய்வது சாதாரண விஷயம். தில்லியில். தீபாவளிக்கு, கிஃப்ட் பாக்ஸ்களில் தங்க நாணயம் வைத்து நிறுவன ஊழியர்க்கு, சப்ளையர் வழங்குதல் மரபு. முதலாளியின் பெண்கள் விஷயங்களைக் கவனித்துக் கொள்ள ஒரு நிறுவனத்தில் ஒரு பொது மேலாளர் இருக்கிறார். முதலாளிக்குப் பெண் பிடித்துக் கொடுத்த நபர், இன்னொரு நிறுவனத்தின் தலைமை அலுவலர் ஆகியிருக்கிறார். நான் விதிவிலக்குகளைப் பேச வில்லை. இங்கே மும்பையில் சொல்லப் படும் சொலவடை ‘ ஜோ பக்கட் கயா வோ ஹர்ஷத் மேத்தா.. ஜோ பச் கயா வோ அம்பானி” – எவன் மாட்டினானோ அவன் ஹர்ஷத் மேத்தா.. எவன் தப்பினானோ அவன் அம்பானி”

டாட்டா மட்டுமே மிகப் பெரும் விதிவிலக்கு என்று நினைத்திருந்தேன் – நீரா ராடியா வரும் வரை. பிர்லாக்களைப் பற்றி பாரதி மணி ஒரு கலக்கல் கட்டுரை எழுதியிருக்கிறார். கேரவான் பத்திரிகையில் லலித் மோடி பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கிறது – ஐ.பி.எல் ஊழலின் உச்சக் கட்டம்.

முதலாளித்துவம் கொண்டு வரும் நன்மைகள் பல. ஆனால், அது ஒரு panacea அல்ல. அவற்றின் பின் விளைவுகள் பற்றிக் கவனமாக இருக்க வேண்டும்

அன்புடன்

பாலா

பி.கு:

இலங்கை வேகப் பந்து வீச்சாளர் மலிங்கா, தான் இங்கிலாந்து வர முடியாது – முட்டி வலி என்று சொன்னார் – ”அப்புறம் எப்படி ஐ.பி.எல் விளையாடுகிறாய் என்று இலங்கை அரசு கேட்ட போது, டெஸ்ட் மேட்ச்களில் இருந்து ரிட்டையர்மெண்ட் அறிவித்து விட்டார். “தேசம், ஞானம், கல்வி, ஈசன் பூசை எல்லாம் காசு முன் செல்லாதடி குதம்பாய்..”