கரசூர் பத்மபாரதி நூல்கள் -கடிதம்

அன்புள்ள ஜெ

தமிழ் விக்கி தூரன் விருதுகள் அறிவிப்பை பார்த்தேன். தமிழ் விக்கி இணைப்பில் சென்று கரசூர் பத்மபாரதி அவர்களை அறிமுகப்படுத்தி கொண்டேன். தமிழ் விக்கிக்கே உரிய விரிவும் தெளிவும் கொண்ட பதிவு. பதிவின் மூலம் அறிந்து கொண்ட அவரது நூல்களை வாங்குவதற்காக இணையத்தில் தேடினேன். நரிக்குறவர் இனவரைவியல் நூல் வாங்குவதற்கான இணைப்பே தென்படவில்லை. திருநங்கையர் குறித்த நூல் பதிப்பில் இல்லை என்று காட்டுகின்றன புத்தகக் கடைகள். அநேகமாக அவரது முக்கியமான இருநூல்களும் பதிப்பிலும் விற்பனை கடைகளின் இருப்பிலும் இல்லாமல் இருக்கலாம்.

எப்படியும் தமிழ் விக்கி விருதை முன்னிட்டு அவை மீள் பிரசுரத்திற்கு வரும் என்று நம்புகிறேன். இருப்பினும் அவற்றுக்கு ஒரு கிண்டில் பதிப்பையும் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். அழிசி சீனிவாசன் அவர்களின் உதவியோடு அதை செய்துவிடலாம். நீங்களும் நம் நண்பர்களும் முயற்சி எடுத்தால் எளிதில் செய்து விட கூடியதே. கிண்டில் இணைய வழியில் கிடைக்க செய்வது பதிப்புகள் தீர்ந்து போகாமையும் விரைவாக பலருக்கு சென்றடையவும் உதவும்.

இறுதியாக கரசூர் பத்மபாரதி அவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள். விருது பெறும் அவர்களுக்கு எனது வணக்கங்கள். மகிழ்வு கொள்கிறேன் ஜெ

அன்புடன்

சக்திவேல்

அன்புள்ள சக்தி,

விழாவுக்கு முன் தமிழினி பதிப்பகம் அவற்றை மறுபதிப்பு கொண்டுவந்துவிடும் என நம்புகிறேன். சில பிரதிகள் தமிழினி பதிப்பகத்தில் எஞ்சியிருக்கின்றன.

தமிழினி வசந்தகுமாருடன் தொடர்பு கொண்டு மின்னூலாக வலையேற்றம் செய்வதைப் பற்றி யோசிக்கலாம்

ஜெ

முந்தைய கட்டுரைதமிழ்விக்கி – கமல்,வாஷிங்டன்.
அடுத்த கட்டுரைமலபார் சந்திப்பு – கடிதம்