எனதருமை படைப்பாளிக்கு,
என் நண்பர் ஒரு புத்தகம் எழுதுமாறு சொல்கிறார். தங்களைப் போன்ற சான்றோர்கள் எழுதும் எழுத்தை படிக்கவே நேரம் இல்லை என்ற நிலையில் எப்படி எழுதுவது? எழுத்தாளனுக்குத் தேவையான தகுதிகள் என்னென்ன? என்ன வழிமுறைகள்? படிக்கத் தெரிந்தால் எழுத வேண்டும் என்ற கட்டாய தேவை இல்லை என நான் நினைக்கிறன். தங்களின் கருத்தறிய விழைகிறேன்.
With Thanks and Best Regards
சாம்பமூர்த்தி சந்திரசேகரன்
அன்புள்ள சாம்பமூர்த்தி சந்திரசேகரன்.
நான் எழுதும் கலை என்று ஒரு நூல் எழுதியிருக்கிறேன். அந்நூல் உங்களுக்கு உதவியாக இருக்குமென நினைக்கிறேன். [தமிழினி வெளியீடு] கிழக்கு வெளியீட்டான நவீனத் தமிழிலக்கிய அறிமுகமும் உதவலாம்
ஜெ
அன்புள்ள ஜெ,
சற்று முன் தான் இருவர் கண்ட ஓரே கனவு கதை படித்தேன். என்னை இது போல் வேறு ஒரு கதை ஆட்கொண்டதில்லை. என்னால் அழுகையைக் கட்டுப் படுத்த முடியவில்லை. என்னென்னவோ நினைவுகள். விபரம் அறியாத சிறு வயதில் இதைப் போன்ற ஒரு நிகழ்ச்சியைப் பார்த்திருக்கிறேனோ என்ற ஒரு துக்கம். என்னால் என் உணர்ச்சிகளை சரிவர எழுத முடியவில்லை. உங்களை உடனே அழைத்து பேச வேண்டும் என நினைத்தேன். பின்னர் அழுது விடுவேன் என்ற பயத்தால் விட்டு விட்டேன். பின்னர் உங்கள் “கண்ணீரும் கதைகளும்” கட்டுரை படித்தேன். நீங்கள் சொல்லியிருப்பது அனைத்தும் சத்தியம். இதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. செயற்கையாகி விடுமோ என்ற பயம்.
எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி சார்.
தங்கவேல்
திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
திரு.கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமத்தில் மங்கத்தாயாரு அம்மாள் சொல்கின்ற சென்னமாதேவி பற்றிய மாயா ஜாலக் கதை மிகைப் படுத்தப் பட்ட உண்மை என்று அக்கையா பாத்திரம் மூலம் சொல்லப் படுகிறது. இந்த மாயா ஜாலக் கதை ஏதோ காது வழியாக வந்த கதை என்றால் பரவாயில்லை. ஆனால் அதில் மங்கத்தாயாரு அம்மாளும் ஒரு பாத்திரம். உடன் இருந்தவள். அப்படியென்றால் அந்தக் கதை உண்மையா? மிகைப் படுத்தப் பட்டு சொல்லப் பட்டவையா? படிப்பவர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வது?
தங்களது பதில் என்னுடைய வாசிப்பைக் கூர்மையாக்கும் என்று நம்புகிறேன். பதிலளிப்பீர்களா? என்னுடைய கருத்து என்னவென்றால் இது உண்மையும், கற்பனையும் கலந்தது தான். ஆனால் பாட்டி ஏன் இது போன்ற மாயா ஜாலக் கதைகளைத் தன்னுடைய சொந்த அனுபவத்திலேயே நடந்ததாகச் சொல்ல வேண்டும். என்னுடைய தாத்தா கூட தான் நேரிலேயே பேயைப் பார்த்ததாகக் கூறுகிறார். இது கூட ஏதோ மனப்பிராந்தி என்று கொள்ளலாம். ஆனால் பாட்டி சொன்னது சற்று குழப்புகிறது.
அன்புள்ள
பா.மாரியப்பன்
அன்புள்ள மாரியப்பன்
கோதாவரிக் கரையில் நானும் தனசேகரும் நடந்துகொண்டிருந்தோம். அங்கே ஒரு சுடுகாடு. அந்தச் சாலையில் பொதுவாக ஆள் நடமாட்டமே இருப்பதில்லை. கண்ணெட்டும் தூரம் வரை நதி, தோப்புகள். ஒருவர் சைக்கிளில் வந்தார். இந்த வழியாக நடமாட வேண்டாம், இது பேய்கள் உள்ள இடம் என்றார். சும்மா சொல்லவில்லை. உண்மையான அக்கறையுடன், அச்சத்துடன்.
இந்த மனநிலை நமக்கு புரிவதில்லை. நாம் வாழ்வது வேறு யதார்த்தத்தில். எல்லா மனிதர்களும் ஒரே யதார்த்ததில் வாழ்வதில்லை. அவரவர் யதார்த்தங்களை அவரவர் தேவைகள், மனநிலைகள், பின்னணிகள் சார்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதில் வாழ்கிறார்கள். நீங்கள் கொஞ்சம் சக மனிதர்களிடம் பேசினாலே போதும் அவர்கள் வாழும் யதார்த்தம் உங்களுடையதல்ல என்று தெரியும்.
சுடலை முனிசாமியுடன் உரையாடும் பாட்டிகள் நம் குடும்பங்களில் இல்லையா என்ன?
மங்கத் தாயார் பாட்டி வாழும் யதார்த்தம், அவரது கற்பனையும் அவரது அனுபவங்களும் கலந்து அவருக்குள் ஒரு திட்டவட்டமான உண்மையாகவே உருவாகி நிறுவப் பட்டிருக்கும். அதில் அவர்கள் இயல்பாக இருந்து கொண்டிருப்பார்கள்.
ஜெ