மணல்வீச்சு

தமிழகத்தில் புனருத்தாரணம் என்ற பேரில் பழமை வாய்ந்த கோயில்களில் மணல் வீச்சு முறைப் படி சிற்பங்களை ‘சுத்தம் செய்’கிறது அரசு. விளைவாக அரிய சிற்பங்கள் சிதைந்து மூளியாகி விடுகின்றன. தமிழகத்தின் மகத்தான சிற்பங்களில் கணிசமானவை ஏற்கனவே மூளியாக்கப் பட்டு விட்டன.

மணல் வீச்சு முறை என்பது சிற்பங்களைச் சுத்தம் செய்வதற்குரிய வழியே அல்ல. கப்பல்களின் அடியில் உள்ள சிப்பி, பவளக் கசடுகளை நீக்குவதற்காக உருவாக்கப் பட்டது. அதை வைத்து சிற்பங்களை சுரண்டலாம் என்று ஏதோ சும்பனுக்கு தமிழகத்தில் ஞானோதயம் வந்தது. மொத்த கோயில்களையும் அழிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இதைப்பற்றி நெடுங்காலமாக எழுதி வந்திருக்கிறேன். இப்போது சில நண்பர்கள் சட்டபூர்வமாக அதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நண்பர் ரீச் சந்திரசேகரன் எழுதிய கடிதம்

 

அன்புள்ள அன்பர் ஜெயமோகனுக்கு,

தாங்கள் எழுதி வரும் வரலாறு, பாரம்பரியம் பற்றிய பல கட்டுரைகளை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். Sand blasting தடை செய்யப் பட்ட ஒன்று. மத்திய தொல்லியல் துறையோ, மாநில தொல்லியல் துறையோ அவற்றை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகி விட்டன. ஆயினும் இந்து (?) அற(?) நிலையத் துறையினர் தான் இத்தகைய தடை செய்யப் பட்ட செயல்களைத் தொடர்கிறார்கள். பாரம்பரியச் சின்னங்களை எப்படிச் சுத்தம் செய்ய வேண்டும் என்ற பால பாடம் கூடத் தெரியாத நபர்களை (காண்டிராக்டர்களை) வைத்து இப்பணிகள் காசை சுருட்டவே நடை பெறுகிறது.

இதை எதிர்த்து ஒரு குரல் எழுப்பும் தன்னார்வ நிறுவனம் எங்களுடையது. கிராம மக்களுக்கு, நம் பாரம்பரியச் சின்னங்களைப் பற்றி எடுத்துரைத்து, பல கோயில்களைச் சுண்ணாம்பு, கல் போன்ற பழமை மிக்க பொருட்களை வைத்தே புனரமைப்பு செய்யும் குழு நாங்கள். சிமெண்ட், அக்ரிலிக் பெயிண்ட் போன்றவை எங்களிடையே தடை செய்யப் பட்ட பொருட்கள். இதற்காகச் சட்ட ரீதியான புகாரை கோர்ட்டில் சமர்பிக்க நல்ல வழக்குறைஞர் தெரிந்தால் சொல்லவும்.
ஆயிரம் சான்றுகள் – இந்து அற நிலையத் துறையினர் செய்யும் கோயில் புனரமைப்பு என்ற அடாவடிகளை, பழங்காலச்சின்னச் சிதைவுகளை படங்களாகவும், வீடியோக்களாகவும் காட்டத் தயார்.
அன்பன்

’ரீச்’ சந்திரசேகரன்.

To save culture & heritage visit:

www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
join http://groups/yahoo.com/temple_cleaners

மணல் வீச்சு முறை  நீதிமன்றத்தாலேயே  தடைசெய்யப் பட்டிருக்கிறது. அதற்கான சான்றுகளும் இந்த அமைப்பு கைவசம் வைத்திருக்கிறது.  பார்க்க http://maraboorjc.blogspot.com/2011/04/sand-blasting.html

இந்த அமைப்பின் தொடர் நடவடிக்கைகளில் நண்பர்கள் பங்கெடுக்கவேண்டுமென விரும்புகிறேன்

 

ஜெ

 

சிற்பப் படுகொலைகள்…

சிற்பப் படுகொலைகள்-இரு கடிதங்கள்

சிற்பப் படுகொலைகள்: மேலும் இரு கடிதங்கள்

ஆலயச் சிற்பங்களைச் சிதைக்கும் அறநிலையத்துறை

 

 

 

 

முந்தைய கட்டுரைதேர்வுசெய்யப்பட்டவர்கள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதைகள், கடிதங்கள்