A) அயன் ராண்டின் வாதத்திற்கும், நீங்கள் சொன்னதற்கும் என்ன வித்தியாசம் என்று யோசித்தேன். அவரும் தேர்வு செய்யப் பட்ட சிலர் உலகத்தின் சுமையைச் சுமப்பதாய் வருகிறது.
// அயன் ராண்ட் முன்வைக்கும் புறவய வாதத்தை சுந்தர ராமசாமி ஏற்கவில்லை. ஆனால் அவரது ‘அறிவுஜீவி மைய வாதம்’ அவர்க்கு ஏற்புடையதாக இருந்தது. ஆகவே அவருக்குள் ஒரு நுட்பமான முறையில் அயன் ராண்ட் ‘வளர்ச்சி’ அடைந்தார். //
என்று கூறுகிறீர்கள். அயன் ரான்டிற்கும் நீங்கள் கூறியதற்கும் வித்தியாசம் உள்ளதாக தெரிந்தாலும், புரியவில்லை. சற்று விளக்கவும்.
B) அந்த இடுகைக்கு வந்த பதில் கடிதங்கள் படித்தேன். அவற்றின் பல வாதங்கள் நீங்கள் பொருளியல் தளத்தில் சொல்லியிருந்தால் வந்திருக்காது…. என்று தோன்றுகிறது. இந்த தளத்தில் பொய்யான சமத்துவமும் பேச வராது – ஏனெனில் அது தினமும் சந்திக்கும் அலுவலக உண்மை:
இலக்கிய மையம் கொள்ளாமல், இன்றைய பொருளியலில் ‘தொழில் முனைவோர்’ (Entrepreneurs) சுட்டி “சமூகத்தைக் கட்டி எழுப்புபவனும் அதை நிலை நிறுத்துபவனும் தொழில் முனைவோரே, அவனே சமூகத்தின் முன்னேற்றத்திற்கு காரணம்..’ எனலாம். சிறிது பணமும், திறனும், ரிஸ்க் எடுக்கும் திறனும் கொண்ட அவர்களால் இன்று பத்து வருடம் முன்னர் நினைத்துக் கூட பார்க்காத பல தொழில்கள் இன்று ஆயிரம், ஆயிரம் குடும்பங்களை வாழ வைக்கின்றன. அவர்கள் பெருமதி உருவாக்க, அதன் பின்னர் அவர்கள் உருவாக்கிய அலுவலக சூழலில் பொருந்தி பணி செய்து கிடப்பதற்கே பல்லாயிரம் மனிதர்கள் வருகின்றனர். நாராயண மூர்த்தியின் முயற்சியின் விளைவாக, சென்று உழைத்து சம்பாதிக்கும் இளைஞர்கள் ஒரு உதாரணம். அந்த இளைஞர்கள் நினைத்தால் மென்பொருள் உருவாக்கி ஸ்டார்டப் செய்யலாம் – ஆனால் அவர்கள் ஒரு வித மர வியாபாரிகள்.
பி. கு.: ஒரு சாரார் பற்றி பேசினால் – அவர்களுள் மோசமானவரையே முதலில் கருதுவது இல்லாவிட்டால் இந்த வாதம் பொருந்தும் – சத்யம் ராஜூ அல்லாமல் நாராயண மூர்த்தி எடுத்துக்காட்டாக கொள்வது.
அன்புடன்,
கோகுல்
இத்தடவை ஐயோ ஜெமோ என்று தொடங்கலாமோ என மனம் அரற்றுகின்றது. இந்த கட்டுரையை படித்தபின் எனக்கு என் மீதான சுய வெறுப்பு மேலோங்கி கழிவிரக்கமாய் வழிந்து இன்னும் ஓயவில்லை. தேர்ந்தெடுத்த சிலரில் நானில்லை. இனி என்ன செய்ய? பயிற்சி பிரயோசனப் படாது என்று வேறு சொல்லிவிட்டீர்கள். வயது ஏறி விட்டது. வாசிப்பது இன்னும் உண்டு. ஆயினும் மனைவியின் கால் வலி, மகளின் டியூஷன் இன்ன பிற வேலைகள். பட்டினத்தாருக்கு லேட்டாகத் தான் எல்லாம் தெரிந்தது என்று இன்னொருவர் ஆறுதல் பட்டது போல நானும் பட்டேன். பட்டேன் என்பது அபசகுனமாக இருப்பதால் வேறொரு சொல்லால் நிரப்புக தயவு செய்து.
ஒரு விவரண படம் பார்த்தேன் தென்னமரிக்க காடொன்றில் சிறு இனக்குழு ஒன்றுடன் சிறிது காலம் சேர்ந்திருந்து ஆய்வு செய்வது நோக்கம். படம் முடிகையில் நிறைய கேள்விகளுடன் நான் இருந்தேன். அவர்களுக்கு ஒரு வளமான மொழி இல்லை. நன்றி தயவு செய்து போன்ற சொற்களே இல்லை. நேரம், காலம் போன்ற நாகரிக அடையாளங்கள் அங்கு அர்த்தம் இழந்து வேறொரு தளத்தில் இருந்தது. ஆய்வாளர் விடைபெறும் போது நன்றி சொல்ல ஆசைப் பட்டும் வார்த்தைகளுடன் தனியே விடப் பட்டார். பழங்குடிகளின் வாழ்வு எமது நோக்கில் தரமுயர்ந்ததா, தாழ்ந்ததா? அதன் அளவீடுகள் என்ன? அவர்களுக்கு எமது வாழ்வு முறை குறித்து என்ன கருத்திருக்கும்? ஏன் அங்கு யாரும் தேர்ந்தெடுக்கப் படவில்லை?
அன்பின் ஜெமோ தயவு செய்து என்னை குதர்க்கமாக யோசிப்பவனாகவோ, அல்லது அரை வேக்காடு இடதுசாரியாகவோ இனம் காண மாட்டீர்கள் என நம்புகிறேன். இளைய வயதிலேறிய இடதுசாரி வாசிப்புகள் இன்னும் எனை பொது ஒழுங்கில் முற்றாக ஐக்கியமாக தடுத்து வரும் மனக்குழப்பம் தருவதென்னவோ உண்மைதான். ஆயினும் கேள்வி என்னவென்றால் கருத்துகள்தான் உலகமா? பொருள் முதல் வாதம் எங்கு போனது? எல்லோரும் உழைத்து, உழைப்பின் இடையே வரும் களைப்பில் மகிழ்ந்திருக்க முயன்றது இன்று கலையானது. இன்று கலையின் இடம் பற்றி பேச எனக்கொரு தகுதியில்லை கண்டோ, கேட்டோ களிப்பவன் என்பது தவிர. ஆயினும் ஏழாம்உலக குய்யன் முழு சாப்பாடு ஒன்றே வாழ்வின் குறியாக கொண்டது போல் குமாஸ்தாக்களின் உலகு என்ன கொண்டிருக்கும்? உங்கள் தேர்வு செயப்பட்டவர்கள் ஏழாம் உலகு சம்பந்தப் படாதவர்கள். வீட்டுக்கு வீடு ஒரு ஜெமோவும், தெருவுக்கு தெரு நித்யாவும் (மன்னிக்கவும்] இருந்தால் என்ன ஆகும்? எல்லோரும் எழுத்தாளர்களாக, பாடகர்களாக அதுவும் ஒரே மாதிரி இருந்தால் நீங்கள் எழுதுவதை நான் ஏன் வாசிக்க வேண்டும்? எனைப்போல் இன்னொரு நகலை நான் ரசிப்பேனா? பீயில் எரிந்தாலும் தீ தீதான் என்றவர் நீங்கள்! கறவை மாடு போல் வாழும் முத்தம்மையிலும், நூறு நாற்காலிகளின் நாயடி தாயிலும் தாயுள்ளமும் பேரன்பும் கண்டவர். உலகின் பன்முகத்தை ஏற்பதில் என்ன தயக்கமென புரியவில்லை. பன்முகமென்பது ஒப்பிடுதலை தவிர்க்கும் என நான் நம்புகிறேன்.
இன்னொரு விடயம் நான் முன்பே எழுத நினைத்தது. நான் ஒரு முகமிலா வாசகன். (எத்தனை வசதி!) நீங்கள் அப்படியல்ல. எனவே தான் இத்தனை எதிர்வினைகள். உங்களுக்கு மேலும் எரிச்சலையோ மன விசாரம் தரவோ இக்கடிதம் அமையாதென நம்புகிறேன். நீங்கள் துரத்தினாலும் நான் உங்களை வாசிப்பதை விடப்போவதில்லை.
அன்புடன்
வே. பாலா
அன்புள்ள பாலா,
நான் சொல்வதை பலமுறை தெளிவாகவே சொல்லி விட்டேன். இந்த மண்ணில் திறமை உள்ளவர்கள் மட்டுமே வாழ வேண்டும் என்றோ திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே வாழ்க்கை பொருள் உள்ளது என்றோ நான் சொல்லவில்லை. நான் சொன்னது வேறு!
ஜெ
தேர்வு செய்யப்பட்ட சிலர் – மேலும்