அண்ணா ஹசாரே,வசைகள்

  • அன்புள்ள ஜெ,

கி. வீரமணி, அண்ணா ஹசாரேவை கடுமையாக வசைபாடி பேசியதை ஜூனியர் விகடனில் வெளியிட்டிருந்தார்கள். அண்ணா ஹசாரேயும், அவருடன் உள்ளவர்களும் நேர்மையற்றவர்கள் என்றும் ஊழல்வாதிகள் என்றும் சொல்கிறார். அண்ணா ஹசாரேயின் அமைப்பு பதிவு செய்யப் படவில்லை என்று சொல்கிறார்

‘புனேவைச் சேர்ந்த ஹேமந்த் பாபுராவ் பாட்டீல் என்பவர், சில தினங்களுக்கு முன்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் போட்டிருக்கிறார். அதில் அவர், ‘அன்னா ஹசாரே நடத்தி வரும் என்.ஜி.ஓ. அமைப்பு இதுவரை முறையாகப் பதிவு செய்யப் படவில்லை. அவருடைய அமைப்பு, மகா​ராஷ்டிர அரசிடம்  2 கோடியும், இன்னும் சில பண மோசடிகளும் செய்து இருக்கிறது. நில விவகாரங்களிலும் அதன் தலையீடு இருந்தது. எனவே, அன்னா ஹசாரேவை, லோக்பால் கமிட்டி​யில் இருந்து நீக்க வேண்டும்’ என்று கேட்டு இருக்​கிறார். இதுதான் அன்னா ஹசாரே என்ற அந்த ஜூனியர் மகாத்மாவோட லட்சணம்! இப்படி அந்தக் கமிட்டியில் இருப்பவர்கள் ஒவ்வொருவராகப் பிரச்னைகளில் சிக்குவதைப் பார்க்கும்போது, ‘கோழி திருடுனவனும் கும்பல்ல சேர்ந்து கூச்சல் போடுறான்’ என்ற கிராமத்துப் பழமொழி தான் ஞாபகத்துக்கு வருது.ஊழலுக்கு எதிராக இவர்கள், எந்த முகத்தை வைத்துக் கொண்டு குரல் கொடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை’ என்கிறார் வீரமணி.

’நீதிமன்றம் செய்ய வேண்டிய வேலைகளில் தலையிடும் விதமாகத்தான் லோக்பால் கமிட்டி அமைக்கப் படுகிறது.   உண்ணாவிரதம் என்ற பேரில் கட்டப் பஞ்சாயத்து நடத்துகிறீர்களா? காந்தி உண்ணா​விரதம் இருந்தபோதே, தந்தை பெரியார் அதை ஏற்றுக் ​கொள்ளவில்லை. ஆகவே, உங்கள் நாடகத்தை நாங்கள் நம்ப மாட்டோம். இந்திய அரசியல் சட்டத்தின் எந்த விதிமுறையின் கீழ் இந்த கமிட்டி அமைக்கப் படுகிறது? சட்டத்துக்கு உட்படாத ஒரு கமிட்டி இது.’ என்கிறார்

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஜெயராமன்

அன்புள்ள ஜெயராமன்,

ஒரே வரியில் முன்னரே சொல்லிவிட்டேன். திருடன் நீதிமன்றத்தை வசை பாடுவது இது.

அண்ணா ஹசாரே மேல் அவதூறுகளும், வசைகளும் புதியவை அல்ல. அவர் ராலேகான் சித்தியில் கிராம மறு நிர்மாணத் திட்டங்களை ஆரம்பித்த போதே வசைகளும், அவதூறுகளும், வழக்குகளும் ஆரம்பித்து விட்டன. பல்வேறு மோசடி வழக்குகள் தொடுக்கப் பட்டுள்ளன. ஒன்றன்பின் ஒன்றாக அவை நீதிமன்றத்தில் இருந்து தள்ளப் பட்டாலும் மேலும் தொடுக்கப் பட்டு வருகின்றன. அவர் மேல் மும்பையில் இப்போதும் இரு வழக்குகள் உள்ளன.

லோக்பால் போராட்டத்திற்கு உருவான ஆதரவு காங்கிரஸை  அரங்கில் பணிய வைத்தது.  அந்தரங்கத்தில் அது காங்கிரஸை கொந்தளிக்கச் செய்தது. அதன் விளைவே, திக்விஜய்சிங் முதலிய அரசியல் குண்டர்கள் தொடுக்கும் தொடர் அவதூறு மழை.

எதிர்காலத்தில் அண்ணா ஹசாரே மேல் இன்னும் முக்கியமான அவதூறுகள், வழக்குகள் வரலாம். அவரது போராட்டத்தை மழுப்ப அரசியல்வாதிகளுக்கு இருக்கும் ஒரே வழி அதுதான். அவரும் எங்களைப் போன்றவரே என்றுக் காட்டுவது!

விபச்சாரிகள் சீண்டப் பட்டால் தெருவில் வந்து ‘எவடீ இங்க பத்தினி? வாடி வெளியே, உன் வண்டவாளத்தை காட்டுகிறேன்’ என்று சவால் விடுவார்கள். அவளிடம் மோதப் பயந்து, குடும்பப் பெண்கள் ஒதுங்கிக் கொள்வார்கள்.

அறவுணர்ச்சியால்  ஒரு பெண் அவளிடம் மோதப் போனால் அவளை மிக எளிதில் அவதூறுகள் மூலம் தன்னைப் போன்றவளாக, தன்னிடம் ஒண்டிக்கு ஒண்டி மோதுபவளாக, காட்டி விடுவாள். அது தான் இங்கும் நடக்கிறது

அண்ணா ஹசாரே போன்றவர்கள் அதற்குத் துணிந்து தான் பொது வாழ்க்கைக்கு வந்திருப்பார்கள். ஆகவே அஞ்ச வேண்டியதில்லை. ஆபத்தானது எங்கோ ஒரு மூலையில் தன்னுடைய சொந்தச் சிறுமை சீண்டப் பட்டு  அண்ணா ஹசாரேவை எதிர்த்து இந்த அரசியல் விபச்சாரிகளின் குரலை ஆதரிக்க முயலும் நடுத்தர வர்க்கம்தான்.

துக்ளக்கின் தலையங்கம் வாசித்தேன்.  அண்ணா ஹசாரே சோவையும், வீரமணியையும் ஒரே குரலில் பேச வைத்து விட்டார்.

  • ‘அன்னா ஹசாரே’ என்பவர் உண்ணாவிரதம் இருக்க, மக்கள் ஆதரவு ஓஹோவென்று கிடைக்க, இன்று ஊடகங்களில் செய்திகளில் முன்னிலை வகிப்பது இந்தப் பிரச்சினை தான். அதில் என்ன பிரச்சினை? அவைகளைப் பற்றி சிந்திக்கும் முன்பாக இந்த விவகாரத்தின் கதாநாயகனான அன்னா ஹசாரே குறித்தும், அவரது நோக்கங்கள் குறித்தும் சற்று ஆழமாகச் சிந்திப்பது அவசியம் என்று கருதுகிறேன்.
    அன்னா ஹசாரே ஒரு சமூக சேவகர்; அரசியல்வாதி அல்ல. அவர் காந்தியத் தத்துவங்களில் ஆர்வம் கொண்டவர். பல சமூக, மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடியவர். எல்லாம் சரி, இவருக்கு இந்த நாட்டில் நிலவும் ஊழலைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதுவும் சரி. அப்படியானால், போஃபார்ஸ் ஊழல் இந்த நாட்டையே புரட்டிப் போட்டபோது இவர் என்ன செய்து கொண்டிருந்தார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.76 லட்சம் கோடிகள் மோசடி நடந்தது என்ற செய்தி வெளியானபோது இவர் பொங்கி எழாதது ஏன்? காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், மும்பையில் கார்கில் போர் வீரர்களுக்கு என்று கட்டப் பட்ட பல மாடிக் கட்டட விநியோகத்தில் நடந்த ஊழல் இவைகள் நாற்றமெடுத்த போது இவர் செய்தவை என்ன?

தமிழ் ஹிந்து இணையதளத்தில் ஒரு கட்டுரை யின் வரிகள் இவை

இதே வரிகளை நேற்று ஒரு கடிதத்தில் இடதுசாரி தொழிற் சங்க நண்பர் கேட்டிருப்பதை நினைவு கூர்க. வீரமணி இன்னும் நான்கு படி கீழே போகிறார். இத்தனை பேரால் வசை பாடப் படுமளவுக்கு அண்ணா ஹசாரே அப்படி என்ன தப்பு செய்தார்? அதை மட்டும் நினைத்துப் பாருங்கள். போதும்!

ஜெ

அண்ணா ஹசாரே-1 | jeyamohan.in

அண்ணா ஹசாரே-2 | jeyamohan.in

 

 

முந்தைய கட்டுரைகல்வி இருகடிதங்கள்
அடுத்த கட்டுரைசகாயம்