கல்வி இருகடிதங்கள்

ஜெ..

உங்களுக்கு ஒரு முறை விருபாக்‌ஷி என்னும் வாழையினம், பெரும் வைரஸ் தாக்குதலில் இருந்து காப்பாற்றப் பட்டது எப்படி என்று எழுதியிருக்கிறேன்.

முழுக்க முழுக்க வைரஸினால் பாதிக்கப் பட்ட மரத்தின் வளரும் நுனியில், புதிதாய்ப் பிறந்த செல்கள் என்பதால் வைரஸின் தாக்குதல் இருக்காது. அவற்றை வைரஸ் தாக்குவதற்கு முன்பு, வெட்டியெடுத்து, தனியே பெட்ரி டிஷ்ஷில் வளர்த்து, வைரஸ் இல்லா வாழையை உருவாக்கினார்கள். அந்த அரிய இன வாழை காப்பாற்றப் பட்டது அப்படித்தான்.

உழைப்பாளி இச்சமூகத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பின் பகுதி. படைப்பாளி அதன் வளரும் நுனி – அதே போல் இந்த வளரும் நுனியையும், குமாஸ்தாத்தனம் என்னும் வைரஸின் தாக்குதலில் இருந்து காப்பாற்றிக் கொள்வது ஒவ்வொரு படைப்பாளியின் கடமை.

அன்புடன்

பாலா

அன்புள்ள பாலா

நம்முடைய கல்விமுறை இன்னமும் வெறும் குமாஸ்தாக்களை உண்டுபண்ணுவதாகவே இருக்கிறது. கடந்த சிலவருடங்களில் அரசுக்கல்வித்துறை ஊழலாலும் தனியார்துறை லாபநோக்காலும் மேலும் பல படிகள் கீழே இறங்கிவிட்டிருக்கிறது. நான் ஒரு குறைந்தபட்ச தகுதி கொண்ட ஆசிரியரைப் பார்ப்பதே அபூர்வமாக ஆகிவிட்டிருக்கிறது. நம் சமூகத்தின் ஒன்றுக்கும் உதவாத கடைமக்கள் ஆசிரியர்களாகச் செல்லும் நிலை இருக்கிறது. இந்த அமைப்பே நமக்கு குமாஸ்தாக்களை உருவாக்கி அளிக்கிறது.

என் இணைய தளத்தில் நீளமான கட்டுரைகள் வெளியிடப்படும் போது ஒன்றை கவனிப்பதுண்டு. முதல்பகுதியை வாசித்த பத்துபேரில் மூவர் இரண்டாம் பகுதியை வாசிப்பதில்லை. இது எல்லா கட்டுரைகளுக்கும் பொருந்தும். ஒரு சாதராண சினிமாக் கட்டுரைக்கு வரும் வாசிப்பு ஒருபோதும் பிற கட்டுரைகளுக்கு வருவதில்லை. இந்தக்கட்டுரைகள் எல்லாமே மிக எளிமையானவை, மிக நேரடியானவை, மிக சமகாலத்தன்மைகொண்டவை. ஆனாலும் வாசிப்புக்குச் சோம்பல் படுகிறார்கள். நம் சூழலில் வாசிப்பவர்கள் மிகக்குறைந்த சிறுபான்மை. அவர்களில் என்னை அறிந்து இங்கே வருபவர்கள் அவர்களை விட சிறுபான்மை. அவர்களில் ஒருசாராரின் தரம் இது

இப்போது அண்ணா ஹசாரே பற்றிய இணையக் கட்டுரைகளை பார்க்கிறேன். மேலோட்டமான தகவல்கள் கொஞ்சம் ரெடிமேட் உணர்ச்சிகள், அவ்வளவுதான். ஒரு புதிய கோணத்தில், ஒரு முழுமை நோக்குடன் தர்க்கபூர்வமாக எழுதப்பட்ட கட்டுரைகளே இல்லை. எல்லாமே ஒன்றரைப்பக்க குறிப்புகளும்கூட. நாம் இதற்குத்தான் பழகியிருக்கிறோம்.

இதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தபோது வசந்தகுமார் சொன்னார், ‘ஜெயன் நம்ம பையன்களுக்கு அவனுடைய கல்விக்காலம் முழுக்க ஒரு கட்டுரையை வாசிச்சு புரிஞ்சுக்கிடறதுக்கான பயிற்சியே இல்லியே. தகவல்களாக வாசிச்சு சுருக்கிக்கிடறதுக்கான பயிற்சி மட்டும்தான் இருக்கு. இங்கே உள்ள பேராசிரியர்களுக்கே அது மட்டும்தான் தெரியும். இங்கே அறிவுஜீவிகளாக அறியப்படுறவங்க கூட சொந்தமா நாலு வரி சொல்லக்கூடியவங்க இல்லை. வாசிச்சு சுருக்கிச் சொல்ல தெரிஞ்சவங்க மட்டும்தான். சரிப்பா நீ என்ன நினைக்கிறேன்னு கேட்டா சொல்லத்தெரியாது. அப்ப  ஒரு வாசகன் எப்டி கட்டுரைகளை முழுசா படிச்சு புரிஞ்சுகிட முடியும்? அதுக்கு கட்டுரையை முதல்ல முழுசா வாசிக்கணும். வாசிச்சத அதுவரைக்குமான வாசிப்பில வச்சு புரிஞ்சுக்கிடணும். கட்டுரைகிட்ட மானசீகமா உரையாடணும். இதெல்லாம் நம்ம பள்ளிக்கூடங்களிலே சொல்லிக்குடுக்காம  அவனுக்கு எப்படி வரும்? சுருக்கமா சில தகவல்களை வாசிக்க மட்டும்தான் அவனுக்குப் பயிற்சி இருக்கு.’

ஒரு சுயசிந்தனையாளனாக இந்தியச் சூழலில் உருவாவதென்பது இங்கே உள்ள அனைத்துக்கும் எதிரான ஒரு செயலாகவே உள்ளது. இங்கே குமாஸ்தாத்தனம்தான் இயல்பாக வளரும்

ஜெ

அன்புள்ள ஜெ,

வணக்கம். இந்த கடிதம் அமெரிக்க பள்ளிகளின் தொலை நோக்கு பார்வை குறித்து.

எனது மகன் இப்போது ஒரு துவக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கின்றான். அவன் படிக்கும் துவக்கப் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் கண்காட்சி நடத்துவது வழக்கம். மாணவர்கள் தங்கள் அறிவியல் திட்டப்பணியை ஒரு ஆராய்ச்சி மாணவனின் நேர்த்தியோடு செய்கின்றனர். இது சிறார்களுக்கு ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தையும் அதற்க்கான விதையை மனதில் விதைக்கும் முயற்சி.

இந்தவருட கண்காட்சி கடந்த மாதம் நடந்தது. இதில் எனது மகனும் பங்கெடுத்தான். ஒரு மாத்தத்திற்கு முன்புதான் கண்காட்சி நடக்கும் நாள் எங்களுக்கு அறிவிக்கப்பட்டது. என்னை விடவும் என் மகனிற்கு அதில் பங்கேற்க ஆசை. நாங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பு “மின்பகுப்பு” (electrolysis). நீரில் கொஞ்சம் உப்பு சேர்த்தால் ஹைட்ரஜன் வாயு பிரிகையின் அளவு அதிகரிக்கும் என்பதை விளக்கியிரிந்தோம்.

கண்காட்சி நடந்த அன்று நீங்கள் உங்கள் “தேர்வு” கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் அதே மனநிலையில் இருந்தேன். ஒவ்வொரு காட்சிப் பலகையாக சுற்றிவந்தோம். எங்களைத்தவிர அனைவரும் மிக அழகாக தங்கள் காட்சிப்பலகையை வடிவமைத்திருந்தனர். தேர்வாளர்கள் ஒவ்வொரு மாணவரிடமும் அவர்கள்
செயல் திட்டம் குறித்து கேள்விகள் கேட்டனர். என்மகனிடம் கேட்ட கேள்விகளுக்கு தெரிந்தவற்றை மிக தைரியமாக சொனனான். நான் சில ரசாயனக் குறியீடுகளையும்,  ஹைட்ரஜன் வாயுவின் பயன்களையும், அதன் வேதிப்பன்புகளையும் சொல்லியிருந்தேன். அவற்றை தேர்வாளரிடமும் சொன்னான்.

கடந்த வருடம் முடிவுகளை கண்காட்சி அன்றே வெளியிட்டனர். எனவே நாங்கள் காத்திருந்தோம். முடிவுகள் அன்று வெளியிடப்படவில்லை. அடுத்தநாள் அறிவிப்பதாகக் கூறினார்கள். சற்று ஏமாற்றத்தோடு வீடு திரும்பினோம். வீட்டில் வந்து கவனித்தபோது எங்கள் காட்சிப்பலகையில் சிறு இலக்கணப் பிழை. இதை அவனிடம் சொன்னபோது, “Never mind, appa. They will rate how I explained to them”.

அடுத்தநாள் பள்ளிமுடிந்து அவனை அழைக்கச்சென்றபோது, தன் புத்தகப் பையோடு அமர்திருந்தான்.(பையில் புத்தகம் ஒன்றும் இருக்காதது. சில வீட்டு பாடவேலைக்கான சில காகிதங்கள் மட்டும்.)

நான் அவன் அருகில் சென்றதும், “Appa, I have a surprise”. என்னவேன்றபோது, தன் பையிலிருந்து அந்த விருதை எடுத்துக் காண்பித்தான். “I got second prize, the first price went to the popcorn machine.” எனக்கு மூக்கின் உட்பகுதி சற்று எரிந்து, கண்ணில் தண்ணீர் முட்டியது. அவனை அனைத்துக் கொண்டேன்.

“I am proud of you, appa. You helped me to get this award. This is my first award in my life. They called my name in the school speaker. I was shocked and excited when they called my name. Thank you, appa.”

சற்று பெருமையாக இருந்தது. எனது சிறுவயதில் இதைப்போல எதுவும் செய்யவில்லையே என்ற பொறாமையும்.

காரில் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது, அடுத்த வருடம் என்ன ப்ராஜெக்ட் செய்யப்போகின்றாய் என்று கேட்டேன். சற்றும் யோசிக்காகாமல், “டி என் ஏ மாடலிங்”.

அன்புடன்,
கிறிஸ்.

அன்புள்ள கிறிஸ்

கல்வியில் இருவகை உண்டு. தெரிந்துகொள்வதற்கான கல்வி , சிந்திப்பதற்கான கல்வி. இந்தியாவில் உள்ளது முதல்வகை கல்வி. நீங்கள் சொல்வது இரண்டாம் வகைக் கல்வி. அதை அங்கே உருவாக்கியிருப்பதை கண்டு நான் வியந்திருக்கிறேன். அங்கே சிறு குழந்தைகள் கூட நூல்களை வாசிக்கவும் சொந்தமாக புரிந்துகொண்டு கருத்துக்களை உருவாக்கவும் பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் அமெரிக்கா என்னை கொஞ்சமும் கவராத நாடு. அமெரிக்க பயணத்திற்குப்பின் ஒரு பயணக்கட்டுரை எழுத ஆரம்பித்தேன். அந்த நிலம் என்னை இன்றும் பெரும் கனவாக நிறைத்திருக்கிறது. அங்கே சந்தித்த நண்பர்கள் இப்போதும் என் சுற்றமாக இருக்கிறார்கள். ஆனால் அங்கே இருக்கும் முதலாளித்துவ அமைப்பு மிக அசிங்கமானது. சொல்லப்போனால் நான் அமெரிக்கா செல்வது வரை முதலாளித்துவம் மேல் கொண்டிருந்த மதிப்பு சென்றதுமே இல்லாமலாகியது

அதே அமெரிக்காவில் என் நண்பர்கள் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களாக இருக்கிறார்கள். மிகமிகக் குறைந்த ஊதியம் . பள்ளியிலேயே தங்கி சுயமாக சமைத்து உண்டு வெளியே எங்குமே செல்லாமல் இருந்தால் பணத்தை இந்தியா அனுப்பலாம். தொகை நாணயமதிப்பில் பெரிது.  உள்ளூர்க்காரர்கள் அந்த சம்பளத்தில் வேலைக்கு வரமாட்டார்கள் என்பதனால் இவர்களுக்கு வாய்ப்பு

அந்தப்பள்ளியில் ஒன்றுமுதல் எட்டாம் வகுப்பு வரையிலான எல்லா பிள்ளைகளையும் ஒரே வகுப்பாக அமரச்செய்து ஒரே ஒரு ஆசிரியர் அவருக்கு தெரிந்ததைச் சொல்லி கொடுக்கிறார்- அதாவது அமைதியாக கொஞ்ச நேரம் அமரச்செய்கிறார். மதியம் சாப்பாடு போட்டு அனுப்பிவிடுகிறார்கள். பத்தாம் வகுப்புவரை படித்தாலும் சொந்தமாம நான்குவரி எழுதவோ எழுத்துக்கூட்டிப் படிக்கவோ முடியாது. கறுப்பர்களும் ஸ்பானிஷ்காரர்களும் பயிலும் பள்ளிகள் அவை. சாப்பாட்டுக்காக மட்டுமே பிள்ளைகள் பள்ளிக்கு வருகின்றன. ஆரம்பப் பள்ளியிலேயே வன்முறை , பாலுறவு, போதைப்பழக்கம்.

அதையும் சேர்த்தே நான் அமெரிக்க பள்ளிகள் என்று சொல்வேன்

ஜெ

 

விதிசமைப்பவர்கள்

தேர்வு செய்யப்பட்ட சிலர் – மேலும்

தேர்வு செய்யப்பட்ட சிலர்

முந்தைய கட்டுரைஊழல், முதலாளித்துவம்
அடுத்த கட்டுரைஅண்ணா ஹசாரே,வசைகள்