ஊழல், முதலாளித்துவம்

 

அன்புள்ள ஜெ,

அருமையான கட்டுரைகள். பல விசயங்களை தெளிவுபடுத்தின.

முக்கியமாக இடதுசாரி எதிர்ப்பாளர்களின் நிலைப்பாடு பற்றி. மிக்க நன்றி.

ஆனால் அய்ரோப்பாவில் 50 ஆண்டுகளுக்கு முன் ஊழல் மிகுந்த அரசுகள் இருந்தன என்பதை ஏற்க முடியவில்லை. நாசியிசம், ஃபாசிசம் இருந்த ஜெர்மனி, இடாலி, ஸ்பெயின் போன்றவை சர்வாதிகாரரங்களாக இருந்தன.அங்கு ஊழல் crony capitalism என்ற வகையில் இருந்தன.

ஆனால் இதர அய்ரோப்பிய நாடுகள், முக்கியமாக பிரிட்டன், ஃப்ரான்ஸ்,ஸ்காண்டினேவிய நாடுகள், பெல்ஜியம், நெதர்லாந், சுவிஸர்லாந் போன்ற நாடுகளின் ஊழல் அன்று பெரிய அளவில் இருந்ததாகத் தெரியவில்லை.

லிபரல் ஜனனாயகம் படிப்படியாக மலர்ந்து, காலனியாதிக்கம் அழிந்த காலங்கள் அவை. இங்கிலாந்தில் ஊழல் அன்று இருந்ததை விட இன்று தான்சற்று அதிகம் என்றே படுகிறது. (MP’s scandals, Tony Blair, etc) சோசியலிசத்தை நோக்கி நகரும் நாடுகளில், அதிகாரம் அரசு வசம் குவிந்து,அது ஊழலுக்கு வழி வகை செய்யும். Power corrupts, absolute power corrupts absolutely. இந்தியா இதற்கு நல்ல உதாரணம். 1965இல் ராஜாஜி இதை பற்றிஎழுதிய முக்கிய கட்டுரை இது :

http://athiyaman.blogspot.com/2009/09/rajaji-on-sri-sri-prakasa-and-nehrus.html

பொருளாதார சுதந்திரத்திற்க்கும் ஊழலுக்கும் இருக்கும் நேரடி தொடர்பைப்பற்றிய பதிவு இது :

http://athiyaman.blogspot.com/2007/05/ethics-corruption-and-economic-freedom.html

’ஊழலின் ஊற்றுகண்கள்’ என்ற தலைப்பில் எழுதிய பதிவுகள் :

http://nellikkani.blogspot.com/2011/03/blog-post.html

http://nellikkani.blogspot.com/2011/03/2.html

Regards / அன்புடன்

K.R.Athiyaman  / K.R.அதியமான்

 

அன்புள்ள அதியமான்,

பொதுவாக நான்  வாதங்களை தவிர்க்க விரும்புகிறவன். முன்முடிவுள்ள ஒருவரிடம் விரோதம் வரை விவாதித்துச்செல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆகவே மதவாதிகளிடம் விவாதிப்பதில்லை. அதே கரணத்தால்தான் அவதூறுகளைப் பொருட்படுத்துவதும் இல்லை.

மன்னிக்கவும் அதியமான்,   நீங்கள் ஒரு முதலாளித்துவ பொருளியல் முன்மாதிரியை ஒரு மதநம்பிக்கை போல முன்வைக்கிறீர்கள். நீங்கள் நம்புவதை நிறுவியாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.

நான் கருத்துச் சொல்வது ஒரு விரிந்த வரலாற்றுப்புலத்தில். அது சார்ந்த தரவுகள் பலவும் நினைவில் இருந்தே சொல்லப்படுகின்றன. சிலசமயம் முப்பதாண்டுகளுக்கு முன்பு வாசித்தவற்றைக்கொண்டுகூட பேசுவதுண்டு. ஆகவே ஒரு விஷயத்தை தகவல் சார்ந்து நிறுவவேண்டுமென்றால் நான் மீண்டும் தேடவேண்டும். அது ஆய்வுவேலை,  அந்த வேலையைச்செய்யப்போனால் என்னால் மேற்கொண்டு எதையும் எழுதமுடியாது. என் கூற்றுக்களில் சிறு தகவல்பிழைகள் இருக்கலாம். நான் என் வாதகதிகளை என் கோணங்களை பரிசீலனை செய்பவர்களுக்காகவே எழுதுகிறேன்.

மேலும் நான் அபூர்வமான தகவல்களை சொல்வதில்லை, பெரும்பாலும் எல்லாருக்கும் தெரிந்த தகவல்கள்தான். ஒரு குறிப்பிட்ட வாதத்தை நிறுவக்கூடிய முக்கியமான தகவல் என்றால் மட்டுமே ஆதாரங்களை முன்வைக்க முயல்வேன். காரணம் இவை ஆய்வுக்கட்டுரைகள். அல்ல.

ஆகவே நான் எழுதும் தகவல்களை தாங்களே சரிபார்த்துக்கொள்ளக்கூடிய வாசகர்களுக்காகவே நான் எழுதுகிறேன். அவர்கள் சுட்டும்பிழைகளைச் சரிசெய்துகொள்கிறேன். இந்நிலையில் ஒவ்வொரு தகவலுக்கும் ஆதாரம் கேட்பதென்பது என்னை செயலிழகக்ச்செய்துவிடும்.ல் மேலதிக விவாதமென்பது என் கோணங்கள், தர்க்கங்களை  மறுப்பவர்களிடம் மட்டுமே எனக்கு சாத்தியம். என் தரப்பை நான் வளர்த்துச்செல்ல அல்லது தாண்டிச்செல்ல அவை உதவ வேண்டும்

இன்று பல முதலாளித்துவ நாடுகளில் மக்கள்நலப்பணிகளில் ஊழல் இருப்பதில்லை.  அரசியல்நிர்வாகம் ஊழலின் அடிப்படையில் நடப்பதில்லை. அங்கே ஜனநாயகம் வேரூன்றாத நாட்களில் ஊழலரசுகள் இருந்தன, படிப்படியாக உருவாகி வந்த ஜனநாயகப்பிரக்ஞை மூலம் அவை மக்கள்நலப்பணிகளிலும் நிர்வாகத்திலும் நேரடியாக ஊழல் நடப்பதை தடுத்துக்கொண்டன என்று எழுதியிருந்தேன்.

இதை நீங்கள் மறுக்கிறீர்கள் என்று புரிந்துகொள்கிறேன், சரியா?  முதலாளித்துவநாடுகளில் ஊழலே  இல்லை, இருந்ததும் இல்லை என்பது உங்கள் தரப்பு. சோஷலிசம் இருந்த நாடுகளில் மட்டுமே ஊழல் இருக்கும் என்கிறீர்கள்.

முதல் விஷயம் , இன்றுள்ள முக்கியமான முதலாளித்துவ நாடுகள் எல்லாமே உயர்மட்ட ஊழல்கள் மலிந்தவைதான். பெருந்தொழில் நிறுவனங்களுக்கும் நிதிநிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையே உள்ள ரகசிய உடன்பாடுகள் மூலம் நிகழும் ஊழல்கள் அவை. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்  சென்ற பத்தாண்டுகளில் அவ்வாறு வெளிவந்த ஊழல்களைப்பற்றி  அறிந்துகொள்ள சும்மா நாளிதழ்களைப் புரட்டினாலே போதும் .கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்த ஜப்பானிய ஊழல்களின் தொகைகள் இங்கே இந்தியாவில் நாம் சாதித்துள்ள தொகைகளை விட அதிகம்.

கட்டுமானவேலைகளில் பத்து சதவீதம், ஆயுதபேரங்களில் இருபது சதவிதம் வரை ’கிக்பேக்’ அளிக்கப்படுவது ஒரு சர்வதேச மரபாகவே உள்ளது. இங்கே நாம் ஊழல் என நினைப்பவை பலவும் முதலாளித்துவ நாடுகளில் சட்டபூர்வமாக ஆக்கப்பட்டுள்ளன.  இன்று நாம் ஊழல் என நினைப்பவை சென்ற மன்னராட்சிக் காலத்தில் மரபாக கடைப்பிடிக்கப்பட்டன என்பதுபோலத்தான் இதுவும்.

நியூயார்க்கில் பிரைஸ்வாட்டர்கூப்பர் நிறுவனத்தின் பிரம்மாண்டமான கட்டிடம் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளச் சொன்னார் நண்பர். அதன் சமீபத்திய மாபெரும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகளையும் அவை அமெரிக்க பொருளியலுக்கு உருவாக்கிய அடிகளையும் நினைவில் கொண்டு ’இந்த நிறுவனம் தடைசெய்யப்பட்டிருக்கிறதல்லவா?’ என்றேன். ‘விளையாடுகிரீர்களா? அமெரிக்காவில் பெரிய ஊழல்களைத் தண்டிக்க முடியாது என்பது ஊருக்கே தெரியும்’ என்றார் நண்பர்.

முதலாளித்துவம் ஊழல்கள் வழியாகவே செயல்பட்டுவருகிறது, அதற்கான மாற்று ஏதும் இன்றுவரை இல்லை. அரசாங்கத்தை நிர்வகிக்கும் மனிதர்களை வணிகநிறுவனங்கள் தவறான முறையில் கவர்ந்து அரசின் திட்டங்களைத் தங்களுக்குச் சாதகமான முறையில் அமைத்துக்கொள்ளுதல், மக்களின் வரிப்பணத்தைத் தங்களுக்காக பயன்படுத்திக்கொள்ளுதல், அரசின் வெளியுறவுக்கொள்கைகளைத் திரித்துக்கொள்ளுதல் ஆகியவை இன்றைய உலக முதலாளித்துவ நாடுகளின் அன்றாட ஆட்சிமுறையாக இருந்து வருகின்றன.

ஆனால் அங்கே நிகழ்வதற்கும் இங்கே நிகழ்வதற்கும் உள்ள முக்கியமான வேறுபாடு அங்கே மக்கள் நலத்திட்டங்களில் ஊழல் இல்லை, அன்றாட வாழ்க்கையை நிர்ணயிக்கும் கீழ்மட்ட நிர்வாகத்தில் ஊழல் இல்லை, நேரடி அரசியல்நிர்வாகத்தில் ஊழல் குறைவு என்பதே. ஆனால் அங்கே ஜனநாயகம் உருவாகி படிப்படியாக வலுபெற்ற பின்னரே இந்த மாற்றம் உருவானது.

இதற்கு நீங்கள் ஆதாரம் கேட்கிறீர்கள். சும்மா போகிற போக்கில் இணையத்தில் தட்டியிருந்தாலே ஆதாரங்களை நீங்கள் பெற்றிருக்க முடியும்.  அமெரிக்க வரலாற்றில் இரண்டு ரூஸ்வெல்டுகளும் ஊழலுக்கு எதிரான மக்களியக்கத்தின் நாயகர்களாக கருதப்படுகிறார்கள்.

தியோடர் ரூஸ்வெல்ட் [1901-1909] ஊழலுக்கு எதிரான அவரது ஜீரோ டாலரன்ஸ் அணுகுமுறைக்காக இன்று நினைவுகூரப்படுபவர். அமெரிக்க வரலாற்றில் ஊழல் ஒரு பெருங்கொண்டாட்டமாக இருந்த நாட்கள் அவை. அமெரிக்க நிலம் முழுக்க பல்வேறு கம்பெனிகளால் கையடக்கப்பட்டிருந்தது அன்று. அவை அரசுகளை ஊழலில் முக்கி வைத்திருந்தன. 1869ல்  அதிபர் யுலிஸஸ் கிராண்ட் தன் அரசின் அமைச்சர் பதவிகளையே நிறுவனங்களுக்கு ஏலம்போட்டு விற்றுவிட்டார் .அன்று தேர்தலில் நிற்பதென்றாலே ஊழல் செய்து பணம் சம்பாதிப்பதுதான் என்று அமெரிக்காவே நம்பியது. அந்த நிலைக்கு எதிராக போராடி மக்கள் கருத்தை திரட்டி வென்று வந்து  அன்று அரசை ஊழல்கள் மூலம் கட்டுக்குள் வைத்திருந்த டிரஸ்ட்கள் என்றழைக்கப்பட்ட ஏகபோக நிறுவனங்களை அடக்கி வென்றவர் ரூஸ்வெல்ட்.

ஃப்ராங்கிலின் ரூஸ்வெல்ட் [1933–1945 ] பெரும்பணவீக்க காலகட்டத்தில் தன் ‘புதிய வழிமுறை’  [New deal] மூலம் அன்றைய நிர்வாக ஊழல்களுக்கு எதிராக எடுத்த கடுமையான நடவடிக்கைகளும், அன்று உருவாக்கிய சட்டங்களும்தான் இன்றும் அமெரிக்காவின் பொது ஒழுக்கமாக நீடிக்கின்றன. இவை எந்த ஒரு அமெரிக்க வரலாற்று நூலிலும் வாசிக்கக்கூடியவையே.

எந்த ஐரோப்பிய வரலாற்று நூலையும் எடுத்து வாசித்துப்பார்த்தாலும் ஐரோப்பிய நாடுகளின் குடியரசுகள் உருவாகி வந்த ஆரம்ப வருடங்களில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்காலம் ஊழலும், பாரபட்சமும் அந்நாடுகளை சுழற்றியடித்த கதையை நீங்கள் வாசிக்கமுடியும். பிரான்ஸின் குடியரசுகள் ஊழலால்தான் ஒன்றன்பின் ஒன்றாக உருவாகி அழிந்தன. 1871ல் உருவான மூன்றாம் பிரெஞ்சு குடியரசு ஊழல் மிக்க அரசுகளில் ஒன்றாக சொல்லப்படுகிறது.  மேலெழுந்தவாரியாக பார்த்தாலே நம்பமுடியாத அரசியல் பகடையாட்டங்களும் ஊழல்களும் நிறைந்த காலகட்டம்.

முதல் உலகப்போருக்கும் இரண்டாம் உலகப்போருக்கும் இடையிலான பிரான்ஸின் வரலாறு பைத்தியக்கார காலகட்டம் [Les années folles] எனப்படுகிறது. அதிகாரமட்டத்தில் வணிகர்களின் செல்வாக்கால் ஊழல் மலிந்திருந்த காலம். வெளியுறவுக்கொள்கைகளே லஞ்சம் வாங்கிக்கொண்டு வகுக்கப்பட்டது.

குறிப்பாக 1930 -36 வரை பிரெஞ்சு வரலாற்றின் கொந்தளிப்பான காலகட்டம். ஊழல்நிறைந்த அரசுக்கு எதிரான கட்டுபாடற்ற  மக்கள்போராட்டங்களை வலதுசாரிகள் முன்னெடுத்தனர். தொடர்ச்சியாக ஊழல்கள் வெளிவந்து நடுத்தர வர்க்கத்தை அரசுக்கு எதிராக திருப்பியதனால் ஒவ்வொருநாளும் தெருக்கள் கிளர்ச்சியாளர்களால் நிறைந்திருந்தன. ஊழல்கள் காரணமாக ஜனநாயகம் மீதே மக்கள் நம்பிக்கையிழந்தார்கள். மேலோட்டமாக தகவல்கள் வேண்டுமென்றால் விக்கிபீடியாவையே பார்க்கலாம். http://en.wikipedia.org/wiki/6_February_1934_crisis

இக்காலகட்டங்கள் முழுக்க நிர்வாகத்திலும் அன்றாட வாழ்க்கையிலும் ஊடுருவியிருந்த ஊழல் பற்றி இன்று நீங்கள் சாதாரண ஐரோப்பிய வரலாற்று நூலிலேயே வாசிக்கலாம். கூகிளில் தேடினாலே பல நூல்கள் கிடைக்கும். தமிழிலேயே முப்பதாண்டுகளுக்கு முன்பு விரிவான ஒரு நூல்வந்துள்ளது தமிழ்நாட்டு பாடநூல் நிறுவன வெளியீடு, மொழியாக்க நூல்.

அந்த ஊழலுக்கு ஜனநாயகம் வழியாக அரசுக்குள் நுழைந்த மன்னராட்சி ஆதரவாளர்களும் பிரபுக்களும் காரணம் என ஒரு தரப்பு உண்டு. அதேயளவு காரணம் அன்று உருவான தொழிற்புரட்சியை பயன்படுத்தி செல்வம்சேர்த்த புதியமுதலாளிகள். ஊழல் நான்கு தளங்களில் நிறைந்திருந்தது. நீதித்துறையில் பிரபுக்களுக்கு கிடைத்த பாரபட்சமான முன்னுரிமை, நில உடைமைகள் தவறான முறையில் அங்கீகரிக்கப்பட்டமை, ராணுவச்செலவுகளின் பிரம்மாண்டமானமுறைகேடுகள், வரிமுறைகேடுகள்.

1870கள் முதல் ஊழலுக்கு எதிரான  ஃபிரெஞ்சு கட்டுரைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு பிரிட்டனில் அன்றைய கம்பெனிகள் ஆட்சியதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்திமைக்கு எதிராக மக்கள் கோபத்தை   உருவாக்குவதற்காக பயன்படுத்தப்பட்டன. எமிலி ஜோலாவின் கட்டுரைகளில் ஒருபகுதியை நான் மலையாளத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறேன். பிரான்ஸின் ஊழல்களுக்கு எதிரான கோபப்பாய்ச்சல்கள் அவை.  1870கள் முதல் ஜெ.எஸ்.மில், ஜான்.ரஸ்கின் போன்றோரின் எழுத்துக்களில் பிரிட்டனின் ஊழல்களுக்கு எதிரான கோபத்தைக் காணமுடியும்.

பிரான்சில் ஊழலுக்கு எதிராக எழுதப்பட்ட கட்டுரைகள் வழியாகவே பொது தள ஊழல்களுக்கு எதிராக இன்று வரை ஐரோப்பாவில் நிலவும் பொதுமக்கள் மனநிலை உருவாக்கப்பட்டது.  இந்தவிழுமியங்கள் ஐரோப்பியநாடுகளில், பிரான்ஸிலும் பிரிட்டனிலும் ஒரு மக்கள்சக்தியாக ஆனது இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில்தான் என்பது வரலாறு. தோராயமாக நான் குறிப்பிட்ட காலம் இதுவே.

கிட்டத்தட்ட எல்லா ஐரோப்பிய நாடுகளின் வரலாறுகளும் இதே பரிணாம கதி கொண்டவைதான். மன்னராட்சியில் இருந்து குடியரசு உருவாகிறது. குடியரசில் இருக்கும் பணமும் செல்வாக்கும் பெற்றவர்கள், இவர்கள் பெரும்பாலும் முன்னாள் பிரபுக்களும் வணிகர்களும்தான், அரசதிகாரத்தைப்பயன்படுத்தி ஊழலில் திளைக்கிறார்கள். விளைவாக ஊழலுக்கு எதிரான மக்களியக்கம் உருவாகிறது. அந்த இயக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஊழலை எதிர்க்கும் சக்திகள் ஆட்சிக்கு வருகின்றன. அவை பொதுத்தள ஊழலை இல்லாமலாக்குகின்றன.

அந்த விழுமியங்கள் இன்று இல்லாமலாகிவிட்டன என்றும் அவற்றை மீட்டெடுக்கவேண்டும் என்றும் , அதற்கு இன்னொரு மக்களியக்கம் தேவை என்றும் அறைகூவும் இணைய எழுத்துக்களைக் கடந்த சில வருடங்களாக, குறிப்பாக இந்த பொருளியல் நெருக்கடிக்குப் பின், கண்டுகொண்டிருக்கிறேன்.

ஜெ

 

அலைவரிசை ஊழல் | jeyamohan.in

அலைவரிசை ஊழல்-கடிதங்கள் | jeyamohan.in

அண்ணா ஹசாரே-1 | jeyamohan.in

அண்ணா ஹசாரே-2 | jeyamohan.in


 


 


 


 

முந்தைய கட்டுரைபுத்தக விற்பனை குறித்த சர்வே
அடுத்த கட்டுரைகல்வி இருகடிதங்கள்