சாகித்ய அக்காதமியும் சர்க்காரும்

ஆரோக்கிய நிகேதனம்

அன்புள்ள ஜெ

ஆரோக்கிய நிகேதனம் படித்தேன். அருமையான நாவல். மொழியாக்கமும் சிறப்பாகவே இருந்தது. ஆனால் சாகித்திய அகாதெமி பதிப்பகத்தாரின் கவனக்குறைவால் எழுத்துப்பிழைகள் மண்டிக்கிடக்கின்றன. ஒவ்வொரு பத்தியிலும் எழுத்துப்பிழைகள் விரவிக்கிடக்கின்றன.  இதனால் நல்லதொரு வாசிப்பனுபவத்தை  இழக்க நேரிட்டது என்றே கூறவேண்டும். இனி ஆரோக்கிய நிகேதனத்தை படிக்கப் போகும் நண்பர்கள் வ.உ.சி நூலகம் வெளியிட்டுள்ள புத்தகத்தை தேர்வு செய்வதே நல்லதென்று நினைக்கிறேன்

மணிமாறன்

பாண்டிச்சேரி

***

அன்புள்ள மணிமாறன்

வருத்தம் தரும் செய்தி. சாகித்ய அக்காதமி போன்ற நிறுவனங்கள் உண்மையில் இத்தகைய நூல்களை குறைவான விலையில் வெளியிடலாம். ஆனால் அவை மறுபதிப்புக்கு வைத்திருக்கும் விலை மிகுதி. கூடவே இப்படி முறையாக பிழைபார்க்காமல் அச்சிடுவது ஒருவகை அராஜகம். இத்தனைக்கும் மாதம் எப்படியும் லட்சரூபாய் சம்பளம் வாங்கும் பல பிழை திருத்துநர்கள் அங்கே நிரந்தர ஊழியர்களாகப் பணியாற்றுவார்கள். இந்த நாவலையே சரிபார்க்க பணம் கொடுத்து வெளியே ஒரு ‘நிபுணருக்கும்’ அனுப்பியிருப்பார்கள். பெரும்பாலும் ஏதாவது பேராசிரியராக இருப்பார். அரசு எதைச்செய்தாலும் விளங்காது என்பதற்கான சான்றுகள் இவை.

ஒரு நண்பர் சொன்னார். தமிழ் விக்கியை ஒரு தனியார் நிறுவனம் செய்திருந்தால் இதுவரை ஆற்றிய பணிக்கே அரைக்கோடி செலவாகியிருக்கும் என்று. நான் சொன்னேன் அரசு செய்திருந்தால் இரண்டுகோடி ரூபாய் சம்பளமாகவே சென்றிருக்கும். பங்ளாபீடியா என ஒரு தளம் உள்ளது. ஆண்டுக்கு ஒன்பது கோடி ரூபாய் பட்ஜெட். இருபதாண்டுகளாக நடைபெறுகிறது. அடுத்த ஆண்டே நாம் அதை எட்டிப்பிடித்துவிடுவோம்.

ஜெ

***

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி தூரன் விருது -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஜெகசிற்பியன், லா.ச.ரா – கடிதங்கள்