எழுத்தாளனும் நண்பர்களும் -கடிதம்

முத்தப்பனும் பகவதியும் முப்பதாண்டுகளும்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களுடைய காசர்கோடு பயண புகைப்படங்களைப் பார்த்தேன். மற்றவர்களின் முகங்களோடு உங்களை காணும்போது மனதில் எழுந்த வரி கேரளத்தில் ஒரு தமிழகம். இந்த வரி மனதுக்கு குதூகலத்தை தருகிறது.

அன்புடன்

மோகன் நடராஜ்

அன்புள்ள ஜெ

உங்கள் காசர்கோடு பயணமும், நட்புச்சூழலும் மகிழ்ச்சியை அளித்தது. ஓர் எழுத்தாளராக உங்களைக் கொண்டாடுபவர்கள் பலர் இருக்கலாம். ஒரு தனிமனிதனாக உங்கள்மேல் பற்று கொண்டவர்கள் அவர்கள். உங்கள் பாலியகால நண்பர்களைப் போல.

பொதுவாக எழுத்தாளர்களின் தனிப்பட்ட ஆளுமை மோசமாக இருக்கும் என்று ஒரு மித் உண்டு. எனக்கு தனிப்பட்ட முறையில் பிரபஞ்சனை நன்றாகத் தெரியும். அந்த மித் என்பது ஒரு அபத்தமான கற்பனை என்று அவர் வழியாகவே அறிந்தேன். அவரிடமுள்ள நுண்ணுணர்வு அபாரமானது. என்ன பேசவேண்டும், பிறருடைய உணர்வுகளை எப்படி நுட்பமாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்று அவரைப்போல அறிந்த இன்னொருவரை நான் கண்டதே இல்லை. சமானியர் எவரிடமும் அந்த நுட்பத்தை இதுவரை கண்டதில்லை. எனக்கு கந்தர்வனும் அறிமுகமுண்டு. அற்புதமான மனிதர் அவர்.

எழுத்தாளர்கள் அவர்களைப் பற்றியே பேசுவார்கள். செல்ஃப் செண்டிரிக் ஆக இருப்பார்கள் என்று ஒரு பேச்சு உண்டு. உண்மை என்னவென்றால் சாமானியர்கள்தான் நம்பவே முடியாத அளவுக்கு செல்ஃப் செண்ட்ரிக் ஆனவர்கள். தன்னைப்பற்றி மட்டுமே பேசுவார்கள். தன் வீடு., தன் வேலை, தன் குடும்பம், தன் உறவுகள், தன்னுடைய சாதனைகள் இதைத் தவிர எதைப்பற்றியும் சாமானியர்கள் பேசவே மாட்டார்கள். பிறருடைய எந்த பிரச்சினைக்கும் சாமானியர் செவிகொடுக்கவே மாட்டார்கள்.

ஆனால் எழுத்தாளர்கள் இன்னொரு மனிதனின் மனசை அறிந்தவர்கள். இன்னொருவன் தன் பிரச்சினையைச் சொன்னால் செவிகொடுத்து கேட்பவர்கள் உண்மையில் எழுத்தாளர்கள் மட்டும்தான் என்பதே என் சொந்த அனுபவம். ஆகவேதான் எல்லா நல்ல எழுத்தாளர்களுக்கும் அப்படி ஒரு ஆழமான நட்பு வட்டம் உள்ளது  பிரபஞ்சனுக்கு அப்படி ஒரு பெரிய சர்க்கிள் இருந்தது.

உங்கள் நண்பர்கள் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதற்கு சாட்சி. சாமானியர்களுக்கு எழுத்தாளர் என்றால் பயம் அல்லது அவெர்ஷன். ஆகவே எழுத்தாளனை கிட்டபோய் சந்திக்காதே என்றெல்லாம் சொல்வார்கள். அதை நம்பி நான் பிரபஞ்சனை தவிர்த்திருந்தால் என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரே மாமனிதரை சந்திக்காமலேயே இருந்திருப்பேன்.

என்.கிருஷ்ணசாமி

முந்தைய கட்டுரைவெண்முரசு, கேள்வியும் பதிலும்
அடுத்த கட்டுரைமதாரில் இருந்து எமர்சனுக்கும் தேவதேவனுக்கும்- சக்திவேல்