வெண்முரசு, கேள்வியும் பதிலும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வெண்முரசு என் வாழ்க்கையையே மாற்றி வருகிறது. தளத்தில் வந்தபொழுது அங்கும் இங்குமாக கொஞ்சம் படித்தேன். ஆனால் புத்தகத்தில் வாசிப்பது போன்ற ஒரு உணர்வு இல்லை. பின் வெண்முரசு ஒவ்வொரு புத்தகமாக வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன்.

பன்னிரு படைக்களம் வரை முடித்துள்ளேன். எனக்கு மழைப்பாடல் தான் மிகவும் பிடித்தது. 3 முறை படித்து விட்டேன். துரோணர், துருபதன் இடையிலான கதை என் பிள்ளைகளுக்கு பிடித்த ஒன்று. துரியோதனன் கர்ணனுக்கு அங்க தேசத்தை அளிக்கும் தருணமும். இந்த இரண்டு கதைகளும் நிறைய முறை கேட்பார்கள்.

எல்லா மகா பாரதக் கதைகளிலும் தர்மன் நல்லவனாகவே காட்டப்படுகிறான். ஆனால் வெண்முரசில் ஆரம்பம் முதலே தர்மன் தோள்கள் தொய்ந்த தம்பிகளின் வீரத்தை நம்பிய ஒருவனாகவே வருவது போலத் தோன்றுகிறது. துரியோதனன் தான் எனக்கு அன்பிற்குரிய ஒருவனாக இருந்தான். கர்ணனுடனான நட்பில், பானுமதியின் காதலில், தம்பிகள் மீது உள்ள அன்பில், தந்தையிடம் காட்டும் பணிவில் எல்லாவற்றிலும் அவனே கதாநாயகன் போலத் தோன்றுகிறது.

துரியோதனன் ஏமாற்றப்பட்டு பாண்டவர்கள் கிருஷ்ணனுக்கு உதவ படை திரட்டி சென்ற போது, அவன் பட்ட அவமானத்தை எண்ணிக் கண்ணீர் பெருகியது. ஆனால் எல்லாமும் ஒரே நொடியில் தலை கீழாக எப்படி மாறியது. எதற்காக அவன் திரௌபதியை சபையில் வைத்து இழிவு படுத்தினான். இது கர்ணன் கொண்ட வஞ்சமா? எப்படி அந்த இடத்தை நோக்கி அவன் நகர்ந்தான்? ஒரு முறை அறம் பிறழ்ந்ததால் அவன் நற்குணங்கள் யாவும் இல்லை என்று ஆகி விடுமா?

என்றும் அன்புடன்

தமிழ்செல்வி நல்லகுமார்

***

அன்புள்ள தமிழ்ச்செல்வி

வெண்முரசு எழுப்பும் கேள்விகளுக்கு வெண்முரசிலேயே பதில் உள்ளது. நீங்கள் வாசித்துச் செல்கையில் அறம் பற்றிய விரிவான விவாதங்கள் கொண்ட சொல்வளர்காடு, இமைக்கணம் போன்ற பகுதிகள் வரும்.

ஜெ

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி, கமல் வாழ்த்துச்செய்தி
அடுத்த கட்டுரைஎழுத்தாளனும் நண்பர்களும் -கடிதம்