பரஸ்ஸினிக் கடவு முத்தப்பன்

அன்புள்ள ஜெ,

சில மலையாளப் படங்களில் ஜெகதி சொல்வதை நான்

“மரச்சீனிக்கடவு முத்தப்பா” என்றே இதுவரை புரிந்து கொண்டிருக்கிறேன். (அதற்காக என்னை மரச்சீனி கிழங்கின் காதலன் என நினைத்துக் கொள்ள வேண்டாம்). அது ஏதோ சும்மாவாச்சும் அடித்து விடும் வார்த்தை என்றும் நினைத்திருந்தேன்.

ஆனால் அது பரசினி கடவு என்றும் அப்படி ஒரு கோவில் உண்டு என்றும் இப்போதுதான் தெரிந்து கொண்டேன். அந்த கோவில் அதன் தொன்மம் குறித்த மேலதிக விபரம் ஏதேனும் அறியத்தர இயலுமா?

என்றும் அன்புடன்

நாகராஜன்

முடிச்சூர்

அன்புள்ள நாகராஜன்

பரஸ்ஸினிக் கடவு கேரளத்தில் கண்ணூர் மாவட்டத்தில் ஆந்தூர் வட்டத்தில் வளபட்டணம் ஆற்றின் கரையில் உள்ள கோயில். தீய்யர் (ஈழவர்) சமூகத்துக்கு ஊராய்மை உள்ள கோயிலாக இருந்தது. இன்று அனைவருக்கும் உரியதாக உள்ளது.

பரஸ்ஸினிகடவின் தெய்வம் முத்தப்பன். (தாத்தா, பாட்டா) அவருக்கு இரு தோற்றங்கள். சந்திரப்பிறை சூடிய ஒரு தோற்றம். மீன் சின்னம் சூடிய இன்னொருதோற்றம். இரண்டையும் வெள்ளாடம், திருவப்பனை என இரண்டு தெய்யங்களாக கட்டி ஆடுகிறார்கள். நெடுங்காலம் தெய்யம் வேடம் கட்டி வரும் ஆட்டக்காரரே தெய்வமாக வழிபடப்பட்டார். பின்னர் மிகச்சிறு கோயில் அமைந்தது. இன்று பெரிய கோயில்வளாகம். பிறைசூடிய கோலம் சிவன் என்றும் மீன் சூடிய கோலம் விஷ்ணு என்றும் கருதப்படுகிறது.

தொன்மக்கதைகளின்படி கண்ணூர் மாவட்டத்திலுள்ள எருவேலி என்னும் சிற்றூரில் ஐயங்கரை என்னும் நம்பூதிரி மனையில் (அஞ்சர மனை என்றும் பெயர்) முத்தப்பன் வளர்ந்தார். அந்த மனையில் சிவபக்தையாகிய பாடிக்குற்றி அம்மை என்னும் நம்பூதிரி அன்னைக்கும் ஐயங்கர வாழுந்நோர் என்னும் நம்பூதிரிக்கும் நெடுங்காலம் குழந்தைகள் இல்லாமலிருந்தது. ஒருநாள் பக்தையாகிய பாடிக்குற்றியம்மைக்கு சிவன் கனவில் தோன்றி மகனை அருளினார்.

மறுநாள் அவர்கள் கொட்டியூர் என்னும் இடத்தில் குளித்துக் கொண்டிருக்கையில் சிவாம்சம் கொண்ட குழந்தை ஒன்று அவர்களுக்கு கிடைத்தது. அவர்கள் அக்குழந்தையை வளர்த்தனர். அதீதமான ஆற்றல்கொண்ட பெருவீரனாக முத்தப்பன் திகழ்ந்தார். வேட்டைக்காரர்களுடன் அலைந்தார். அடித்தள மக்களுடன் வாழ்ந்தார். இதனால் நம்பூதிரி மனைக்கு கெட்டபெயர் உருவாகியது. ஆனால் மகன் மேலுள்ள அன்பால் பாடிக்குற்றியம்மை எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டார்.

ஆனால் முத்தப்பன் பச்சைமாமிசம் உண்டு கள்ளும் அருந்தும் செய்தியை அறிந்ததும் பாடிக்குற்றி அம்மை அவரிடம் மனையில் இருந்து விலகிச்செல்ல ஆணையிட்டார். உடனே முத்தப்பன் விஸ்வரூபம் காட்டினார். மண்டையோட்டு மாலையும் குருதி வழியும் வாளுமாக காலபைரவத் தோற்றம் வானளாவ எழுந்தது. அதைக்கண்டு படிக்குறி அம்மை வணங்கி மன்னிப்பு கோரினார்.

காலபைரவனின் கண்களை நேருக்குநேர் கண்ட அன்னை இனிமேல் எப்போதும் கண்களுக்குமேல் பொய்க்கண் அணியவேண்டும் என்று மகனிடம் கோரினார். அன்னையின் ஆணைக்கு ஏற்ப அதன்பின் எப்போதும் கண்களுக்குமேல் வெள்ளியாலான பொய்க்கண் அணிந்தே முத்தப்பன் தோற்றம் அளித்தார்.

முத்தப்பன் மாபெரும் வேட்டைக்காரராகவும், ஊராருக்குக் காவலராகவும், வேண்டிய வரம்தரும் தெய்வ வடிவமாகவும் திகழ்ந்து பின் விண் ஏகினார். அவரை தெய்யம் வேடமிட்டு வழிபடத் தொடங்கினர். இரண்டு தெய்யவேடங்கள். அதில் வெள்ளாட்டம் என்பது ஒரு தெய்யத்திற்குரிய தெய்வத்தின் இளமைத் தோற்றத்தை ஆடுவது. திருவப்பனை என்பது உக்கிரரூபத்தை ஆடுவது. பரஸ்ஸினிக் கடவில் எல்லா நாட்களிலும் வெள்ளாட்டம் உண்டு. சிலநாட்கள் தவிர பிற நாட்களில் திருவப்பனையும் ஆடுகிறார்கள்.

இங்குள்ள முதன்மைவழிபாடே தெய்யம் வேடமிட்டு வருபவரை வழிபடுவதுதான். அவரிடம் நேரடியாகவே தங்கள் குறைகளைச் சொல்லி முறையிடுவது வழக்கம். தெய்வ உருவமிட்டு வரும் தெய்வாம்சம் கொண்டவரை வழிபடுவதே மானுடர் கொண்ட வழிபாடுகளின் முதல்வடிவம். பின்னர் அவ்வடிவமே மரத்திலும் மண்ணிலும் கடைசியாக கல்லிலும் சிற்ப வடிவம் ஆகியது.

இங்கே கள் முக்கியமான நைவேத்தியம். வெச்சேரிங்காடு என்னும் ஒரு படையல் உண்டு. நேந்திரங்காய், மிளகு, மஞ்சள், உப்பு ஆகியவற்றை சேர்த்து ஆவியில் வேகவைத்த ஒரு கலவை இது. இன்னொன்று நீர்க்கரி. வறுத்த அரிசிமாவு, உப்பு, மஞ்சள்பொடி, வறுத்து பொடித்த தானியங்கள், தேங்காய்த்துருவல் ஆகியவை கலந்து தயாரிக்கப்படுவது. கருவாடு கருகச் சுட்டு, கள்ளுடன்  முத்தப்பனுக்குப் படையலிடப்படுகிறது. ’கரிக்கரிமீனும் கள்ளும்’

முத்தப்பன் என்பது கேரளத்தின் பொதுவான நாட்டார்த் தெய்வம். ஏராளமான முத்தப்பன்கள் கேரளத்தில் உள்ளனர். பரஸ்ஸினிக் கடவு முத்தப்பனே அவற்றில் புகழ்பெற்றவர்.

என் தனியனுபவத்தையே நான் முன்வைக்க முடியும். என் வாழ்க்கையில் மிகமிக நைந்துபோன ஒரு காலகட்டத்தில் கருணாகரனின் அம்மாவால் அங்கே அழைத்துச் செல்லப்பட்டேன். வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு தெய்வ இருப்பை மிகமிக அருகிலென உணர்ந்தேன். ஆற்றலையும் நம்பிக்கையையும் பெற்றேன். இந்த மாபெரும் வேட்டைக்களத்தில் ஒரு கணமும் அதன்பின் தயங்கியதில்லை. வில்லம்பை கீழே வைத்ததுமில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைநியூமெக்ஸிகோவில்…- வாசன் பிள்ளை
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி தூரன் விருது -கடிதங்கள்