பிரிய ஜெயமோகன் ,
உங்களது வலை பதிவில் அண்ணா அசாரே பற்றி பதில் படித்தேன் ,
பிறகு எனக்குச் சில வினாக்கள் எழுந்தன , உங்களிடம் கேட்க ஆசைப்படுகிறேன். அல்லது உங்களிடம் பதிவு செய்ய முனைகிறேன். ( உங்களின் பதிலில் ஒரு நமுட்டு சிரிப்பு இருக்கும் , அல்லது ஆணவ போக்கு இருக்கும் அதை பற்றி நான் கவலை படப்போவதில்லை .)
என் கருத்து இது, பிழையிருக்கலாம் ) , என் மன போக்கு என்னவென்றால் படித்தவர்களை வேறு மாதிரி ஏமாற்றுகிறார்கள் , படிக்காதவர்களை டிவி ,கிரைண்டர் ,மிக்ஸி,தாலிக்கு தங்கம், அண்டா, குண்டா கொடுத்து ஏமாற்றுக்கிறார்கள். அறிவு ஜீவிக்களுக்கு நம் நாட்டை காக்க வந்த ஒரு பாம்பு கீரி சண்டை பந்தயம் என சொல்லி ஏமாற்றுகிறார்கள்…
ஆக மொத்தம் எல்லாம் ஏமாற்று பேர் வழிகள்தான் அல்லது ஏமாந்த முஞ்சிகள்.
1. இந்த அண்ணா அசாரே கும்பல் ,ஹார்ஷத் மேத்தா முதல் ஆயுத பேர ஊழல் வரை இருந்த காலத்தில் ஏன் பேசவே இல்லை
2. நாட்டில் அந்துலே . சுக்ராம், பல்ராம் ஜாகர்,ஜெ ஜெ, மு க வரை ஊழல் பெருச்சாளி தொல்லை தாங்க முடியவில்லை அப்போதுஎல்லாம் இவர்கள் என்ன பண்ணிக்கொண்டு இருந்தார்கள் ?
3. பூச்சி மருந்து ஊழலிருந்து ,ஸ்டாம்ப் பேப்பர் ஊழல் ,யூனிட் டிரஸ்ட் ஊழல், தீவன ஊழல் ஆயுத பேர ஊழல் எதில்தான் ஊழல் இல்லை.? அப்போழுதொல்லாம் கும்பகரண தூக்கமா?
4. நாட்டின் பாதுகாப்பு , கார்கில் ஊடுருவல் ஆகட்டும், தொடர் வெடிகுண்டு ஆகட்டும் அப்பொழுதல்லாம் என்ன பண்ணிக்கொண்டு இருந்தார்கள்?
5. கேஸ் எஜென்சியாகடும் , பெட் ரோல் பங்க் ஆகட்டும் எல்லாம் ஊழல் ,கருப்பு சந்தை , கலப்படம், பதுக்கி வைத்து வியாபாரம், அவற்றை நோக்கி ஏன் போரட்டம் செய்யவில்லை ?
6. அப்துல்கலாமின் (office of Profit case against Jaya Bacchan in turn it attack Sonia) போது எல்லாம் இந்த அண்ணாவின் கபடிக் குழு எங்கே போனது ?
என் அனுமானம், இந்த லோக் பால் ஆட்டமே அமெரிக்கர்களின் அதிரடி விளையாட்டுதான்
1. துனிஷியாவில் ஆரம்பித்து,எகிப்து, குவெய்த்,பாஹ்ரைன்,சூடான், சவுதி, ( ஆட்டை கடித்து , மாட்டை கடித்து , கடைசியில் மனிதனை கடித்து விட்டது ) , கடந்த இரண்டு வருஷங்களுக்கு முன் ( Econmic Melt down , Lehman Bros) என சொல்லி 70 பில்லியன் டாலர்கள், சந்தை விட்டு காணமால் போனதாகக் கேள்வி , அதனை ஈடுகட்ட கூகுளும், பேஸ் புக்கும் செய்த மெளனத் தாக்குதல் தான் இந்த சத்தியகிரக உடலங்கிடி
2. போன வருஷம் கூகுள் தன் வாலைச் சூழட்டப்போய், சீனாவில் வெட்டு வாங்கியது
3. ( Silent weapons of Quiet wars) ( Social capital ) ,Nation building by Francis Fukyama) போன்ற கட்டுரைகளில் மேற் சொன்ன அணுகுமுறை காணப் படுகிறது
4. இந்த ஜனதிரளினால் தான் காந்தியும் ( ஒத்துழையமை இயக்கம்), கருணாநிதியும் ( இந்தி எதிர்ப்பு) வென்றார்கள் . அதே ஜனதிரளினை வைத்துக் கொண்டே . உலக அளவில் எரிபொருள் எண்ணெய் விலையை(80 டாலர் பேரலிருந்து இப்பொழுது 120 டாலர் பேரல் என்று ஏற்றி விட்டார்கள் )
5. இந்த ஜனதிரள் களேபரத்தில் குவைத் நாடு 10 பில்லியன் டாலர்கள் தன் மக்களுக்கு இடைக்கால நிவாரணம் கொடுத்தது. காத்தார் 16 பில்லியன் செலவு செய்ய ஒப்புக்கொண்டது ,( கால் பந்து விளையாட்டு அரங்கம், மற்றும் விழாச் செலவிற்கு, ) , சவுதி அரசாங்கம் எல்லா தேசிய ஊழியர்க்ளுக்கு ஒரு மாதம் ஊதியம் பஞ்சபடி வழங்கியது, ஒரு இலட்சத்திற்கும் மேலனோர்களுக்கு பணி நிரந்தரம் செய்யபட்டனர்.
6. நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு அவசர கதியில் செலவு செய்யும் பணம் ,விழலுக்கு இரைத்த நீராகத்தான் போகும், உதாரணத்திற்கு குவைய்த்தில் மக்களுக்கு கொடுத்த மானிய தொகை , ஹைபோன்,பெரிய டிவி வாங்கு வதற்காகவும்,ஆடம்பர செலவாகவும் செய்யபட்டது.அதில் பாதிப் பணம் கடல் கடந்து போய் பிற எல்லைகளை அடைந்தது.
7. இந்த வெகுஜன போராட்டம் ஏன் அமெரிக்காவிலே, அல்லது ஐரோப்பாவிலோ வரவில்லை ?. இந்த போராட்டம் எண்ணெய் ஏற்றுமதி செய்யும், அதிகமாக கொள்முதல் செய்யும், அல்லது எண்ணெய் ராஜ்ச்சியத்தை சார்ந்துள்ள தேசத்தில் மட்டுமே நிகழ்ந்தது, எண்ணெய் விலை கூடியது, அமெரிக்கர்களின் பையும் நிறைந்தது.
என் கேள்வி. , இந்த லோக் பாலின் ஊழலுக்கான போராட்டத்தின் நாள் குறிப்பு என் இப்பொழுது, ஏன் கிரிக்கெட் மாட்ச் முடிந்த பின்? ஏன் நாட்டில் தேர்தல் நேரத்தில் ? பாவம் இந்த அண்ணா ஹசாரே ஒரு பலிகடா,
முன்னால் ராஜாஜி ஒரு பலிகடா, கடைசி கவர்னர் ஜெனரல் என்ற பெயர் மட்டும் தான் மிஞ்சியது ,
உலக அரசியல் சூத்திராதாரிகளின் மத்தியில் ஒரு ஆட்டுக்குட்டி.
வாழ்க வளமுடன்
அன்புடன்
ரவிசந்திரன்
அன்புள்ள ரவிச்சந்திரன்
உண்மையில் வாய்விட்டு சிரிக்கவேண்டிய கடிதம். ஆனால் முன் ஜாமீன் எடுத்துவிட்டீர்கள் என்பதனால் நேரடியாக பதில் சொல்ல முயல்கிறேன். உங்கள் கடிதத்தின் சாரமான மனநிலை என்பது எல்லாமே ஏமாந்த மூஞ்சிகள், நான் ஏமாறாதவன் என்ற எண்ணம். ஒரு சராசரி இந்திய இடதுசாரியின் பாவனைகளில் ஒன்று இது. மன்னிக்கவும் நான் அப்படி என்னை நினைத்துக்கொள்வதில்லை, ஏனென்றால் நான் இடதுசாரி அல்ல. என் கருத்துக்களை விரிவாக வரலாற்றுப்போக்கில் வைத்து பார்க்க முயலும் எழுத்தாளன் மட்டுமே.
உங்கள் கேள்விகளுக்கு பதில்கள் என் முந்தைய கட்டுரைகளிலேயே தெளிவாக உள்ளன. அண்ணா ஹசாரே இதுவரை என்ன செய்துகொண்டிருந்தார் என்பதை நீங்கள் விக்கிபீடியாவிலேயே பார்க்கலாம். என் கட்டுரையில் அவரது பரிணாமத்தை விரிவாகவே பேசியிருக்கிறேன்.
அண்ணா ஹசாரே கருவிலேயே வாளுடன் பிறந்து வந்தவர் அல்ல. அவருக்குப்பின்னால் எந்த பெரிய சக்தியும் இல்லை. அவர் மிகக்குறைவான கல்வி கொண்ட சாதாரணமான கிராமவாசி. ராணுவ வீரராக இருந்தவர். காந்தியின் மீது கொண்டபற்றால் ஒரே ஒரு கிராமத்தில் மிக எளியமுறையில் தன் சேவையை ஆரம்பித்தவர். அது கண்டனக் கட்டுரைகள் எழுதுவதுபோல எளியவிஷயம் அல்ல என்பதை மட்டுமாவது நம் இடதுசாரிகளுக்கும் வலதுசாரிகளுக்கும் புரியவைத்துவிட முடிந்தால் நான் தல்ஸ்தோய்க்கு நிகரான எழுத்தாளன்!
ஒரு சிறுகிராமத்தில் அந்த நிர்மாணத்திட்டத்திற்கு அவர் தன் வாழ்க்கையின் இருபதாண்டுக்காலத்தைச் செலவிட்டிருக்கிறார் அண்ணா. அதன் வழியாகவே அவர் மக்கள்பிரச்சினைகளைக் கற்றுக்கொண்டார். மக்களை இணைத்து போராடுவதற்குரிய மனவலிமையையும் திறமையையும் அடைந்தார். ஒரு மாவட்டம் முழுக்க கிராமப்பள்ளிகளை அமைக்க, கிராமசபைகளை அமைக்க, மதுவிலக்கு கொண்டுவர உழைத்தார். நானே ராலேகான் சித்திக்குச் சென்றிருக்கிறேன்.அவரது சாதனைகளைக் கண்டிருக்கிறேன்.
அண்ணா ஹசாரே வேறெதுவுமே செய்திருக்கவேண்டாம், மகாராஷ்டிரத்தில் முற்றிலும் கிராமிய உழைப்பால், கிராமிய நிதியால், கிராமியத் தொழில்நுட்பத்தால் அவர் உருவாக்கி வெற்றிகரமாக நிலைநாட்டிய நீர்ப்பாசனமுறைகளுக்காகவே அவர் பெரும் சாதனையாளராக கொண்டாடப்படவேண்டியவர். ஆம், காந்தியை வசைபாடிய வாய்கள் கொண்ட உங்களைப்போன்றவர்களால் ’கும்பல்’ என்றும் ‘கபடிக்குழு’ என்றும் வசைபாடப்படுவதற்கான ஆன்மீகமான தகுதியையும் அதன் மூலம் அவர் பெறுகிறார். அவர் அங்கே நின்றிருந்தால் அவரை பத்மஸ்ரீயும் பத்மபூஷணும் கொடுத்து நிறுத்தியிருப்பார்கள்.
அந்த நிர்மாணத்திட்டம் வழியாகவே அவர் இன்றைய அண்ணா ஹசாரேவாக ஆனார். அந்த சேவை மூலம் கிடைத்த மரியாதையும் கவனமும் காரணமாகத் தன் பணிகளை மேலும் மேலும் அவர் வளர்த்தெடுத்தார். இன்று நாடு அவரை கவனிக்கிறதென்றால் அந்த சாதனை காரணமாகத்தான். ஆகவேதான் அவர் போராடமுடிகிறது.
1982ல் அந்துலே ஊழல் வெடித்தபோது அண்ணா ஹசாரே ராலேகான் சித்தியில் தண்ணீர் வசதிக்காக தன் தலையில் மண் சுமந்து குட்டைகளை உருவாக்கிக்கொண்டிருந்தார். 1992ல் ஹர்ஷத் மேத்தா ஊழல் வெடித்தபோது, ஆயுதபேர ஊழல்கள் பேசப்பட்டபோது அண்ணா ஹசாரே தன்னுடைய மாவட்டத்திற்குள் கிராமசபைகள் வழியாக ஊழலுக்கு எதிராக போராடிக்கொண்டிருந்தார். ராலேகா சித்தியின் நிர்மாணத்திட்டத்திற்கு எதிராக இருந்த நாற்பது வனத்துறை ஊழியர்களை அகற்றி அப்போராட்டத்தை வெற்றியடையச்செய்தார். அதற்காக அவர் உருவாக்கிய ஃப்ரஷ்டசார் விரோதி ஜன் அந்தோளன் [BVJA] [ஆங்கிலத்தில் People’s Movement against Corruption] தான் இன்றைய எல்லா போராட்ட்டங்களுக்கும் விதை.
அந்தப் போராட்டத்தின் வெற்றியின் மூலம்தான் அவர் பரவலாக அறியப்பட்டார். அந்த மக்களாதரவை திரட்டிக்கொண்டு அவர் மகாராஷ்டிர அரசின் கிராமசபா சட்டத்தை திருத்துவதற்கான போராட்டத்தை ஆரம்பித்தார். கிராமசபைகள் மூலம் மக்கள்நலத்திட்டங்களில் நிகழும் ஊழல்களை ஒழிக்கமுடியும் என்று உணர்ந்து அதற்காக வெவ்வேறு தளங்களில் இருபது போராட்டங்களை அவரது அமைப்பு நடத்தியிருக்கிறது. அந்தப் போராட்டங்களின் ஒட்டுமொத்தமாகத்தான் அவர் மாநில அளவில் தன் முதல் நேரடிப்போராட்டத்தை நடத்தினார். அந்தபோராட்டங்களை நீங்கள் எங்கும் வாசிக்கலாம். காங்கிரசுக்கும், சிவசேனை-பாரதியஜனதாவுக்கும் எதிராக அவரது போராட்டங்கள் நடந்திருக்கின்றன.
அந்தபோராட்டங்களில் கிடைத்த தேசிய கவனத்தை பயன்படுத்திக்கொண்டுதான் அவர் தேசிய அளவிலான போராட்டங்களை ஆரம்பிக்கிறார். முதல் போராட்டம் தகவல் அறியும் உரிமைக்காக. ஒன்றைமட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் அந்த தகவல் அறியும் உரிமையை அதிகமாக பயன்படுத்திக்கொண்டவர்கள் இடதுசாரிகளே. அதற்குப்பிறகே லோக்பால் அமைப்புக்கான தேசிய போராட்டத்திற்கு வருகிறார்.
காந்தியப்போராட்டத்தின் ஒரு அடிப்படை விதியை அண்ணா ஹசாரே பயன்படுத்திக்கொள்கிறார் என்பதை மட்டுமாவது கவனியுங்கள். அவர் ஊழலைக் கண்டிப்பதற்கும் தண்டிப்பதற்குமான அதிகாரத்தை மக்களுக்கு அளிக்கும் சட்டத்திற்காகவே எப்போதும் போராடுகிறார். கிராமசபைகளின் அதிகாரத்திற்கும், அதன்பின் தகவலறியும் உரிமைக்கும், இப்போது லோக்பால் அமைப்புக்கும். அந்தப்போராட்டம் என்பது அந்த உரிமைகள் தேவை என மக்களுக்குச் சொல்வதற்காகவும் மக்களே அதைக்கோரச்செய்வதற்குமாகத்தான் எப்போதும் நடக்கிறது
உங்கள் கேள்விக்கு, நீங்கள் என் நண்பர் இல்லை என்றால், நீங்கள் முன்ஜாமீன் எடுக்கவில்லை என்றால், இப்படி ஒரே வரி பதில்தான் சொல்லியிருப்பேன்— ‘1959ல் வந்த முந்த்ரா ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே ஏன் போராடவில்லை? அப்போது அவருக்கு 19 வயது. அவர் முந்த்ரா ஊழலை அறிந்தும் இந்திய ராணுவத்திலே ஏன் சேர்ந்தார்?’ என்று கேட்பதுபோன்றது உங்கள் அணுகுமுறை
*
உங்கள் இரண்டாம் பகுதியில் உள்ள வரிகளில் எனக்கு தெரிவது சிந்தனை அல்ல , மதவெறிக்கு நிகரான ஒரு பற்று மட்டுமே. மக்கள் திரளாக ஈடுபடும் போராட்டங்களை முழுக்க கும்பல் என்று சொல்லிவிடுகிறீர்கள். மக்கள் போராடமுடியாது, ஏனென்றால் அவர்களுக்கு அரசியல் தெளிவு இல்லை, அவர்களுக்காக அரசியல் தெளிவுள்ள புரலட்டேரியன்கள் மட்டுமே போராடினால் போதும் இல்லையா?
மக்கள் போராட்டங்களை கூகிளும் அமெரிக்காவும் உண்டுபண்ணுகின்றன இல்லையா? எத்தனை காலமாக இதைச் சொல்லிவருகிறீர்கள்? போலந்திலும் செக்கோஸ்லாவாகியாவிலும் நடந்த மக்களியக்கங்களை இப்படி ஊடகமோசடி என இடதுசாரிகள் சொன்னது என் நினைவில் இருந்து இன்னும் மறையவில்லை. டியானன்மைன் போராட்டம்கூட ‘ஒன்றுமறியா’ இளைஞர்கள் ஏகாதிபத்தியச் சதியால் தூண்டிவிடப்பட்டு உருவானதுதான் என்றார்கள். [டியானன்மைன் போராட்டம் ஒடுக்கப்பட்டதற்கு எதிராக சி.அச்சுதமேனன் எழுதிய கட்டுரை ஒன்றை நான் காலச்சுவடு இதழுக்காக மொழியாக்கம் செய்தேன். அதில் இந்த ஒற்றைவரியில் உள்ள மக்கள் விரோதப்பார்வையை சுட்டிக்காட்டியிருந்தார்]
ஆக இனிமேல் எங்கும் மக்களுக்கு போராடுவதற்கு உரிமை இல்லை. மக்கள் எதற்காக போராடினாலும் அதன் பின்னால் ஏகாதிபத்தியச் சதி இருக்கிறது. திபெத் போராட்டம் ஏகாதிபத்திய சதி. ஆங் சான் சூகி ஒரு ஏகாதிபத்திய மோசடி. அப்படியானால் எது உண்மையான போராட்டம்? ஆம், மக்கள்தொகையில் கால்வாசியை கொன்ற மாவோவின் போராட்டம். பாதிபேரை கொன்ற போல்பாட்டின் போராட்டம். ஆட்சியை பிடித்ததுமே சீனா சென்று வணக்கம் சொல்லி மீண்டதுமே ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் சூட்களும் பூட்ஸ்களும் கடிகாரங்களும் வாங்கிக்கொண்ட பிரசண்டாவின் போராட்டம், இனக்குழுராணுவங்கள் நடத்தும் வடகிழக்கு கலவரம், இல்லையா?
ஊழலுக்கு எதிரான போராட்டத்தினால் எண்ணைவிலை உயர்ந்தது அமெரிக்கா லாபம் அடைந்தது என்று சொல்லும் வாதம் , சரிதான், இப்படித்தான் ஐம்பதாண்டுக்காலமாக சொல்லிவருகிறார்கள் இடதுசாரிகள். உங்களால் நடத்தப்படாத எந்தப் போராட்டமும் மக்களுக்கு எதிரானது இல்லையா?
தோழர் ரவி, ஊழலுக்கு எதிராக போராட்டமே வேண்டாம் என்று சொல்லமாட்டீர்கள் இல்லையா? சரி, அண்ணா ஹசாரே போராடவேண்டாம். இல்லாவிட்டால் அவர் ஒரு ஓரமாக போராடிக்கொண்டு போகட்டும். நீங்களும் நீங்கள் நம்பும் கட்சியும் மாபெரும் மக்கள்போராட்டங்களை நடத்தலாமே. அதன்வழியாக அண்ணா ஹசாரேவை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடலாமே. இதை எல்லா கட்சிகளிடமும் நான் கோருகிறேன். ஏன் நீங்கள் போராடலாமே.
முடியாது. அண்ணாவுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு உங்களுக்கு கிடைக்காது. ஏனென்றால் நீங்கள் அரசியலதிகாரத்துக்காக மட்டுமே போராடுவீர்கள் என அவர்கள் அறிவார்கள். அந்த அதிகாரம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் தாசில்தார் முதல் ஐம்பது ரூபாய் வாங்கும் குமாஸ்தா வரையிலானவர்களை ஒன்று சேர்த்து நீங்கள் அடையப்பார்க்கும் அதிகாரம். அந்த எரிச்சலே இடதுசாரிகளை இந்த அவதூறை சுமத்தச்செய்கிறது.
அண்ணா ஹசாரே திடீரென்று எழுந்து வந்தவர் அல்ல. எந்த புறச்சக்தியாலும் உருவாக்கப்பட்டவரல்ல. அப்படி வந்த இன்னொருவரைப்பற்றி சொல்கிறேன். நூறாண்டு பாரம்பரியம் உள்ள, மிகவிரிவான தொண்டர் அடிப்படையும் மக்கள் பங்கேற்பும் உள்ள ஒரு கட்சியின் தலைவர் வந்த வழி அது
பாலக்காட்டை சேர்ந்த ஒரு இடதுசாரி குடும்பத்தில் பிறந்த இளைஞர் சென்னை கிறித்தவக் கல்லூரியில் படிக்கிறார், அவருக்கு முதுகலைக்கு லண்டனில் இடம்கிடைக்கிறது. காரணம் அங்கே பணியாற்றிய இடதுசாரி பேராசிரியர். அங்கே அவர் சீனாவுக்கு எதிராக ஜனநாயகக் குரல்கள் எழுப்பும் மாணவர்குழுக்களுக்கு எதிராக பிரச்சாரக்குழு அமைத்து செயல்படுகிறார்
முதுகலை முடித்ததும் இந்தியா திரும்புகிறார். நேராக அவர் அந்த தேசியக்கட்சியின் மிக உச்சநிலையில் இருந்த தலைவரின் காரியதரிசியாக நியமிக்கப்படுகிறார். இருபத்துமூன்று வயதில் அவர் முப்பது தேசியத்தொழிற்சங்கங்களையும் மூன்று மாநில அரசுகளையும் கைவசம் வைத்திருக்கும் தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவரான தேசியத்தலைவரின் அனைத்துச்செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறார்.
வெறும் பத்து வருடங்களில் தன் முப்பத்திநான்காவது வயதில் கட்சியின் மத்தியக்குழுவில் நியமிக்கப்படுகிறார். இன்னும் பத்து வருடங்களில் பொலிட் பீரோ . உடனே கட்சிக்கு பொதுச்செயலாளர். இந்தியாவில் எந்த அரசியல்தலைவரும், பெரிய அரசியல்தலைவர்களின் வாரிசுகள் கூட, கட்சியில் இந்த அளவுக்கு வேகமாக மேலே சென்றதில்லை.
ஜவர்கால் நேரு பல்கலையில் ஆய்வுசெய்த நாட்களில் இரண்டு வருடங்கள் மாணவர் அணி பொறுப்பில் இருந்ததை தவிர எந்த வித களப்பணியும் செய்ததில்லை. எந்த மக்கள் போராட்டத்திலும் கலந்துகொண்டதில்லை. அவரை எந்த இடத்து மக்களுக்கும் அறிமுகமில்லை. எங்கள் ஊர் எம்எல்ஏ லீமாரோஸுக்கு இருக்கும் மக்கள்பின்புலம் கூட அவருக்கு இல்லை. வாழ்க்கையையே மக்கள்போராட்டத்திற்காக அர்ப்பணித்த பல்நூறு தலைவர்களை தாண்டி ஒரு மாயக்கரம் அவரை தூக்கிக் கொண்டுவந்து தலைமையில் அமரச் செய்திருக்கிறது
பிரகாஷ் காரத்தின் வெற்றி இந்தியாவில் இடதுசாரி அரசியலின் கட்டுப்பாட்டு மையம் எங்கே இருக்கிறதென்பதற்கு சான்று. அது சர்வதேசச் சமநிலைகளைச் சார்ந்தது. உலக அரசியலைக் கரைத்துக்குடித்து, ஊழலுக்கு எதிராக போராடுவதில்கூட எண்ணைவிலையை கண்டுபிடிக்கும் நம் இடதுசாரிகள் இந்த அரசியலை மட்டும் ஒருபோதும் கண்டுகொள்வதில்லை.
அண்ணா உலக அரசியல் சூத்திராதாரிகளின் மத்தியில் ஒரு ஆட்டுக்குட்டியாக இருக்கலாம். உலக அரசியல் சூத்திராதாரிகளின் மத்தியில் ஒரு கறுப்பாடாக இருப்பதைவிட மேல்தான் அது.
1978- 79ல் மேற்குவங்கத்தில் மரிச்சபி [Marichjhapi] என்ற ஆற்றிடைக்குறையில் வாழ்ந்த தலித் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கொலப்பட்டார்கள். நிலத்தை விட்டு துரத்தப்பட்டார்கள். ஜோதிபாஸு ஆண்ட மேற்குவங்கத்தில் நிகழ்ந்த இந்த வன்முறை பற்றி எந்த தேசிய நாளிதழுமே கவனம் கொள்ளவில்லை. ஒட்டுமொத்தமாக இந்த செய்தி மறைக்கப்பட்டது. எனக்கு தெரிந்து தமிழில் இதைப்பற்றி எழுதிய முதல் பதிவு என்னுடையது . அதற்கு வந்த எதிர்வினைகளை வைத்து அதை தெரிந்துகொண்டபோது அதிர்ச்சியாக இருந்தது. Jagadis Chandra Mandal எழுதிய Marichjhapi: Naishabder Antaraley (Marichjhapi: Beyond silence), Sujan Publications, Calcutta; 2002 என்ற நூல் இந்த தகவல்களை விரிவாகவே பேசுகிறது. இன்று இன்னும் ஏராளமான ஆவணங்கள் கிடைக்கின்றன.
இந்த நிகழ்ச்சி இடதுசாரிகள் ஆளாத ஒரு மாநிலத்தில் நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? பாகல்பூர் குருடாக்கல் சம்பவமும் மாயா தியாகி மேல் நடந்த வன்முறையும் ஏறத்தாழ இதே காலகட்டத்தில் ஆங்கில ஊடகங்கள் வழியாக இந்தியாவை அதிரடித்ததை நினைவுகூருங்கள். உலக ஊடக மேலாதிக்கம் பற்றி பேசுகையில் நம் இடதுசாரிகளுக்கு ஊடகங்கள் மேல் உள்ள இந்த கட்டுப்பாடு கண்களில் படுவதே இல்லை
கூகிள் சீனாவில் வால் ஆட்டவில்லை. சீனா சர்வதேசத் தகவல்தொடர்புக்கு போட்டிருக்கும் தடைக்கு எதிராக அது போராடிப்பார்த்தது. தன் நாட்டு மக்களின் சிந்தனைமேலும் கருத்துச்சுதந்திரம் மேலும் சீனா செலுத்தும் அடக்குமுறைக்கு எதிராக, அந்த மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப, வாடிக்கையாளருக்காக பேசும் வணிக நிறுவனம் என்ற முறையில், அது குரலை எழுப்பியது. கோடிக்கணக்கான மக்களின் தகவலுரிமையை, சிந்தனை உரிமையை, நடமாட்ட உரிமையை, பணியை தேர்ந்தெடுக்கும் உரிமையை, அடக்கி வைத்திருக்கும் ஒரு தேசத்தை, உலகின் மிகப்பெரிய ஊழல் ஆட்சி நடக்கும் தேசத்தை ஆதரித்து இந்த வரியை எழுத முடியுமென்றால் அண்ணா ஹசாரே பற்றி என்னதான் சொல்ல முடியாது?
கடைசியாக, காந்தியப்போராட்டம் பற்றி நான் எழுதியவற்றையே திருப்பி எழுதுகிறேன். அது மக்களை திரட்டும் போராட்டம். கண்டிப்பாக அது மக்கள் கவனத்தை அதிகமாகப்பெறக்கூடிய காலகட்டத்தில்தான் நடத்தப்பட முடியும். அது மக்கள் சக்தியை அரசு அதிகமாக அஞ்சும் காலகட்டத்திலேயே செய்யப்பட முடியும். அதற்கு கிரிக்கெட் இல்லாத , மழை அதிகமாகப் பெய்யாத, தேர்தல்காலமே சிறந்த காலகட்டம்.
இந்திய இடதுசாரிகளுக்கு ஒரு வரலாறுண்டு. அவர்களின் அரசியல் கொள்கையில் வழிகள் தூய்மையாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஆகவே அவதூறும் ஓர் ஆயுதமே என்று நினைத்தார்கள். இரண்டாம் உலகப்போரில் பிரிட்டனை ஆதரித்த இடதுசாரிகள் காந்தியை அவதூறுசெய்தார்கள். ஆனால் அப்படி ஆதரித்தது தவறு என்று ஒப்புக்கொண்ட ஐம்பதுகளில் காந்தி மீதான அவதூறுகளுக்காக வருத்தம் தெரிவிக்கவில்லை. இந்தியாவில் காந்தி மீது இன்றிருக்கும் அவதூறுகள் பெரும்பாலானவை இடதுசாரிகளால் உருவாக்கப்பட்டவையே
ஜனநாயக நாட்டில் ஓர் எளிய உரிமைக்காக ஒரு சாதாரண போராட்டம் நிகழ்த்திய இந்த சிறிய காந்திக்கே இத்தனை அவதூறுகள், வசைகள், அவமதிப்புகள் என்றால் உலகின் வல்லரசான ஒருநாட்டுக்கு எதிராக முப்பதாண்டுக்காலம் போராடிய பெரிய காந்தி என்ன பாடு பட்டிருக்கமாட்டார்!
ஜெ
- மாவோயிசம் கடிதங்கள்
- மார்க்ஸியம் இன்று தேவையா?
- இந்த ஊழல் ஜனநாயகம் போதுமா?
- மாவோயிச வன்முறை 4
- மாவோயிச வன்முறை 3
- மாவோயிச வன்முறை 2
- மாவோயிச வன்முறை
ஐஸ்வரியா ராயும் அருந்ததிராயும்