கோபம்

அன்புள்ள ஜெ,

 

நேற்று டெல்லியிலிருந்து சண்டிகருக்கு பேருந்தில் வரும்போது கோபத்தைப் பற்றி யோசித்துக்கொண்டே வந்தேன். என் கோபம் எங்கிருந்து முளைக்கிறது என. வாசகர் கோமாளி செல்வாவிற்கு ’கதைகள் சிந்தனைகள் கடிதங்களில்’ நீங்கள் பதிலாகச் சொன்ன வரி மீண்டும் நினைவுக்கு வந்தது.

 

’நல்ல சிறுகதைகள் இன்னொருவரை எழுதத் தூண்டவேண்டும். இலக்கியமென்பது ஒரு நீண்ட தொடர்ச்சி. நெருப்புப் போல. ஒன்றில் இருந்தே இன்னொன்று பற்றிக்கொள்ள முடியும்’. மனிதர்கள் கோபம் எனும் நெருப்பை தங்களுள் பற்ற வைத்துக்கொண்டார்களா ? அதுபோல எத்தனை நெருப்புகளை தங்களுள் மாறிமாறி பற்றவைத்துக்கொண்டார்கள். உணர்ச்சிகள், மொழிகள், கலைகள் என….ஆதி நெருப்பைப் பற்றவைத்தது யார் என்ற ரீதியில் விரிந்து சென்றது.

உதிரியாக இன்னொன்றும் நினைவுக்கு வந்தது. குகையிலிருந்து ஆதிமனிதன் வேட்டைக்குச் செல்கிறான். அவனது துணை, குகையில் இருக்கிறாள். சட்டென்று அவள் அந்த குகையின் சுவர்களில் அவனை நினைத்து ஏதோ கிறுக்குகிறாள். எத்தனை தலைமுறைகள் நீளும்,   நீளப்போகும்  உக்கிரமான நெருப்பு  அது.  Emotional Big Bang என்று எப்போதோ வாசித்ததற்கு  நான் அடைந்த அந்தச் சித்திரம் மீண்டும் நினைவுக்கு வந்தது.

 

ஒவ்வொரு மனிதனின் மனதிலும் எரியும் நெருப்பு ஒன்றுதானோ….

 

நன்றியுடன்

ராஜா

 

 

அன்புள்ள ராஜா

என்னுடைய கோபத்தைப்பற்றி நான் விரிவாகவே அவதானித்திருக்கிறேன். இன்னொரு தருணத்தில் அதைப்பற்றி எழுதவேண்டும் என்று நினைக்கிறேன்.

முன்கோபம் ஒரு வெளிப்பாடு. ஆனால் அதற்கான காரணங்கள் முற்றிலும் மாறுபட்டவை.  உதாரணமாக இயலாமை  முன்கோபத்தை உருவாக்குகிறது. தாழ்வுணர்ச்சி முன் கோபத்தை உருவாக்குகிறது. ஆனால்  உடல்வலிமையும் தன்னை பற்றிய மிகையுணர்ச்சியும் கூட அதேபோல முன்கோபத்தை உருவாக்குகிறது.

இன்னொன்று, கோபம் என்பது கலாச்சார உற்பத்தி. ஆண்களுக்கு முன்கோபம் அதிகம் இருப்பது ஆண்மைப்பண்பு என்று சமூகம் சொல்லிச் சொல்லி நிறுவியிருக்கிறது.  ’ எங்க வீட்டுக்காரருக்கு கோபம் ஜாஸ்தி’ என்று பெண்களே சொல்லிக்கொண்டிருப்பதை கண்டிருக்கிறேன்.

தொடர்ச்சியாகப் பொறுமையின்மையை உருவாக்கும் சூழல் முன்கோபத்தை உருவாக்குகிறது. நெரிசலும் புழுக்கமும் நிறைந்த சென்னையில் பலர் முன்கோபம் கொண்டு கத்துவதை கண்டிருக்கிறேன்

முன்கோபத்தை ஒரு கருவியாக உருவாக்கி வைத்திருப்பவர்கள் உண்டு. குறிப்பாகத் தொழில்களில் இருப்பவர்கள். வேலையாட்களிடம் கடுமையான முகத்தை காட்ட அது தேவை. நாட்போக்கில் அது அவர்களின் இயல்பாகவே ஆகிவிடுகிறது.

கடைசியாக அது ஒருபாரம்பரிய பிரச்சினை. மூளையின் சில நரம்பமைப்புகள் கோபத்தை உருவாக்குகின்றன. அது பாரம்பரியமாக கைமாறப்படும் ஒரு தற்காலிக பரிணாமக்கூறு என வாசித்திருக்கிறேன்.

கோபத்தை சின்னவயதிலேயே பெற்றோரிடம் காணும் குழந்தைகள் அதை ஓர் அனிச்சையான மனப்பழக்கமாகப் பெற்றுக்கொள்கின்றன. வாழ்நாள் முழுக்க அதில் இருந்து வெளிவர முடிவதில்லை.

நான் என் அப்பாவிடமிருந்து கோபத்தைப் பெற்றுக்கொண்டவன். சிறுவயதில் அடிதடிகளுக்கு அஞ்சாதவனாக இருந்தேன். கல்லூரிகளில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறேன். காவல்துறை நடவடிக்கைகளுக்கு ஆளாகியிருக்கிறேன்.

கோபத்தை கட்டுப்படுத்த நேர்ந்தது, அதற்கான தேவை வந்தது நான் அரசியலியக்கத்தில் சேர்ந்து செயல்பட ஆரம்பித்தபோதுதான். பல்வேறு நபர்களை இணைத்து சமரசம் செய்து வாழவேண்டிய கட்டாயம் இருந்தபோது அது வேண்டியிருந்ததது.பின்னர் அதைக் கண்காணிக்க ஆரம்பித்தேன். மெல்லமெல்ல அதை என் கட்டுக்குள் கொண்டுவந்தேன். ஆனால் இப்போதும் அது மீறி எழும் மிருகமாகவே உள்ளே இருக்கிறது

கோபத்தை நம் சூழலில் எவரும் ஒரு பிரச்சினையாகப் பார்ப்பதில்லை. அதை அவதானிப்பதும் வெல்ல முயல்வதும் இல்லை. அதைத் தங்கள் குணாதிசயமாகவே கொண்டு வாழ்கிறார்கள். அதைக் கவனித்தால் பெரும்பாலும் அது நம்முடைய தாழ்வுணர்ச்சி, அகங்காரம் போன்ற பல அகச்சிக்கல்களின் வெளிப்பாடு என்று தெரியவரும்.

ஒன்றை மட்டும் வெற்றி என்று சொல்லலாம். எல்லா வகையிலும் என்னைப்போன்ற என் மகனுக்கு முன் கோபமே கிடையாது.  எதிலும் அவன் நிதானமாக மட்டுமே முடிவெடுப்பான். இன்றுவரை அவன் கோபம் கொண்டு பார்த்ததில்லை. ஆக ஒரு கண்ணியை அறுத்துவிட்டேன் என நினைக்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைஏழாம் உலகம் விமர்சனம்
அடுத்த கட்டுரைஅண்ணா ஹசாரே, இடதுசாரி சந்தேகம்